மீனாட்சியை கட்டிப்பிடித்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் ஆதி..
தனது நிறுவனத்தில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அரை மணி நேர உரையை ஆங்கிலத்தில் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனாக அவளையே தயார் செய்யச் சொல்லி ஐந்து பேர் கொண்ட குழுவிடம் பேசுமாறு கூறியிருந்தான்.
முதலில் மறுத்தவள் ஆதியின் தொடர் வற்புறுத்துதலின் காரணமாக சரியென்றாள்.
மீனாட்சி இதுவரை கற்றதை வைத்து தானே சிறு உரையை பவர்பாய்ண்ட்டில் ஆஙகிலத்தில உருவாக்கி அவர்களிடம் அதனை விவரித்து பாராட்டினைப் பெற்றாள்.
மகிழ்ச்சி மிகுதியில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அவளை அலேக்காக தூக்கி சுற்றிவிட்டு கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“ சூப்பர் மீனாட்சி….செம்மயா …பண்ணிட்ட…யூ ஆர் சோ…டேலெண்டட்…விட்டுடாத… இன்னும் நிறைய தெரிஞ்சுக்க..நல்லா இம்ப்ருவ் பண்ணிடலாம்…பட்…டுடே…யூ ஆர் ஜஸ்ட்…அமேசிங்…” என்றவன் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டே விலகினான்.
அவளும் முதலில் சந்தோஷ மிகுதியில் அவன் அணைத்ததை கண்டு கொள்ளவில்லை.
இரண்டாம் முறை மீண்டும் அணைத்து முத்தமிட்ட போது தான் தன்னிலை உணர்ந்தாள் பெண்ணவள்.
சற்றே அதிர்ந்து தான் போனாள். அவனும் வேண்டுமென்றே செய்யவில்லை என்று தெரியும்.
நாணம் மேலிட குனிந்து கொண்டாள்.
அனிச்சை செயலாக ஆதி மீனாட்சியை முத்தமிட்டது அவனது புத்தியில் உரைக்கவில்லை போலும்.
அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டே வெளியே சென்று விட்டான்.
மீனாட்சிக்கு தான் படபடப்பு அடங்குவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது .
ஆழ் மனதுடன் போராடிக் கொண்டிருந்தாள். கற்கும் கல்வி அவளை நிதர்சனத்தை ஏற்க பழக்கியிருந்தது.
தேவையில்லாமல் ஆதியிடம் வாக்குவாதம் விதண்டாவாதம் செய்வதை நிறுத்தியிருந்தாள்.
கல்லூரியில் நடக்கும் குழு விவாதங்களைப் பற்றியும், காணொளி உரையைப் பற்றியும் அவனிடம் அபிப்பிராயம் கேட்க ஆரம்பித்து விட்டாள்.
ஆதியே அவளுக்கு அனைத்தும் ஒவ்வொன்றாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைத்தான்.
அதன் விளைவாக கல்லூரியிலும் தயக்கத்தை விடுத்து நன்றாகவே பேச ஆரம்பித்திருந்தாள்.
தற்போது ஆதி தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் தங்களுடைய நிறுவனத்தைப் பற்றி எவ்வாறு எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதை நேரடியாக செய்ய வைத்திருந்தான்.
அவளது முயற்சிக்கான பலன் தான் அனைவரிடமும் இருந்து கிடைத்த பாராட்டும்…
ஆதியிடமிருந்து கிடைத்த முத்தமும்.
அனைத்திலும் அவளுக்கு துணையாக நின்று பயிற்றுவித்தான் ஆதி.
அவளும் சிரத்தையுடன் கற்றுக் கொண்டாள்.
கல்லூரிக்கென்று தனியாக வாங்கியிருந்த ஆடைகளை அணிந்து கொண்டு கல்லூரிக்குச் சென்றாள் .மற்ற நேரங்களில் புடவையை அணிந்து கொண்டாள்.
அன்று கல்லூரி இல்லையென்பதால் புடவையில் வந்திருந்தாள் அவனது நிறுவனத்திற்கு.
“ மீனாட்சி…வீட்டுக்கு போலாமா…? மழை வரும் போல இருக்கு…சீக்கிரம் வா போலாம்…” என்றபடி அவளுடன் இணைந்து நடந்தான்.
பார்க்கிங்லிருந்து காரை எடுத்து வருவதற்குள் நன்றாகவே மழைப் பிடித்துக் கொண்டது.
குளிரும் மழையுமாக வித்தியாசமான வானிலையாக இருந்தது.
இருவரும் இயல்பாக பேசியவாறே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
காரினை கேரேஜில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே நன்றாக நனைந்து விட்டனர்.
