உயிர் -14
சங்கர பாண்டியனோ அவ்வூரின் பஞ்சாயத்து தலைவரை அழைத்து போட்டியினை தலைமை தாங்குமாறு கூறிவிட்டு கீழே இறங்கி ஓடினார்.
வடிவாம்பாளும் மயிலவாகனமும் பதறியடித்துக் கொண்டு வந்தனர்.
மாட்டின் கொம்பு ஆதியின் வயிற்றினை கிழித்திருந்தது.
இரத்தம் அதிகமாக வெளியேறியது.
அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான் ஈஸ்வரன்.
சங்கர பாண்டியனோ மீனாட்சியையும் கோமதியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
நேஹா மட்டுமே தனித்து விடப்பட்டாள்.
நடந்த பரபரப்பில் நேஹாவை அனைவரும் மறந்து விட்டிருந்தனர்.
திரு திருவென முழித்துக் கொண்டிருந்த நேஹாவினருகே கொண்டு வந்து தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாள் புகழினி.
வாகனம் ஏதோ தன்னருகே வந்து நிற்பதைக் கண்ட நேஹா நிமிர்ந்து பார்த்தாள்.
புகழினி தான் வண்டியை அவளருகே நிறுத்தியிருந்தாள்.
“ என்ன திரு திருன்னு முழிச்சிட்டிருக்க…? வந்து ஏறு…நான் ஹாஸ்பிட்டல் தான் போறேன்… “ என்றாள்.
“ ஓ..தேங்க்ஸ்.. தேங்க்ஸ் ….” என ஓடி வந்து ஏறப் போனவள் பாவாடை தாவணியில் அமர முடியாமல் குரங்கு குட்டி போல் இரு சக்கர வாகனத்தை சுற்றி சுற்றி வந்தாள்.
அந்நிலையிலும் புகழினிக்கு சிரிப்பு வரவே அதை அடக்கியபடி , “ இங்கன பாரு ஒரு பக்கமா ஏறி உக்காரு…. என்னை பிடிச்சிக்க…!” என்றாள்.
வெஸ்ட் மினிஸ்டர் மாகாணத்தில் உயர் ரக லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை இலகுவாக ஓட்டுபவளுக்கு தாவணியைக் கட்டிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற அத்தனை சிரமமாக இருந்தது.
அதி வேகமாக இரு சக்கர வாகனத்தை குண்டும் குழியிலும் ஏற்றி இறக்கி ஒட்டிக்கொண்டு வந்து மருத்துவமனையில் நிறுத்தினாள்.
நேஹா வேகமாக இறங்கி மருத்துவமனைக்குள் ஓடினாள்.
ஆனால் புகழனியோ சாதாரணமாக நடந்து வந்தாள்.
மதுரை அரசு மருத்துவமனையில் பணி புரிந்தாலும் அவ்வபோது கள்ளிக்குடி மருத்துவமனையிலும் மருத்துவர் யாரும் இல்லையென்றால் அவளை அழைப்பார்கள்.
என்ன தான் ஆதியின் மீது வெறுப்பு இருந்தாலும் ஒரு மருத்துவராக அவளது கடமை அவனது நிலையை அறிந்து கொள்ள விழைந்தது.
புடவையின் மீது வெள்ளை நிற கோர்ட்டை அணிந்தவள் , ஆதி அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.
முதலுதவி செய்து அவனை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள்.
சங்கர பாண்டியனோ தான் ஆதியை மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயர்தர சிகிச்சை தரப் போவதாக கூறிக்கொண்டு இருந்தார்.
அறைக்குள் குழுமியிருந்த அனைவரையும் வெளியே போகச் சொல்லி விட்டு அங்கிருந்த டியூட்டி டாக்டரிடம் விபரம் கேட்டறிந்து விட்டு ஆதியின் காயத்தை பரிசோதித்தாள்.
பின்னர் வெளியே வந்தவள் சங்கர பாண்டியன் கூறியதைக் கேட்டு , “அவரை நீங்க எங்க வேணும்னாலும் அழைச்சிட்டு போகலாம்….ஆனா இப்ப இல்லை ரெண்டு நாள் கழிச்சு. வயித்துல காயம் கொஞ்சம் ஆழமா இருக்கு. அவரை இப்ப கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது. அசைஞ்சா காயம் ஆறாது. இன்னும் கஷ்டமாகிடும்….” என்றவளை சங்கர பாண்டியன், “ அதை நீ சொன்னா நான் கேக்கனுமா…? உங்க வூட்டு காளையினால தான் ல இம்புட்டு கஷ்டமும். அதெல்லாம் முடியாது நாங்க இப்பவே மருத பெரியாஸ்பத்தரிக்கு கூட்டிட்டு போறோம்…” என தாம் தூமென குதித்தார்.
