உயிர் -28
தனது அழுத்தத்தை
குறைத்துக் கொள்ள அவனை தேளாக கொட்டிக் கொண்டே இருந்தால்தான் அவளுக்கு ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது.
அவனை அதிகமாக வருத்துகிறோம் என்று அடிக்கடி தோன்றுகிறது தான்.
ஆனால் அவனைப் பார்த்தாலே அவளுக்கு கோபம் தான் வருகிறது.
சில நேரங்களில் பழையதை எண்ணி…சில நேரங்களில் காரணமேயில்லாமல்…
“எவ்வளவு தூரம் இந்த வாழ்க்கையை இப்படியே கொண்டு செல்லப் போகிறாய்..?” என்ற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
அனைவருக்கும் முதல் திருமண நாள் என்பது அத்தனை சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
ஆனால் இங்கோ இருவருக்கும் வலியையும் வேதனையையும் மட்டுமே கொடுத்தது.
மறுநாள் காலையில் ஆதி தனக்கான தேநீரை தயாரித்து குடித்துக் கொண்டே நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு எதிரே வந்தமர்ந்தாள் மீனாட்சி.
அவளுடைய கைகளில் விண்ணப்பப் படிவங்கள்.
அவளே ஆரம்பித்தாள். “எனக்கு இதுல எதை எடுக்கறதுன்னே தெரியலை…நீங்களே ஏதாவது நல்ல படிப்பா பாத்து சேர்த்துவிடுங்க…” என்றாள்.
பண்ணிரெண்டாவது வகுப்பு தோல்வியடைந்திருந்தாலும் படிக்க வேண்டும் என்று எண்ணம் அவ்வப்போது அவளுக்கு வரும் தான்.
ஆனால் ஈஸ்வரனுக்காக அந்த எண்ணத்தை துடைத்தெறிந்து விட்டாள்.
அவனே இல்லையென்று ஆன பிறகு மனம் எதிலுமே லயிக்கவில்லை.
லண்டனிற்கு வந்து ஓராண்டு எப்படியோ நெட்டித் தள்ளிவிட்டாள்.
தனியே இருப்பதால் அவளுக்கும் தேவையற்ற சிந்தனைகள் வந்து மன அழுத்தத்தை தருகிறது.
எனவே ஆதி கூறியது போல ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லது என நினைத்தாள்.
ஆனால் பல்வேறு வகையான படிப்புகள் இருந்ததால் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் அவள் மிகவும் குழம்பிப் போனாள். இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு கையில் புத்தகம் , கல்லூரி என்பது எந்த அளவிற்கு சரியாக வரும் என்பது அவளுக்கு குழப்பத்தையே தந்தது.
அதுவும் அவ்வூரின் பாஷை, பழக்கவழக்கங்கள் என்று எல்லாவற்றிலும் தன்னை பொருத்திக் கொள்ள முடியுமா..? என்பது வேறு சந்தேகமாக இருந்தது.
எனவே அவனிடமே ஆலோசனை கேட்டாள்.
தேநீர் கோப்பையை கீழே வைத்தவன் அவள் கைகளில் இருந்த விண்ணப்பங்களை பார்த்தான்.
“ உனக்கு கணக்கு நல்லா வரும்ல…” என்றான்.
“ இல்லை…வரவே..வராது…” என்றாள்.
“ பொய்…நீ நல்லாவே கணக்கு போடுவ…இங்க வந்த முதல் நாள்லயே நீ எல்லா பொருளோட விலையையும் டாலர்ல இருந்து இந்தியன் மணிக்கு செகண்டல கணக்கு பண்ணிட்ட..ஏன் பொய் செல்ற..? இந்த கோர்ஸ் படி..பேசிக் இங்கிலீஷூம் இதுல சேர்த்தி தான்…அக்கவுண்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் கோர்ஸ்…ஈசியா இருக்கும்…ஒன் இயர் கோர்ஸ்…அப்பறம் தேவைப்பட்டா நீ மேல படி…” என்றான்.
அவளும் சரியென தலையசைத்தாள்.
அடுத்த பத்து நாட்களில் அங்கிருந்த கல்லூரியில் அவளை சேர்த்து விட்டான்.
“ உனக்கு புடவையே கம்ஃபர்ட்டபிளா இருந்தா அதுவே கட்டிட்டி போ. இல்லைன்னா சுடிதார் வாங்கிக்கலாம்…என்ன சொல்ற..?” என்றான்.
அவளோ ஏட்டிக்குப் போட்டியாக,” ஏன் நானென்ல்லாம் இங்க இருக்க மாதிரி உடுப்பு போட்டுக்கக் கூடாதா…அதே புடவை…அதே சுடிதார் தான் போடணுமா…? “என்றாள்.
அவனுக்கோ தலையை பிய்த்துக் கொள்ளலாமா என்றிருந்தது.
நாகரீக உடை அணிந்துக் கொள் என்றால், “ இப்படி அரையும் குறையுமா உடுப்பு போட்டாதான் இந்த ஊர்ல மதிப்பாகன்னா…எனக்குத் அது தேவையில்லை…” என்பாள்.