“ஷ்ஷ்…ஷப்பா…என்னா குளிரு…இதுல மழை வேற…ஊஃப்ப்…இந்தா இந்த டவல்ல நீ துடைச்சிக்க., மீனாட்சி… ஹீட்டர் போட்டு விடேன்..” என்றவன் அவளருகே வந்து பூந்துவாலையை கொடுத்து விட்டு தானும் மற்றொரு பூந்துவாலையால் தலையில் துவட்டியபடி அவளைப் பார்த்தான்.
உடலோடு ஒட்டியிருந்தது அவளது புடவை. பார்வையை விலக்கிக் கொள்ள மனமில்லாமல் அப்படியே நின்றிருந்தான்.
மீனாட்சியோ தலையை துவட்டியபடியே , “கொஞ்சம் அந்த ஹீட்டரை போட்டு விடுங்க…என் கை ஈரமா இருக்கு..” என்றபடி அவனைப் பார்த்தாள்.
அவனது பார்வையில் இருந்த வித்தியாசம் அவளை திடுக்கிடச் செய்தது.
அவனோ தலையை துவட்டியபடி அவளருகில் நெருங்கி வந்தான்.
உதடுகள் நடுங்க, “ என்ன வேணும்…?ஏன் இப்படி…பாக்குறீ…க..?” என்றாள் தடுமாறியபடியே.
அவளது முகத்தில் தெறித்திருந்த நீர்த்துளிகளை ரசித்தவாறே அவன் முன்னோக்கி வர அவளோ பின்னாடு நகர்ந்து சென்று சுவற்றோடு மோதி நின்றாள்.
மூச்சுக்காற்று அவளது முகத்தில் மோதுமளவிற்கு அவளை நெருங்கி நின்றான்.
குளிரால் நடுங்கியபடி நின்றிருந்தாள் மீனாட்சி.
மெதுவாக கைகளை அவளே தோள்பட்டை உரசியபடி நீட்டி அவளுக்கு பின்னாலிருந்த ஹீட்டரின் ஸ்விட்ச்சை போட்டுவிட்டு கைகளை அப்படியே வைத்திருந்தான்.
அவளோ வழிகளை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.
விழிகளில் மோகமும் காதலும் போட்டிப் போட்டுக்கொண்டு இருந்தன.
இத்தனை அருகாமையில் அவனை பார்த்ததும் அவளது மனம் வேகமாக துடித்தது.
கணவன் என்ற உரிமையினால் வந்த ஈர்ப்பும் தனக்கென அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் விதமும் நேசப்பூக்களை மெல்ல மலரச் செய்திருந்தது.
“மீனாட்சி …”
என்றழைத்தான் தாபமான குரலில்.
“ ம்ம்…சொல்லுங்க…” என்றாள் குனிந்தபடியே மெல்லிய குரலில்.
“ நிமிர்ந்து பாரேன்….” என்றான்.
“ ம்ம்கூம்…நீங்க கொஞ்சம் விலகுங்க…”என்றாள் ஈனஸ்வரத்தில்.
“ம்மச்…நிமிர்ந்து என் கண்ணைப் பாரு மீனாட்சி..”என சுட்டுவிரல் கொண்டு அவளது முகத்தை நிமிர்த்தினான்.
நீண்ட கயல் போன்ற விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தது.
ஏதோ ஒரு தயக்கம் அவளிடத்தில். மனதில் எண்ணி அலைகள் முட்டி மோதினாலும் விவரிக்கப் தெரியாது மெல்லிய சுவர் தடுத்துக் கொண்டே இருந்தது அவளுள்.
அவளது கன்னத்தில் விரலால் கோடிழுத்துக்கொண்டே,
“மீனாட்சி இப்ப உண்மையை மட்டும் சொல்லு .…உனக்கு இன்னமும் என்னை பிடிக்கலையா…? இப்படியே.. நீ தனியா…நான் தனியா எவ்வளவு நாள் வாழறது…? வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டு போக ஆசைப்படுறேன்…. மீனாட்சி…என்னோட செயல்கள் உன்னை இனி எந்த விஷயத்துலையும் பாதிக்காது…நீ மட்டும் என் கூட இருந்தா போதும் மீனாட்சி…வேற எதுவுமே வேணாம்…சொல்லு மீனாட்சி…உன் மனசுல என்னதான் இருக்கு…? ஓப்பன்னா பேசிடு… ஒருவேளை உனக்கு என்னைய பிடிக்கலை ன்னா…என்னை மன்னிக்க மனசு வரல்லன்னா…ஈஸ்வரன் தான் இன்னும் உன் மனசுல இருக்கான்னா…நான் உனக்கு விடுதலை பத்திரம் தந்துடு….”என முடிப்பதற்குள் பளாரென அறைந்துவிட்டாள் மீனாட்சி.
“மீனாட்சி …!”என கன்னத்தை பிடித்து கொண்டு நின்றிருந்தான் ஆதி.
