மருத்துவமனையில் இருள் சூழ்ந்து ஒரிடத்தில் இருந்தனர் தோழிகள். இருவரிடத்திலும் பலத்த மௌனம்.
“இதை ஏன் என்கிட்ட சொல்லல செம்பா. இத்தனை வருஷமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்து அழுதிட்டு இருந்தியா” என கோகி கேட்க..
பதில் இல்லை இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
“ஆனால், அந்த அண்ணா இத்தனை வருஷம் நம்ம ஊர் பக்கம் வரவே இல்லையே. உன்னை விரும்பிருந்தால் வந்திருக்கனும். அவங்க முகத்தை பார்த்தால் தவறாகவும் நினைக்க முடியலை. உன்னை அவங்க பார்க்கும் பார்வையில் காதல் அதிகமாவே தெரியிதே.”
“இப்பவும் என்னை விரும்புறதாதான் சொல்றாங்க.”
“நீயும் விரும்புறியா செம்பா? எனக்கு தேவை உண்மை மட்டும்தான்”
“அவர்தான் என் புருஷன். எப்படி மறப்பேன்.”
“அப்புறம் ஏன்டி அந்த அண்ணாவை கஷ்டபடுத்தூற, உன் மனதில் இருக்குறதை மறக்காமல் சொல்லு செம்பா.”
“வேணாம் கோகி. அவங்க ரொம்ப வசதியான குடும்பம். அவங்க அப்பா அம்மாவோட விருப்பம் வேறயாக கூட இருக்கலாம். என்னை கல்யாணம் பண்ணணும்னா அவங்க சம்மதிப்பாங்களான்னும் தெரியலை. என்னால் அவங்க மனசை கஷ்டபடுத்தி அங்கே வாழமுடியாது. ஏன்னா செல்வங்களை கஷ்டபடுத்தி வாழுறவங்களோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குமான்னு கேள்விகுறிதான்.”
“அப்போ நீ அவரையே நினைச்சிட்டு வாழ போறியா செம்பா”
“ஆமா. அவரை மட்டும் மனதில் நினைச்சிட்டு வாழ போறேன். என் காலம் வரைக்கும் அவர்தான் எனக்கு.”
“செம்பா. இதை பாலா அண்ணா கிட்ட சொல்லலாம்ல”
“யார்கிட்டேயும் நீ சொல்ல வேணாம். இதுக்காதான் உன்கிட்ட சொல்லாமல் இருந்தேன்”.
“இருந்தாலும், நீ கேடிதான். எனக்கு தெரியாமலே உன் காதலை வளர்த்துருக்க?”
“காதல்னே தெரியாமல் காதலித்தேன் கோகி. தெரியிற நேரம் அவர் என்னை விட்டு போய்ட்டார். இத்தனை வருஷம் வராதவர் இனிமேல் வரவா போறார்ன்னு நினைக்கும்போது எதிர்பாராமல் வந்து நின்றார். அவரை பார்த்தப்போ என் மனசு தவிச்ச தவிப்பு இருக்கே, அவ்வளோ சந்தோஷமா இருந்தேன் கோகி. ஆனால் அவர் மனசில் நான் இருப்பேனான்னு ஒரு சின்ன எண்ணம் இருந்தது. அதையும் அடுத்த நிமிஷமே “உன் மேல உயிரையே வச்சிருக்கேன்னு” அவர் வாயால சொன்னப்போ கட்டி பிடிச்சி கதறி அழனும்னு தோணுச்சி. அவர் இந்த ஊரைவிட்டு போகும்போது கூட என்னை காதலிக்கிறேன்னு சொல்லல, அந்த கயிறைகூட முதல்ல சாதாரணமா நினைச்சேன், அதுக்கு அப்புறம் அதையே தாலியா நினைச்சி மனசுல சுமந்தேன்.”
