உயிர் தொடும் உறவே -38

4.6
(5)

உயிர் 38

 

சங்கரபாண்டியன் குடும்பத்தினர் ஒரு வாகனத்திலும், ஆதியும் ‌மீனாட்சியும் மற்றொரு வாகனத்திலும் கிளம்பத் தயாராகினர்.

கோமதியோ, “ எங்க போகணுங்க..?” என்றார்.

“ முத்துக்காளை வீட்டுக்கு வண்டியை விடு மணி…” என்றார்.

கோமதிக்கோ தனது காதுகளை நம்பவே முடியவில்லை.

திருமணமாகி வந்து இவ்வளவு வருடங்களில் தனது அண்ணன் முத்துக்காளையை சக மனிதனாக கூட மதித்ததில்லை‌. பிறந்த வீட்டினரிடமும் முகம் கொடுத்து பேசியதில்லை.

அப்படி இருந்தவர் தற்போது ஈஸ்வரனின் வீடு என்று சொல்லாமல் முத்துக்காளையின் வீடு என்றால் ஆச்சரியமாக தானே இருக்கும்.

ஆம்…முதலில் முத்துக்காளையிடம் தானே மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆதியின் காரில் அமர்ந்திருந்த மீனாட்சி தனது தந்தையின் கார் ஈஸ்வரனின் வீட்டை நோக்கி செல்வதை பார்த்தாள்.

ஆதியும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

பெரிதாகவும் இல்லாமல் மிகவும் சிறியதாகவும் இல்லாமல் இருந்தது முத்துக்காளையின் வீடு.

மூன்று அறைகள் கொண்டு சற்று விசாலமான தனி வீடாகத் தான் இருந்தது.

வீட்டைச் சுற்றிலும் தோட்டம் பச்சை பசேலென்று இருந்தது.

கோமதி மற்றும் சங்கர பாண்டியன் திருமணமான புதிதிலும், முத்துக்காளையின் தாயார் இறப்பிற்கும் மட்டுமே வந்தது.

கோமதியுமே தாயார் இறந்த பிறகு அண்ணனது வீட்டிற்கு பெரிதாக வந்ததில்லை. சங்கர பாண்டியன் வரவிட்டதுமில்லை.

அப்போது பார்த்தது போல் சிறு ஓட்டு வீடாக இருக்கும் என்று நினைத்தவருக்கு சற்று ஏமாற்றமே.

ஆனால் கட்டி பல வருடங்கள் ஆகி விட்டதால் சுண்ணம் எல்லாம் உதிரத் தொடங்கியிருந்தது.

ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருந்தது. எனவே தான் ஈஸ்வரன் சற்றே வசதிகள் கொண்ட புதிய வீட்டினை கட்டிக்கொண்டு இருக்கின்றான்.

அவர்களின் வீட்டு வாசல் சங்கர ண்டியனது கார் நிற்கவும் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் நெற்றியை சுருக்கி அவர்களை பார்த்தான்.

சப்தம் கேட்டு ஈஸ்வரனின் தாய்  லட்சுமி வெளியே வந்தார்.

அவரும் ஈஸ்வரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களை அழைக்க மறந்து நின்றிருந்தனர்.

மெதுவாக இறங்கிய சங்கர பாண்டியன் அவர்களை பார்த்தார்.

இருவரும் அப்படியே நிற்கவும்,” உள்ள வரலாமா…?”என்றார்.

சுதாரித்த லட்சுமி , “ஹான்….உள்ளாற வாங்கண்ணே…வாங்கண்ணி…வாப்பா…பாண்டியா..” என்றார்‌ .

 

மூவரும் உள்ளே செல்ல பின்னோடு வந்து நின்றது ஆதியின் வாகனம்.

உள்ளிருந்து இறங்கினான் ஆதி. அவனருகே இருந்து இறங்கினாள் மீனாட்சி.

