அத்தியாயம் – 02
கண்ணாடிக் குவளைக்குள் இருப்பதைப் போல அவனது வீட்டின் மேல் தட்டு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது.
அதனுள் பல நிற விளக்குகள் எறிந்துக் கொண்டிருக்க வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கக் கூடியது அதிரனின் வீடு…
அதிரனோ தன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனது தாய் தந்தையினைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தந்தையோ தாயைப் பிரிந்து சில நாட்களிளேயே அதிரனையும் உலகையும் விட்டுப் பிரிந்தார்.
அன்றிலிருந்து தனிமையில் இருந்த அவனுக்கோ சில தகாத நண்பர்களின் உறவு கிடைத்தது.
இவ்வாறே மது போதை என அனைத்து பழக்கங்களையும் தன்வசமாக்கியதோடு, தன்னிடம் உள்ள பணத்தை வைத்து இறுதியில் ஓர் கடத்தல் கும்பலுக்கே தலைவனாகிப் போனான் அவன்.
அவனுடைய வாழ்வில் பல இன்னல்களை எதிர்கொண்டு தனிமையை தன் வசமாக்கி ஒற்றை மரமாய் நின்றான்.
அவனின் வாழ்க்கை முழுவதும் சூறாவளியில் சிக்கியதை போலத்தான் இருக்கும்.
சிரிப்பு எனும் வார்த்தையை அவன் மறந்தே போனான். மகிழ்ச்சி எனும் வார்த்தையை அவன் உணர்ந்தே பல வருடங்கள் ஆகிப்போயின.
கையில் ஓர் மதுபான குடுவையை ஏந்திக் கொண்டவனின் உடல் படபடத்தது. அவனது இருதயமோ கீழிருந்து மேலாக அழுத்தம் கொடுப்பது போல வலிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் தலையில் ஏதோ ஓர் மாற்றம் ஏற்பட அவனது உச்சியில் இருந்து ஒற்றை நரம்பு ஒன்று வெளிநோக்கி தள்ளிய நேரத்தில் அறையோ ஈசி போட்டு குளு குளு என இருந்தாலும் கூட அவனது உடலில் இருந்து வியர்வை வழியத் தொடங்கியது.
இந்த வலி ஒன்றும் அவனுக்கு புதிதல்ல.
வழமையாக எடுத்துக் கொள்ளும் மாத்திரையை எடுத்து விழுங்கியவன் தலையை பிடித்தபடி மேஜையின் மீது சாய்ந்தான்.
*******************************************
மாயாவின் கைகளோ இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. தன் மீது ஏதோ ஓர் சுமையை வைத்தது போல அவளின் தோள்கள் இரண்டும் கணத்துடன் காணப்பட்டது.
தலையில் மீது எவரோ ஏறி அமர்ந்திருப்பதைப் போல வலி தோன்ற மூடியிருந்த கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தாள் அவள்.
அவளின் முன்னே அந்த ராட்சசன் அகோரக்கோலம் கொண்டிருப்பதைப் போல சிரித்தவாறு நின்றான் அதிரன்.
அவனைப் பார்த்தவுடன் அவளின் தேகம் உதறத் தொடங்கியது.
“எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் முன்னாடியே என்ன போலீஸ்ல பிடிச்சு கொடுப்பேன்னு சொல்வ..,
என் முன்னாடி நின்னு பேசவே எவனுக்கும் தைரியம் கிடையாது.. அப்படி இருக்கும்போது நீ என்னைப் போலீஸ்ல பிடிச்சு கொடுப்பேன்னு சொன்னா நான் சும்மா போவேன்னு நினைச்சியா..?, நான் அந்த அளவுக்கு முட்டாள் கிடையாது… என்னோட ஜட்ஜ்மெண்ட் எப்பவுமே ஒண்ணுதான்.. அது வேறு ஏதும் கிடையாது மரண தண்டனை தான்..” என்று கூறியபடியே தன் முதுகின் பின்னே சொருகி வைத்திருந்த வாளினை எடுத்தான்.