“இவ்வளோ விரும்புற நீ, எப்படி அவர் இல்லாமல் வாழ்வதற்கு நினைக்கிற”
“இத்தனை வருஷம் அவர் நினைவுகளோடு வாழ்ந்தேன். அதே போல் இந்த உயிர் உடம்புல இருந்து போகுற வரை இருந்துடுவேன்.”
“நானும் அதேபோல இருந்துடுவேன்”. என்ற சத்தம் வர இருவரும் திரும்பி பார்க்க கைகளை கட்டியபடி செம்பாவை பார்த்து நின்றார் சமர்.
செம்பா அதிர்ந்து நின்றாள்.
‘சமரை பார்த்ததும் இருவரும் பேசட்டும்’ என அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து நின்றாள் கோகி.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க செம்பா தலை குனிந்தாள். அவள் அருகில் வந்தவன் குனிந்த பெண்ணவளின் நாடியில் கை வைத்து தலையை நிமிர்த்தினான்.
விழிகள் சிவந்து நீரை வார்க்க தயாராக இருந்தது. அவளின் பின்னந்தலையில் கை வைத்து தன் நெஞ்சோடு அணைத்தான். பெண்ணவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து கதறி அழுதாள். ‘அவள் அழட்டும் இத்தனை வருடம் அவள் மனதின் அழுத்தம் அழுகையில் போகட்டும்’ என அவள் முதுகினை தடவினான். சில நிமிடங்களில் அழுகை குறைந்தது, அவன் சட்டையின் நெஞ்சு பகுதி அவள் கண்ணிரில் நனைந்திருந்தது.
“என்னை மன்னிச்சிடு பட்டாசு” என்றான் சமர்.
“ஏன்?” என பார்வையால் கேட்க
“உன்னை தேடி வராமல் இருந்ததற்கு,”
“இப்போ வந்திங்கல்ல அதுவே போதும். ஒவ்வொரு வருஷமும் பாலா மாமா வரும்போது நீங்களும் வந்திருக்கிங்களான்னு ஆசையா வந்து பார்ப்பேன். ஒவ்வொரு தடவையும் ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்த தடவை அப்படி நான் நினைக்கலை. எனக்காக இருந்தால் என்னை தேடி வருவிங்கன்னு நினைச்சி விட்டுட்டேன். கோவில்ல உங்களை பார்த்ததும்” என அடுத்த வார்த்தை பேசமுடியாமல் அவள் கரங்களை பிடித்து அழுதாள்.
“அவளை அழாதே” என கண்ணிரை துடைத்தவன் “என்னோட சூழ்நிலை உன்னை பார்க்க வரமுடியாமல் போய்டுச்சி பட்டாசு. நான் வேணும்னு வராமல் இல்லை”.
“அப்போ ஏன் என்னை தேடி வரலை.”