உள்ளே திரும்ப எண்ணிய ஈஸ்வரனின் விழிகள் வாசலைப் பார்க்க.

இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

மீனாட்சி கடைசியாக லண்டன் செல்வதற்கு முன்னர் பார்த்தது.

இப்பொழுது தான் மீண்டும் அவளைப் ‌பார்க்கின்றான்.

மீனாட்சியும் அவனை தான்‌ பார்த்துக் கொண்டு இருந்தாள். பெரிதாக அவனிடம் எந்த ஒரு வித்தியாசமும் தென்படவில்லை.

அவள் இப்போது ஆதியின் மனைவி என்பதை ஆழப்பதிய வைத்துக் கொண்டிருந்தான் தான்.

நிர்சலனமான முகத்துடன்

அவர்களைப் பார்த்தவன் , “உள்ள வாங்க…” என்றழைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.

இருவரும் வீட்டினுள்ளே

அடியெடுத்து வைத்தனர். மீனாட்சியின் மனம் லேசாக சுணங்கி பின்னர் இயல்பாகியது.

நொடியில் ஆதி அதனை கண்டுகொண்டான்.

அவனுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. தான் செய்த ஒரு செயலின் பாதிப்பு அவனுக்கு புரிந்தது. அனைவரிடமும் வணக்கத்தை மட்டும் தெரிவித்து விட்டு வெளியே வந்து விட்டான்.

அவனுக்கு ஏனோ சுவாசம் தடைப்பட்டது போன்றதொரு உணர்வு.

வெளித் திண்ணையில் தனது அலைப்பேசியுடன் ‌அமர்ந்துவிட்டான்.

சில்லென்று காற்று வீச தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.

நேஹா அனுப்பிய சில கோப்புக்களை சரி பார்த்து வைத்துக் கொண்டிருந்தான்.

பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சங்கர பாண்டியன்.

“ மன்னிப்புங்கறது சின்ன வார்த்தை..ஆனா என்னப் பண்ணுறது பட்டாதான் புத்தி வருது…உடம்புல வலு இருக்குற வரை அகம்பாவம், திமிரு…மத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காம…பணம், கௌரவம்..நிலம்…இதெல்லாம் தான் முக்கியம்ன்னு இருந்துபுட்டேன். ஆனா அதெல்லாம் ஒன்னும் இல்லை…மனுசனுக்கு மனுசந்தேன் முக்கியம்…நமக்கு ஒண்ணுன்னா நெருக்கமான உறவுதேன் வந்து தெய்வம்‌ மாதிரி உதவி பணணும்ங்கறத நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். முத்துக்காளை…காணி நிலத்துக்கு உங்கிட்ட தேவையில்லாம பகை வளர்த்து…அதை‌ அடுத்த தவைமுறைக்கும்‌ கொண்டாந்து செய்யக் கூடாதது எல்லாம் செஞ்சி ஈனப்பிறவியாகிட்டேன். மன்னிச்சிடு முத்துக்காளை…” என்று அவரது காலில் விழப் போனார்.

முத்துக்காளையோ பதறி விலகி அவரைத் தடுத்தார்.

“ஐய்யோ…! என்னங்க நீங்க…இப்படியெல்லாம் பண்ணிகிட்டு …? என்னைய சங்கடப்படுத்தாதீக…உடம்பு சரியில்லாத மனுசன் இம்புட்டு தூரம் ‌வந்துருக்கீக… செத்த இருங்க ..புகழு…போய் எல்லோருக்கும் காஃபி தண்ணி போட்டு எடுத்துட்டு வா ஆத்தா…”என்றார்.

“ பரவாயில்ல முத்துக்காளை…நீங்க எல்லாரும் என்னைய மன்னிச்சிடனும்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்..” என்றவர் ஈஸ்வரன் அருகில் சென்றார்.

