சமர் செம்பாவை பார்த்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தன. அவளை பார்க்க முடியாமல் தவித்தவன், பைக் எடுத்துக் கொண்டு அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் வந்து நின்றான்.
வெகு நேரம் கடந்தும் செம்பா வருவது போல தெரியவில்லை. மணி பத்து ஆனது. இதற்கு மேல் செம்பா வருவாள் என்ற நம்பிக்கை இல்லை கிளம்பி விட்டான்.
சரியாக மாலை பள்ளி விடும் நேரத்திற்கு முன்பே அங்கே சென்று நின்று விட்டான். செம்பா பார்வையில் படாதவாறு மறைந்து நின்றான். பள்ளி முடிந்தது முதல் ஆளாய் வெளியே வந்த செம்பாவை பார்த்தான் சமர். சுத்தி சுத்தி பார்த்தவள் யாரும் இல்லை என நினைத்து கோகியுடன் கிளம்பினாள். ‘அவள் தன்னைத்தான் தேடுகிறாள் என்பதை நன்றாக புரிந்து கொண்டான். எதற்காக தன்னை விலக்கி வைக்க வேண்டும் என தோன்றினாலும் அதை அவளிடமே கேட்பதுதான் சரியாக இருக்கும்’ என நினைத்தவன் இருவரையும் பின் தொடர்ந்து வந்தான்.
செம்பா மனம் உந்துதலின் பெயரில் பின்னால் திரும்பிப் பார்க்க, சமரை பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இரண்டு நாட்கள் தன்னை பார்க்க வில்லை என்பதால் தேடி வந்திருக்கிறான்’ என அவளுக்கும் புரிந்தது. ஆனால், கண்டுகொள்ளவில்லை. கால் போன போக்கில் வீட்டை நோக்கி நடைபோட்டனர் இருவரும். அவர்களை பின்தொடர்ந்து வருவதையும் சமர் நிறுத்த வில்லை.
செம்பா வீட்டிற்குள் சென்றதும் அவளை பார்த்த திருப்தியில் அப்படியே அவனும் கிளம்பி விட்டான்.
‘அவன் சென்று விட்டானா’ என வீட்டின் பின்புறம் சென்று எட்டிப் பார்க்க, சமர் நடந்து சென்று கொண்டிருப்பதை கவனித்தவள் அவனிடம் பேச துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கினாள். அவளை அறியாமலே கண்களில் ஓரம் கண்ணீர் வழிந்தது. அதற்கான காரணம்தான் பாவையவளுக்கு இன்னும் புரியவில்லை.
அடுத்த நாள் காலை பள்ளிக்கு வர சமர் இருப்பான் என எதிர்பார்க்க அங்கேயே சமர் இருப்பது போல தெரியவில்லை. அவள் செல்லும் பாதையில் பாலா நிற்பது போல தெரிந்தது. இவள் அவனிடம் நெருங்கி செல்லவும், “டேய் சம்மருக்கு தாண்டா பிறந்த நாள். வெளிய போய்ட்டு வர்லாம் வாடான்னு கூப்பிட்டால் வர மாட்றான். அந்த ரூம்குள்ளயே அடைஞ்சு கிடக்குறான், என்னன்னு தெரியல, பிறந்தநாள் அதுவுமா கோயிலுக்காவது வாடான்னு சொன்னால், நோ ரெஸ்பான்ஸ் என்ன பண்றதுன்னு தெரியலடா” என போனில் தன் இன்னொரு நண்பன் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட செம்பா, பாலாவிடம் பேச வந்தவள், அவன் பேசியதை கேட்டு பேசாமல் சென்று விட்டாள். பாலாவும் போன் பேசிக் கொண்டிருந்ததால் செம்பாவை கவனிக்கவில்லை.