புகழினி அவரை கண்டு கொள்ளாமல் நேஹா விடம் சென்று ,” கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருந்தா நான் என்ன சொல்றேன்னு புரியும். நீயாவது கொஞ்சம் சொல்லு…. இன்ஃபெக்ஷன் ஆகி பிரச்சினை ஆகிடும். அப்பறம் உங்க இஷ்டம்…” என கூறிவிட்டு விடுவிடுவென நடந்தாள்.
பின்னர் நேஹா வடிவாம்பாளிடமும் சங்கர பாண்டியனிடமும் ஒருவாறு பேசிய பிறகு இரு நாட்களுக்கு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
இரு நாட்களுமே புகழினி தானாகவே முன்வந்து ஆதிக்கு தேவையான சிகிச்சையை அளித்தாள்.
நேஹாவிற்கு புகழினியை மிகவும் பிடித்து விட்டது. கிளம்பும் முன் , “ யூ ஆர் சோ ஸ்வீட் புகழினி… ஐ வாண்ட் டூ பீ யுவர் ஃபிரண்ட்…” என்றாள் எவ்வித பகட்டுமின்றி.
ஆனால் புகழினியோ ஒரே வார்த்தையில் , “என்னோட கடமையை செஞ்சேன்….அண்ட் தாங்கஸ்….” என்று கை குலுக்கி விட்டுச் சென்றாள்.
நேஹாவினுடைய அந்தஸ்தையும் பண பலத்தையும் அறிந்திராத புகழனி அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காதது நேஹாவிற்கு பெரும் வியப்பினை தந்தது.
“ நீ யாராக இருந்தாலும் எனக்கென்றும் இல்லை..” என்பதில் அண்ணனுக்கு தங்கை சளைத்தவளில்லை என்பதை அறிந்து கொண்டாள் நேஹா.
பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தவன் அன்று தான் சங்கர பாண்டியனது வீட்டிற்கு வந்து அமர்ந்திருந்தான்.
பலத்த சிந்தனையில் இருந்தவனை கலைத்தது வாசலில் கேட்ட வாகனத்தின் சத்தம்.
சங்கர பாண்டியனும் வாசலில் கேட்ட சத்ததினால் என்னவென்று பார்த்தார்.
ஈஸ்வரன் தான் நின்று கொண்டிருந்தான்.
மீனாட்சியின் கண்களோ ஆச்சரியத்தை காட்டியது.
ஆதி புருவம் சுருக்கி அவனைப் பார்த்தான்.
அங்கிருந்த மேசையின் மீது புதிய கார் சாவியை வைத்தவன் ,
“ உங்க பரிசுக்கு ரொம்ப நன்றி. ஆனா எனக்கு இது இப்ப தேவையில்லை…” என்றவன் தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்த பணத்தை எடுத்து வைத்து விட்டு , “ இந்த பணமும் இல்லாத பட்டவங்களுக்கு கொடுத்துடுங்க….” என்றவன் சங்கர பாண்டியனை திரும்பியும் பராமல் சென்றான்.
அதிக காளைகளை அடக்கியதற்காக காரினை பரிசாக ஆதியின் சார்பாகவும் ,சிறந்த காளைக்கான பணப்பரிசு சங்கர பாண்டியன் சார்பாக கொம்பனுக்கும் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.
ஆதி மருத்துவமனையில் வந்தவுடனேயே ஈஸ்வரன் தனக்கும் காளைக்கும் அளித்த பரிசை திரும்ப அவர்களிடமே கொடுத்துவிட்டு சென்றான்.
ஏனோ அவன் மனம் எந்த ஒரு சிறிய உதவியையும் கூட சங்கர பாண்டியனிடமிருந்து பெற்று விடக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தான்.
சிறு வயதில் இருந்தே சுய கௌரவம் அதிகம் பார்ப்பான் ஈஸ்வரன். தன்னை இழிவு படுத்தியவர்கள் முன்பு எவ்விதத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள மாட்டான்.
ஆனால் மீனாட்சி மட்டுமே விதி விலக்காகிப் போனாள்.
