உயிர் தொடும் உறவே -13

4.5
(4)

உயிர் 13:

 

புகழினி இங்கு நடந்த கலாட்டாக்களை பாண்டியனிடம் அலைபேசி மூலம் தெரிவித்திருந்தாள்‌.

தெரிவித்திருந்தாள் என்பதை விட அதை கூறி அவனை ஒரு வழியாக்கிருந்தாள்‌.

 

“ இங்க பாருங்க…மிஸ்டர் பாண்டியன் உங்க அப்பா ஆடுற ஆட்டத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. எனக்கு வந்த ஆத்திரத்துல உங்க‌ கூட பேசக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா இங்க நடந்ததை உங்களுக்கு சொல்லியாகனும் ல‌ அதான் கூப்டேன். என்ன நினைச்சிட்டு உங்க அப்பா இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காரு…? அந்த நெட்ட கொக்கு வந்ததுல இருந்தே உங்க அப்பாவோட நடவடிக்கை ரொம்பவே மாறிடுச்சு. எவ்வளவு பேச்சு பேசுறார்…? . உங்க அம்மாவும்‌ மீனாட்சியும் அமைதியா நிக்குறாங்க. என்ன சொல்ல…? இருக்கட்டும் நான் உங்க வீட்டுல காலடி எடுத்து வைச்சவுடனே பாருங்க ….உங்க‌அப்பா குடுமி என்‌ கைல தான் . பாவம்‌ எங்கண்ணன் எப்படி உடைஞ்சு போச்சு தெரியுமா…? அன்னக்காவடியாம்… எங்கண்ணன். எவ்வளவு திமிர் தனமான‌ பேச்சு. உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கலனாலும் , ஒரு‌ கோவில்ல வச்சு எனக்கு நீங்க மஞ்ச கயித்த கட்டுனும் என்ன புரிஞ்சுதா…? முன்னமாவது கொஞ்சம் யோசனை பண்ணுனேன். இருக்கு கச்சேரி உங்கப்பாவுக்கு…!” என‌ப் பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள்.

அவ்வளவு ஆற்றாமையாக இருந்தது அவளுக்கு.

 

அவனோ ,” அடியேய்..! அவரு‌ உங்க‌ மாமானாரு ‌டி…! கொஞ்சம் மரியாதையா பேசு..”என்று‌ கூறி‌ முடிப்பதற்குள் எதிர்பக்கத்திலிருதந்த புகழினியோ வண்ண மயமான வார்த்தைகளால் அவனை அர்ச்சிக்க துவங்கினாள்.

கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவனை நன்றாக திட்டி தீர்த்த பிறகே அவளது மனம் சமன்‌பட்டது.

அவள் திட்ட ஆரம்பித்தவுடன்  காதினை தொட்டும் பார்த்தான்.

 

” அப்பா…நல்லவேளை ரத்தம் வரல… ராட்சஸி என்னமா பேசறா ராணி மங்கம்மா…” என நினைத்தான்.

அவள் பேச ஆரம்பித்த பத்தவது நிமிடத்திலேயே அவனது செவி சூடாகி சிவந்தது.

அலைபேசியை தனியே வைத்து விட்டான். நடுவில் நடுவில் எடுத்து என்ன சொல்கிறாள் என்பதை குத்து மதிப்பாக குறித்துக் கொண்டான்.

இல்லையெனில் அதற்கும் அரை மணி நேர திட்டும் வகுப்பை எடுத்து விட்டுதான் விடுவாள் அவனது அழகான வாயாடி ராட்சஸி.

 

“ ஹலோ..! லைன்ல இருக்கீங்களா பாண்டியன்…இல்ல கீழ வச்சிட்டு பாட்டு கேட்டுட்டு இருக்கீங்களா..? “ என்று சரியாக கணித்தாள்.