அவனோ கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

“அன்னைக்கு நீ கால்ல விழுந்தா தான் எம் பொண்ணை உனக்கு கட்டித் தருவேன்னு உன்னை அவமானப்படுத்தினேன். எப்பவும் வீரபாண்டி தேரை போல நெஞ்சை நிமித்திட்டு திரியும் உன்னையே கண் கலங்க வைச்சு…பாவத்தை சம்பாரிச்சிகிட்டேன். அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடத்தான் வந்துருக்கேன். இது எந்தளவுக்கு உன்னோட வலியை குறைக்கும்னு தெரியாது…ஆனா..இனி இந்த தப்பை பண்ணக்கூடாதுன்னு தான் வந்துருக்கேன்…என்னை மன்னிச்சிடு…”என்றவர் அவன் காலிலும் விழப் போக அதிர்ந்து போனான் ஈஸ்வரன்.

சட்டென்று கோபம் வர, “யோவ்…மாமா…என்ன பண்ணிக்கிட்டு இருக்கீரு…? உம்ம தப்புக்கு பிராயச்சித்தம் பண்ணுன்னு  நாங் கேட்டேனா…? நீரு என்ன பண்ணுனாலும்….போனது…போனது தானே…?அவுக அவுக இப்ப நல்லாதானேய்யா இருக்காக…தயவு செஞ்சு இப்படியெல்லாம் பண்ணிட்டு திரியாதீரு…மனுசனுக்கு மனுசன் உதவி பண்ணறத பெருசா பேசாதேன்னு அன்னைக்கே சொன்னது தான்…இதை என்னவோ பெருசா உலக சாதனை பண்ணினது போல தூக்கி வைக்காத…எனக்கு இதெல்லாம் புடிக்காது…நீரு மொத உடம்பை பாரும்…இருக்குற நிலைமைக்கு இப்படியெல்லாம் பண்ணாதீரு.. ரொம்பவே உணரச்சிவசப்படாதீக..” என்று அதட்டினான்.

அவனது அக்கறையில் கண்கள் கலங்கத் தான் போனது அவருக்கு.

புகழினி அனைவருக்கும் தேநீரைக் கொடுத்தாள்.

பிறகு கோமதியை அழைத்தவர் தன்னருகே நிற்கச் சொன்னவர் ,  “லட்சுமி…உள்ளாற மஞ்ச‌ குங்குமம் ,கொஞ்சம் பூவு இருந்தா எடுத்துட்டு வாங்களேன்…அவசரத்துல எடுத்துட்டு வரல” என்றார்.

அவரும் எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்க.

கோமதி மற்றும் சங்கர பாண்டியன் இருவரும் சேர்ந்து நின்று, “ எங்க‌ பையன் பாண்டியனுக்கு உங்க பொண்ணு புகழினியை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்…உங்களுக்கு சம்மதமா…?” என்றார்.

அனைவரும் அமைதியாக நிற்க, * என்ன எல்லாரும் அமைதியா இருக்கீக…? ஒரு கல்யாணத்துல நடந்த  தப்ப இன்னோரு கல்யாணத்தில சரி பண்ணனும் மட்டும் நினைக்கல…ஆசைப்பட்டவகளயே கல்யாணம்‌ பண்ணிடலாம்ன்னு தான் மனப்பூர்வமா கேட்டு வந்துருக்கோம்…” என்றார்.

முத்துக்காளை ஏதோ கூற வரும் முன்பு , திடீரென “முடியாதுங்க…உங்க புள்ளையை கட்டிக்க எனக்கு சம்மதமில்லை…” என குண்டைத் தூக்கி வீசினாள் புகழினி‌.

அனைவரும் அதிர்நதார்கள் என்றால் அங்கு ஒருவனுக்கு இதயமே படீர்‌ படீரென் வெடித்து சிதறியது

“அடிப்பாவி புகழினி…குண்டைத் தூக்கிப்‌ போடுறாளே…” என முணுமுணுத்தான்.