பிடிக்காதவரின் மகளாக இருந்தாலும்அவளது தூய நேசத்தினால் அவனது மனதிற்கு மிகவும் பிடித்தவளாகிப் போனாள்.
அவனது அந்த உறுதி தான் சங்கர பாண்டியனை கோபப்படுத்தியது.
“எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் தன்னிடம் வந்து ஈஸ்வரன் கையேந்தவில்லயே ……?வசதி குறைவாக இருந்தாலும் வைராக்கியத்திற்கு குறைவில்லையே..?” என்று பொருமினார்.
சங்கர பாண்டியனோ , “இந்த திமிர் அடங்கவே அடங்காது….அவனோட காளை மாதிரியே…” என்றார்.
ஒரு பக்கம் மருத்துவமனையின் கட்டிட வேலையும் மறு புறத்தில இலவச பள்ளிக்கூடத்தின் வேலைகளும் ஒரு சேர வேகமாக நடந்து கொண்டிருந்தது.
ஈஸ்வரன் புதிதாக கட்டிக் கொண்டிருந்த அவர்களுடைய புதிய வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் பணம் சற்று அதிகமாகவே தேவைப்பட்டது. .
ஒரே நேரத்தில் இரு கட்டிட வேலைகள் பணத்தை , மண் உறிஞ்சும் மழை நீராக இழுத்துக் கொண்டது ஈஸ்வரனுக்கு. சற்று தடுமாறி தான் போனான்.
எனவே நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கரை ஆலையை விற்பது சம்பந்தமாக சென்னையில் உள்ள தனது நண்பனிடம் பேசுவதற்காக கிளம்பினான் ஈஸ்வரன்.
யாரிடமும் கையேந்த விரும்பாதவன் இரு கட்டிட வேலைகளையும் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து சென்னைக்கு கிளம்பினான்.
மீனாட்சி மனம் முழுதும் சஞ்சலத்துடன் அவனை வழியனுப்பி வைத்தாள்.
சங்கர பாண்டியனோ மீனாட்சிக்கு வரன் பார்ப்பதாக வடிவாம்பாளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
“ அதுக்கென்னணே… நம்ம சாதி சனத்துலயே நல்ல வரன் நிறைய இருக்கு… நல்லதா பாத்து முடிச்சிடலாம்….” என்றார்.
அதனை கேட்டுக்கொண்டே வந்த ஆதி பலத்த யோசனையுடன் சங்கர பாண்டியன் அருகே அமர்ந்தான்.
சங்கர பாண்டியனோ , *ஆதி….இப்ப எப்படி இருக்கு…?பாத்து ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா..? இப்படி போய் உடம்பை புண்ணாக்கிட்டு வந்துருக்கீயே…! இனி இந்த மாதிரியெல்லாம் ஆபத்துல எல்லாம் சிக்கிக்காத…” என்றார்.
ஆதியோ, “ ம்ம்…” என்றவன், “ மாமா…. மீனாட்சிக்கு வரன் பாக்குறீங்களா..?” என்றான்.
சங்கர பாண்டியன் யோசனையுடன் , “ஆமா….பா…” என்றார்.
“ம்ம்..க்கும்….”எனத் தொண்டையை செருமியவன் ,” மாமா….நா நேரா விஷயத்துக்கு வர்றேன்…நான்….. மீனாட்சியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்….உங்க எல்லாரோட முழு சம்மதத்தோட இந்த கல்யாணம் நடக்க ஆசைப்படுறேன்…அவளை நல்லாவே பாத்துப்பேன். நீங்க எதிர்பார்க்குறத விட வசதிலயும் அந்தஸ்த்துலயும் ரொம்பவே உயரமான இடத்துலே தான் இருக்கேன். என்ன சொல்றீங்க….? “ என்று கேட்டு விட்டு வயிற்றினை லேசாக பிடித்தபடியே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அவரை கூர்மையாக பார்த்தான்.
வடிவாம்பாளும் மயில் வாகனமும் மகனது வார்த்தையில் அதிர்ந்து போனார்கள்.
சங்கர பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்தார்.