அதனால் தான் ஆதி அவளுக்கு எது இலகுவாக அணிந்துக் கொள்ள பிடிக்குமோ அதனை அணியச் சொன்னான்.
இப்படி விதண்டாவாதமாக பேசுபவளிடம் அவனால் பேச முடியவில்லை.
ஒரு பெருமூச்சுடன், “ சரி சாயந்திரம் கொஞ்சம் ரெடியா இரு…உனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்..” என்றான்.
அன்று மாலையில் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
முதன் முறையாக அவனுடன் வெளியே வருகிறாள்.
முன் சீட்டில் அமர்ந்திருந்தாள் அவன் புறமே திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள்.
மிகப்பெரிய கடையினுள் நுழைந்தான் .
கிளம்பும் முன்பே அவன் நேஹாவிற்கு அழைத்து அங்கு வரச்சொல்லி இருந்தான்.
குறித்த நேரத்திற்கு நேஹா வந்துவிட்டாள்.
நெடுநாளைக்குப் பிறகு அவளைப் பார்க்கின்றாள் மீனாட்சி.
சிரிப்புடன் அவளை லேசாக அணைத்து விடுவித்தாள் நேஹா.
“ நீயும் இங்கன தான் இருக்கியா…? வீட்டுக்கு வந்துருக்கலாம்ல…? அடுத்த வாரம் கண்டிப்பா வா…தனியா தானே இருக்க…அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை..” என உரிமையாக கோபித்துக் கொண்டாள் மீனாட்சி.
“ கொஞ்சம் வேலை அதிகம். அதான் வர முடியல…இனி அடிக்கடி வர்றேன் . டேய்…ஆதி அவளை வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைக்காத…எங்கயாவது கூட்டிட்டு போ…எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வா…அவுட்டிங் போலாம் எங்கயாவது…”என்றாள் .
நேஹாவே மீனாட்சிக்கு தேவையான அவளுக்கு எளிதாக அணியக்கூடிய உடைகளை சரி பார்த்து வாங்கிக் கொடுத்தாள்.
பின்னர் அவளுக்கு தேவையான மற்றப் பொருட்கள் அனைத்தும் வாங்கிக் கொடுத்தாள்.
பணம் தர முன் வந்த ஆதியை ,” திஸ் இஸ் மை ஸ்மால் காம்பிளிமெண்ட் டு ஹர். லெட் மீ பே…”என்று தடுத்து விட்டாள்.
ஆதியோ அவளது காதில், “ சும்மாவே என்கிட்ட எதுவும் கேட்க மாட்டா…முதல் தடவை வெளியே கூட்டிட்டு வந்துருக்கேன் .. உன்னை நம்பி அவளுக்கு தேவையானதை செலக்ட் பண்ண கூப்டா..நீயே நல்லா கரடி வேலையும் பண்ணிடு…எல்லாம் என் நேரம்…”என சலித்துக் கொண்டான்.
“ஏன்னா நீ பண்ண வேலை அப்படி டா…”என்றவள் சற்று நேரம் அவளிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டாள்.
“ கொஞ்ச நேரம் அப்படியே சுத்தி பாத்துட்டு போலாமா…?” என்றான்.
அவளுக்குமே சிறிது மாற்றம் தேவைப்படுவதால் சரியென்றாள்.
இடைவெளி விட்டே இருவரும் இணைந்து நடந்து கொண்டிருந்தனர்.
அலங்கார விளக்குகளில் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்நகரம்.
மௌனம் மட்டுமே இருவரிடம் ஆட்சி செய்து கொண்டிருந்தது.
என்ன பேசுவது என்று புரியவில்லை இருவருக்கும்.
இதமான மனநிலை தான். ஆனாலும் பேசிக் கொள்ளவில்லை.
வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள், அங்கிருந்த இரு ஜோடிகள் அழுத்தமான இதழ் முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சியை பார்த்து வாயில் கை வைத்து கொண்டாள்.
“ என்ன கண்றாவி இது…?இங்கயே எல்லாம் பண்ணிட்டா வீட்ல போய் என்ன தான் பண்ணுவாக..” என முணுமுணுத்தாள்.
ஆதியின் காதில் விழுந்தது.
சிரித்தபடி, “ இங்க இப்படிதான்… கிஸ் பண்ணனும் தோணினா உடனே பண்ணிடுவாங்க . வீட்டுக்கு போற வரை வெயிட் பண்ண மாட்டாங்க. வெறும் லஸ்ட்க்காக மட்டும் பண்ண மாட்டாங்க . சின்ன அன்பா இருக்கலாம், பாராட்டுதலா இருக்கலாம், அதிகமான சந்தோஷமா கூட இருக்கலாம்…சோ…இதெல்லாம் பெருசா மைண்ட் பண்ணிக்காத.” என்றான்.
அவளோ அவனை முறைத்தபடி, “ஏது… அந்த பையன் அந்த பொண்ணோட வாயை விட்டா கடிச்சு தின்னுடுவான் போல…அது நட்புல பண்றதா.?” என்றாள்.
