தங்கையின் விருப்பத்திற்கு சாதகமான பதில் கூற இயலாத தன்னுடைய நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது ஈஸ்வரனுக்கு.
அவனை மீறி கண்டிப்பாக புகழினி எதுவும் செய்து விட மாட்டாள்.
அதே சமயம் நிச்சயமாக பாண்டியனைத் தவிர்த்து வேறு ஒருவனை நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.
அவளும் மிகவும் அழுத்தமானவள் தான்.
அதனாலேயே ஈஸ்வரனை சென்று சங்கர பாண்டியனிடம் பேசப் சொல்லவில்லை. மாறாக சங்கர பாண்டியனே இறங்கி வந்து பேசட்டும் என்று விட்டுவிட்டாள்.
பாண்டியனிடமும் தனது பக்கத்து நியாயத்தை தெளிவாக கூறிவிட்டாள்.
பாண்டியனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
அவனும் அதனாலேயே தைரியமாக
தந்தையிடம் புகழினியை பெண் கேட்குமாறு கூறிவிட்டான்.
லண்டனில் இருந்து வந்த பிறகு ஈஸ்வரனுக்கு நேஹாவின் நியாபகமாகவே இருந்தது.
அவளிடமிருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருந்தது .
வழக்கம் போல பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டான் .
தாவி அவள் பால் ஓடும் மனதை கட்டுக்குள இழுத்து வைத்துக் கொண்டான் காளையவன்.
அரிசி கொள்முதல் அதிக லாபத்தை ஈட்டித் தந்தது. பயிர் வகைகளிலும் அதிக லாபம் வந்தது.
அதை வைத்து வங்கிக் கடனை அடைத்து விடுவதாக கூறியதற்கு புகழினி தானே செலுத்தி விடுவதாக உறுதியாக ஈஸ்வரனிடம் கூறிவிட்டாள்.
ஈஸ்வரனை மேலும் மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை அவள்.
“ இந்த பணத்தை நீ உன்னோட சேமிப்புல போட்டுக்கண்ணே…நான் பேங்க் லோனை கட்டிக்கிடுதேன்….” என்று பணத்தை அவன் கையிலேயே திணித்து விட்டாள்.
அவனோ கையில் இருக்கும் பணத்தை வைத்து பாதியில் நிற்கும் தங்களுடைய புதிய வீட்டின் வேலைகளை ஆரம்பித்து விட்டான்.
“ஏண்ணே…? எல்லா பணத்தையும் இப்படி வீட்டுக்கு போட்டுட்டியே…உனக்குன்னு…ஒண்ணு வச்சிக்கிட மாட்டியோ…?” என்றாள் கோபமாக.
மென்னையாக சிரித்தபடி, “ யாருக்கு செய்யுதேன்…நம்ம வீட்டுக்குதானே….இதுல எதுக்கு கணக்கு பாத்துக்கிட்டு…உன் கல்யாணம் நடக்கு முன்ன…இந்த வீட்டை கட்டி கௌரவமா உன்னைய வழி அனுப்பி வைச்சுப்புடனும்…அம்புட்டுதேன்…” என்றவனின் அன்பினில் கண்கலங்க அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் புகழினி.
“ உன்னையே ரொம்பவே கஷ்டப்படுத்துதேனோ….? எங்களுக்கே எல்லாத்தையும் செஞ்சு புட்டு உனக்குன்னு எதுவும் செஞ்சிக்காம நிக்காதண்ணே…ரொம்பவே குற்றவுண்ர்ச்சியா இருக்குது…இப்பவும் சொல்லுதேன்….உனக்கு அவமானம் நடக்குற மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். உன் விருப்பத்தோடு மட்டுந்தேன் இந்த கல்யணாம் நடக்கும்….அது நிச்சயம்…எவ்வளவு வருசமானாலும சரி…” என கலங்கிய படி அவனது தோள் சாய்ந்திருந்தாள்.
ஈஸ்வரனது கண்களுக்கு அவள் இன்னும் சிறுபிள்ளையாய் தோன்றினாள்.
அவளது தலையை கோதியபடி நின்றிருந்தான்.
நான்கு நாட்களாக நேஹா விடமிருந்தது எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை.
அலைப்பேசியை எடுத்தெடுத்து பார்த்து விட்டு வைத்தான்.
புகழினி அதனைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.