“ என்ன மாமா..? இப்படி திடீரன்னு கேக்குறானேன்னு யோசிக்கிறிங்களா…? எனக்கு சின்ன வயசுல இருந்தே மீனாட்சியை ரொம்பவே பிடிக்கும். அவளை ராணி மாதிரி நான் வாழ வைக்கனும்னு நினைக்கிறேன். உங்களுக்கு இருக்குற மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் நானும் ஒண்ணும் குறைஞ்சவன் இல்லை … எங்க அம்மாவும் உங்க பொண்ணை தன் பொண்ணா பாத்துப்பாங்க…” என்றவன் தன் தாயின் புறம் திரும்பி , “அப்படிதானே மா…நீங்க சொல்லுங்க….நீங்க சொன்னா தான் உங்க அண்ணன் கேப்பாரு. உங்களுக்கு இல்லாத உரிமையா…? உங்க புகுந்த வீட்டுல உங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. மாமா உங்களை எப்பவும் விட்டுக் கொடுக்கவே மாட்டாரு… “ என சரியாக குறி பார்த்து வார்த்தை அம்புகளை வீசினான்.
அவனது மாய்மால வார்த்தையில் சங்கர பாண்டியனும் வடிவாம்பாளும் கர்வத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
வடிவாம்பாளோ…., “அதானே….என்னோட புகுந்த வீட்டு சொந்தம்னு நீ ஒருத்தந்தேன் இருக்க….எனக்கு செய்யாம வேற ஆருக்கு செய்யப் போற வ…? வேற ஆரும் சொந்தம் கொண்டாடிட்டுதேன் வர முடியுமா…? ராசா மாறி இருக்க என் பையனுக்கு நான் …நீன்னு போட்டிப் போட்டு பொண்ணு கொடுப்பாங்க. ஆனா பாருண்ணே ….என் பையன் ஆசைப்படறத செஞ்சே குடுத்தே பழக்கமாகிடுச்சு. நீ கட்டுன புடவையோடு மீனாட்சியை எங்க வூட்டுக்கு அனுப்பி வைய்யி…. நான் என் மருமவளை தங்கத்தாலேயே இழைச்சுடுறேன்…. எனக்கு உன்னை விட்டா வேற ஆரு இருக்கா…? சொந்தம் விட்டுப் போகக் கூடாதுண்ணே…”என திடீர் கரிசனம் மீனாட்சியின் மேல் தோன்ற முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினார் வடிவாம்பாள்.
மனதினுள் “அண்ணனோட தோப்பு, தொறவு, நஞ்சை, புஞ்சை, தங்க வைர நகை ,வீடு , கோடி கணக்கில் சீர் செனத்தி எல்லாத்தையும் செஞ்சுபுடும். வர்ற மகாலட்சுமியை ஏன் விரட்டனும்…என் புள்ளை எம்புட்டு புத்திசாலி என்னைய மாதிரியே….”என சிலாகித்து கொண்டார்.
மயில்வாகனமோ , “சரி…ஆத்தாவும் புள்ளையும் எதுக்கோ நல்லா திட்டம் போடுதுக… நமக்கெதுக்கு வம்பு…” என்றவாறே கையிலிருந்த மிக்சரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது பேச்சு சபை ஏறாத போது அமைதியாக இருப்பதே நல்லது என்றிருந்தார் பாவம்.
ஆதியோ, “ ஏன் மாமா…? இன்னும் என்ன யோசனை…? ஒருவேளை ஈஸ்வரனை கட்டி வைக்கனும்னு நினைக்கிறீங்களா…? * அவரது மனதை ஆழம் பார்த்தான்.
சங்கர பாண்டியனோ,
“சே…சே…அந்த திமிரு புடிச்ச ஒண்ணுமில்லாத பயலுக்கு என் பொண்ணை நான் கட்டிக் கொடுப்பேனா..? அதெல்லாம் நான் செத்தாலும் நடக்காது….என் பொண்ணு உனக்குத்தான் ஆதி…” என் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கூறினார்.
“மாமா…ஒருவேளை மீனாட்சி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா…?”
“ எம் பொண்ணு என்னோடபேச்சை மீற மாட்டா….வடிவு ஜோசியர் கிட்ட ரெண்டு பேரோட ஜாதகத்தை காமிச்சு பொருத்தம் பாத்துட்டு வா. அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் . நிச்சயத்தை கல்யாணத்தன்னைக்கு காலையில வச்சிடலாம்….ஆனா ஆதி உனக்கு இன்னும் காயம் சரியாகலையே…? அடுத்த மாசம் வேணா கல்யாணத்தை வச்சிக்கலாமா…?என்றார்.
