இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 18

5
(5)

சமர் சொன்னது போலவே செம்பாவால் சமரை அன்று காலையில் இருந்து பார்க்கவே முடியவில்லை. நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் வைஷ்ணவி சில பொருட்கள் கேட்டிருக்க அதை வாங்குவதற்காக பாலா உடன் ஷாப்பிங் சென்று விட்டான். சமர் வீட்டிற்கு வரவே மணி இரவு 9 தாண்டியது. அதற்கு மேல் எப்படி சென்று செம்பாவை பார்ப்பது என அவனும் நாள் முழுவதும் அலைந்த சோர்வில் தூங்கிவிட்டான்.

செம்பாவோ ஏற்கனவே ஒருமுறை தோட்டத்து வீட்டு பக்கமாய் வந்துவிட்டு அவன் இன்னும் வரவில்லை என்பதை கவனித்து விட்டு தான் வீட்டிற்கு சென்றிருந்தாள்.

தன் வீட்டின் முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளியில் கல் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

 “மாமோவ் உன் மகளுக்கு பேய் அடித்துவிட்டது போல, போய் திருநீறு போடு, எப்ப பாரு ஊம்மனாங்கொட்டை மாதிரி உட்கார்ந்து இருக்கிறாள். வர வர பழைய செம்பா மாதிரியே இல்லை. என் செம்பருத்தி துறுதுறுன்னு இருப்பாள். எனக்கு இவளை பிடிக்கவே இல்லை” என கோகி திட்டி கொண்டிருக்க, அதையெல்லாம் காதில் வாங்கவில்லை. அவள் கைகளில் இருந்த கல் ஒவ்வொன்றாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தன் உயிரை மாய்த்து கொண்டிருந்தது.

சந்திராதான் செம்பாவின் முகத்தை கவனித்தார். அவள் முகம் வாடியது போல இருந்தது. தன் கணவனை பார்த்து கண்ணசைக்க தன் மகள் அருகே சென்று அமர்ந்தார் நல்ல சிவம்.

“என் ஆத்தாவுக்கு என்ன கவலை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்க…

“அப்பா நம்ம வசதியாக வாழ முடியாதா? கடைசி வரைக்கும் இப்படி கஷ்டப்பட்டு தான் இருக்கணுமா?”

“என்னடா இப்படி கேட்டுட்ட? அப்பா உங்க ரெண்டு பேரையும், நல்லா படிக்க வைக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் படித்து நல்ல வேலைல இருந்தீங்கன்னா, நம்மளுக்கு வசதி வாய்ப்பு தானா வந்துட போகுது”.

“படிச்சா பணக்காரன் ஆயிடலாமா?”

“ஆமா நல்லா படிச்சு, நல்ல வேலை கிடைச்சா போதும். பணக்காரங்களா ஆகிவிடலாம்.”

“ஓஹ் என யோசனையாக இருந்தவள் மனதில் சமர் நல்ல வசதியான வீட்டு பையன் என கற்பகம் சொன்னது மனதில் அச்சாரமாய் பதிந்து இருந்தது.

“என்னடா அமைதியா இருக்க..?”

 “அப்பா நானும் படிச்சு முடிச்சிட்டு நல்லா சம்பாதிச்சு, பெரிய வீடு கட்டி உனக்கு சொந்தமா கார் வாங்கி கொடுத்து உன்னை மகாராஜா மாதிரி வாழ வைக்கிறேன்.”

“இதைத்தான் யோசிச்சிட்டு இருந்தியாடா”

“ஆமாப்பா, அந்த கற்பகம் இருக்குல்ல அதைவிட நான் வசதியா மாறனும். அது முகத்துல நான் கரிய பூசணும்”

“அதெல்லாம் நமக்கு எதுக்கும்மா? அவ்வளோ பெரிய வாழ்க்கையெல்லாம் நமக்கு வேண்டாம். நிம்மதியா மூன்று வேலை வயிறு நிறைய சாப்பிட்டால் போதும். யாருகிட்டயும் கடன் வாங்காமல் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழனும். அந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைச்சாலே எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆத்தா”

“கவலைப்படாத அப்பா, கண்டிப்பா நமக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். சரியா” என்ற தன் மகளை மடியில் படுக்க வைத்தபடி தலையை கோதிவிட்டார் நல்லசிவம்.