 

அவனோ பதறியபடி,  “இல்லை டா …தங்கம்..உன்னோட அன்பான பேச்சை தான் கேட்டுட்டு இருக்கேன் மா…நீ கவலைப்படாதே யாரு என்ன சொன்னாலும் என்னோட பொஞ்சாதி நீ மட்டுந்தேன்… நேர்ல வந்து பேசிக்கலாம்…மா. நீ விசனப்படாம இரு. அதான் அதை விட நல்ல இடமா அமைஞ்சிருச்சே…நல்லதே நடக்கும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன். நீ வேலையை சீக்கிரம் ஆரம்பிச்சிடு. பாத்துக்க… ஒரே ஒரு டார்க் சாக்லெட் மட்டும் குடேன். ரொம்பவே காஞ்சி போயிருக்கேன். “ என்றான்‌. ” நீங்க உங்க காரியத்துலயே கண்ணா இருங்க…” என் சலிப்புடன் கூறினாலும்  மற்றும்

அவனது ஆறுதலான வார்த்தைகளே அவளை சற்று சமாதானம் ஆக்கியிருந்துது.

எனவே அவனை மேலும் சோதிக்காமல் அலைப்பேசியே வெட்கப்படும் அளவிற்கு அவனுக்கு திகட்ட திகட்ட முத்தத்தினால் குளிப்பாட்டினாள்.

 

 

ஆணவனோ அவளது முத்தத்தினால் ஏற்பட்ட மோகத்தில் திணறினான்.

இப்பொழுதே அவளை தன்னவளாக்கிக் கொண்டு தன்‌ கை வளைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராவல் எழுத்தது.

அவளது புகைப்படத்தில் தனது இதழை பதித்து தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

 

நாட்கள் யாருக்காகவும் காத்திராமல் வேகமாக நகர்ந்தது.

கட்டிட வேலையை இரு வேங்கைகளும் ஆரம்பித்திருந்தனர்.

 

ஊர் திருவிழாவைும் பொங்கல் பண்டிகையும் முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.

எப்பொழுதும் மாடு பிடி வீரர்களில் ஒருவனாக இருந்து அதிக காளைகளை அடக்கி பரிசினை தட்டிச் செல்வது ஈஸ்வரனுக்கு கை வந்த கலை.

இம்முறை தான் ஜல்லிக்கட்டுகாக வளர்த்து வரும் கொம்பனை தயார் நிலையில் வைத்திருந்தான் .

இம்முறை தான் பங்கேற்காமல் தனது கொம்பனை களத்தில் விட விரும்பினான்.

கொம்பனுக்கு நன்றாக பயிற்சி அளித்திருந்தான். சிலிர்த்துக் கொண்டு சீறும் காளையவன் ஈஸ்வரனது சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவான்.

கொம்பனது உயரமும் திமிலும்  சீவிய‌ கொம்பும்  இருக்கும் வீரர்களை கூட பத்தடி ஓட வைக்கும்.

 

 திருவிழாவிற்கே உண்டான கூச்சலும் கும்மாளமும். இளசுகளின் ரவுசும் ஊரினையே கலகலப்பாக மாற்றிக் கொண்டிருந்தது.

குழந்தைகளோ விளையாட்டு சாமான்களை வாங்கியும், பலூன்களை வாங்கியும மகிழ்ந்தனர்.

காளையரின் மனம் கவர்ந்த இளம் பெண்களோ கண்ணாடி வளையல்கள், அழகிய புது வடிவலான காதணிகளை வாங்கி மகிழ்ந்தனர்.

ஈஸ்வரனும் ‌மீனாட்சியை அழைத்துக் கொண்டு வண்ண வண்ண கண்ணாடி வகைகளையும் நெருக்கமாக கட்டப்பட்ட மல்லிகை சரத்தையும் வாங்கி கொடுத்தான்.

ஆசையாக அவன்‌ வாங்கிக் கொடுத்த வண்ண வளையல்களை கை நிறைய அணிந்து கொண்டு மல்லிகை சரத்தை சூடிக் கொண்டு தெய்வீக அழகுடன் வலம் வந்தாள் மீனாட்சி.

ஈஸ்வரனது தன்மையான‌ பேச்சும்‌ நடவடிக்கையும் அவளது மதிமுகத்தை பூவாக மலரச் செய்திருந்தது.

அவளது நெருக்கம்‌ முதன்‌முறையாக அவனது ஆண்மையின் தவிப்பை எகிறச்‌ செய்திருந்தது.

கள்‌ உண்ட வண்டாக அவளையே சுற்றி சுற்றி வந்தான்.

ஆதியும் ‌இதனை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

ஆனால் அவன்‌ மனதில் என்ன உள்ளது என்பதை யாரும் அறியவில்லை.