ஆதியோ அவசரமாக, “பரவாயில்ல மாமா…. எவ்வளவு சீக்கிரம் வைக்க முடியுமோ …அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கனும். நானும் சீக்கிரம் மீனாட்சியை என் கூடவே லண்டனுக்கு அழைச்சிட்டு போயிடுவேன்…” என்று அவசரப்படுத்தினான்.
சங்கர பாண்டியனும், “சரி….நான் பாண்டியனை சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வரச் சொல்லிடுறேன்…” என்றார்.
ஆதியே மீசையும் தாடியையும் நீவி விட்டபடியே சாய்ந்து அமர்ந்தான். அவனது மனக்கண்ணில் ஈஸ்வரனது முகமும் மீனாட்சியின் கசங்கிய முகமும் வந்து போனது….
“ ஐ யம் வெரி….சாரி…. மீனாட்சி…” என முணுமுணுத்தான்.
மறுநாள் காலையில் சங்கரபாண்டியனின் வீட்டில் தந்தைக்கும் மகளுக்கும் மிகப் பெரிய பிரளையமே நடந்து கொண்டிருந்தது.
“ என்னது…? நா போய் அந்த வெறும் பயல்கிட்ட மன்னிப்பு கேட்கனுமா…?நீ அவனை தான் கட்டிப்பியா…? முடியாது மீனாட்சி….என் பொணத்து மேலை தான் உன் கல்யாணம் நடக்கும் …என் மானம் …மருவாதியெல்லாம் விட்டுட்டு அவன் கிட்ட போய் மன்னிப்பு கேட்கனுமா….? முடியாது….! உன்னால ஆனது பாத்துக்கோ….இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கலைன்னா…உங்க அம்மா இம்புட்டு வருசம் கழிச்சு மொத்தமா பொறந்த வீட்டுக்கு போக வேண்டியது தான்…. ஜாக்கிரதை….!” என கர்ஜித்தார்.
“ பரவாயில்லை….நான் நிம்மதியா என் பொறந்த வீட்டுக்கே போயிடுதேன்…. இம்புட்டு வருசமா இல்லாத நிம்மதி என் பொண்ணு கல்யாணம் மூலந்தேன் எனக்கு கிடைக்கும்ன்னா….அது எனக்கு சந்தோசந்தேன். ஆனா… உங்க தங்கச்சி பையனுக்கு எம் பொண்ணை கட்டி கொடுக்க மாட்டேன். இம்புட்டு வருசமா அவ ஈஸ்வரனை மட்டுந்தேன் மனசுல நினைச்சிட்டு இருக்காங்கறது உங்களுக்கும் நல்லாவேத் தெரியும்….இது ஒண்ணும் நினைச்ச நேரத்துல புடவையை மாத்துற மாதிரி நினைச்ச நேரத்துல
மனசை மாத்துற விஷயமில்லை. அவ உயிருள்ள சீவனுங்க…அவ மனசை கொன்னு போட்டு இந்த கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன்….ஈஸ்வரனை என்னோட அண்ணன் பையனா பாக்காதீக…அவ மனசுக்கு புடிச்சவனா பாருங்க…. இந்த கல்யாணம் நான் உயிரோடு இருக்குற வரைக்கும் நடக்காது…” என ஆங்காரமாக கத்தினார் கோமதி.
மீனாட்சியோ , “ அப்பா…உங்களுக்கு ஏன் இம்புட்டு வரட்டு பிடிவாதம்..? அவங்க வசதியில குறைஞ்சவங்களா இருந்தாலும்…மனசால உயர்ந்தவங்க பா. அப்பா..என் மனசு மாமாவைத் தவிர வேற யாரையும் புருஷனா ஏத்துக்காது… உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்கறேன்….என் மாமாவை என் கிட்ட கொடுத்துடுங்க…பா…” எனக் கண்ணீர் விட்டு கதறினாள்.
சங்கர பாண்டியனோ தனது மகளது மனதினை சிறிதும் புரிந்து கொள்ளாமல் , “ நான் …என் தங்கச்சிக்கும்…ஆதிக்கும் வாக்கு குடுத்திட்டேன்…மீற முடியாது…. முடிஞ்சா ஈஸ்வரனை என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு…அப்ப பாக்கலாம்…” என புது குண்டை தூக்கிப் போட்டு விட்டு சென்றார்.
மீனாட்சியும் கோமதியும் அதிர்ந்து போய் நின்றனர்.