“மாமா நீ குடுக்குற செல்லத்துல தான் உன் சின்ன மக ரொம்ப ஆடுறா பாத்துக்கோ சொல்லிட்டேன்”. என்றாள் கோகி”

“ஆமா நீ மட்டும் ஆடாம தான் இருக்க, என் விளக்கு மாத்து கட்ட” என ராசாத்தி வர

‘இந்த அம்மாவை யார் வர சொன்னாங்க. என்னையே திட்டிட்டு இருக்கும்” என கோகி முகத்தை சுழிக்க…

கோகியை பார்த்து சிரித்தாள் செம்பா.

விடியற்காலை யாருக்கும் காத்திராமல் தன் வருகையை உணர்த்தினான் ஆதவன்.

எதையோ பறிகொடுத்தவள் போலவே திரித்தாள் செம்பா.

எல்லாரும் அவளை குறுகுறுவென பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அவள் வேலையை பார்த்து பள்ளிக்கு கிளம்பினாள்.

எப்போது மணி நான்கு ஆகும். பள்ளி விடும் என கடிகாரத்தை பார்த்து பார்த்து கண்கள் பூத்து போனது பாவையவளுக்கு. நான்கு மணியும் ஆகிவிட பள்ளி முடிந்தது. வகுப்பறையை விட்டு வெளியே வந்த கோகி செம்பாவிடம் “பாத்ரூம் போய்ட்டு வரேன் இங்கேயே நில்லு உடனே வந்துடுவேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட, இதுதான் சமையம் என கோகியை விட்டுவிட்டு அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பினாள்.

சரியாக 4.15க்கு கோவிலுக்குள் நுழைந்தாள். வேகமாக வந்ததில் மூச்சி வாங்கியது.கோவில் பின்புறம் இருந்த தெப்பகுளத்தின் படிக்கட்டில் அமர்ந்தாள்.

சமர் வருவது போல தெரியவே இல்லை. மணி ஐந்து நெருங்கிவிட்டது. கண்களில் கண்ணிரோடு எழுந்தவள் “ஜித்து என்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்டியா” என திரும்ப அப்போதுதான் வந்து நின்றான் சமர். அவனை கண்டதும் ஓடிச்சென்று அணைத்துக்கொள்ள அதிர்ச்சியில் உறைந்தான். முதல் முறை அவளின் அணைப்பு. அவளை விட்டு விலகி செல்வதன் நினைவு பரிசாக கிடைத்தது.

சில நொடிகளில் இருக்கும் இடம் கருதி அவளை தன்னிடம் இருந்து விலக்கி “என்னடா பயந்துட்டியா உன்னை பார்க்காமல் கிளம்பிடுவேன்னு” என கேட்கவும்

“ஆமா” என தலையை அசைத்தாள்.

“அது எப்படி? என் பட்டாசை பார்க்காமல் போகமுடியும். நான் போனால் அவ வெடிச்சி சிதறிட மாட்டாளா என்ன?” என்றான் குரலில் குறும்பு கொப்பளிக்க…

“ஏன் இவ்வளவு லேட் ஜித்து”

“பாலா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன் அதான் லேட் பட்டாசு”

“உண்மையா கிளம்ப போறிங்களா என்னை விட்டு?”

“சமருக்கு செம்பாவை என்ன சொல்லி சாமாதனபடுத்த என தெரியவில்லை. அவள் அழுகை மனதை பிசைந்தது. அவளும் சிறு குழந்தைதான். அவன் மனதில் இருக்கும் காதலை கூறி அவள் மனதில் ஆசை விதையை முளைக்க வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. மனதிற்குள்ளேயே காதலை புதைத்து விடலாம் என நினைக்க அவளின் அழுகை அதையெல்லாம் தாண்டி வெளியே வர வைக்க தூண்டியது.