“நான் சுயநினைவிலே இல்லை. நினைவு இருந்தால் எப்படி வராமல் இருந்திருப்பேன்.” என்றவனின் குரல் தளுதளுக்க…
“எ..என்ன சொல்றிங்க ஜித்து. உங்களுக்கு என்ன நடந்தது” என பரிதவிப்புடன் கேட்டாள்
“இந்த வார்த்தையை கேட்க எத்தனை நாள் ஏங்கிருப்பேன். ஏன்டி, என்னை தவிக்கவிட்ட”
“ம்ப்ச்” அதை விடுங்க, உங்களுக்கு என்னாச்சி” என தவிப்புடன் கேட்க…
“ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சி பட்டாசு. எனக்கு காலேஜ் லீவ். உங்க ஊருக்கு பாலாகூட இரண்டு நாளில் கிளம்புறதா இருந்தது. ஃப்ரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போகலாம்னு எல்லாரும் கிளம்புனோம். அன்னைக்கு பாலா என்கூட வரலை. நாங்க போற வழியில் கார் ஆக்ஸிடென்ட். மற்ற எல்லாருக்கும் சின்ன சின்ன அடிதான். எனக்கும்தான் சுயநினைவு இல்லாமல் ஹாஸ்பிடல் வர அட்மீட் பண்ணாங்க. ஒரு வருஷம் கோமால இருந்தேன். கால், கையெல்லாம் பயங்கர அடி. கோமாவில் இருந்து வெளியே வந்து நல்லா நடக்கவே ஒரு வருஷம் ஆனது. இரண்டு வருஷம் படிப்பும் போய்டுச்சி. படிச்சி முடிச்சிட்டுதான் உன்னை பார்க்க வரனும்னு நினைத்தேன். பிஜி படிக்க பாரின் போனேன் . அங்கே படித்து திரும்ப வரவும் அப்பா ஹாஸ்பிடலை என் கையில் ஒப்படைச்சாங்க. உன்னை பார்க்க நினைச்சி கிளம்பும் போதுலாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்துட்டே இருந்தது. எனக்கு முன்னாலேயே பாலா , என்னோட நண்பர்கள் எல்லாரும் படிப்பை முடிச்சி எங்க ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணாங்க. இன்னும் நிறைய நல்ல டாக்டர்ஸ் அப்பாயின்மெண்ட் பண்ணி ஹாஸ்பிடலை நம்பர் ஒன் தரத்துக்கு உயர்த்தினேன். என் கடமையை சரியாக பண்ணிட்டு என் தேவதையை தூக்கிட்டு போகலாம்னு வந்துட்டேன்” என கண்சிமிட்ட…
“நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பேன்னு எப்படி நினைச்சிங்க”
“தெரியலை. என் மனசு நீ எனக்காக பிறந்தவன்னு சொல்லுச்சி. அதே மாதிரி என் பட்டாசு எனக்காக காத்திருந்திருக்காள்” என்றான் அவள் விழிகளை பார்த்தபடி….
“ரொம்ப கஷ்டபட்டிங்களா?”
கஷ்டபட்டாதான் நல்லது நடக்கும் பட்டாசு. கஷ்டப்படாமல் கிடைத்தால் எதுவும் நிலைக்காது”
“ஆமா” என்றாள்.
“சரி நான் கேக்குறதுக்கு உண்மையை சொல்லு”.
“என்ன?”
“நீ பழையமாதிரி இல்லையே, உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியிது. இது என் செம்பாவோட குணமும் முகமும் இல்லையே. அவள் முகம் எப்பவும் புன்னகை இருக்குமே. இப்போ அது மிஸ் ஆகுதே.”
விரக்தியாய் சிரித்தாள்.
“நீங்க போனதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் நிறைய நடந்துடுச்சிங்க. வாழவே பிடிக்கலை. ஆனாலும் வாழ்ந்தேன். உங்களுக்காகவும் என் குடும்பத்துக்காவும்”.
“அப்படி என்ன நடந்தது செம்பா.?”
சமர் சென்று இரண்டு வருடங்கள் கடக்க, செம்பா கொஞ்சம் கொஞ்சமாக சமரின் பிரிவில் இருந்து மீட்டு கொண்டாள். ஆனால் ஒருநாளும் அவனை மறந்தது இல்லை. வெள்ளி செவ்வாய் ஆனாலே, கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டுவிட்டு யாரும் பார்க்காத வண்ணம் அந்த கருப்பு கயிற்றின் டாலரில் குங்குமம் வைப்பாள். அதை மாங்கல்யம் ஆகவே மனதால் நினைத்தாள். அப்படியே நாட்களும் நகர்ந்தன.
“ஆத்தோவ்!, அப்பா கொஞ்சம் தூரமாக வாடகைக்கு போறேன். வர்ற ரெண்டு நாள் ஆகும். அம்மாகிட்ட சண்டை போடாமல் அமைதியா இருக்கனும். அப்புறம், சந்திரா பிள்ளைங்களை ஏதாவது சொல்லாதே. பத்திரமா பார்த்துக்கொள்” என கிளம்பினார் நல்லசிவம்.