அவளுக்கு ஓரளவிற்கு விஷயம் பிடிப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ஏதேச்சையாக அவனது அலைப்பேசியை பார்க்க நேரிட்ட போது…கடந்த ஓராண்டிற்கு மேலாக நேஹா அவனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றாள் என்பதை கண்டு கொண்டாள்.
ஈஸ்வரன் அதற்கு பதிலேதும் அனுப்பவில்லை. ஆனால் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் அழிக்காமல் அப்படியே வைத்திருந்தான்.
சின்ன சிரிப்புடன் நகர்ந்துவிட்டாள்.
“ ஏன் நாலு நாளா…. ஒண்ணும் செய்தி அனுப்பாம கிடைக்கா…என்னாச்சுன்னு தெரியலையே…? ஒருவேளை அனுப்பி அனுப்பி வெறுத்துப்போய்ட்டாளா…? “ என ஆயிரத்தெட்டு எண்ணங்கள் தலைக்குள் ஓடிது.
அவளுக்கு அழைத்துவிடலாமா என்று உந்திய எண்ணத்தை தள்ளி வைத்தான்.
தவிப்புடன் ஒருவாரம் கடந்திருந்தது.
ஈஸ்வரனுக்கு நாளுக்கு
நாள் நேஹாவின் மனம் மாறிதான் போய்விட்டதோ…?தன்னை தவிர்க்கின்றாளோ…? என்பது போன்ற எண்ணம் தோன்றி அவனை அலைக்கழித்தது.தான் தான் அவளிடம் தன்னை மறந்தே விடச் சொன்னோம் என்பதை மறந்துவிட்டான் போலும்
அன்று காலை புகழினி அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
நேஹா அவளது அலைப்பேசிக்கு காணொளி மூலம் அழைத்திருந்தாள்.
அதனை ஏற்ற புகழினி, “ஹாய்…நேஹா…! என்ன திடீர்னு வீடியோ கால்ல கூப்டுருக்க…? “ என்றாள்.
“ ஒண்ணுமில்லை…. சும்மா தான்…அப்பறம் நான் எல்லாத்தையும் கணக்கு போட்டு உனக்கு மெயில்ல அனுப்பியிருக்கேன்…சரி பாத்துக்க…உங்கண்ணா கிட்டயும் சொல்லிடு” என்றாள்.
“ ஒ…சரி…நேஹா…இந்தா அண்ணே பக்கத்துல தான் இருக்கு நீயே அது கிட்ட சொல்லிடு…” என்ற கூறிவிட்டு தனது மதிய உணவை எடுத்து வைக்க உள்ளே சென்று விட்டாள் புகழினி.
சட்டென்று தனது கையில் அலைப்பேசியை கொடுத்தவுடன் சற்று தடுமாறி தான் போய்விட்டான் ஈஸ்வரன்.
சுற்றும்முற்றும் பார்த்தவன் அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
லேசாக முகம் வாடியிருப்பதைப் போன்றதொரு பிரமை.
வீட்டில் இருப்பது போல தெரியவில்லை.
“ எப்படியிருக்கீங்க ஈஸ்வரன்…?” என்றாள்
அவளது முகத்தை பார்த்து, “ ம்ம்…நல்லாயிருக்கேன்….நீ…எங்க…இருக்க…இப்ப..? திரும்பவும் சரக்கடிக்க வந்துட்டியா…?” என காட்டமாக கேட்டான்.
அவளது விழிகள் ஆச்சர்யத்தில் லேசாக விரிந்து பிறகு சுருங்கியது…
“ இல்லை…அது வந்து…ஒரு வாரம் முன்னாடி சின்ன ஆக்சிடென்ட்…கால்ல அடிபட்டுருக்கு…அதான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்…சரக்கடிக்கல்லாம் டைம் இல்லை…” என்றவளை நன்றாகவே முறைத்தான்.
“ஏன்…என்னாச்சு..? தனியா தான் ஆசுபத்திரில இருக்கியா…? ஓத்தாசைக்கு யாரும் இல்லையா…?” என்றான் நிஜமான அக்கறையுடன்.
அவன் இவ்வளவு தூரம் பேசுவதே நேஹாவிற்கு வானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வைத் தர .முயன்று தன்னை நிதானப்படுத்தினாள்.
“இப்போதைக்கு கூட யாரும் இல்லை…கார் ஓட்டும் போது நிலை தடுமாறி மீடியன்ல இடிச்சிட்டேன்….அதான் கொஞ்சம் ப்ராக்சர் ஆகிடுச்சு…பெருசா பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லை. ஒரு மாசத்துல சரியாகிடும்…”என்றாள்.
