இதழ் – 03
கண்கள் சிவக்க முகமோ வீக்கத்துடனும் எப்போதும் சோர்வோடும் வெறுப்பை வெளிக்காட்டும் வகையிலேயே தன்னைப் பார்த்து பழகிய அதிரனுக்கு இன்றோ தான் வேறு வகையாக தெரிவதைப் போல தோன்றியது.
இலேசாக அவனது வதனத்தில் தோன்றிய சிரிப்பானது அவனின் மனநிலையை சற்று மாற்றி சிந்திக்க வைத்தது.
சிறிது நேரத்திலேயே அவனது வேதனை குறைவடைந்ததையும் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்தவனுக்கு அந்நேரம் அந்த மருத்துவர் கூறியதே ஞாபகத்தில் வந்தது.
‘கொஞ்சமாவது சிரிங்க சார் அப்போதான் உங்களோட ஸ்ட்ரெஸ் இல்லாம போகும்’ என்பதே அவன் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் உண்மைத் தன்மையை புரிந்துக் கொண்டவன் அப்படியே நின்றான்.
அதிரன் உள்ளே நிற்பதைப் பார்த்த மாயாவோ, “இதோ பாருங்க தம்பிகளா நம்ம தலையே வந்துட்டாரு அவர்கிட்டேயே நான் பேசிக்கிறேன்..” என்று கூறியபடி முன்னால் நின்ற அதிரனை அழைத்தாள்.
“டான்… டான்… உங்கப் பசங்ககிட்ட சொல்லுங்க நான் உங்களை மன்னிச்சுட்டேன்னு உங்களைப் பார்க்க பாவமா இருக்கு… சோ நான் உங்களை பத்தி யார்கிட்டையும் எதுவுமே சொல்ல மாட்டேன்.. பிங்கி ப்ராமிஸ்… பட் இப்போ நான் அர்ஜன்டா வீட்டுக்குப் போகனும் சோ நான் போகட்டுமா..?” என மேஜையிலிருந்துத் துள்ளிக் குதித்து கீழே இறங்கினாள்.
அவள் துள்ளிக்குதித்து இறங்கிய விதத்தில் அவளுடைய அசையும் அங்கங்களை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவன் அப்போதே அவளுடைய வார்த்தைகள் அவனுக்கு புரிய
“இடியட் யாரை பார்க்க பாவமா இருக்கு..? இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின உன்னை உயிரோடயே சமாதி கட்டிடுவேன்.
என்னை பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது..? எல்லாத்தையும் கேட்டுட்டு சிரிச்சுட்டு போற மாதிரி இருக்கா.. இனிமே என்கிட்ட இப்படி பேசினா உன்னை கொன்னே போட்ருவேன்.” என்று அவளைப் பார்த்து திட்டியவன் அவளின் அறையில் இருந்த தன் அடியாட்களைப் பார்த்து,
“இவளோட வாய் இன்னுமே குறைஞ்ச மாதிரி தெரியல, இவளை வெளியே விட வேணாம் இன்னைக்கு ஃபுல்லா வைச்சு இவளைக் கொடுமைப்படுத்துங்கடா.. அதுக்கப்புறம் தெரியும் இந்த அதிரன் யாருன்னு..” என்றுக் கூறுகையில்,
“நம்ம தலைவனோட பேரு அதிரனா.. சொல்லவே இல்ல சூப்பரா இருக்கு டான் உங்க பேரு..” என்று கோபமாக இருந்த அதிரனை சமாளிக்க வேண்டும் என்று மெதுவாக போலி சிரிப்புடன் கூறினாள் அவள்.
அவளைத் திட்டிக் கொண்டிருந்தததைக் கூட புரிந்து கொள்ளாமல் தன் பெயரை விமர்சிக்கின்றாள் என்று நினைத்தவன் இதற்கு மேலும் அங்கு நின்று பேசினால் தன்னுடைய கட்டுப்பாடுகள் யாவும் காணாமல் போய் விடும் என்பதை உணர்ந்தவன் அவளை எச்சரிக்கும் ஒரு பார்வையை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அந்தப் பார்வையில் அவளுக்கு சில்லிட்டுப் போனது.
“என்ன இவன் வந்து நம்மளை காப்பாத்தி விடுவான்னு பார்த்தா மறுபடியும் இந்த காண்டாமிருகங்கள் கிட்ட மாட்டிவிட்டு போறானே.. இவன எப்படி சமாளிக்கிறது..” என்று நினைத்தாள் மாயா.
“யாரைப் பார்த்து காண்டாமிருகம்னு சொன்னே..” என்றுக் கூறியபடி மாயாவின் அருகில் இருந்து ஒருவன் அவளை நோக்கி வருகையில்,
‘அச்சச்சோ மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு ரொம்ப சத்தமா பேசிட்டேனே..’ என்று தனக்குள் நினைத்தவள்,
“காண்டாமிருகம்ன்னு உங்களை சொல்வேனாடா… அதை விட நீங்க ரொம்ப அழகான ஆட்கள்டா என் பாசக்கார தம்பிகள் டா” என பற்கள் தெரிய சிரித்தாள் அவள்.