அவர் சென்ற இரண்டு மணிநேரத்தில் நல்லசிவத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல் வர அலறி அடித்துகொண்டு மொத்தகுடும்பமும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மருத்துவர்களிடம் விசாரிக்க “மேஜர் ஆக்ஸிடென்ட் அவர் பிழைக்கிறதே கஷ்டம், ஒரு ஆப்ரேஷன் பண்ணணும். அதுல பேஷன்ட் கண்முழிச்சிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் முதுகில் பலமான அடிபட்டதால் அவரால் குனிந்து நிமிர்ந்து எந்த வேலையைப் பார்க்க முடியாது. அவரை ரொம்ப கவனமாக பார்க்கனும் என்ற மருத்துவர் , எங்களால் முடிந்ததை செய்றோம்” என கையை விரிந்தனர்.
அதே நேரம் அங்கே வந்தார் கற்பகம். அவரை பார்த்ததும் செம்பா முகத்தை சுழிக்க
“வாடி என் வாரியகட்டை நீயெல்லாம் என்னை பார்த்து, முகத்தை சுழிக்கிற இனிமே பிச்சை எடுத்துதானே திங்கனும், என்ன பண்ண போறிங்க. அக்காளும் தங்கச்சியும் நல்லா லட்சணமாதானே இருக்கிங்க, அப்போ குடும்பத்தை நல்லா அழகா நடத்தலாம், இதோ இந்த சின்னது என செம்பாவை கை நீட்டி இவ இருக்குற அழகுக்கு சின்ன சிரிப்பு சிரிச்சாலே ஆயிரம் பேர் காசை கொட்டோ கொட்டுன்னு கொட்டுவான், இவள் ஒருத்தி போதாது உன் குடும்பத்தை தூக்கி நிறுத்த” என கற்பகம் வாய்கூசாமல் பேச ரஞ்சி, செம்பா, கோகி முவரும் அவரை முறைத்தப்படி நிற்க..
“அண்ணி வார்த்தையை பார்த்து பேசுங்க. நாங்களே அவர்க்கு என்ன ஆகுமோன்னு தெரியாமல் தவிச்சிட்டு இருக்கோம். இப்போ வந்து தேவையில்லாத பேச்சு வேணாம், தயவுசெய்து இங்கே இருந்து கிளம்புங்க, இல்லை அண்ணண் பொண்டாட்டிக்கு கூட பார்க்க மாட்டேன்” என கோபத்தில் சந்திரா பேச….
“நான் ஏன் போகனும். இந்த ஹாஸ்பிடல் உன் புருஷனோடதா. இல்லை இந்த ஹாஸ்பிடல் ஓனரை நீ…”
“அண்ணி” என அந்த இடமே அதிரும் வண்ணம் சந்திரா சத்தமிட…
“என்ன கத்துற , நான் பேசக்கூடாதுன்னு நிற்ககூடாதுன்னு சொல்ல நீ யாரு…? நான் பேசுவேன். யாருடி உனக்கு அண்ணி? என் குடும்பத்தையே அசிங்கபடுத்திட்டு ஓடுன ஓடுகாலி நீ. உனக்கு நான் அண்ணியா. உன்னால் எத்தனை பேர் முன்னாடி தலைகுனிந்து நின்னோம். மறப்பேன்னு நினைச்சியா மறக்கமாட்டேன். நான் அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி கூனி குறுகி நின்னேன்ல. அதுக்கான தண்டனைதான் இது. என்ன கொஞ்சம் தாமதா கிடைச்சிருக்கு. அதைபற்றி எனக்கு கவலை இல்லை. பணம் ஏதாவது வேணும்னு என் வீட்டு வாசலுக்கு தப்பி தவறி வந்துடாதே. நம்ம அண்ணண் இருக்கான் போனால், காசு தருவான்னு நினைச்சி வந்த விளக்கு மாத்தால அடிச்சி துரத்திடுவேன். நீங்க எப்படி துடிக்கிறிங்கன்னு பார்க்கதான் வந்தேன்.”