அவனுக்கோ சிரிப்பு பீறிட்டு வந்தது. அவனும் பார்த்தான் தான்.
அவன் அடிக்கடி இது போன்ற காட்சிகளை பார்ப்பதால் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
அவளது வாய்மொழியாக கேட்கும்போது அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
சிரித்தால் கோபித்துக் கொள்வாள் என்பதால் சிரிப்பினை முழுங்கிக் கொண்டான்.
இந்திய உணவகததில் உண்டுவிட்டு வீட்டிற்கு வந்து அவரவர் அறைக்குள் முடங்கிக் கொண்டனர்.
கல்லூரி செல்வதற்கு முன்னர் அன்று கடையில் வாங்கிய உடைகளை அணிந்து பழகிக் கொண்டாள்.
ஆதியும் அவளுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுத்தான்.
என்னதான் மீனாட்சி தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாலும் ,
முதல் நாள் மலங்க மலங்க விழித்தபடி தான் கல்லூரிக்குச் சென்றாள்.
அனைத்தும் அவளுக்கு புதிதாக இருந்தது. பல ஆண்டுகளாக வீட்டில் இருந்தவளுக்கு…கல்லூரி…படிப்பு…ஆசிரியர்கள்…புது மனிதர்கள் என அனைத்தும் பயத்தைக் கொடுத்தது. அழும் நிலைக்கே சென்று விட்டாள்.
முதல் நாள் வந்தவுடனே ஆதியிடம் ,” இல்லை…எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு…ரொம்ப பயமாவும் இருக்கு…யாரு பேசுறதும் புரியல…எனக்கு எல்லாமே பயமா…இருக்கு..எல்லாரும் என்னையே வெறிக்க வெறிக்க பாக்குறாக…பட்டிக்காட்டு மாதிரி இருக்கேன் . வேணா விட்டுடுக…இதெல்லாம் எனக்கு சரி வராது…” என்றாள்.
அவனோ அவளை அழுத்தமாக பார்த்தப்படியே, “சரி…வேணாம்…அப்பறம் என்னப் போற…?இப்படியே வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து பத்தோடு பதினொன்னா இருக்க போறியா…?” என்றான்.
அவளோ கோபமாக அவனை முறைத்தான்.
“ முறைக்காத…உண்மையை தான் சொன்னேன்…இங்க பாரு இங்கிலீஷ் தான் உனக்கு பிரச்சனை னா தினமும் சாயங்காலம் ஒரு ரெண்டு மணி நேரம் நான் சொல்லித் தர்றேன்.அப்பறம் எப்படி பேசணும்..பழகனும்னு பேசிக்ஸ் அதுவும் சொல்லித் தர்றேன். அதுவும் உனக்கு இஷ்டம்ன்னா மட்டுந்தான். இல்லைன்னா லேடி யாராவது அப்பாயிணட் பண்றேன். உனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கும்…படிக்கறதுக்கு வயசோ, ஊரோ, நிறமோ, மொழியோ தடை கிடையாது. படிக்கணும்னு மனசு இருந்தா போதும். நீ நினைச்சிருந்தா உங்க ஊர்லயே மேலே பிடிச்சிருக்கலாம். ஆனா ஈஸ்வரனுக்காக தான் நீ மேலே படிக்கலனனு நல்லாவே தெரியும். இப்ப எனக்காகவோ, வேற யாருக்காகவும் படிக்காத…உனக்காக படி…உனக்காக மட்டும் தான்..நான் உனக்கு எந்த விதத்திலும் இடஞ்சலா இருக்க மாட்டேன். உனக்கு எது சரின்னு தோணுதோ அதைப் பண்ணு…”என்றான்.
அவளோ சற்று தெளிந்த மனதுடன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள். கல்லூரி வாழ்க்கை அவளுக்கு பழகும்வரை மிகவும் கஷ்டப்பட்டு தான் போனாள்.
பேச்சில் தடுமாற்றம், பயம், ஆண்களுடன் பேசிப் பழகுவதில் மிகுந்த தயக்கம் என இருந்தது.
கல்லூரியில் அவளுக்கே தெரியாமல் தமிழ் பேசும் பேராசிரியர்களை அவளுக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தான்.
அவளுக்கு சற்று தைரியம் வந்தது. சந்தேகங்களை தாய் மொழியில் கேட்பது அவளுக்கு எளிதாக இருந்தது.
தினமும் மாலையில் இரண்டு மணிநேரம் அவளுக்கு அடிப்படை ஆங்கிலம் மற்றும் பேச்சுத் திறன் பயிற்சி என அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவளது கூட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான்.
இயல்பிலேயே அவள் புத்திக்கூர்மை மிக்கவள் என்பதால் அனைத்தையும் கவனத்துடனும் சிரத்தையுடனும் கேட்டு உள்வாங்கி கொண்டாள்.
இயல்பான உரையாடல் அவர்கள் இருவருக்கும் இடையே தொடங்கியது.
அதே சமயம் கள்ளிக்குடியில் புகழினியின் மருத்துவமனை திறப்புவிழா கோலாகலமாக நடந்தது.