 

அனைத்துமே நன்றாக  சென்று கொண்டிருந்ததால் ஈஸ்வரனும் அவளிடம் தேவையில்லாமல எரிந்து ‌விழவில்லை..

நேஹாவிற்கும் ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி ஜோடிப்‌ பொருத்தத்தை பார்த்து சற்று பொறாமை யாகவும் இருந்தது. நிறைவாகவும் இருந்தது.

ஆனால் தனது நண்பனின் பார்வை சரியில்லாததாக தோன்றியது தான்‌ அவளுக்கு கலக்கத்தை உண்டு‌ பண்ணியது.

ஏனேனில் தன்‌ நண்பனை பற்றி நன்றாக அறிவாள். அவன்‌ அமைதியாக இருக்கின்றான் என்றால் பெரிதாக எதோ செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றான் என்று.

அடிக்கடி அவளது பார்வை ஈஸ்வரனையும்‌ மீனாட்சியையும் அளவெடுத்துக் கொண்டிருந்தது .

நடுவே தனது நண்பனையும்‌ கவனிக்கத்‌ தவறவில்லை.

 

ஆதி சிறு வயதில் ஜல்லிக்கட்டை பார்த்திருந்தாலும் இந்த போட்டியைப்‌ பற்றியும்‌ போட்டியில் காளைகளை அடக்குவதைப்‌ பற்றியும் சுத்தமாக தெரியாது.

வேடிக்கை மட்டுமே பார்க்க நேஹாவுடன் கிளம்பிச் சென்றான்.

 

சங்க்ர பாண்டியன் ஊர் தலைவராக போட்டியை தொடங்கி வைத்தார்.

மயில்வாகனம் மற்றும் வடிவாம்பாள் மேடையில் அமர்ந்திருந்தனர்.

புகழினியுடன்‌ மீனாட்சி‌ பேசிக் கொண்டிருந்தாள் ‌.

நேஹாவிற்கும் அவர்களுடன்‌ இணைந்து பேச ஆசைதான். ஆனால் புகழினியோ அவளை முறைத்தே தள்ளி நிறுத்தினாள்.

மீனாட்சியிடம் வலுக்கட்டாயமாக பாவாடை தாவணியை கட்டி விடுமாறு கூறி அதை உடுத்திக்கொண்டு வந்திருந்தாள்.

ஆனால் பரிதாபம் சிறிது நேரத்தில் அவளது தாவணியில் குத்தியிருந்த குத்தூசி எங்கோ விழுந்துவிட்டது.

அவளது தோளிலிருந்து வழுக்கிக்கொண்டு இருந்தது அவளது‌ தாவணி. அதை சரி செய்ய தெரியாமல் முழித்துக் கொண்டே இருந்தாள் நேஹா.

 

“ கொஞ்சம் தள்ளி நிக்குறீங்களா…?” திடீரென கேட்ட‌அழுத்தமான குரலினால் பதறி திரும்பியதில் தாவணி அவளது தோளிலிருந்து நழுவி விழுந்தது.

 

ஈஸ்வரன் தான் கொம்பனுடன் நின்றிருந்தான்.

அவளது நிலையை கண்டவனேக்கு கோபம் வந்தது.

 

“ என்ன தான் நீங்க வெளிநாடா இருந்தாலும் தாவணியை இப்படி தான் இஷ்டத்துக்கு போடுவீங்களா…? அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. இப்படி போட்டுட்டு இந்த ஊர்ல நடமாடதீங்க…ஒருத்தர்‌ போல ஒருத்தர் ‌இருக்க மாட்டாய்ங்க…” என கடுகடுத்தவாறே நகரப் போனவனனை ,