“நான் செத்து போனால் கூட என் பிணம் உன் வீட்டு வாசலுக்கு வராது. நான் ஏன் வரப்போறேன்,
என் புருஷனை எனக்கு பார்க்க தெரியும் உங்க வேலையை பார்த்ததுட்டு போ” என்றார் சந்திரா
முகத்தை ஒரு வெட்டு வெட்டிய படி “இங்கே நிற்க எனக்கு என்ன தலையெழுத்தா” என கிளம்பினார் கற்பகம்.
அறுவைசிச்சை முடிந்தும் இரண்டு நாட்கள் கழித்துதான் நல்லசிவம் கண்முழித்தார். அவரால் எழகூட முடிவில்லை. ஒவ்வொருவராய் மாற்றி மாற்றி பார்த்து ஓரளவுக்கு உடல்நிலை தேறி இருந்தார்.
பத்து நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தனர். அவரை வைத்துவிட்டு சந்திராவால் வேலைக்கு போக முடியாமல் கஷ்டநிலமைக்கு வர செம்பா, ரஞ்சி வேலைக்கு சென்று ஆடு, மாடுகளை கவனித்தாள். சிவம் நடக்க ஆரம்பித்து அவருக்கான தேவையை அவரே பார்க்க ஆரம்பித்ததும் சந்திரா, செம்பா வேலைக்கு செல்ல ரஞ்சியை வீட்டில் இருக்க சொன்னார்கள். அவளும் வருவேன் என அடம்பிடிக்க, நானும் அம்மாவும் படுற கஷ்டம் போதும் நீ அப்பாவை பார்த்துக்கோ என்ற செம்பா, சந்திரா இருவரும் காட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். செம்பா படிப்பை நிறுத்த அவளுடன் கோகியும் படிப்பை நிறுத்தியவள் அவளுடன் வேலைக்கு சென்றாள்.
இரண்டு வருடம் கடந்தது. ஓரளவுக்கு குடும்பம் கஷ்டத்தை தாண்டி வர, கோகியின் அண்ணண் ஏழுமலை, செம்பாவையும் கோகியையும் மீண்டும் படிக்க வைத்தான். அந்த நேரத்தில்தான் ராசாத்தி சிவம், சந்திராவிடம் ரஞ்சி, ஏழுமலை திருமணத்தை பற்றி பேச எல்லாரின் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் நடத்தலாம் என முடிவானது. சரியாக திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு, “இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. என் மனதிற்கு பிடித்தவருடன் வாழ போகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு இரவோடு இரவாக ரஞ்சி வீட்டை விட்டு வெளியேறினாள். குடும்பமே இடிந்து போய் அமர்ந்தனர். ஊரில் எல்லாரும் தாயை போலவே பொண்ணும் பண்ணிட்டு போய்ட்டாள் என சந்திராவையும், அடுத்த பொண்ணு எவனை கூப்பிட்டு ஓடப்போகுதோன்னு வீட்டில் உள்ளவர்கள் காதுபடவே பேசவும், வெளியே சென்றால் செம்பாவிடம் வம்பிழுக்க வேண்டும் என சில ஆண்மகன்கள் அலைந்ததும், செம்பாவை பார்க்கும் நேரமெல்லாம் கற்பகம் அடுத்து எப்போ நீ ஓடபோற, நல்ல வசதியானவனா பார்த்து போ உன் அக்கா எவன்கூட போனாளோ, இருக்காளோ, இல்லையோ என வாய்க்கு வந்த படி பேச எல்லாரின் பேச்சும் செம்பாவின் மனதில் வடுவாக பதிந்தது. தன்னை பேசுபவர்களை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து அனைவரின் வாயையும் அடைத்தாள். அவளின் புன்னகை முகம் மறைந்து எப்போதும் இறுக்கமாக முகத்தை மாற்றினாள். அவளை கண்டாலே அவளிடம் பேசமுடியாது என ஒதுங்கி நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை முழுவதுமாக மாற்றி கொண்டாள். மனம் மட்டும் தினம், தினம் சமரை நினைத்து தீ குளித்தது.