அவள் கரங்களை பிடித்தவன் “செம்பா நான் சொல்றதை நல்லா கேளு, நீ இப்போ சின்ன பொண்ணு, சில விஷயங்கள் உனக்கு சொன்னால் புரியாது‌. அதை நீ விளையாட்டாகவும் எடுக்கலாம் இல்லை சீரியஸாகவும் எடுக்கலாம். உன்னோட இடத்தில் இருந்து பார்த்தால் தவறாக தெரியாது. ஆனால் அந்த விஷயம் எனக்கு சரின்னு படலாம். ஏன்னா நம்ம வயசு அப்படி” என அவனே ஒருவித குழப்பத்தில் பேச அவன் பேசுவது புரியாமல் வித்யாசமாக பார்த்தாள் செம்பா….

“என்ன அப்படி பாக்குற?”

“நீங்கள் என்ன பேசவர்றிங்கன்னு எனக்கு புரியலை என முழிக்க.”

கண்ணை உருட்டி விழிக்கும் கருவிழிகளில் முத்தமிட மனம் தூண்ட “ஹய்யோ கடவுளே” என மனதிற்குள்ளே புலம்பிய சமர் “சில விஷயங்கள் புரியாமல் இருக்குறது தான் நல்லது பட்டாசு”. என்றான் சோர்வாக…

“கண்டிப்பா எனக்காக வருவிங்கல்ல” என மீண்டும் அந்த வார்த்தையிலேயே நின்றாள்.

“கண்டிப்பா வருவேன்.”

“அதை எப்படி நான் நம்புறது ஜித்து”.

“எப்படின்னா எனக்கு தெரியலை செம்பா. நான் உன்னை பாக்குறதுக்காக கண்டிப்பா வருவேன்”.

“ ஒருவேளை நீங்க வரலைன்னா”

“என் மேல நம்பிக்கை வரலையா பட்டாசு”

