உயிர்-29
மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வெள்ளை வேஷ்டி சட்டையில் மீசையை முறுக்கியபடி கைக் காப்பினை மேலே ஏற்றியபடி கம்பீரமாக நடந்து வந்தான் ஈஸ்வரன்.
ஆரஞ்சு நிறப்புடவையில் மிதமான அலங்காரத்துடன் முகம் கொள்ளாப் புன்னகையுடன் வலம் வந்தாள் புகழினி.
முத்துக்காளையும் அவரது மனைவியும் புன்னகை முகமாக மருத்துவமனையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மூன்று மாடிகளைக் கொண்ட மருத்துவமனை அனைத்து வசதிகளும் கொண்டதாக இருந்தது.
அனைத்து மருத்துவ உபகரணங்களையும் புகழினி அவளது தோழியின் தந்தையின் மூலம் வாங்கியிருந்தாள்.
அனைத்து துறைகளுக்கு தேவையான மூத்த மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள், வேலையாட்கள் என அனைவரையும் தெரிந்த பெரிய ஏஜென்சி மூலம் பணிக்கு அமர்த்தியிருந்தாள்.
சோமு தாத்தாவை வைத்து திறப்புவிழாவை நடத்தி முடித்தான் ஈஸ்வரன்.
தனது மொத்த சேமிப்பையும், சர்க்கரை ஆலையை விற்ற பணம் , மற்றும் மீதித் தொகைக்கு வங்கிக் கடனும் பெற்றிருந்தான் ஈஸ்வரன்.
ஊரே வியந்து தான் போனது.
ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவமும் சற்றே வசதி படைத்தவர்களுக்கு நியாயமான கட்டணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணனது உழைப்பும், பாசமும் புகழினியை கண்கலங்க செய்தது.
“ நல்ல நாளு அதுவுமா இப்ப ஏன் கண்ணு கலங்கிட்டு நிக்க..?”
“ என்னால தான்ணே உனக்கு இம்புட்டு சிரமம்…”
“ கூறு கெட்டத்தனமா ஏதாவது பேசணும்னு பேசாதே…உனக்கு செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன் நானு…இதுலயெல்லாம் கணக்கு பாக்காத புகழு..மொத கண்ணைத் துடைச்சிட்டு போய் மத்த வேலையை பாரு…போ..போ..” என அதட்டினான்.
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன் இத்தனை வருட சேமிப்பினை மருத்துவமனை கட்ட கொடுத்துவிட்டவனைக் கண்டு மனம்நெகிழ்ந்து தான் போனது புகழினிக்கு.
அழுதால் அவனுக்கு பிடிக்காது என்பதால் கண்களை துடைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
பாண்டியனும் மருத்துவமனை திறப்புவிழாவிற்கு வந்திருந்தான்.
ஈஸ்வரனுக்கு ஏதோ நெருடலாக இருந்தது. அவனிடம் பெரிதாக பகை என்பது இல்லையென்பதால் அவனை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டான்.
மருத்துவமனையை பார்க்க வந்திருப்பான் என நினைத்துக் கொண்டான்.
நேஹா புகழினியிடம் திறப்பு விழா புகைப்படங்களை அவளது அலைப்பேசிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டாள். தானும் ஈஸ்வரனும் எடுத்த செல்ஃபிகளை அனுப்பி வைத்தாள்.
நேஹா அனைத்து புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டே வந்தவள் ,வெள்ளை வேஷ்டி சட்டையில் மீசையை முறுக்கியபடி கம்பீரமாக நின்றிருந்த ஈஸ்வரனது புகைப்படத்தை வருடினாள்.
ஏக்கத்தோடு அதற்கு ஒரு முத்தமும் பதித்துவிட்டு வைத்து விட்டாள்.
ஆதியின் ஏழை மாணவர்களுக்கான இலவச பள்ளிக் கூடமும் துவங்கி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.
ஆதி தானே காணொளி மூலம் புதிய பள்ளியை திறந்து வைத்தான்.
மீனாட்சி அருகில் வந்து நின்றாள் அவ்வளவே…
பெரிதாக திறப்பு விழாவில் ஆர்வம் காட்டவில்லை .
அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருந்தான் ஆதி.
காலை, மதியம் இலவச உணவு, உடை, வெளியூர் ஏழை மாணவர்களுக்கு இலவச தங்கும் விடுதி.
ஆங்கில வழி கற்றல், தமிழ் வழி கற்றல் என இருவகையான கற்றல் முறை இருந்தது.
மாணவ மாணவிகளுக்கு எந்த முறையில் படிக்க விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து படிக்கவும் வழிவகை செய்திருந்தான்.