சுமார் இரண்டு அடி நீளமுடைய அந்த கூறிய வாள் மாயாவின் கழுத்தை நோக்கி வீசப்பட அலறியவாறு கண்களை மூடிக்கொண்டாள். மறுகணமே அவளின் தலையோ உடலை விட்டு வேறாகப் பிரிந்து காற்றில் பறக்கத் தொடங்கியது.
அதிரனின் அறிவாளின் வீச்சில் அவளின் தலையோ ஒரு பக்கம் பறந்து செல்லும் போது மாயாவின் கண்கள் இரண்டும் மெல்லத் திறந்துக் கொண்டது.
கண்கள் திறந்த அடுத்த நொடியே “அய்யோ என்னுடைய தலை எங்கே..?” என அலறினாள் அவள்.
அவளோ தன் அருகில் இருந்த இருவரையும் அடித்து உதைத்தவாறு சட்டென எழுந்து அமர்ந்து கொண்டாள்.
அமர்ந்த மறுகணம் தன் தலையினை தடவியபடி அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்ட போது தான் புரிந்தது அவள் கண்டது அனைத்தும் கனவென்று.
மாயா மயக்கத்தில் இருந்து விழித்து பார்க்கையில் அவள் முன்னே கனவில் வந்ததை போல ஒருவன் நீண்ட அறிவாளினை வைத்து தடவியபடி அமர்ந்திருந்தான்.
இதனை பார்த்த மாயாவுக்கோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போனது. தான் கனவில் கண்டதைப் போலவே உண்மையில் தன்னை இவன் கொலை செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவளோ நடுங்கத் தொடங்கினாள்.
“என்னை எதுக்காக டா கடத்திக்கிட்டு வந்தீங்க..? உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாது..? நான் ரொம்ப கோபக்காரி சோ நான் கோபப்படுறதுக்கு முன்னாடி மரியாதையா என்னை வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடுங்க இல்லனா இதுல இருக்குற யாருமே ஒழுங்கா வீடு போய் சேர மாட்டீங்க…” என தன் அச்சத்தை மறைத்துக் கொண்டு தன் முன்னே நின்று அடியாட்களை பார்த்து கூறினாள் மாயா.
மாயா கூறியதை கேட்டவுடன் அதில் நின்ற ஒருவன் தன் கையில் இருந்த அறிவாளை எடுத்து நீட்டியபடி “என்னடி ரொம்ப ஓவரா பேசுற..” என்று கூறியபடி முன்னோக்கி நடந்து வர இருக்கையில் அமர்ந்திருந்தவளோ சட்டென மேஜையின் மீது ஏறி நின்று
“ஓகே ஓகே நீங்க யாரும் டென்ஷன் ஆக வேணாம் நான் உங்களை மன்னிச்சுட்டேன் சோ போலிஸ்க்கு போக மாட்டேன் அன்ட் அவசரமா அக்கா வீட்டுக்கு போகனும் வண்டியை எடு தம்பி..” என தன் முன்னால் நின்ற மற்றையவனைப் பார்த்துக் கூறினாள்.
“யாரு அக்கா…”
“உங்க எல்லாருக்கும் நான் தான் அக்கா வேற யாரு இருக்கா.. சோ அக்காவை பத்திரமா வீட்டுக்குக் கொண்டு போய் விட்டிட்டு வாங்க..” என்று அச்சத்தில் உளறிக் கொண்டிருந்தாள் மாயா.
“இவளை யார்ரா இங்கே கொண்டு வந்தது சரியான பைத்தியமா இருக்கும் போலவே..” என அதில் நின்ற ஒருவன் அருகில் இருந்தவனிடம் முனுமுனுக்க மற்றவனோ..,
“ஆமாடா நம்ம பாஸ் தான் இந்த பைத்தியத்தை தூக்கிக் கொண்டு வந்து ஒரு நாளைக்கு வச்சு மிரட்டிட்டி விடச் சொன்னார்” எனக் கூறினான்.