“ ப்ளீஸ்…இப்படியெல்லாம்  பேசி ஹர்ட் பண்ணாதீங்க. எனக்கும் இந்த டிரெஸ்ஸோட மதிப்பு தெரியும்.  இந்த ஷால்ல(தாவணியில் )இருந்த பின் ஜமிஸ் ஆகிடுச்சு. இதை எப்படி போடுறதுன்னு தெரியாம தனியா நின்னு முழிச்சிட்டு இருக்கேன். மீனாட்சியும் அந்த பொண்ணும்‌ தூரத்துல நிக்குறாங்க. இங்க என்னமோ வேடிக்கை காட்டாறாங்கன்னு வேகமா வந்தேன். வந்த வேகத்துல  ஷால் எதுலயோ ஸ்டரக் ஆகி அப்படியே கையாட வந்துடுச்சு. இதை ரிமூவ் பண்ணிட்டு நிக்கவும் ரொம்பவே கஷ்டமா இருக்கு. நான் போடுற ஷார்ட்ஸ் அண்ட் க்ராப் யாப்பை விட இது ரொம்பவே செக்ஸியா..ஐ மீன் கவர்ச்சியா இருக்கு. இதை எப்படி பின் பண்றது…? உங்களுக்கு தெரியுமா..? “ என்று திருதிருவென விழித்தாள்.

அவளது தோளில் சதை பற்றில்லாததால் தாவணி நழுவி நழுவி விழுந்தது.

எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.

 தலையில் அடித்துக் கொண்ட ஈஸ்வரன் அப்போது தான்  தாங்கள் இருவரும் இருக்கும் இடத்தைப் பார்த்தான்

அங்கு முக்கால்வாசி பேர்‌ ஆண்கள். ஆடுகளையும் கோழிகளையும்‌ விற்றுக் கொண்டிருந்தனர்.

வாங்குபவரும் விற்பவரும்‌ கையில் துண்டைப் போட்டு விலைப்‌பேசிக் கொண்டிருந்தனர். அங்கு பெண்கள் இருப்பது அரிது தான்.

இந்த விஷயம் புரியாமல் அவள் ஓடி வரும் போது தாவணி ஏதேனும் கூரிய‌பொருளில் சிக்கியிருக்க வேண்டும் ‌என்று சரியாக யூகித்தான்.

 

ஒரு பெருமூச்சுடன் , “கொஞ்சம் இருங்க” என்றவன் சுற்று முற்றும் பார்த்தான்.

விடலைப் பையன் முதல் வயதானவர் வரை அனைவரும் ஆண்களே.

கையில் பிடித்துக் கொண்டிருந்த கொம்பன் வேறு வம்பு பண்ணி சிலிர்த்துக் கொண்டிருந்தான்.

 

 “ கொம்பா.…” என அதட்டியவன்.

அங்கு‌ பெண் ஒருவர் வரவே…” லதாக்கா.. இங்க வாங்க…” என்றான்.

 

அருகில் வந்த அப்பெண்‌,  *என்ன ஈஸ்வரா…? என்ன‌ வேணும்…?” என்றார்.

 

 சங்கடத்துடன் அருகிலிருந்த நேஹாவைப்‌ பார்த்த ஈஸ்வரன், “ இந்த பொண்ணுக்கு …தாவணில இருந்த குத்தூசி‌ எங்கயோ விழுந்துடுச்சு. கொஞ்சம் ‌சரி‌ பண்ணி‌விடுக்கா…எனக்கு நேராமாச்சு… கொம்பனை கூட்டிப்‌ போய் காளி கோவில் கிட்ட நிக்க‌ வைக்கனும். நா வாரேன்…” என்று அவரிடம் அவளை பார்த்து கொள்ளச் சொல்லி விட்டு சென்றான்‌ ஈஸ்வரன்.

 

அவரும் அவளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று‌ தாவணியை நேர்த்தியாக உடுத்தி‌ விட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தார்.

பாவாடை தாவணி நேஹாவிற்கு புது வித விதமான உணர்வினை தந்தது.

தன்னருகே வந்து நின்ற நேஹாவை விசித்திரமாக பார்த்தான் ஆதி.

 

“  ஆமா கேக்கனும்ன்னு நினைச்சேன்…என்ன இது வேஷம்…? ஏதாச்சும் கரகாட்டம் ஆடப்போறியா…?” என‌‌ நக்கலாக கேட்டான் ஆதி.

 

அவனை நன்றாக முறைத்தாள்‌ நேஹா….

அவள் ஜல்லிக்கட்டு போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டிருந்தாலும் நேரில் பார்ப்பது ஒரு வித சுவாரசியமாக இருந்தது.