முழுக்க முழுக்க மீனாட்சியை திருமணம் செய்யவே அவனாக ஏற்படுத்தியிருந்த சாக்கு தான் இலவச பள்ளிக்கூடம்.
ஆனால் இயல்பிலேயே அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் இருக்கத்தான் செய்தது.
படிப்பு என்பது வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டுமில்லாமல் அதனை வாழ்க்கை முறைக்கு பயன்படுத்துவது போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன்.
கள்ளிக்குடிக்கு வந்த புதிதில் இலவச பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் படிப்பினை மட்டும் சார்ந்திராமல் மற்ற கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற யோசித்தான். அவ்வூரில் அத்தகைய வசதி இல்லையென்பதால் உடனடியாக மாணவ மாணவியர் பயன்பெற அனைத்து கலைகளையும் கற்க ஏற்பாடுகள் செய்தான்
படிப்பு மட்டுமின்றி , விளையாட்டு, ஓவியம், பாட்டு, நடனம் என அனைத்தையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தான்.
நாட்கள் யாருக்காவும் காத்திராமல் ஓடியது.
ஈஸ்வரனது நிலத்தில் விளைச்சல் அமோகமாக இருந்தது .
நல்ல லாபத்தை ஈட்டித் தந்தது. மாந்தோப்பிலும் நல்ல விளைச்சல் மற்றும் லாபம் வந்தது.
அவனது மனது நிறைவாகவே இருந்தது.
பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து மனதை அரித்துக் கொண்டிருந்தாலும் அவனது கடமையும் ,வாழ்வின் அடுத்தடுத்து முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவனை முன்னோக்கி செல்ல உந்திக் தள்ளியது .
சாதாரணமாகவே ஈஸ்வரன் ஒரே இடத்தில் தேங்கியிருக்க விரும்பாதவன், வாழ்க்கை அவனை அத்தனை துன்பத்தைக் கொடுத்திருந்தாலும் அதனை கண்டு துவண்டு விடாமல் கடின உழைப்பினையும் தன்னம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாக கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தான்.
நேஹாவின் நம்பிக்கையூட்டும் குறுஞ்செய்தி தினமும் வந்து கொண்டேயிருந்தது.
ஈஸ்வரனின் கைகள் தன்னையறியாமலேயே தினமும் காலையிலும் இரவிலும் அவளது குறுஞ்செய்தியை தேட ஆரம்பித்து விட்டது.
என்றாவது இரவு நேஹா வீட்டிற்கு வர தாமதமாகி விட்டால் ஈஸ்வரனுக்கு குறுஞ்செய்தி வர தாமதமாகி விடும்.
அதற்குள் பத்து முறையாவது அலைப்பேசியை எடுத்து எடுத்து பார்த்து விட்டு வைப்பான்.
அதை ஒருநாள் புகழினி கண்டு கொண்டாள்.
“என்னண்ணே…? இம்புட்டு தரம் ஃபோனை எடுத்து பாத்துக்கிட்டு இருக்கவே..? என்ன …முக்கியமான ஃபோன் ஏதும் வரணுமா…?” என்றாள்.
ஈஸ்வரன் சற்றே தடுமாறி தான் போனான்.
தன்னையே நொந்து கொண்டு, ” ஆ.. ஆமா..புகழு..ஃபோனு…வரணும்…” என்றவாறே அலைப்பேசியை தூக்கிக் கொண்டு உள்ளறைக்குச் சென்றான்.
அலைப்பேசியை பார்த்துக் கொண்டே போன தன் அண்ணனை விசித்திரமாக பார்த்தாள் புகழினி.
ஏனெனில் தேவையை தவிர அநாவசியமாக அலைப்பேசியை நோண்ட மாட்டான் ஈஸ்வரன்.
அது எப்போதும் ஒரு மூலையில் தான் இருக்கும்.
அழைப்பு வந்தால் ஒழிய அதனைத் தொட மாட்டான்.
ஆனால் சில நாட்களாக காலையிலும் இரவிலும் அடிக்கடி அவன் அலைப்பேசியை பார்ப்பதும் பின்னர் வைப்பதுமாக இருந்தான்.
புகழினிக்கே அண்ணனின் நடவடிக்கை புருவத்தை உயர வைத்தது.
அறைக்குள் நுழைந்தவன் நேஹாவிடமிருந்து நெடுநேரமாகியும் குறுஞ்செய்தி வராததால் கடுப்புடன் அலைப்பேசியை தூக்கி கட்டிலில் எறிந்து விட்டு தலைக்கு அடியில் கையை வைத்து கொண்டு விட்டத்தை பார்த்தபடியே படுத்திருந்தான்.