வகுப்பறையில் இருந்தவளுக்கு முழுக்க சமரின் நினைவாகவே இருந்தது. எப்படியாவது அவரை இன்னைக்கு பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லிடனும் என நினைத்தாள். ஆனால், கோகிலா தன்னுடன் இருந்தால் கண்டிப்பாக அவரை பார்த்து பேச முடியாது. எப்படியாவது கோகிலாவை விட்டு தனியாக சென்றால், சமரைப் பார்த்து விடலாம் என தன் மனதிற்குள் கணக்கு போட்டாள். அதேபோல கோகிலாவிடம் பேசி அவளுக்கு முன்னால் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அவள் சென்ற பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தால் செம்பா. அந்த இடம் முழுவதும் சுற்றி நோட்டமிட்டாள். இன்றும் சமர் வந்தது போல தெரியவில்லை. அவருக்கு என்ன ஆச்சு? ஏன் என்னை பார்க்க வரலை. நேற்று வந்தாரே! இன்னைக்கு வருவார் என்று நினைத்தால் வரவே இல்லையே, எப்படி வாழ்த்து சொல்றது என நினைத்தவளின் முகம் சோகத்தில் வாடியது. சமரும் நேற்று நின்ற மரத்தின் பின்னால் தான் நின்று இருந்தான். அவள் தன்னை தேடி முகம் வாடியதை கண்டவனுக்கு வருத்தமாக இருந்தாலும், அவளின் விலகலின் காரணம் என்ன? என தெரியாமல் எதுவும் முடிவு செய்யக்கூடாது என நினைத்தவன் அவளிடம் பேசலாம் என போக, அவனின் போன் ஒலித்தது. சமரின் அம்மா வைஷ்ணவிதான் அழைத்திருந்தார். உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் சில வார்த்தை அவரிடம் பேசிக் கொண்டு திரும்ப அங்கே செம்பா இல்லை. வீட்டிற்கு கிளம்பி விட்டால் போல, சரி நாளைக்கு பார்த்து பேசலாம் என தன் அன்னையுடன் பேச்சை தொடர்ந்தான் சமர்.
செம்பாவின் மனமும் தவித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது ஜித்துவை பார்த்து பேசி விட வேண்டும் என நினைத்தாள். மணியோ இரவு ஏழை தொட்டுக் கொண்டிருந்தது. கோகியுடன் விளையாட செல்கிறேன் என பொய் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தவள், சமர் இருக்கும் வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்தாள். அந்தப் பாதை எப்போதும் கும்மிருட்டாகவே இருந்தது. பயப்படாமல் தோட்டத்து வீட்டின் பின்பக்க சுவரில் ஏறி உள்ளே குதித்தாள். சமரின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவி இருந்தது. அப்போ அறையில் தான் இருக்கிறான் என உறுதி செய்தவள் அவள் எப்போதும் திருட்டுத்தனமாக செல்லும் பாதையிலே உள்ளே வந்து சமரின் அறை முன் நின்றாள். கதவை தள்ளத் திறக்கவில்லை கதவை வேகமாக தட்டினாள்.
சமரோ தலைவலியில் படுத்திருந்தவன் பாலா தான் வந்திருக்கிறான் என நினைத்து கதவை திறக்க அங்கே நின்றிருந்த செம்பாவை கண்டதும் ஆனந்த அதிர்ச்சிதான் அவனுக்கு.
“பட்டாசு நீ எப்படி? அதுவும் இந்த நேரத்துல?”
“இன்னைக்கு உங்களுக்கு பிறந்த நாளா?”
“ஆமா, உனக்கு எப்படி தெரியும்”
“காலைல பாலா மாமா ஸ்கூல் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தாங்க, அப்போ அவங்க பேசினது என் காதுல விழுந்துச்சு, இன்னைக்கு நீங்க என்னை பார்க்க வரலையே ஏன்?”
“அவளைப் பார்க்க வந்திருந்தாலும் ‘மறைந்திருந்தேன்’ என சொன்னாள் சண்டைக்கு வருவாள் என நினைத்து “கொஞ்சம் வேலைடா அதான் பார்க்க வர முடியலை” என்றான்.
“சரி உள்ள வந்து பேசு” என அவளை உள்ளே அழைத்து கதவை லாக் செய்தான் சமர்.
“என்கிட்ட உனக்கு கொடுக்க பெரியதாக கிஃப்ட் இல்லை. வாங்க பணமும் இல்லை. ஆனால் கண்டிப்பா ஒருநாள் நீ மறக்க முடியாத அளவுக்கு பரிசு கொடுப்பேன் ஜித்து” என தன் முத்து பற்களை காட்டி சிரித்தாள்.
“நீ எனக்கு கிடைத்ததே பெரிய கிஃப்ட் தான் பட்டாசு”.
என்ன? என குழப்பமாக கேட்க…
“அது உன்னோட நட்பு கிடைத்தது எனக்கு பெரிய பரிசுன்னு சொன்னேன்மா”
“ம்ம்ம் சரி”.
“எதற்காக இத்தனை நாள் என்னை நீ பார்க்க வரலை பட்டாசு.”
“வீட்ல அம்மா வெளியே வர விடலை ஜித்து. அதனாலதான் உன்னை பார்க்க வர முடியல.”
“வேற எதுவும் இல்லையே” என அவளை கூர்மையாக பார்க்க
“இல்லை ஜித்து” என்றாள்
“என்கிட்ட பொய் சொல்லாத பட்டாசு எனக்கு எல்லாமே தெரியும்”.