“வரலையே நம்பிக்கை வர்ற மாதிரி ஏதாவது சொல்லுங்க” என்றவளிடம்

“நம்பிக்கை வர்ற மாதிரியா, என யோசித்தவன் அந்த இடத்தை சுற்றி பார்க்க அங்கிருந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டியிருப்பதை பார்த்தவனுக்கு திடிரென ஒரு எண்ணம் தோன்ற, தன் அம்மா கையில் கட்டிவிட்ட கருப்பு நிற கயிறை கலட்டியவன், தன் கழுத்தில் கிடந்த சங்கிலியில் இருந்த ”s” வடிவ டாலரை கழட்டி அந்த கயிற்றில் கோர்த்தபடி அம்மன் சன்னதியை பார்த்தான். அங்கே மக்கள் யாரும் இல்லை. செவ்வாய், வெள்ளி மட்டும் அம்மன் கோவிலில் பூஜை நடக்கும். என்பதால் மற்ற நாட்கள் மக்கள் வரமாட்டார்கள். அம்மன் சன்னதியை உற்று நோக்கினான். மனதிற்குள் ‘இது சாதாரண கயிறாக இருக்கலாம். ஆனால் இதை என் மனசளவில் அவளை மனைவியா நினைச்சிதான் கட்டுறேன். எனக்கு புரியிது. அவளுக்கு அதுக்கான வயசும் இல்லை. எனக்கும்தான். ஒருவேளை சில வருடங்களுக்கு பின் அவள் எண்ணங்கள் மாறலாம். என்னையும் மறக்கலாம். அவள் வாழ்க்கையில் புதியதாக யாராவது வரலாம். அப்படியொரு சூழ்நிலை உருவாகலாம். அப்படி என்னை மறந்தால், தாராளமா அவ எங்கே இருந்தாலும், அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்து சந்தோஷமா வாழட்டும். ஆனால், என் பட்டாசு எனக்காக பிறந்தவள்னு என் மனசு சொல்லுது. அது உண்மையா இருந்தால் எனக்காக என் பட்டாசை காத்திருக்க வை. இந்த கயிறை உன்னை சாட்சியா வைத்துதான் கட்டுறேன், உன்னை நம்பி என் பட்டாசை விட்டுட்டு போறேன். மறுபடியும் வருவேன் நான் சொன்னதை மறந்துவிடாதே” என அந்த அம்பாளிடம் பேசியவன் செம்பாவின் கழுத்தில் கருப்பு கயிறை கட்டினான். “இதை என் நியாபகமா வச்சிக்கோ. கண்டிப்பா எங்கே இருந்தாலும் உன்னை தேடி வருவேன். என்னை மறந்துடாதே பட்டாசு. கண்டிப்பா உனக்காக வருவேன்” என அவள் கண்ணம் தட்ட கண்ணில் கண்ணிர் வழிந்துகொண்டிருந்தது. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவளே உணர்ந்த தருணம். அதை அவனிடம் சொல்ல மனம் துடிக்க அவள் இதழ்களை திறக்கவும் “சமர், டேய் சமர், என்னடா பண்ற? சாமி கும்பிட்டு வர்றேன்னு சொன்ன, டேய் எங்கடா இருக்க? ஏற்கனவே ரொம்ப லேட் இவன் வேற” என பாலாவின் புலம்பல் குரல் கேட்க, “ பாலா என்னை தேடி வர்றான். நா…. நான் போய்ட்டு வறேன் பட்டாசு, ஐ மிஸ் யூ சோ மச்” என அவள் விரல்களை பிடித்திருந்த கையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியவன், அவளை விட்டு வெளியேற மனம் வெறுமையை சூழ்ந்தது‌. திரும்ப திரும்ப செம்பா நின்ற திசையை பார்த்துகொண்டு பாலாவுடன் காரில் ஏறி கிளம்பினான். அவன் செல்வதை பாலா கண்ணில் படாதவாறு கோவில் உள்ளே மறைந்து நின்று பார்த்தபடி நின்றாள் செம்பா.

“மனமெல்லாம் ரணமாய் வலித்தது. இதுதான் காதலா? காதலிப்பதற்கான வயது இது இல்லையே, ஆனால் ஏன் மனம் பதைபதைக்கிறது. ஒருவேளை இத்தனை நாள் ஜித்துவுடன் பழகியதால் அப்படி தோன்றுகிறதோ, இனிமே ஜித்துவை எப்போது பார்ப்பேன்” என்றவள் மீண்டும் அந்த குளத்தின் கரையோரம் அமர்ந்துவிட்டாள்.

அந்த நேரம் தெப்பக்குளத்தில் பெரிய கல் விழும் சத்தம் கேட்க… திரும்பி பார்த்தால் செம்பா.

அணிந்திருந்த பள்ளி உடைமுழுவதும் வியர்வையில் நனைந்திருக்க செம்பாவை எரிப்பது போல பார்த்து நின்றாள் கோகி.

செம்பா எழுந்து அவளிடம் வர…

“சாரிடி கோவிலுக்கு போகனும் போல இருந்தது. அதான் நீ எப்படியும் வருவேன்னு உங்கிட்ட சொல்லாமலே வந்துட்டேன்.”

“நல்லா சமாளிக்கிற, விளக்கெண்ணெய்”

“சரி கோபப்டாதே, என் செல்லம்ல வா, வீட்டுக்கு போகலாம்.”

“நீ அழுதியா செம்பா”

“இ…இல்லையே. நான் ஏன்டி அழனும் நான் என்ன பைத்தியமா?”

“ம்ம்ம் பைத்தியம்தான். எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிற, நீயா சொல்ற வரை நான் கேட்கமாட்டேன். அம்மா தேடுவாங்க வா போகலாம்

” என செம்பா கையை பிடித்து அழைத்துசென்றாள் கோகிலா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!