உயிர் 34
“ கோமதி…! கோமதி…!” என்றழைத்துக் கொண்டே வீட்டினுள்ளே வந்தார் சங்கர பாண்டியன்.
மாவரைத்துக் கொண்டிருந்த கோமதி , “கொஞ்சம் இருங்க …கை கழுவிட்டு வாரேன்…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார்.
அதற்குள்ளாகவே சங்கர பாண்டியன் சமயலைறக்குள் வந்தவர், “ இருக்கட்டும்… இதுல வேலையாளுகளுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணம் இருக்குது…நம்ம பீரோல வச்சிட்டு போறேன்….கணக்குப் பிள்ளை வந்தா எடுத்து குடுத்து விட்டுடு…” என்றார்.
“மழை ஏதும் வரப்போகின்றதா..? “என வெளியே பார்த்தார் கோமதி…
“என்ன..? வெளியே பாக்க..? மழை ஏதும் வரப்போவுதா…?”என்றார்.
“ அதத்தேன்…நானும் பாத்தேன்…உலக அதிசயமா எங்கிட்ட பணம் விசயமெல்லாம் சொல்லுதீகளே…? அதேன்…” என்றார் மாவை அள்ளிய படியே..
“ தப்பை சரி செஞ்சிக்க நினைக்குறது தப்பில்லையே..?” என்றார் எங்கோ பார்த்தபடியே.
“ சரி தான்…” என முணுமுணுத்துக் கொண்டே கைகளை கழுவினார்.
“ சரி கோமதி…நான் வண்டியூர் வரைக்கும் போயிட்டு வந்துடுதேன்…இராவுக்கு வர நேரமாகும். மோர் மட்டும் வச்சிடு போதும்…சாப்பிட வேற எதுவும் வேணாம்…” என்றார்.
இதுநாள் வரை எங்கு செல்கிறார்..? ,எப்போது வருவார்…? இரவு வர தாமதமாகுமா..? உண்பதற்கு ஏதும் எடுத்து வைத்து வேண்டுமா…? இல்லையா..? என்று எந்த விதமான விபரமும் கோமதியிடம் கூறிச் சென்றதில்லை.
இன்று அனைத்தும் தலைகீழ் நிலைமையானதை எண்ணி சற்று வியந்து தான் போனார் கோமதி.
ஆனாலும் வெளியே எதுவும் காட்டிக் கொள்ளவில்லை கோமதி.
சங்கர பாண்டியன் வண்டியூர் சென்றிருந்த அதே சமயம் ஈஸ்வரனும் தூரத்து சொந்தம் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தான்.
இரவு பத்து மணியை தாண்டிக் கொண்டிருந்தது.
ஆள் அரவமற்ற இடத்தில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது.
கண்களை சுருக்கிப் பார்த்தான் ஈஸ்வரன்.
சங்கர பாண்டியனின் கார் தான் அது.
எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கின்றது..? என யோசித்தவாறே அருகில் சென்றான்.
கார் முன்சீட்டில் வியர்க்க விறுவிறுக்க நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார் சங்கர பாண்டியன்.
ஆம் ..! அவர் மட்டுமே தனியாக வண்டியூருக்கு காரினை எடுத்து கொண்டு வந்திருந்தார்.
கள்ளிக்குடிக்கு திரும்பிச் செல்லும் வழியில் திடீரென வியர்க்க ஆரம்பித்து படபடவென வர வாகனத்தை ஓரம் கட்டினார்.
திடீரென நெஞ்சுவலி ஏற்படவே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தார்.
மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. அவர் அலைப்பேசியை பொதுவாக உபயோக படுத்த மாட்டார் என்பதால் எடுத்து வரவில்லை.
வாகனத்திலிருந்து அவசரமாக இறங்கிய ஈஸ்வரன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
ஆள் ஆரவமில்லாமல் இருந்தது அவ்விடம்.
யோசிக்காமல் அவரருகில் சென்று,” யோவ்…மாமா…என்ன செய்யுது…? ஏன் நெஞ்சை பிடிச்சிட்டு இருக்கீரு..? “என்று அவரது தோளினைப் பற்றி கேட்டான்.
அவரால் பதில் கூற முடியாம்ல தவித்தார். மங்கலாக ஈஸ்வரனின் உருவம் தெரிந்தது.