அவன் மனம் எதை எதிர்பார்க்கின்றது என்பது அலனுக்கே புரியவில்லை.
மீனாட்சியின் நினைவுகள் அவன் மனதை விட்டு அகன்று விட்டதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
அது ஒரு அழகான முற்றுப் பெறாத காவியமாக அவன் மனதில் எப்போதும் இருக்கும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக அவனது மனம் நேஹா வின் குறுஞ்செய்தியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது.
மெல்லிய கண்ணுக்குத் தெரியாத சலனம் அவனது மனதில்.
அவளது
நம்பிக்கையூட்டும் கவிதைகளும் , இளங்காலைப் பொழுதை இனிமையாக்கும் வாக்கியங்களும்…சோர்ந்து அமரும் போது ஏதோ அருகில் இருந்து ஆறுதல் சொல்வது போல் தக்க சமயத்தில் வரும் உற்சாகமூட்டும் வரிகளும்…அவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது நிஜமே…
ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து வரும் குறுஞ்செய்தியை எதையும் அழிக்காமல் பத்திரமாக வைத்திருந்தான்.
ஏனோ அவளது உற்சாகமூட்டும் வரிகளும், சிறு கவிதை கிறுக்கல்களும, சில நேரம் அவளது உளறல்களும் அவனது மனதிற்கு இதம் சேர்த்தது.
முதல் சில மாதங்களுக்கு அவளது செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டவன் .
தொடர்ந்து வரவே…அப்படி என்னதான் தினமும் அனுப்புகிறாள் என்ற ஆர்வம் அவனை சந்தித்துள்ள அவளது செய்திகளை படிக்க ஆரம்பித்தான்.
நேர்மறையான சிந்தனைகளையும், நம்பிக்கையூட்டும் கவிதை வரிகளும் அவனை உள்ளிழுத்துக் கொண்டது.
இன்றும் அவளது செய்தி வராமல் போகவே , கடுப்புடன் கண்களை மூடினான்.
“ டிங்..” என்ற ஒலியை அவனது அலைப்பேசி எழுப்பவே…வேகமாக எடுத்து அதனைப் பார்த்தான்.
வழக்கமாக வரும் தன்னம்பிக்கை வரிகளைக் போலில்லாமல் அவளது சோர்வான புகைப்படத்துடன்
“ தனிமையிலிருந்து என்னை விடுவித்து விடு…” என்று மட்டுமே இருந்தது.
அதற்கும் எதுவும் எதுவும் எதிர் வினையாற்றாமல் வைத்து விட்டான் அலைப்பேசியை.
யோசனையுடன் உறங்கிப் போனான்.
புகழினியின் மருத்துவமனை திறந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.
அன்று ஈஸ்வரனிடம் வந்தவள் , “அண்ணே…லண்டன்ல வெஸ்ட் மினிஸ்டர்ல இன்டர்நேஷனல் டாக்டர்ஸ் கான்பெரன்ஸ் மூணு நாள் நடக்குது. அதுக்கு தமிழ்நாடு சார்பா என்னையும் இன்னோரு டாக்டரையும் செலக்ட் பண்ணிருக்காங்க.. அடுத்த மாசம் போவனும். டிக்கெட் எனக்கு போட்டுடுறேன்னே… சேகர் சார் ஹாஸ்பிட்டல்ல பாத்துக்குவாரு…நம்ம நேஹா இருக்கால்ல…அவங்க இருக்குற இடத்துலே தான் கான்ஃபெரன்ஸ் நடக்கு…நான் அவக வீட்ல தங்கிக்கிறேன். நீ வெசனப்படாதே…நான் பத்திரமா போயிட்டு வர்றேன்..என்னண்ணே சொல்லுத..?” என்றாள்.
அவளின் தாயோ, “ அது எங்கன இருக்கு…? ரொம்ப தூரமா இருந்தா…தனியால்லாம் போவ வேணாம்…துணைக்கு யாரையும் கூட்டிட்டு போ… தனியா …போறாளாம்…தனியா…மொத இவளுக்கு கல்யாணம் கட்டனும் ஈஸ்வரா…வயசாகிட்டே போவுது…உனக்கும் வயசாகுது. எம்பேச்சை ஆரு கேக்குறா…?உங்க வயசுல இருக்க எல்லாத்துக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்கு…நீங்க ரெண்டு பேர் மட்டுந்தேன்….இப்படி தனி மரமா நிக்கீக…வயசான எங்களை பத்தி நினைச்சி பாக்கீகளா…? எங்களுக்கும் உங்களுக்கு ஒரு நல்லது கெட்டது பண்ணிப் பாக்க ஆசையிருக்காதா..? இவ பாட்டுக்கு கிறுக்கி மாரி கத்திட்டே இருக்கட்டும்ன்னு தானே நீங்க உங்க வேலை பாத்துட்டு போறீக..? வயசான அந்த மனுசனையும் என்னையும் பத்தி ரெண்டு பேரும் ஏதாவது யோசிக்கீகளா..? எல்லாம் எந்தலையெழுத்து…நா கொடுத்து வச்சது அம்புட்டுதேன்…நாங்க கண்ணை மூடறதுக்குள்ள உங்களுக்கு நல்லதை பண்ணி பாத்துபுடனும்ன்னு ஆசைப்படுதோம்…அதை கூட நிறைவேத்த மாட்டிக்கீக…”என் கண்களை கசக்க.