அதையெல்லாம் அவள் கண்டு கொள்ளாமல்,

“ இப்ப இவ்வளவு வந்து பேசுற‌ நீங்க…ஒருவேளை உடம்பு சரியா இருந்திருந்தா இப்படி இறங்கி வந்து பேசுவீகளா…?பண்ணிருக்க மாட்டீகல்ல..? எங்கண்ணன் ஆத்திர அவசரத்துக்கு உங்களுக்கு உதவி செஞ்சுதுனால வந்த பரிதாபம்…அப்படித்தானே..?” என்றாள் காட்டமாக.

“புகழு….”என்று அதட்டினார் முத்துக்காளை.

“ அப்பா…சித்த சும்மா இருங்க…உங்களுக்கு தெரியாது…. இன்னைக்கு இவரு வந்து கேட்டதும் நாமளும் பல்லைக் காட்டிட்டு சரின்னு சொல்லனும்…நமக்கெல்லாம் சூடு சொரணை இருக்க கூடாது…இவரு சொன்னதும் மன்னிக்க நான் ஒண்ணும் ஈஸ்வரனோ….முத்துக்காளையோ கிடையாது…புகழினியாக்கும்…இவரு நாளைக்கே மாத்திப்‌ பேச மாட்டாருன்னு எப்படி நம்பறது..? இவரு உண்மையிலேயே திருந்தி தான் பொண்ணு கேக்க ‌வந்துருக்காருன்னு எப்படி நம்புறது…?” என ஆத்திரத்துடன் கேட்டாள்.

இவ்வளவு நாள் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த எரிமலை வெடித்தது அவளுள்.

அத்தனை கோபம்‌ அவளுக்கு. பாண்டியன் என்றால் அவளுக்கு உயிர் தான். தன்னையே கொடுக்க தயாராக தான் இருக்கின்றாள். ஆனால் அதற்கும்‌ மேலனா உறவல்லவா ஈஸ்வரன்..? அந்த உறவினை அசிங்கப்படுத்தியவரை சும்மா விடக்கூடாது என்பதில் உறுதியாக நின்றாள் பெண்ணவள்.

சங்கர பாண்டியனோ அமைதியாக நின்றிருந்தார்.

பிறகு மெதுவாக, “ என்ன செய்யனும் சொல்லுமா…? செய்யறேன்…எனக்கு இப்பதான் திருப்தியா இருக்குது. நீ ஒருத்தி யாவது சாட்டைய சுழட்டினாப்ல பேசுனியே…அதுவே சந்தோசம்… நான் என்ன செய்யனும்ன்னு சொல்லு…” என்றார்.

பாண்டியனை பார்த்தாள் புகழினி .அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“ ஆத்தி….ரொம்ப பேசிட்டோமோ…?கொடூரமா மொறைக்குறாரே… இருக்கட்டும் மொத்தத்துக்கும் சேத்து ஃப்ர்ஸட் நைட்ல சரி கட்டிடலாம்…”என நினைத்து கொண்டு, “பெருசா ஒண்ணுமில்லை…ஊர்காரங்க அப்பறம் உங்க சொந்தபந்தங்களோட வந்து  எங்கப்பா…எங்கண்ணன் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னைய பொண்ணு கேளுங்க…நான் உங்க வீட்டுக்கு மருமகளா வாரேன்..”என்றாள் ‌மிதப்பாக.

இதே ஊர் மக்கள் முன்பு தான்  நிலத்திற்காக தனது தந்தையை அசிங்தப்படுத்தி கைகலப்பு வரை சென்றார். எனவே அதே ஊர் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினாள் புகழினி.

சுள்ளென்று கோபம் வந்தது பாண்டியனுக்கு. வேகமாக நகர்ந்தவனின் கைகளை பிடித்துக் கொண்டார் கோமதி.  அமைதியாக இருக்குமாறு கண் ஜாடை செய்தார் .

அவளை முறைத்துக் கொண்டே அமைதியானான் பாண்டியன்.

