இதழ் – 04
அவளின் தேகமோ இலேசான குளிரை உணரத் தொடங்கியது.
ஏதோ ஓர் மெதுமையான பஞ்சின் மேலே இருப்பதைப் போல உணர்ந்தவள் தன் கண்களை மெல்லத் திறந்து கொண்டாள்.
நன்கு தூங்கி விழித்ததைப் போல தேகமோ இறகைப் போல இருக்க கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவள் சுற்றிப் பார்க்கையில் அந்த இடமோ அவளுக்கு புதிதாக இருந்தது.
நன்கு பரந்த விசாலமான பரப்பைக் கொண்ட அந்த அறையில் ஓர் உயர் தரப் பஞ்சு மெத்தையின் மீது தான் படுத்து இருந்ததை அறிந்துக் கொண்டாள்.
‘இப்போ நான் எங்கே இருக்கேன்.? ஒரு வேளை அந்த கொலைகாரக் கும்பல் என்னை வெளியே விட்டுட்டாங்களா..?
ஆமா போல அவன் என்னை வெளியே விட்டுட்டான்.. ஏன்னா இங்கே எந்த காண்டாமிருகங்களையுமே காணலையே… இப்போதான் நிம்மதியா இருக்கு… பட் இது எந்த இடம்..?’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவளின் அறையின் கதவைத் திறந்து உள்ளே வந்தான் ஒருவன்.
அறையினுள் வந்தவனும் அவளோடு எதுவும் பேசாது தான் கையில் கொண்டு வந்த ஜூஸ் கோப்பையினை வைத்து விட்டுச் சென்றான்.
அங்கு வந்தவனும் இதற்கு முதல் அதிரனின் அடியாட்கள் அணிந்திருந்த ஆடையைப் போலவே அணிந்திருந்தான். அப்போது தான் மாயா உணர்ந்து கொண்டாள் தான் இன்னும் அந்தக் கொலைகாரனின் கைவசம்தான் இருக்கின்றேன் என்பதை.
அவள் அணிந்திருந்த சுடிதாரின் மேலே சிவப்பு நிறத்தில் ஏதோ கறைப் படிந்திருப்பதை பார்த்தவள் அதைத் தன் கைகளால் தொட்டுப் பார்த்தாள்.
அங்கே இருப்பது இரத்தக்கறை என்பதை தெரிந்தவள் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சிந்தித்துப் பார்த்து அழத் தொடங்கினாள்.
‘என்னோட இந்தக் கையால ஒருத்தன கொல்ல வச்சிட்டானே அந்தப் பாவி.., கடவுளே..! ஏன் எனக்கு இப்படி சோதனையை தர்ற..?, என்ன எப்படியாவது இந்த கொலைகாரக் கும்பலிடமிருந்து அனுப்பி வெச்சுடு,
நான் இங்கே பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்டேன் இதோட சீரியஸ்னஸ் தெரியாம நான் ரொம்ப விளையாட்டா இருந்துட்டேன்’ என்று விம்மி விம்மி அழத் தொடங்கினாள் மாயா.
அவளின் மனமோ அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இருந்தாலும் எவ்வாறாவது அந்த இடத்தில் இருந்து தப்பிப் போக வேண்டும் என்று முடிவெடுத்தவள் அதற்கான வழியினைத் தேடி ஆராயத் தொடங்கினாள்.
அந்த அறையோ கருமை நிற கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அறையின் கதவினைத் திறக்க முயன்றாள் ஆனால் அவளால் முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து அறையின் கண்ணாடிச் சுவர்களை தன் கை கொண்டு உடைக்க நினைத்தாள் அதுவோ சற்றும் நகரவில்லை.
ஏனெனில் ஒவ்வொன்றும் கடினமான கண்ணாடிகள் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
‘என்னத்துக்காக இவன் இப்படி ஒரு வீட்டை கட்டி வைச்சிருக்கான்னு தெரியல..? இந்த பெரிய ரூமுக்குள்ள ஒரு ஊரே வந்து இருக்கலாம் போல தெரியுதே, இந்தக் கண்ணாடியை எப்படியாவது உடைச்சுட்டாவது போகணும் இல்லனா கொலைகாரண்ட கையால நான் சாக வேண்டியது தான்’ என்று நினைத்தவள் அவளின் அருகில் இருந்து ஓர் பூச்சாடியைக் கொண்டு கண்ணாடியை உடைக்கத் தயாரானாள்.
அந்த சிறிய பூச்சாடியை கொண்டு கண்ணாடி சுவர்களில் ஓங்கி அடித்தாள் அவள். ஆனால் அங்கே கண்ணாடி சுவர்களுக்கு பதிலாக பூச்சாடி உடைந்து நொறுங்கியது.
மாயவோ செய்த முயற்சி பயனளிக்காததால் சோர்வோடு அந்த அறையில் உள்ள ஓர் இரும்பு இருக்கையில் அமர்ந்தாள்.
‘இந்த ரூமை விட்டு எப்படி வெளியே போக போறேன்னு தெரியல..?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தவாறு இருக்கையில் தலையை சாய்த்தாள்.
அப்போது அவளின் கையோ அந்த இரும்பு இருக்கையில் அடிபட சிறு வலியை உணர்ந்தவள்.
‘அம்மாஆஆஆ……..’ எனத் தன் கையைத் தடவிய மாயாவுக்கு ஓர் யோசனை தோன்றியது. உடனே எழுந்து அவள் அமர்ந்திருந்த இரும்பு இருக்கையை தூக்கிக் கொண்டு அந்த கண்ணாடிச் சுவரின் அருகே போய் நின்றாள்.