“சாரிடி, நான் சரியான நேரத்தில் உன்னை தேடி வந்திருந்தால் உனக்கு எந்த கஷ்டமும் வந்திருக்காது” என தன் மார்போடு அணைத்தான்.
“விடுங்க ஜித்து, இதுதான் நடக்கனும்னு இருந்திருக்கும் போல, விதியை யாராலும் மாற்றமுடியாதுல்லயா” என்க..
அப்போது செம்பாவின் போன் இசைக்க, கோகிதான் அழைப்பை ஏற்றாள்.
“ஆத்தோவ்” என்ற தன் மாமனின் குரல் கேட்டதும்
“மாமா நான் கோகி.”
“கோகிம்மா இன்னும் வீட்டுக்கு வரலையா, நேரம் ஆகிடுச்சி எதுவும் பிரச்சனையா, மாமா வரட்டுமா”
“இல்லை மாமா. இப்போதான் டியூட்டி முடிந்தது. கிளம்பிட்டோம். இன்னும் அரைமணிநேரத்துல வீட்ல இருப்போம்.”
“சரிடா தங்கம் பார்த்து சீக்கிரம் வாங்க”
“சரி மாமா என அழைப்பை துண்டித்தவள், தன்னை விட்டு தள்ளி நின்றவர்களிடம் வந்தாள். அவர்கள் இருவரும் நிற்கும் நிலையே இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என புரிந்தது. கோகியை பார்த்ததும் இருவரும் விலகினர். செம்பா மாமா போன் பண்ணிட்டாங்க, கிளம்பலாமா? மாமா நம்ம வீட்டுக்கு போகிற வரை பயத்துலயே இருப்பார்” என்றதும்…
“போ, பட்டாசு நான் உங்க பின்னாடியே வர்றேன்” என்றதும்
செம்பாவும், கோகியும் முன்னால் செல்ல, அவர்களின் பின்னால் பாதுகாவலனாய் சமர் சென்றான்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.9 / 5. Vote count: 7
No votes so far! Be the first to rate this post.
Post Views:651
1 thought on “இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 19”
DEEPA V
Thanks for big episode 🙏🙏🙏..
இந்த ரஞ்சி இப்படி பண்ணுவாள் என்று நான் எதிர் பார்க்கவில்லை 😒😒😒😠😠😠😠…
ரஞ்சி வேறு யாரையாவது விரும்பி இருந்தால் அதை கோகி அண்ணனிடம் தனியாக கூப்பிட்டு சொல்லி இருக்கலாம்…
இப்படி எல்லாரையும் அசிங்க படுத்திவிட்டு ரஞ்சி ஏன் சென்றால்..
இல்லை அவளுக்கு வேறு ஏதேனும் நடந்ததா
Thanks for big episode 🙏🙏🙏..
இந்த ரஞ்சி இப்படி பண்ணுவாள் என்று நான் எதிர் பார்க்கவில்லை 😒😒😒😠😠😠😠…
ரஞ்சி வேறு யாரையாவது விரும்பி இருந்தால் அதை கோகி அண்ணனிடம் தனியாக கூப்பிட்டு சொல்லி இருக்கலாம்…
இப்படி எல்லாரையும் அசிங்க படுத்திவிட்டு ரஞ்சி ஏன் சென்றால்..
இல்லை அவளுக்கு வேறு ஏதேனும் நடந்ததா