“ உன்னை எப்படியாவது மறந்து விலகிடனும்ன்னு அவ கூட டேட்டிங் போனேன்… அ…ஆனா…அவ கூட இன்டிமேட்டா இருக்க முடியலை …உன்னைத் தவிர வேற யாரையும் என் மனசும் உடலும் ஏத்துக்கல…ஐ யம் ரியலி சாரி மீனாட்சி…தப்பா எதுவும் நடக்கல..” என்றபடி நல்ல குனிந்தான்.
மீனாட்சிக்கோ கோபத்தில் முகம் ஜிவுஜிவுவென சிவந்தது.
“ போய்யா….போ….அவ கிட்டயே போயேன்….ஏன்…என் பின்னாடியே வர்ற…. டேட்டிங் போனாகளாம்….ஆனா…ஒண்ணும் நடக்கலையாம்….யாரு கிட்ட காது குத்துற..? இங்கன வந்து இரண்டு வருசமாகப் போகுது… இன்னும் டேட்டிங்க்கும்…..அவுட்டிங்குக்கும் வித்தியாசம் தெரியாம இல்லை. இங்கன காலேஜூல டேட்டிங்கல என்னென்ன பண்ணுவாங்கன்னு வந்து சொல்லிருக்காங்க…நீ அவ வாயை பாத்துகிட்டு இருந்த அதை நானு நம்பனும்…?” என்றவளை இடைமறித்து, “ சத்தியமா ஒண்ணும் நடக்கல டி…உன் கால்ல வேணா விழுறேன்…”என சாஷ்டாங்கமாக அவள் காலிலேயே விழுந்து விட்டான் ஆதி.
அவளோ பத்ரகாளியாக மாறி, “ஆஹா…ஹா…ஹா…என்னாமா நடக்கிறீங்க நீங்க…? முப்பததொரு வயசு ஆம்பளை அப்படியே கையை கட்டி தான் நிப்பீகளோ..? அதுவும் ஒரு அழகான பொண்ணு கூட…. நீங்க மொத எழுந்திருங்க… இன்னும் என்னவெல்லாம் பண்ணி வச்சிருக்க அதையும் சொல்லிட்டு மொத்தமா மன்னிப்புகேளுங்க….யப்பாப்பா….பொல்லாத ஆளுய்யா…நீயு….” என படபடவென பேசிக் கொண்டே போனவளின் இதழை அடைத்தான் ஆதி தன்னிதழால்… அவளது நீண்ட விழிகள் அதிர்ந்து விழிக்க….
அவனிடமிருந்து திமிறினாள்.
ஆணவனின் சூடான கரங்கள் மழையில் நனைந்து குளிர்ந்திருந்த இடையை இறுகப் பற்றிக் கொள்ள…திமிறினாள் பாவை. பிறகு மெதுவாக அடங்கினாள் அவனது அணைப்பினில்
குடை இமைகள் தானாக மூடிக் கொள்ள. அவனது கேசத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் பெண்ணவள்.
தேனினை உறிஞ்சும் வண்டாக அவளது இதழ்களில் குடிகொண்டிருந்தான் ஆதி..
ஈர உடையோடு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
தன்னிலை இழந்த பெண்ணவள் முத்ததோடும் அவனோடும் ஒன்றினாலும் இதயத் துடிப்பு வேகமாக அடித்துக் கொண்டு தான் இருந்தது.
இதழ்களை அவளிடம் இருந்து பிரித்து எடுத்தவன், “ஐ லவ் யூ டி…. மீனாட்சி…லவ் யூ சோ மச்…”என்றான்.
அவளிற்கோ நிதானத்திற்கு வர நேரமெடுத்தது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீயும் பதிலுக்கு லவ் யூ சொல்ல மாட்டியா..?”என்றான் ஏக்கமாக.
அவளை இன்னும் தன்னோடு நெருக்கியவன் அவளது இதழை மீண்டும் நெருங்கும் முன்பே மீனாட்சியின் அலைப்பேசி அலறியது.
அதனை தள்ளி வைக்க முற்பட்ட போது பாண்டியனின் எண் கண்ணில்படவே யோசனையுடன் அவளை விட்டு விலகி அவளிடம் அலைப்பேசியைக் கொடுத்தான்.
அவனது திடீர் விலகலில் நிமிர்ந்து பார்த்தவள் அலைப்பேசியை அவன் நீட்டியவுடன் வாங்கிக் கொண்டு, “சொல்லுண்ணே…என்ன இந்த நேரத்தில கூப்டுருக்க…? என்ன விசயம்…?” என்றாள் .
எதிர்முனையில் பாண்டியன் கூறியதை கேட்ட மீனாட்சியின் முகம் பதட்டமடைந்தது.
இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்து விட்டாள்.
அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்ட ஆதி அவளருகே வந்து, “என்னாச்சு மீனாட்சி…? ஏன் யாருக்கும் உடம்பு கிடம்பு சரியில்லையா…? பாண்டியன் இன்னேரத்துக்கு கூப்டமாட்டானே…? என்னமா?…என்னாச்சு?” என்றான் கனிவாக .
அவளுக்கோ கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
“சொல்லுமா…” என்றான் மீண்டும்.