“யோவ்….மாமா..ஆஆஆ…நாந்தேன் ஈஸ்வரன் ….என்ன செய்யுது..?”என்றபடியே அவரை அருகிலிருந்த சீட்டிற்கு மாற்றி விட் பேச்சைக் கொடுத்து கொண்டே வண்டியை எடுத்தான்.
“நெஞ்சு…நெஞ்சு…. ரொம்…ப…வலி…க்கு…து…ஈஸ்வரா…பட..பட…ன்னு…வருது….நான…செத்து….டு…வேன்…போல….ஆ…” என வலியில் சுணங்கினார்.
சொல்ல முடியாத வலி மனதிலும் கண்களிலும்….
“பயப்படாதீரு..…அவ்வளவு…சீக்கிரமா…நீரு..போவ மாட்டீரு…. கொஞ்சம் பொறுத்துக்க…இதோ ஆசுபத்திரிக்கு போயிடலாம்….வெசனப்படாதே…கண்ணை மூடாத…தொறந்து வெளியே பாத்துட்டே வா….” என அவரிடம் அதட்டலுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே புகழினியின் மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
செவிலியர்கள் வருவதற்குள் அவரை தூக்கியபடி உள்ளே நுழைந்தான்.
செவிலியர்கள் ஸ்டெரச்சரை எடுத்து வர. அவரை தீவிர அவசர சிகிச்சை பிரிவுக்குள் கொண்டு சென்றார்கள்.
சங்கர பாண்டியனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாகவே இருக்கும்.
பாதி கண்களை திறந்த நிலையில் ஸ்டெரச்சரில் இருந்தே ஈஸ்வரனை நிமிர்ந்து பார்த்தார்.
முகத்தில் வியர்வையை சட்டையில் துடைத்துக் கொண்டு பதட்டத்துடன் அவரது கையை பிடித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.
அவனது முகத்தில் சிறிதும் கோபமோ, வன்மமோ, வேண்டா வெறுப்போ அல்லது எவ்விதமான பகையுணர்வோ , காணப்படவில்லை.
உண்மையான வருத்தத்துடனும் பதட்டத்துடனும்
வந்து கொண்டிருந்தான்.
மனித உருவில் நடமாடும் தெய்வமாக தெரிந்தான்
அவரது கண்களுக்கு.
தான் அவனுக்குச் செய்த தகாத செயல்கள் அவரது கண்முன்னே வந்து போயின.
குற்றவுணர்வில் இன்னும் வலி அதிகமாயிற்று அவருக்கு.
உடலில் வலு இருக்கும் வரை தான் மனிதன் தன்னகங்கராம், சக மனிதனை கீழ்த்தரமாக நடத்துதல், வன்மம், பகையுண்ரவு கொண்டு ஆணவத்தின் உச்சத்தில் இருக்கின்றான்.
உடலில் வலு குறைந்து அடுத்தவரை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் போது தான் வாழ்வின் நிதர்சனம் முகத்தில் அறைந்து கர்வம், திமிர், பொறைமை ஆகியவற்றை அழித்து விடுகிறது.
ஆடி அடங்கும் வாழ்கையடா…! என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
சங்கர பாண்டியனின் நிலையுமே இப்போது அது போல தான்.
உயிர் பயமோ..? அல்லது உண்மையில் தான் அவனுக்கு செய்த செயலை எண்ணி வெட்கினாரோ.? தெரியவில்லை ஆனால் அவரது பார்வை வாஞ்சையுடன் ஈஸவரனை தழுவியது.
கண்கள் சொருக ஆரம்பிக்க, ஈஸ்வரனோ , “யோவ்….மாமா….! கண்ணுமுழிய்யா….மூடாத…ஏமாதித்திடாத…. இன்னும் பேரன் பேத்தியெல்லாம் எடுக்கனும்யா…வந்துடு…”என ஆக்ரோஷமாக அவரது கன்னத்தை தட்டினான்.
மருத்துவரோ, “சார்…ஏன் இப்படி பிகேவ் பண்ணுறீங்க…? நாங்க பாத்துக்குறோம்…நீங்க வெளியே இருங்க சார்…செக் பண்ணிட்டு சொல்றோம்…”என அறையினுள் நுழைந்தனர்.