 

“ஏன் ஆதி… எல்லார் வீட்லையும் இந்த காளைகளை வளப்பாங்களா..? அப்ப‌ உங்க மாமா வீட்ல ஏன் வளர்க்கல…?” என தனது சந்தேகத்தை கேட்டாள்.

 

“ ம்ம்…ஜல்லிக்கட்டு போட்டியை முக்கியமா நினைக்குறவங்க‌  வீட்ல எல்லாருமே  வளர்ப்பாங்க. விவசாயிங்க… அப்பறம்  நல்ல கட்டுமஸ்தான இளவட்ட‌பசங்க. ஏன்‌ சில லேடீஸ் கூட‌ வளர்ப்பாங்க. நல்லா கொம்பை சீவி விட்டு. அதுக்கு நல்லா டிரெயின் பண்ணி . ஆரோக்கியமான காளையா‌‌ தான்‌ போட்டில இறக்குவாங்க…‌இதுக்கு நிறைய‌‌ பரிசும் அறிவிப்பாங்க. இந்த தடவை நம்ம சார்பில நிறைய காளைகளை அடக்குறவங்களுக்கு கார் கொடுக்கலாம்ன்னு‌ மாமா கிட்ட சொல்லி ஏற்பாடு ‌பண்ணிருக்கேன் அப்பறம் அடங்காத காளைகளுக்கும் தனி பரிசும் இருக்கும்…* என்றான்.

 

நேஹாவோ ,  “வாவ்..இன்ட்ரெஸ்டிங்…..* என்று கூறி விட்டு அவனுடன் தான் நின்றிருந்தாள்.

ஈஸ்வரன் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியவுடன் அங்கிருந்த அனைவரும் ஒரு சேர அவன்‌ பங்கேற்றே ஆக வேண்டும் என‌ கோஷமிட்டு அவனை உசுப்பேத்தி விட்டுவிடவே .

அவனும் அதற்கு மேல் மறுக்கத் தோன்றாது சரியென்று கூறி , வாடி வாசல் விழியாக சீறி வரும் காளைகளை அடக்கத் தயாரகி‌‌ நின்றான்.

 

சற்று நேரத்தில் ஒவ்வொரு காளையாக காளி கோவில் அருகில் அமைந்துள்ள வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்‌பட்டது.

அதில் சில காளைகளுக்கு வண்ணங்களால் நெற்றியில் திலகமிட்டு கொம்புகளை சீவி அதி பூக்களை சுற்றியிருந்தனர்,,அதன் கால்களில் கணீரென்று ஒலிக்கும் சதங்கைகளை அணிவித்திருந்தனர்.

 

சீறி வந்த காளைகள் சுற்றி நின்றிருந்த இளவட்ட காளைகளை நோக்கி ,  “முடிந்தால் என்னை தொட்டும் பார்….” என்று சவால் விடும் வகையில் சிலிர்த்துக் கொண்டு வந்தன.

சுற்றி நின்றிருந்த வீரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் , தனது தலையை சிலுப்பிக் கொண்டு முட்டும் விதமாக அசைத்து அவர்களை அச்சுறுத்தி நான்கடி பின்னால் போகச் செய்து கொண்டிருந்தன.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று ஏறு தழுவுதல். நாகரீகம் மாறினாலும் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இம்மாதிரியான திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுகள் நினைவு படுத்துகின்றன.

 

சுற்று வட்டார ஊர்களிலிருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் சீறிக்கொண்டு தாவி வந்தன.

ஆஜானுபாகுவான மாடு பிடி வீரர்களையும் அசர வைத்து வேடிக்கை காட்டின சில காளைகள்.

காளைகளை அடக்கிய இளங்காளை வீர்ர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது .

 

சீறி சிலிர்த்துக் கொண்டு வந்த காளைகளை லாவகமாக திமிலை. பிடித்து அடக்கினான் ஈஸ்வரன்.

ஒன்று, இரண்டு என நீண்டு கொண்டே போய் பதினெட்டு காளைகளை தனி ஆளாக அடக்கியிருந்தான் ஈஸ்வரன்.

வழக்கம் போல கைதட்டி விசிலடித்து ஆரவாரம்‌ செய்தாள்‌ புகழினி.