“இவளை இங்கேயே வெட்டிப் போட்டாதான் சரி” என ஒருவன் கூறி அவளை மிரட்டுவதற்காக அருகில் செல்ல மேஜையிலேயே நடனம் ஆடத் தொடங்கினாள் மாயா.
“அக்காவை ஒன்னும் பண்ணாதைங்கடா நான் ரொம்ப பாவம்.. இந்த பச்சைப் புள்ளையை பார்த்தா உங்களுக்கு பரிதாமாக இல்லையா…” என ஓடித் திரிந்தாள் அவள்.
தலையைப் பிடித்தவாறு பக்கத்து அறையில் வேதனையோடு அமர்ந்திருந்த அதிரனுக்கு மாயாவின் சத்தமா மேலும் அவனை வெறுப்புக்கு உள்ளாகியது.
“ஷிட்..” என தன் கையினை மேஜையின் மீது ஓங்கி அடித்தவன் அங்கிருந்து எழுந்து வேகமாக பக்கத்தில் மாயா உள்ள அறையை நோக்கிச் சென்றான்.
அவன் உள்ளே சென்று பார்க்கையில் மாயாவோ மேஜையின் மீது கூச்சலிட்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.
“என் மேல கை வைச்சீங்கன்னா நீங்க யாருமே நல்லா இருக்க மாட்டீங்க, நான் செத்ததுக்கு அப்புறமா பேயா வந்து உங்க எல்லாரையுமே காலி பண்ணிடுவேன் டா, நீங்க ஒவ்வொரு நாள் ராத்திரியும் தூக்கத்தை கெடுத்து உங்க எல்லாரையும் அங்க இங்கன்னு ஓட வைப்பேன் ஆகவே என்னை கொன்னு பெரிய தப்பு பண்ணிடாதீங்க…” என்றாள் அவள்.
அப்போதுதான் அங்கு இருந்த அனைவருக்கும் தெரியவந்தது இவள் உண்மையில் ஓர் டம்மி பீஸ் என்று. இருந்தாலும் அவளை பயம் காட்டி இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று நினைத்து கொண்டவர்கள்,
“இதுக்கு மேல இங்கே டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த உன் கால் இரண்டையும் வெட்டி வெளியே இருக்குற நாய்களுக்கு டின்னர் ரெடி பண்ணிடுவேன் ஆகவே சத்தம் போடாம வந்து உட்காரு..”என்று தன் கையில் வைத்திருந்த கத்தியினை மேஜையின் மீது சட்டென்று தூக்கி வைத்தான் அதில் இருந்த ஒருவன்.
அவளின் அருகே கத்தியை வைத்த மறுகணமே சம்மணமிட்டு மேஜை மீதே அமர்ந்துக் கொண்டாள் மாயா.
“நான் இனி எழுந்து நிற்கவே மாட்டேன், தம்பி சொல்றத சமத்து பிள்ளையா உட்கார்ந்திருந்து கேட்பேனாம் அதை பார்த்து தம்பி என்னை இங்க இருந்து போக விடுவானாம்..” என்று போலியான சிரிப்புடன் பற்களைக் காட்டினாள் மாயா.
அங்குள்ள அனைவரும் அவள் கூறியதைக் கேட்டு குபீர் என சிரிக்கத் தொடங்கினார்கள்.
மாயாவின் செயல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அதிரனும் சிறு புன்னகையுடன் திரும்பிக் கொள்கையில் அவன் முன்னே ஓர் மிகப் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் அவனுடைய வதனமோ சிரிப்புடன் இருப்பதைப் பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து போய் நின்றான் அந்த மனித மிருகம்.
வாவ் செம காமெடி மாயா