நெற்றியை நீவியபடி நின்றிருந்தவன் ஞாபகம் வந்தவனாக பாண்டியனுக்கு அழைத்து விவரத்தை கூறினான்.
மேலும் ,” பதட்டப்படாத.. விசயத்தை அத்தையிட்ட மொல்லச் சொல்லி கூட்டிட்டு வா…” என்றான்.
“ ம்ம்…சரி…” என்று வைத்தவன் கோமதியடம் விவரத்தை கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.
ஆயிரம் கோபதாபங்கள் இருப்பினும் இவ்வளவு வருடங்களாக அவருடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யாகிவிடாது அல்லவா…? சற்றே பதட்டத்துடன் தான் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார் கோமதி.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “ஆஞ்சியோ பண்ணுனதுல்ல ஹார்ட்ல இரண்டு இடத்துலே தொன்னூறு சதவீகித ப்ளாக் இருக்கு…ஸ்டென்ட் இம்மீடியட்டா வைக்கனும்…அப்பறம் ஹார்ட் பம்பிங்கும் குறைவா இருக்குது…அப்சர்வேஷன்ல இருக்கட்டும்…சீக்கிரம் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணிடுங்க…நாளைக்கு இல்ல நாளைன்னைக்குள்ள பண்ணிடலாம்…யாரும் இப்ப அவரை தொந்தரவு பண்ண வேணாம்…மார்னிங் பாத்துக்கோங்க..” என்று கூறி விட்டு சென்றனர்.
கோமதியும் பாண்டியனும் அமைதியாக நின்றிருந்தனர்.
“ பாண்டியா…! பணம் கைல்ல வச்சிருக்கியா…? இல்ல நான் எடுத்துத் தரவா..?” என்றான்.
அவனைஒரு நிமிடம் பார்த்தவன் கண் கலங்க, “ ஒரு நிமிஷம் உன்னையே கட்டிப் பிடிச்சிக்கவா…?” என்றான்.
தோள் கொடுப்பவன் தான் உண்மையான நண்பன் என்பார்கள் இப்போது பாண்டியனுக்கு சாய்ந்து கொள்ள ஆறுதலாக… நெகிழ்ச்சியாக… ஒரு தோள் தேவைப்பட்டது.
ஈஸ்வரனும் மறுத்துக் கூறாமல் , “ ம்ம்..” என்றான்.
அவனை இறுக அணைத்து விடுவித்தவன், ” நீ வெறும் சொந்தக்காரன் இல்லய்யா…அதுக்கும் மேல…என்ன சொல்றதுன்னு
தெரியலை…” என்றான்.
“மனுசனுக்கு மனுசன் இதைக் கூட செய்யல்லைன்னா பொறவு எதுக்கு இருக்கோம்…சக மனுசன் துடிச்சிட்டு இருக்கறப்ப… நம்மையெல்லாம் வேடிக்கை பாத்துட்டு அப்படியே நிக்க முடியுமா..? அம்புட்டு கல்நெஞ்சு கிடையாது சாமி…இதை போய் பெருசா பேசிட்டு இருக்காத…ஆக வேண்டிய வேலையை பாரு.. நான் நாளைக்கு வந்து பார்த்துக்கிடுதேன்…ஏதும் அவசரம்ன்னா நேரம் பாக்கம என்னைய கூப்பிடு…புகழும் இங்கன தான் இருப்பா…இப்ப பிரசவ கேஸூக்கு போயிருக்கா…வந்துடுவா…சந்தேகம்ன்னா அவ கிட்ட கேட்டுக்க…நா காலையில சாப்பாடு எடுத்துட்டு வாரேன்…கிளம்புதேன்…” என்றவன் “ அப்பறம் …புகழை இந்நேரத்துக்கு அப்பறம் தனியா கிளம்பி வூட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிடு…இங்கனையே தூங்கிட்டு காலையில வரச்சொல்லு…பொம்பிளை புள்ள நேரங்கெட்ட நேரத்துல வர வேணாம்…”என்று கூறி விட்டு தனது வீட்டிற்கு சென்றான்.
பாண்டியனது மனதில் ஈஸ்வரன் பல மடங்கு உயர்ந்து நின்றான்.