அவனருகே வந்து அவனது சட்டையை பிடித்து இழுத்தவள் , ஆக்ரோஷமாக, “என்ன நினைப்புல இருக்கீரு…? நீங்க பாட்டுக்கு வருவீகல்லாம்…வந்து வலுக்கட்டாயமா கல்யாணம் கட்டிக்கிடுவீகளாம்…படிக்க வைப்பீகளாம்.…பழக்க வழக்கத்தை சொல்லிக் கொடுத்து நல்ல இடத்துக்கு என்னைய முன்னேத்தி விடுவீகளாம்…நினைச்ச உடனே உங்க கூட வாழலன்னா விடுதலை பத்திரம் கொடுப்பீகளோ…? என்ன மனுசன் நீயு…? திருத்த மாட்டல்ல…? இப்ப சொல்லுதேன் கேட்டுக்க…கல்யணாம் என் வாழ்க்கையில நடந்து முடிஞ்சு போச்சு…அது ஒருத்தர் கூட தான்… அந்த ஒருத்தர் தான் மண்ணுக்குள்ள போறவரைக்கும் எம் புருசன்… அது நீ மட்டுந்தாய்யா…. ஈஸ்வரன் மாமா இப்ப என்னோட சொந்தம் அவ்வளவு தான். அவரு மேல் எப்பவும் இருக்குற மரியாதையும் மதிப்பும் தான் மிச்சம் இருக்கு. எவ்வளவு கேவலமா நான் இன்னமும் அவரைத் தான் நினைச்சிட்டு இருக்கேன்னு யோசிக்க முடியுது உங்களால…? உங்க கூட இருந்துட்டு அவரை நினைச்சிட்டு இருந்தா அது பேரு வேற… இப்ப என்ன..? என் மனசுல என்ன இருக்குன்னு தெரியனும் அவ்வளவு தானே…? “ என அவனை ஒருமையிலும் பன்மையிலும் மாறிமாறிப் திட்டிவிட்டு சிறிது இடைவெளி விட்டாள்
ஒரு பெருமூச்சுடன் , “நல்லா கேட்டுகிடுங்க
எம் மனசு பூராவும் நீங்க மட்டுந்தேன் இருக்கீக…எப்ப எப்படின்னு சொல்லத் தெரியலை….ஆனா இப்ப இந்த ஆதியை மட்டுந்தேன் எனக்கு புடிச்சிருக்கு. வேற எந்த நினைப்பும் என்கிட்ட இல்லை….நீங்க பண்ணுனதை மன்னிக்க மட்டுந்தேன் முடியும்…..மறக்க முடியாது…அதுக்காக அதையே பிடிச்சி தொங்கிட்டு இருக்க முடியாதுல்ல…எவ்வளவு வருசம் உங்களை தண்டிக்க முடியும்…? இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ தயராகிட்டேன் தான்…ஆனா..” என தயங்கியபடி அவனது முகத்தை பார்த்தாள்.
“ என்னன்னு சொல்லு மீனாட்சி….” என்றான்.
“ அது…வந்து …அவரை காதலிச்சிட்டு…உங்களை …உங்க கூட…அதாவது ..என்ன சொல்ல வர்றேன்னா…குடும்பம் நடத்தினா…. உங்களுக்கு தப்பா…” என்று வார்த்தைகள் தந்தியடித்தன.
அவளை தனது கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்,
“இதை நான் சொல்லலாமா…? வேண்டாமான்னு தெரியலை…முதல்ல இதை சொல்ல எனக்குத் தகுதியிருக்கான்னே தெரியல…ஆனாலும் சொல்றேன்…என்னோட தப்புனால தான் உன்னோட காதல் பிரிஞ்சது…அதை விட்டுட்டு என் கூட வாழ வான்னு கூப்டறது தப்புதான். ஈஸ்வரன் உன் மனசுல எப்பவும் உயர்வான இடத்துலே தான் இருந்திருக்காரு….இனியும் இருப்பாரு…அவரோட பழகுனதை வச்சி உன்னை தப்பா எடை போட மாட்டேன்…அதே சமயம் என் கூட வாழ்ந்ததுனால நீ தப்பானவளா ஆகிட மாட்ட…மீனாட்சி. உன்னை தப்பா நினைச்சா…அது என் உயிரையே நான் சந்தேகப்பட்ட மாதிரிஆகிடும்..
ப்ளீஸ்…புரிஞ்சுக்க… இன்னும் நான் வெயிட் பண்ணனுமா…? சொல்லு பண்ணுறேன்…ஆனா உனக்கு என்னைய பிடிச்சிருக்குங்கறப்ப அடுத்த கட்டத்துக்கு நம்ம லைஃபை எடுத்துட்டு போகலாமே…ரொம்பவே கெஞ்ச வைக்காத டி…” என்றான் பரிதாபமாக .