“என்னடா பாஸ் மறுபடியும் இந்த மெண்டல் கிட்ட மாட்டிவிட்டு போயிட்டாரு, இன்னைக்கு எப்படிடா இவளை வைச்சு நாம சமாளிக்கப் போறோம்” என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் அறையில் இருந்த மற்றவனிடம் கூற,
“ஆமாடா நானும் அதைப் பத்திதான் திங்க் பண்ணிக்கிட்டு இருக்கேன், இந்த பைத்தியத்தோடு தொல்லை இப்பவே முடிஞ்சிடும்னு பார்த்தா பாஸ் இன்னைக்கு வைச்சிருக்க சொல்லிட்டு போறாரு பேசாம நாம எங்கேயாவது போயிரலாமா..?” என்று அவன் பதிலளித்தான்.
இதற்கிடையில் மாயாவோ அங்கு முனுமுனுத்துக் கொண்டிருந்த இருவரையும் பார்த்து, “டேய் தம்பிகளா என்னைப் பத்தியா பேசிக்கிட்டு இருக்கீங்க..”என்று கேட்க,
‘ஐயோ என்ன நம்ம பக்கம் இந்தக் குட்டி பிசாசு வருது எப்படியாவது எங்கே இருந்து தப்பிக்கணுமே’ என்று மனதில் நினைத்தபடி அவனோ, “ஒன்னுமே இல்ல அக்கா நாங்க உங்களுக்கு என்ன சாப்பாடு வாங்கிட்டு வரலாம்ன்னு பேசிக்கிட்டு இருந்தோம் வேற ஒன்னும் கிடையாது” என்று கூறினான்.
“ஆமாலே நான் இன்னும் ஒன்னுமே சாப்பிடலையே..?, மறந்தே போயிட்டேன் பார்த்தியாடா தம்பி உனக்குதான் அக்கா மேலே கொஞ்சமாவது அக்கறை இருக்கு..” என்று தலையில் கை வைத்த மாயாவோ, “தம்பி நீ சொன்னதுக்கு அப்புறம் தான் அக்காவுக்கு பசி வந்துடுச்சு ஓடி போய் ஒரு பிளேட் பிரியாணி வாங்கிட்டு வா கட்டாயமா பெரிய லெக் பீஸ் வைச்சு எடுத்துக்கிட்டு வா” என்று கூறினாள் அவள்.
அவனும் இதுதான் சரியான நேரம் என்று நினைத்தவன் “நான் இப்பவே போய் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்” என்று வெளியே செல்ல தயாரகையில் அருகில் இருந்தவனோ, “டேய் மச்சான் எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல பிரியாணிக் கடை இருக்கு வா நாம ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வருவோம்..” என்றுக் கூறி இருவரும் அவளிடம் இருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும் என்று வெளியே சென்றனர்.
“அம்மாடியோ எப்படியோ இந்த தொல்லையிலிருந்து நாம தப்பிச்சு வந்துட்டோம் இப்பதான்டா நிம்மதி.. இருந்தாலும் அந்த குட்டி பிசாசுக்கு ரொம்ப வாய்டா கடத்திக்கிட்டு வந்தா நம்ம கிட்டயே பிரியாணி கேக்குறா பாரேன்..” என்று பேசிக் கொண்டே சென்றார்கள்.
இவ்வாறே மாயாவை சுற்றி இருந்த அவனது அடியாட்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு காரணம் சொல்லி செல்லத் தொடங்கினார்கள்.
தன்னுடைய அறைக்குள் சென்ற அதிரன் அங்கே இருந்த கேமராவின் மூலம் மாயாவின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பல கொலைகள் கட்டப்பஞ்சாயத்து என பல குற்றங்களை செய்த அவனது அடியாட்களோ எவருக்கும் பயந்து போனது கிடையாது.
ஆனால் இந்த பெண்ணிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதை சிந்தித்துத் தனக்குள்ளேயே புன்னகைத்தப் படி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
அதே நேரம் அவனது தலையோ லேசாகிப் போனது போல இருந்தது.
உடல் பதற்றமும் இல்லாமல் போனது, மேலும் தன் உடல் சீராக இருப்பதை உணர்ந்தவன் தனக்குத் திடீரென என்னவாயிற்று என்பதை அறியாமலே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் மாயாவின் குறும்புத்தனம் ஞாபகத்திற்கு வர மீண்டும் தனக்குள்ளேயே சிரித்தவன் அப்படியே அமர்ந்தவாறே தூங்கினான்.
நீண்ட ஆழ்ந்த உறக்கத்தின் பின்னர் கண்களை விழித்துக்கொண்டான் அதிரன்.
எப்போதும் இல்லாததைப் போல இன்று அவனுள் ஓர் புத்துணர்வு தோன்றியது.
இவ்வளவு நாட்களாக அவன் தன்னுடைய வலியை போக்குவதற்காக மதுவை அருந்தியும் பல மாத்திரைகளை உட்கொண்ட போதும் கிடைக்காத நிவாரணம் தற்போது கிடைத்தது போல தோன்றியது.