அதிகமாக பேசுகிறாளோ என்று தான் அவனிற்கு தோன்றியது .

அவரது அகங்காரத்தினால் ஏற்பட்ட இழப்பு எத்தகையது என்பது புரிய வைக்க வேண்டும் அல்லவா..? அதனாலேயே புகழினி அப்படியொரு நிபந்தனை விதித்தாள்.

சங்கர பாண்டியனுக்கு மீனாட்சியின் திருமணத்தன்று தான் நடந்து கொண்ட முறை நினைவுக்கு வந்தது அவனுக்குமே அவமானமாக தன் தானே இருந்திருக்கும்.

தற்போது அதே நிலையில் தனக்கும் . என்ன ஒன்று மீனாட்சியின் திருமணத்தில் அவனை அவரது காலில விழச் சொன்னார். புகழினி உற்றார் ‌உறவினர் ‌முன்பு‌ மன்னிப்பு கேட்கச்‌ சொல்கிறாள்‌ . அவ்வளவு தான் வித்தியாசம்.

“என்ன‌ யோசிக்கிறீக..? கௌரவம் தடுக்குதோ..?”என்றாள்‌

நக்கலாக.

மெதுவாக சிரிந்தவர்,  “இல்லம்மா…அடுத்த புதன்கிழமை ஊர் சனங்களோடவும் சொந்த பந்தத்தோடவும் வந்து மன்னிப்பு கேட்டுட்டு … நிச்சயம் பண்ணிடலாம்…”என்றார்.

 

அனைத்தையும் பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

புகழினியை பார்த்தவனுக்கு மனதிலுள்ள உணர்வுகள் வெடித்துக் கொண்டு வர காத்திருந்தது.

அதனையடுத்து அனைவரும் ஒருவித சங்கடத்துடன் வீட்டிற்கு கிளம்பினர்.

ஈஸ்வரன் அருகில் வந்த மீனாட்சி, “எப்படி இருக்க மாமா..?” என்றாள்.

“நல்லா இருக்கேன் மீனாட்சி…நீ எப்படி இருக்க..?”என்றான்.

“ ம்ம்ம்…நல்லா இருக்கேன்…மாமா…சீக்கிரம் நீயும் கல்யாணம் பண்ணு…வயசாகிட்டே போகுது…”என்றவுடன் அழையா விருந்தாளியாக நேஹாவின் நினைவு வந்தது… கூடவே அவளது முத்தமும் நினைவில் வந்து அவனை இம்சித்தது.

“ ம்ம்…”என்றான் எங்கோ பார்த்தபடி…

அவள் விடைப்பெற்று சென்ற பிறகு ஆதி ஈஸ்வரனருகே வந்தான்.

“ எல்லாத்துக்கும் முடிஞ்சா மன்னிச்சிடு…” என்றான்.

பட்டென்று, “ அது முடியாது…” என்றான்.

திரும்பிச் செல்ல முயன்றவனை ஈஸ்வரனது குரல் தடுத்து நிறுத்தியது.

“ நண்பன்…நண்பன்னு சொன்னா மட்டும் பத்தாது…அந்த பொண்ணு நேஹா…தனியா தானே இருக்கா…அப்பப்ப கொஞ்சம் போய் பாத்துட்டு வரலாம் ல…கால் சரியாகும் வரை  உங்க கூடவே வச்சிருந்து பாக்கலாம் ல…பாவம் தனியா கிடந்து அல்லாடுது…” என்றான் காட்டமாக.

ஆதிக்கோ சிரிப்பு வந்தது. அதனை வெளிக்காட்டாமல், “நாங்க கூப்பிட்டோம்‌ தான். ஆனா அவ வந்து தங்க மாட்டேனுட்டா…” என்று கூறி விட்டு வெளியே நடந்தான்.

“ கொஞ்சம் பாத்துக்கோ…”என்றான்‌ ஈஸ்வரன் சத்தமாக.