‘முருகா நீதான் என்னை காப்பாத்தணும்..’ என்று கூறியபடி அந்த இரும்பு இருக்கையால் ஓங்கி கண்ணாடியின் மீது அடித்தாள் மாயா.
‘என்ன இந்த கண்ணாடி கொஞ்சம் கூட உடைய மாட்டேங்குதே..?’ என்று தனக்குத் தானே பேசியபடி மீண்டும் மீண்டும் அந்த இருக்கையால் ஓங்கி அடித்தாள்.
இறுதியில் அந்த கண்ணாடியோ சிறு பிளவினைக் காண்பிக்க மாயாவின் முயற்சியோ வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
மாயாவுக்கும் அந்த சுவற்றை உடைத்து விடலாம் என்ற நம்பிக்கை மேலும் அதிகரிக்க அவள் தொடர்ந்து அடித்தாள். இறுதியாக அந்தக் கண்ணாடி சுவரும் உடைந்து நொறுங்கி கீழே கொட்டியது.
கூண்டில் அடைக்கப்பட்ட பறவை வெளியே வந்ததைப் போல மாயாவோ துள்ளிக் குதித்து அந்த உடைந்த சுவரின் வெளியே தலையை நீட்டிப் பார்த்தாள்.
அவள் இருந்ததோ வீட்டின் முதலாவது தட்டாகும் எனவே கீழே குனிந்து பார்க்கையில் அங்கே கையில் ஓர் துப்பாக்கியுடன் அதிரன் அமர்ந்திருக்க அவனின் முன்னே பலர் அமர்ந்திருந்தனர்.
மாயா உடைத்தக் கண்ணாடியின் துகள்களோ கீழே இருந்து அதிரனின் மீதும் சிதறிக் காணப்பட்டது.
மாயா கீழே பார்க்கும் அதே நேரத்தில் அங்கிருந்த அனைவரும் மேலே நிமிர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க தன் தலையில் கையை வைத்துக் கொண்டே கீழே அமர்ந்தவள்,
‘என்ன காரியம் பண்ணின மாயா யாரு கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைச்சியோ அவன் கிட்டயே இப்போ மாட்டிகிட்டியே, அந்த கொலைகாரன் என்ன பண்ண போறான்னு தெரியலையே..’ என்றவாறு இருக்கையில் அறையின் கதவோ படார் என திறக்கப்பட்டது.
தன் முன்னே வதனம் சிவக்க கண்களில் கோபத்தீ தெறிக்க சினத்தின் உச்சத்தோடு உள்ளே வந்த அதிரனைப் பார்த்து மாயாவோ அச்சத்தில் தலையினைக் குனிந்து உடலை சுருட்டிக் கொண்டு அமர,
“உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா டி” என்றவாறு அமர்ந்திருந்தவளின் கூந்தலை தன் கையினால் பிடித்து இழுத்தான் அதிரன்.
“அம்மாஆஆஆ……” என வலியோடு எழுந்தவளின் கூந்தலை விடுவித்த அதிரன் அவளின் கழுத்தினைப் பிடித்து நெரித்தவாறு மறுகையில் வைத்திருந்த துப்பாக்கியினை அவளின் நெற்றியில் வைத்தான்.
தான் இதிகாசங்களில் படித்ததைப் போல கையில் கயிற்றுடன் எமதர்மன் இருப்பதைப் போல இங்கே அதிரன் கையில் துப்பாக்கியுடன் அவளின் மரணத்தை கண் முன்னேக் கொண்டு வந்தான்.
உடல் அச்சத்தில் நடுங்க கண்கள் இரண்டும் விரிந்து தொண்டைக்குழியில் ஏதோ சிக்கியதுப் போல உமிழ்நீரை உள்ளெடுத்தாள்.
‘உனக்கு வாழனும்ன்னு ஆசை இருந்துச்சுன்னா நான் சொல்றதைக் கேட்டுட்டு இங்கேயே இருக்கனும்… அதையும் மீறி இந்த இடத்தை விட்டுட்டு போக நினைச்சா அப்புறம் உன்னோட உடம்பு மட்டும் தான் வெளியே போகும்.” என்று அதிரன் மிரட்டலாகக் கூறினான்.
“நான் உங்களைப் பத்தி யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்காக இங்கே பிடிச்சு வைச்சிருக்குறீங்க..?, எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கலை உங்களைப் பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு..
நான் இதுக்கு முன்னாடி யாருக்கும் எந்தப் பாவமும் செய்தது கிடையாது.. எனக்கு இந்தக் கொலை எல்லாம் ரொம்பவே பயம்… ப்ளீஸ் என்னை இங்கிருந்து போக விடுங்க” என்று அடிபட்ட குரலில் மாயாவோ அதிரனிடம் கெஞ்சத் தொடங்கினாள்.
அவன் யாருடைய கெஞ்சலுக்கும் செவிமடுக்காத அரக்கன் என்பதை அவள் மறந்து தான் போனாள்.
அவளோ தன்னை இங்கிருந்து விட்டுவிடும் படி கெஞ்சிக் கொண்டிருக்க அவனோ தன்னுடைய விரலை காதினுள் நுழைத்து அலட்சியமாக குடைந்து கொண்டவன் “நான் நெனச்சா மட்டும் தான் உன்னால இங்கிருந்து வெளியே போக முடியும்… ஆனா நான் நினைக்க மாட்டேன்..” என அதிரடியாகக் கூறிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட மாயாவுக்கோ அனைத்தும் இருண்டு போனதைப் போல இருந்தது.
அவள் உடைத்த கண்ணாடித் துண்டுகளைப் போல அவளுடைய மனமும் அக்கணம் நொறுங்கிப் போக அடுத்து என்ன செய்வது எனப் புரியாது உறைந்து நின்றாள் அவள்.