“அப்பாவுக்கு…நெஞ்சுவலி வந்து ஆசுபத்திரில சேர்த்துருக்காகளாம்…ஈஸ்வரன் மாமாதேன் சேர்த்துருக்கு..ஸ்டெண்ட்டு வைக்கனுமாம் . விடிஞ்சா ஆப்ரேசன்னு பாண்டியன் சொல்லிச்சு..இப்ப நா என்ன பண்ணனும்…? போகனுமா..? இல்லை இங்கேயே இருக்கட்டுமா…? எனக்கு அப்பாவை ரொம்பவே பிடிக்குந்தேன்…ஆனாலும் கோவமா வருது…என்ன பண்ண..? என்றபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆதியும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனது பார்வையில் என்ன இருந்ததென்பதை அவளால் உணர முடிந்தது.
அவளருகே வந்து அமர்ந்தவன் அவளது கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டு, “ இதுக்கும் என்னால பதில் சொல்ல முடியும்…ஆனா … ம்ம்ச்.. உன்னால மன்னிக்க முடியும்ன்னு நினைச்சா கிளம்பு…நாளைக்கு ஏதாவது டிக்கெட் இருக்கான்னு செக் பண்ணுறேன்…இல்லன்னா உன் இஷ்டம்… எல்லாம் ஒரே நாள்ல மாறிடாது….அவரோட ஹெல்த்தும் இப்ப முக்கியம்…உன்னை கம்பெல் பண்ணலை. உன்னோட உணர்வுகளையும் நான் மதிக்குறேன்…” என்று அவளது பதிலை எதிர்பார்த்து முகத்தை பார்த்தான் .
மனதின் சஞ்சலங்களை தள்ளி வைத்து விட்டு, “டிக்கெட் இருந்தா போட்டுடுங்க… நான் போய் புடவையை மாத்திட்டு வர்றேன்.” என எழுந்து சென்றாள்.
கதவை மூடிவிட்டு முன்னறைக்கு வந்தவன் குளித்துவிட்டு கணினி முன் அமர்ந்து இருவருக்குமான விமானச் சீட்டை பதிவு செய்தான்.
நேஹாவினை அழைத்து அவளது உடல்நிலையை பற்றி கேட்டறிந்து விட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறினான்.
நேஹாவோ, “ சரி ஆதி…பாத்து போயிட்டு வாங்க…அப்பறம்…உனக்கு சில டாக்குமெண்ட்ஸ் அனுப்பிருக்கேன்…அதை நீ கொஞ்சம் ஃப்ரீ ஆனதுக்கு அப்பறமா பாரு…அவசரமில்லை …பாத்துட்டு உன்னோட டிசிஷன்ன சொல்லு…உங்கிட்ட நேர்ல சில விஷயங்களை பேசணும். மீனாட்சியும் கூட இருந்தா நல்லது . ஊருக்கு போயிட்டு வந்துட்டு…வீட்டுக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க…”என்றாள்.
அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்தவன், “வாட்..இஸ் திஸ் நேஹா…? ஆர் யூ கான் மேட்…? என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணி வச்சிருக்க…?”என்றான் கோபமாக.
“ ம்ம்ச்….இப்ப யாரு…உன்னைய பார்க்கச் சொன்னா…? நீ முதல்ல ஊருக்கு போயிட்டு வா…நிதானமா பேசிக்கலாம்…” என முடித்துக் கொண்டாள்.
மறுநாள் இரவு இருவரும் இந்தியாவிற்கு கிளம்பினர்.
அதற்குள் சங்கர பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை முடிந்திருந்தது.
ஈஸ்வரனும் அறுவை சிகிச்சை முடியும் வரை மருத்துவமனையிலேயே இருந்தான்.
அவ்வப்போது புகழினியின் வந்து பார்த்துக் கொண்டாள்.
அவசர சிகிச்சை பிரிவில் கண்மூடி படுத்திருந்தார் சங்கர பாண்டியன்.
ஒரு நாள் முழுவதும் சிகிச்சை பிரிவில் இருந்தார்.
பின்னர் சாதாரண அறைக்கு மாற்றியிருந்தனர்.
ஆதி மற்றும் மீனாட்சி இரு நாட்கள் கழித்தே வந்தனர்.
வந்தவள் நேரே தாயினை அணைத்துக் கொண்டாள்.
ஒன்றரை வருடங்கள் கழித்து பார்ப்பதால் நெகிழ்ந்து போய் அவரை அணைத்திருந்தாள்.
என்ன முயன்றாலும் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது கோமதிக்கு .
“அழாதீங்க மா…. எல்லாம் சரியாகிடும்…” என தைரியமூட்டிக் கொண்டே தந்தையை பார்த்தாள்.
மகளின் முகத்தை வெகு நாட்களுக்கு பிறகு நேருக்கு நேர் பார்த்தவரோ உணர்ச்சிவசப்பட்டார்.
அலைப்புறும் விழிகளோடு அவளிடம் பேச துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
கையை மெதுவாக தூக்கி அவளை அருகில் வருமாறு அழைத்தார்.
கலங்கிய கண்களை சரி படுத்தியவாறே அவரருகில் சென்று நின்றாள் மீனாட்சி.
நடுங்கும் தன் கரங்களால் அவளது கரங்களை மெல்லப் பிடித்துக் கொண்டார்.
அவரது கரங்களைப் பார்த்தவள் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
தளிர் நடை போட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவரது கரங்களைப் பிடித்து நடைப் பழகிய ஞாபகம் வந்தது.
அன்று அத்தனை வலிமையோடு இருந்த கரங்கள் இன்றே நடுங்கிக் கொண்டு இருந்தது.
தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தவர் தான். அதிக பாசத்தையும் அன்பையும் கொடுத்தவர் தான்.