“என்ன தெரியும்?”
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கற்பகம் ஆன்ட்டி உன்கிட்ட பேசினது, எல்லாம் எனக்கு தெரியும். நான் கூட வீட்ல ஏதும் பிரச்சனை, அதனால தான் நீ என்னை பார்க்க வரலையோன்னு நினைத்தேன். ஆனால் இன்னைக்கு தான் உண்மை தெரிந்தது. கற்பகம் ஆன்ட்டி அவங்க வாயால சொன்னாங்க. இங்கே ரெண்டு பொண்ணு வருவாங்க, எனக்கு தெரியாமல் உள்ளே வந்துடுவாங்க. அவளுங்க சரியான கேடி. கொஞ்சம் வசதியா வீட்டு பையன்னா வளைச்சு போட பார்ப்பாங்க, அவளுங்க இங்கே வந்தால் பேசாத தம்பி. அன்னைக்கு நான் திட்டி விட்டேன். இனிமே வரமாட்டாளுங்க இருந்தாலும் வந்தால் பார்த்து சூதானமா இருந்துக்கோன்னு சொன்னாங்க. அப்பொழுதுதான் தெரியும் பட்டாசு, என்னை பார்க்க வர்றதாலதானே நீ தேவையில்லாத பேச்சு எல்லாம் கேட்க வேண்டியது இருக்கு” என சமர் வருத்தம் கொள்ள,
“ஐயோ!, ஜித்து நீயேன் பீல் பண்ற” என அவன் இரு கைகளையும் பிடித்தவள், அவன் விழிகளை நேருக்கு நேராக பார்த்தபடி “கற்பகம் அத்தை என்னை எப்பவுமே திட்டுவாங்க, அதை கேட்டு கேட்டு எனக்கு பழகி போச்சு, அதனால எனக்கு அதை பத்தி கவலை கிடையாது, இன்னைக்கு உன்னோட பிறந்தநாள், நீ ரொம்ப சந்தோசமா இருக்கணும், என்னை நினைச்சு கவலைப்படாதே.” என கண்களை சிமிட்டினாள் செம்பா.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க “ஏன் நான் வரும்போது யாராவது ஒருத்தர் உன்னை தேடி வராங்க” என முகத்தை சுழித்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் “இரு பாலாவாதான் இருக்கணும். நான் இன்னைக்கு அவன் கூட ஒரு இடத்துக்கு போறதா இருந்தது. நான் போகல, அவன் தான் போயிட்டு வந்தான். அதனால அதை பத்தி பேசறதுக்காக வந்திருப்பான்” என்றான்
செம்பா “ஓஹ்…” என இழுக்க
“என்ன ஓஹ், போ போய் எப்பவும் ஒளியிற இடத்தில் ஒளிஞ்சுக்கோ” என கட்டிலை காட்ட, அவனை முறைத்தபடியே சென்று கட்டிலில் கீழ் ஒளிந்து கொண்டாள்.
சமர் நினைத்தது போலவே பாலா தான் வந்து நின்றான்.
“டேய் உள்ளே வாடா, என்னடா லேட் ஆயிடுச்சு” என்க
“வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்டா அதான் நேரம் ஆயிடுச்சு, வேற ஒன்னும் இல்லை”.
‘சரி போன வேலை என்ன ஆச்சு”
“அப்பா கூட வந்ததுக்கு அப்புறம் முடியாம இருக்குமா முடிந்ததுடா. நாளைக்கு உன் பெயர்ல பத்திரம் பதிவு பண்ணிவிடலாம்.”
“இல்லடா என் பெயரில் பத்திரம் வேண்டாம், உன்னோட பெயரிலேயே ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கலாம். இப்போவே, நம்ம ஒன்னும் ஹாஸ்பிட்டல் கட்ட போறது இல்லை. எப்படியும் ஒரு நான்கு, ஐந்து வரூடம் ஆகும். அதுவரைக்கும் உன்னோட பேர்ல இருக்கட்டும்.”
“இல்லடா. ரெண்டு பேரோட பெயர்களையே பதிவு பண்ணிடலாம்.”
“சரி உன் விருப்பம் பாலா” என்றான் சமர்.
“ நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் நம்ம இங்கே இருக்க போறோம். நாளைக்கு ஈவினிங் ஐந்து மணிக்கு இங்கே இருந்து நம்ம கிளம்பி ஆகணும். உனக்கு ஞாபகம் இருக்குல்ல”
“அதெல்லாம் பக்காவா நியாபகம் இருக்கு, நான் ரெடி ஆயிடுவேன். நீ கவலைப்படாதே”.