ஈஸ்வரனுக்கோ சுள்ளென்று கோபம் வர, “ ஏன் எங்க யார் கிட்டயும் நீ சொல்லல…?அவ்வளவு அந்நியமா போயிட்டோமா நாங்க…?ஒரு நாளைக்கு ரெண்டு தடவை ஏதேதோ செய்தி அனுப்புவியே..அதே மாதிரி ஒண்ணைப் போட்டுருக்கலாம் ல. ஒரு வாரமாவே எதுவும் வரல…அப்பவே நினைச்சேன்…ஏதோ பிரச்சினைன்னு..ஏன்..? உன்னோட ஆருயிர் நண்பன் அங்கனதானே இருக்கான். அவனை உதவிக்கு கூப்பிட வேண்டியது தானே…?பெரிய கம்பெனி நடத்துறதுனால உதவி கேக்க கௌரவம் தடுக்குதோ…?எல்லாத்தையும் நாமளே பண்ணிக்கலாம்…எல்லாம் நமக்குதேன் தெரியுங்கற திமிரு…அதேன் ஆரும் கேக்க ஆளில்லைன்னு உன்னோட இஷ்டத்துக்கு பண்ணுது. இப்படி அடிபட்டு இருக்கவ.. அவனை கூப்பிட வேண்டியது தானே…இவனெல்லாம் என்ன நண்பன்..?ஒருத்தி அடிபட்டு கிடக்கா…என்ன..? ஏதுன்னு ஃபோன் பண்ண மாட்டாராம்மா..? ச்சை…என்ன மனுசன் இவன்…? பக்கமா இருந்தாலாவது. இங்கன இருக்குற யாரையும் ஓத்தாசைக்கு அனுப்பி விடலாம்…அம்புட்டு தூரத்துல போய் உக்காரந்துருக்கவ…என்னவோ போ…“என உரிமையாக கோபித்துக் கொண்டவனைப் பார்த்தவளுக்கு கண்கள் கரித்துக கொண்டு வந்தது.
நடுங்கும் குரலில் , “ஆதியும் மீனாட்சியும் வந்து பாத்துட்டு தான் போனாங்க…ஆனா என் கூட தங்க முடியாதே…இங்க என்னைய பாத்துக்க நர்ஸ் இருக்காங்க….எல்லாமே செஞ்சிடுவாங்க….என்ன வீட்டுக்கு போனா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ..நான் பாத்துக்குறேன்…ஈஸ்வரன்.. அப்பறம் எல்லா கணக்கையும் சரி பார்த்து புகழினியோட மெயில்க்கு அனுப்பியிருக்கேன். நீங்க சரி பாத்துக்கோங்க…” என்றாள்.
சரியாக கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் தவிப்பவளை கண்டு இதயம் இறங்கித் தான் போனது ஈஸ்வரனுக்கு.
ஆனாலும் தங்களிடம் சொல்லவில்லையே…தங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லையே என்றஆதங்கத்துடன் , “இப்ப இந்த கணக்கு வழக்கு ரொம்ப முக்கியமா…? முதல்ல உடம்பை கவனி…மனுசனோட எரிச்சலை கிளப்பிட்டு இருக்காதே…” என்று கூறி வைத்து விட்டான்.
என்னதான் விலகிச் செல்ல நினைத்தாலும் அவனை அறியாமலேயே அவள் மீதான அவனின் அக்கறை வெளிப்பட்டிருந்தது.
சமயலறையில் இருந்து வேகமாக வந்த நேஹா, “ என்னண்ணே வச்சிட்ட…? நான் பேசலாம்ன்னு இருந்தேன்…” என்றாள்.
அவளை முறைத்தவாறே, “ அப்பறம் பேசிக்கலாம்…நேரமாச்சு…மொத கிளம்பு…” என எரிந்து விழுந்தான்.
“ ம்ம்கூம்…என்னத்தை சொல்லிட்டேன்னு இப்படி எரிஞ்சு விழற..?வர…வர…உம் போக்கே சரியில்லை…” என நொடித்துக் கொண்டாள்.
“அவன்ட்ட ஏன்டி…வம்பிளுக்குற…?போய் கிளம்புற வழியைப் பாரு……போ…” என விரட்டினார் அவளது தாயார்.