நேஹா விற்கும் அது போல செய்ய ஆசையாக இருந்தது. ஆனால் அவ்வாறு செய்ய தெரியாதது என்பதை விட செய்தால் தன்‌ நண்பன் பார்வையாலேயே  பொசுக்கி விடுவான் என்று அமைதியாக இருந்தாள்.

இடைவெளியின் போது வியர்வை வழிய ஆண்மையின் இலக்கணமாக நின்றிருந்தவனின் அருகில் நின்றிருந்தாள் புகழனி.

அவளருகே மீனாட்சி நின்றிருந்தாள் .‌பெருமை பொங்க ஈஸ்வரனை பார்த்திருந்தாள்.

 

நேஹாவோ ஈஸ்வரனது வீரத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் வந்தவுடனே ஆதியையும் இழுத்துக் கொண்டு அவனருகே வந்து.. “ வாவ்…. வாவ்…யூ ஆர் ‌ஜஸ்ட் அமேசிங் மேன்…என்ன ஒரு‌ ஸ்டைல் …? என்ன ஒரு மேன்லினஸ்…? சூப்பரா காளையை அடக்குனீங்க. எனக்கு உங்களை குத்திடுமோ…ன்னு அவ்வளவு பயமா இருந்தது. பட் நீங்க அசால்ட்டா காளைய பிடிச்சிட்டீங்க… சூப்பர்…சூப்பர்… “ என்றவள் சட்டென்று ஆதியின் புறம் திரும்பி, “ ஏய்…ஆதி..நீயும் தான் இருக்கியே. இந்த மாதிரி ஏதாவது அட்வென்சர் பண்ணு மேன்…எல்லா பொண்ணுங்களோட‌ பார்வையும் உங்க மேல தான் ஈஸ்வரன். வீட்ல போய் சுத்திப் போட‌ சொல்லுங்க… “ என்று கூறி விட்டு , “ அடேய் ஆதி…நெக்ஸ்ட் டைம்மாவது நீ ட்ரை பண்ணு டா…” என்று கூறி விட்டு நகரப் போனவளை  புகழினியின் வார்த்தைகள் சட்டென நிறுத்தியது.

 

“அதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும்.. இதெல்லாம் சும்மா ஏசி ரூம்ல உக்காந்துட்டு பேனா பிடிச்சு எழுதுற வேலையில்ல.. கொஞ்சம் அசந்தா குடலை உருவி வெளியே போட்டுபுடுமாக்கும்…வழி வழியா விளையாடறவங்களே தூக்கி போட்டுடுமாக்கும். இங்க சும்மால்லாம் ‌படம்‌ காட்ட முடியாது. வாண்ணே… அடுத்து நம்ம கொம்பனை தான் எறக்கனும். ஏய்…மீனாட்சி சீக்கிரம் வா . நம்ம ஆளோட ஃபர்பாமன்ஸ்  பாக்கனும் . யாரையும் அண்ட விடாது மீனாட்சி… வா அங்கன கிட்ட போய் பாக்கலாம்…” என்று கூறி விட்டு மீனாட்சியையும் இழுத்துக்கொண்டு போனாள் புகழினி.

 

ஆதியோ முதன் முறையாக அவமானமாக உணர்ந்தான்.

அதுவும் மீனாட்சி முன்பு புகழனி அவனை அலட்சியமாக பேசியது அவனுக்கு சீற்றத்தை உண்டு பண்ணியிருந்தது.

அதே சீற்றத்துநடன் நேராக சங்கர பாண்டியிடம் சென்றவன் தானும் மாடு பிடி வீரர்களில் ஒருவராக இறங்கி போட்டியில் பங்கேற்க போவதாக கூறிவிட்டு தனது சட்டையை கழற்றி நேஹா விடம் கொடுத்துவிட்டு , வேறு ஒரு மேற் சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிந்து கொண்டு களத்தில் வீரர்களோடு வீரனாய் நின்றான்.

அதனை கண்ட அனைவரும் திகைத்தனர்.

வடிவாம்பாளுக்கும் மயில் வாகனத்திற்குமே பலத்த அதிர்ச்சி.

சட்டையில் சிறு கறையிருந்தாலும் தூக்கிப் போடும் தனது மகன் இன்று புழுதி பறக்க மண்ணில் இறங்கி நின்றால் அதிர்ச்சியாகத் தானே செய்யும்.