“இப்ப ஏன் இப்படி ஒப்பாரி வைக்க நீயு…கல்யாணம்…கல்யாணாம்…எப்பப் பாரு இதையே சொல்லி சொல்லி மனுஷனை சாவடிக்காத…இப்படியே கண்ணை கசக்கி காரியத்தை சாதிச்சுப்புடு…”என எகிறிக் கொண்டு வந்தாள்புகழினி.
“ புகழு…சித்த அமைதியா இரு…” என்றவன் தன் தாயின் புறம் திரும்பி, “ இப்ப என்ன பண்ணனும்…? கல்யாணம் தானே…? புகழு ஊருக்குப் போயிட்டு வந்ததுக்கப்பறம் உடனே கல்யாணத்தை நடத்திபுடலாம்..நீ வெசனப்படாதே ம்மா…” என்றான்.
பின்னர் புகழினியின் புறம் திரும்பியவன், “இங்க பாரு புகழு…நீ நினைச்ச மாதிரியே ஆசுபத்திரி கட்டியாச்சு..நான் அப்ப சொன்னது போலவே நீ நம்ம அப்பா அம்மா பேச்சைக் கேட்டு கல்யாணம் கட்டிக்கிடனும்…சொல்லிட்டேன்…நீ ஊர்ல இருந்து வந்தவுடனே உனக்கு மாப்பிள்ளை பாக்குறேன்…என்ன புரியுதா..?” என அழுத்தமாக கூறினான்.
ஈஸ்வரனின் குரலில் இருந்த அழுத்தம் புகழினியை சரியென தலையசைக்க வைத்தது.
புகழினிக்கோ மனது பதற ஆரம்பித்தது.
“ ஒரு நிமிசம் புகழு…எந்த ஊரு சொன்ன…?” என்றான்.
“ லண்டன்ண்ணே…நம்ம நேஹா அங்கன தான் இருக்கா…” என்றாள்.
“ சரி …எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடு…நானும் உங்கூட வர்றேன்…” என்றான்.
அதைக் கேட்ட புகழினிக்கு இதயம் படீரென வெடித்ததுப் போல் ஒரு மாயை.
ஆம்…! அவசரத்திற்கு இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆட்டோவிற்கு கூட செலவு செய்யாதவன்…லண்டனிற்கு அவனுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கச் சொல்வது அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“உனக்கு…மாண்ணே…” என்றவளது குரல் உள்ளிறங்கியது.
“ ஏன்…நானெல்லாம் வெளியூர் பாக்கக் கூடாதா…? எம்புட்டு வருசமா இங்கனையே இருக்குறது…நானும் நாலு மனுசங்களை பாக்கனும்ல…ஏன் நான் வர்றதுல்ல உனக்கு ஏதாவது கஷ்டமா..?” என்றான்.
அவளோ அவசரமாக, “இல்லண்ணே…இல்லண்ணே…நீ வா…ஆனா…எங்க தங்குவ..?” என்றாள்.
“ஏன் அவக பெரிய வீடாதானே வச்சிருப்பாக..அதுல எனக்கு தங்க ஒரு இடம் கிடைக்காதா..?” என்றான்.
புகழினிக்கோ ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி.
யாருடைய வீட்டிலும் அநாவசியமாக தங்க விரும்பாதவன் , தங்கு என்றால் கூட வேண்டாம் மறுத்துவிட்டு எவ்வளவு நேரமானாலும் தங்களுடைய வீட்டிற்கு வந்துவிடுபவன்…இன்று தானே முன் வந்து எவ்வித தயக்கமும் இன்றி நேஹாவினுடைய வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என்றால் அவளுக்கு பேரதிர்ச்சி தான்.
புகழினியால் தன் காதையே நம்ப முடியவில்லை .
இருவருக்கும் சேர்த்து விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்தாள்.
லண்டனில் ஆதி தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தான்.
வாழ்க்கையை சலிப்பாக இருந்தது. மூன்று நான்கு சிகரெட்டுகளை புகைந்து தள்ளியிருந்தான்.