“சரிடா ரெஸ்ட் எடு, தலை வலி சரியாகிடுச்சா”
“பெட்டர்” என்றான் சாமர்
“சரி சாப்பிட்டு தூங்கு என சாப்பாடு கவரையும் டேபிள் மீது வைத்துவிட்டு, வெளியேறினான் பாலா.
கட்டிலின் கீழ் இருந்தவளுக்கு, சமர் இன்னும் ஒரு நாளில் இந்த ஊரைவிட்டு செல்ல போகிறான் என்பதை கேட்டு மூச்சு முட்டியது. மெதுவாக கீழே இருந்து வெளியே வந்தாள்.
“அப்போ என்ன விட்டுட்டு போறியா ஜித்து” என்றதும் திரும்பி பார்த்தான் சமர்.
“என்னாச்சு பட்டாசு உனக்கு?”
“இல்லை, நீ எனக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்த, நீ போனால் நான் ரொம்ப கஷ்டப்படுவேன் ஜித்து. தினமும் உன்னை எப்படியாவது பார்க்க வந்துடுவேன். இனிமே நான் யாரை போய் பார்ப்பேன்” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு உதட்டை பிதுக்கி அழுவது போல முகத்தை வைத்தாள்.
“ஹேய்!, நீங்க ஒன்னும் சின்ன பாப்பா இல்லைங்க மேடம். இன்னும் உங்களுக்கு ரெண்டு வருஷம் ஸ்கூல் இருக்கு, முடிச்சிட்டு காலேஜ் படிக்க கோயம்புத்தூர் வாங்க, ரெண்டு வருஷம் தானே நானும் அதுக்கு இடையில் உன்னை வந்து பார்த்துட்டு போறேன். ஓகேவா இப்போ சிரிங்க” பார்ப்போம் என அவள் கண்ணம் கிள்ள…
“உண்மையா என்னை தேடி பார்க்க வருவியா ஜித்து” என ஒருவித ஏக்கத்துடன் கேட்டாள்.
“கண்டிப்பா உனக்காக வருவேன் பட்டாசு” என்றான்.
“ அப்புறம் நாளைக்கு உன்னால் என்னை பார்க்க முடியாது. நாளைக்கு நான் கொஞ்சம் வெளியே போறேன். அதனால நீ நாளைக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து வர வேண்டாம். நான் கிளம்பும்போது நீ வா” என்றவனிடம்
“எப்படி சித்து, உன்னை பார்க்க வர்றது, பாலா மாமா நீ ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்னு சொல்றாங்க, அஞ்சு மணிக்கு தான் இங்கே கற்பகம் அத்தை இருப்பாங்களே, என்னால எப்படி உன்னை பார்க்க முடியும். அப்போ நீ போகும்போது என்னால உன்னை பார்க்க முடியாதா” என தவிப்பாய் கேட்க…
“ உனக்கு ஸ்கூல் எப்படியும் நாலு மணிக்கு எல்லாம் விட்டுடுவாங்கதானே. நீ ஸ்ட்ரைட்டா உங்க ஊர் அம்மன் கோவிலுக்கு வந்துடு, நானும் அங்கே உனக்காக வெயிட் பண்றேன். அங்கே உன்னை பார்த்துட்டு கிளம்புறேன்”
“உண்மையாவே நீ இங்கிருந்து போகணுமா ஜித்து”
“வேற வழியில்லை பட்டாசு, நான் படிக்கணும். பெரிய டாக்டராகணும். அது என்னோட அப்பா, அம்மாவோட கனவு, அதனை நிறைவேத்தனும் இல்லையா”
“ஆமா” என்ன தலையைசைத்தாள்.
சமருக்குமே அவளை விட்டு செல்ல மனம் வரவில்லை. அவளுக்கோ இன்னும் அவள் மனதில் இருப்பது காதல் என புரியவில்லை. காதல் தான் என புரிந்தவனுக்கு அதை வெளிப்படையாக சொல்ல மனம் வரவில்லை.
“சரிடா நேரம் ஆயிடுச்சு நீ கிளம்பு இல்லன்னா உன்னை தேடி உங்க அம்மா, அப்பா யாராவது வந்திடப் போறாங்க”
“சரி ஜித்து. நீ தூங்கு நான் வரேன்” என்றவள் அவனையே திரும்பி திரும்பி பார்த்தபடி அங்
கிருந்து நகர்ந்தாள். அவளின் ஏக்க பார்வையில் சமரின் மனம் வலித்தது.