அதற்கு காரணம் அவனின் மனநிலையே.
எப்போதும் அழுத்தமாக இருக்கும் மனமும் அவனுடைய உதடுகளும் இன்று சற்றே விரிந்ததன் விளைவே இது என்பது அவனுக்குத் தாமதமாகவே புரிந்தது.
அவனது இந்த மாற்றத்திற்கு காரணம் மாயாவின் சிறு பிள்ளைத் தனமே என்பது அவனுக்கு நன்கு புரிந்திருந்தது.
அவன் எழுந்தவுடன் அவனின் அறைக்குள் வந்த ஒருவனோ “சார் அந்த பொண்ணை வெளியே விடுவோமா..?, ஏன்னா அந்த பொண்ணு நம்மள பத்தி எங்கேயுமே சொல்ல மாட்டா.. கன்பார்ம்…” என்று கேட்டான் அவன்.
அதிரனோ அவனைப் பார்த்து “நோ நான் வந்து அதை பாத்துக்குறேன் நீ போ..” என்று பதிலளித்து அவனை அனுப்பி வைத்தான்.
அதிரனின் சிந்தனையோ பலவிதமான கோணத்தில் பயணிக்கத் தொடங்கியது.
எதற்கும் பயப்படாமல் எந்த ஒரு விடயத்தையும் துணிச்சலாக செய்யும் அதிரன் இன்று சற்றுத் தயங்கி நின்றான். அதற்கு காரணம் இதுவரை காலமும் பெண்கள் விடயத்தில் அவன் பெரிதும் தலை சாய்த்தது கிடையாது.
அவனின் மனம் பல குழப்பத்துடன் இருந்தாலும் இறுதியாக ஓர் முடிவை எடுத்து விட அடுத்த நொடியே மாயா இருக்கும் அறைக்குச் சென்றான்.
அவன் சென்றுப் பார்க்கையில் மாயாவை நடுவில் அமர வைத்து அவளைச் சுற்றி அவனது அடியாட்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிரன் உள்ளே வருவதை பார்த்த மாயவோ “ஓகே ஓகே சிரிக்காதீங்க உங்களுடைய சிடுமூஞ்சி பாஸ் வரார்..” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்க அவளின் அருகே இருந்தவர்கள் சட்டென எழுந்துக் கொண்டார்கள்.
அதிரன் உள்ளே வந்தவுடன் “ நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு நாள் இங்கேயே இருந்துட்டேன் இன்னைக்கு எஎன்னை வெளியே விட்டுடுவீங்க தானே, இனிமே உங்க பக்கமே நான் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன். ஒரே ஒரு கவலை தான் நம்ம பாசமான தம்பிகளே விட்டு பிரியத்தான் மனசு கேட்கல..” என்று அறையில் இருந்தவர்களை பார்த்துப் புன்னகைத்தாள் அவள்.
“ஃபைன் நீ உங்க தம்பிங்க கூடவே இரு சோ அதை நினைச்சு கவலைப்பட தேவையில்லை..” என்று அழுத்தமாக கூறினான் அதிரன்.
“நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்கு புரியலையே..” என்றாள் அவள்.
“உன்கிட்ட பேச எனக்கு டைம் கிடையாது” என்று மாயாவிடம் கூறிவிட்டு அவளின் அருகே இருந்த ஒரு அடியாளை அழைத்த அதிரன்,
“நேற்று நம்ம சரக்கு வண்டி பத்தி போலீஸ்க்கு ரிப்போர்ட் கொடுத்தவனைக் கீழே அடைச்சு வைச்சிருக்கோம்ல அவனை மேலே கூட்டிட்டு வா..” என்று உத்தரவிட அந்த அடியாளும் அதிரணை பற்றி போலீஸ்ல் மாட்டிக் கொடுத்தவனை அழைத்து வந்தான்.
மாயாவோ என்ன நடக்கின்றது எனத் தெரியாமல் நிற்கையில் அதிரனோ மாயாவின் கையினை பிடித்து தன் அருகில் இழுத்தான்.
“இடியட் உனக்கு மேனர்ஸ் கிடையாதா ஒரு பொண்ணு கிட்ட வந்து இப்படியா நடந்துக்குவ” என்று கத்தியவாறு அதிரனின் கைப்பிடியில் இருந்து விலக நினைத்தாள் அவள். ஆனால் அதிரனின் பிடியோ உடும்பு பிடியாக இருந்ததால் அவளால் விலக அவளால் விலக முடியவில்லை.
மாயாவின் கையில் ஓர் கத்தியை வைத்து அவனும் ஒரு கையினால் பிடித்தபடி அவனைப் பற்றி போலீசில் காட்டிக் கொடுத்த துரோகியின் மார்பில் சடசடவென குத்தினான்.
அவனது மார்பில் இருந்து உதிரமோ பீச்சிடத் தொடங்க மாயா அலறியபடி மயங்கி கீழே விழுந்தாள்.
அவனுடைய கொலையில் அவளையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டான் அதிரன்.