முதன்முறையாக நேஹா வின் மீதிருந்த பாசத்தை வெளிப்படையாக ஆதியிடம்‌ உணர்த்தியிருந்தான் ஈஸ்வரன்.

அவனை திரும்பி நின்று பார்த்து விட்டு, “சரி…” என்றான்.

வீட்டிற்குள் வந்தவன் கண்ட காட்சி ..புகழினி தனது தாய் தந்தையிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பதை தான்.

“ என்ன வாய்…என்ன வாய்…டி…உனக்கு…”என்று திட்டியவரை , “அம்மா…போம்மா…போய் மதிய சமையலுக்கு ஏதுனாலும் பாரு…” என விரட்டினான் ‌ஈஸ்வரன்.

இல்லையெனில் தாயிற்கும் மகளுக்கும் பெரிய யுத்தமே ஆரம்பித்துவிடும் என்று நன்கு தெரியும் ஈஸ்வரனுக்கு.

இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும் அவனுக்கு.

ஈஸ்வனே பேச்சை ஆரம்பித்தான் .

“ ஏய்…புகழு…என்னா இப்படி பேசிப்புட்ட…?பாவம் ல பாண்டியன். .

இப்ப உம் மேல சரி கோவத்துல இருக்கான் போல…எங்களுக்காக எதுக்கு அவன் கூட‌ சண்டை…?” என்றான் வருத்தமாக .

“இங்க‌ பாருண்ணே…! அப்படியேல்லாம்‌ என்னால விட‌ முடியாது…உடம்பு‌ சரி இல்லாதவருன்னெல்லாம்‌ பாவம்‌ பாக்க மாட்டேன். கேக்க வேண்டியதை கேட்டுதான் ஆகணும். நீ‌ பட்ட கஷ்டத்துல கொஞ்சமாவது படட்டும். உணர்வுங்கறது ஒண்ணுதான்ணே…அந்த சூழ்நிலையை அவரும் உணரட்டுமே…” என்றாள்.

அவளை தன் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டு, “அப்ப…பாண்டியன்..?”என்றான்.

“உங்கிட்ட சொல்ல கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு…இருந்தாலும் இம்புட்டு தூரம் வெசனப்படுதியேன்னு சொல்லுதேன் கேட்டுக்க…அதாவது ஃபர்ஸ்ட் நைட்டல பத்து தடவை லிப் லாக் பண்ணினா சரியாகிடுவார்ண்ணே..”என்றாள் சிரிக்காமலே..

“ அடிக் கழுதை….என்ன பேச்சு பேசுற நீயு…. ரொம்ப குறைவா அவனை எடைப் போடாத …அம்புட்டுதேன்…சொல்லுவேன்.”என்று அவளது தலையை லேசாக தட்டிவிட்டுச் சென்றான் ஈஸ்வரன்.

அவளுக்குமே அவனது கோப முகம் வருத்தத்தை தந்தது தான். அவனது தந்தையை ஊர் மக்களின்

முன் மன்னிப்பு கேட்க சொல்லியிருப்பது அவனுக்கு கோபத்தை தரும் . இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில் சங்கர பாண்டியன் கூறியதைப் போலவே உற்றார் உறவினருடன் வந்து முத்துக்களையிடமும் ஈஸ்வரனிடமும் மனமார மன்னிப்பு கேட்டார்.

முறைப்படி சொந்தங்களுடம் வந்து பெண் கேட்டு நிச்சயமும் செய்து விட்டார்.

பாண்டியனது முகமோ இறுக்கமாகவே இருந்தது.

புகழினிக்கு அவனிடம் தனியே பேச சந்தர்ப்பம் இல்லாமலேயே போனது.

அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது.

மீனாட்சி மற்றும் ஆதியினால் பாண்டியனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

லண்டனுக்கு திரும்பி விட்டனர் இருவரும்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!