சங்கர பாண்டியனோ ஆதியை தடுக்க இயலாது நின்றாருந்தார். அவன் நினைத்ததை செய்யாமல் விட மாட்டான் என்று நன்கு‌ தெரியும்.

 

ஈஸ்வரனும் புகழினியும் அவனை அலட்சியமாக பார்த்திருந்தனர்.

 

அங்கு ஒலி பெருக்கியில் , “அடுத்து வருவது நம்ம ஈஸ்வரனோட காளை கொம்பன். சீறியும் சிலிர்த்தும், தாவியும் வரப்போவுது. புடிக்க முடிஞ்சா புடிச்சிக்கோ. பரிசு வேணும்னா தொட்டக்கோ….” என புகழாரம் சூட்டி அவிழ்த்து விட்டனர் கொம்பனை.

 

 வாடி வாசல் வழியாக கம்பீரமாக வந்து நின்றான் கொம்பன்.

வீரர்களில் சிலர் முன்னே வருவதும் பின்னே செல்வதுமாக இருந்தனர். சிலர் தடுப்புகளில் ஏறி நின்று கொம்பை பிடித்து விடலாம் என்று நின்றிருந்தனர்.

 

ஆதியோ கொம்பனை உன்னிப்பாக பார்த்துக் கொண்டே முன்னும்‌ பின்னும் நகர்ந்து கொண்டிருந்தான்.

 

அமைதியாக நின்றிருந்த கொம்பன்‌ மெல்ல நடந்து வீரர்கள் பக்கம் வந்தான்.

தலையை தலையை சிலிர்த்துக் கொண்டு முன்னோக்கி வந்தான். அருகில் தொட வந்த வீரர்களை கொம்பினால் மணலை அள்ளி இறைத்து மிரட்டினான்.

வீரர்கள் பத்தடி பின்னே சென்றனர்.

விளையாட்டின் விதிகள் மற்றும் நெளிவு சுளிவுகளை அறியாத ஆதி தன் கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டு மற்ற வீரர்களின் நகர்வை வைத்தே தானும் அது போல மெல்ல மெல்ல நகர்ந்து அதன் வால் பகுதியை தொட்டான்.

தொட்டவனை சிலிர்த்துக் கொண்டு வேகமாக திரும்பியதில் கொம்பு லேசாக அவனது தோளினை உரசிச் சென்றது.

அதுவே அவனுக்கு மிகுந்த வலியை தந்தது.

ஈஸ்வரனது முகமோ கேள்வியை தத்தெடுத்தது.

மீனாட்சியின் முகமும் நேஹாவின் முகமும் கலவரமானது.

நேஹா தன்னையே நொந்து கொண்டாள்.‌

 

தேவையில்லாமல் அவனை வம்பில் சிக்க வைத்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு. .

தோளை உதறியபடி பின்னால் நகர்ந்தான்.

கால் மணி நேரம் வரை போக்கு காட்டிக் கொண்டிருந்தான் கொம்பன். அருகில் வந்தவர்களை தூக்கி வீசினான்.‌

நல்வாய்ப்பாக அவர்களுக்கு பெரிதாக ஆபத்து ஒன்றுமில்லை.

சில வினாடிகளுக்கு ‌பிறகு, வாயிலின்  புறம் நகர்ந்த கொம்பனை ஆதி பின்னிருந்து கொம்பையும் திமிலையும் பிடிக்கப் போக , எதிர்பாராத விதமாக வேகமாக திரும்பிய கொம்பன் தனது கூரிய கொம்பினால் குத்தி தூக்கி எறிந்தது.

கீழே விழுந்தவனால் எழவே முடியவில்லை. குழு குபுவென இரத்தம் பெருகியது.

மீண்டும் ஆதியின் அருகில் வந்த கொம்பன் அவனை திரும்ப முட்ட வருவதற்குள் ஈஸ்வரன்  வேகமாக

 செயல்பட்டு , திமிறிக் கொண்டிருந்த கொம்பனது மூக்கணாங்கயிற்றை பிடித்து இழுத்துக்கொண்டு ஆகியவையும் மறு கையில் தாங்கி அருகில் உள்ள வீரர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்தான்.

அவனுக்கு மட்டுமே அடங்கி அமைதியாக நடந்து வந்தான் கொம்பன்.

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!