சட்டென்று எழுதுவதை நிறுத்தி விட்டு, “ நீங்களா எதுவும் கற்பனை பண்ணாதீக… அப்படி நடந்தா நல்லது தான…?”என்றாள்.
அவளது கையில் இருந்த பேனாவையும் நோட்டையும் பிடிங்கி தனியே வைத்தவன், அவளை தன் புறமாக திருப்பி, “உண்மையா தான் சொல்லுறேன். நீ ஈஸ்வரன் கிட்ட பேசிட்டு போனதுக்கப்பறம் நான் போய் அவன் கிட்ட மன்னிப்பு கேட்டேன். முடியாதுன்னாட்டான். ஆனா நேஹாவோட கால் சரியாகும் வரை நம்ம கூட வச்சி பாத்துக்கலாமேன்னு கேட்டான். அதுக்கு நானு நேஹா தான் வர மாட்டேனுட்டான்னு சொன்னேன்…கொஞ்சம் அவளை பாத்துக்கோங்க….தனியா இருக்கான்னு அக்கறையா சொல்றான்…அதை சொல்லும் போது அவன் கண்ணுல ஒரு ஸ்பார்க்க பாத்தேன். அப்ப அவனுக்கு நேஹாவை பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்…”என்றான்.
மீனாட்சியோ ஆச்சர்யத்துடன், ”நெசமா தான் சொல்லுதீகளா…? அப்படி இருந்தா ரொம்ப சந்தோசம் தான்…ஆனா அதோட மனசுல என்ன நினைக்குதுன்னு தெரியலையே…? என்ன பண்றது..? அதுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா நல்லது தானே.?”” என்றாள்.
“ பாண்டியன் கல்யாணத்துக்கு போவோம் தானே…அப்ப பாத்துக்கலாம்…” என்றான்.
“ நாளைக்கு நம்ம நேஹா வீட்டுக்கு போறோம். முக்கியமான விஷயம் பேசணும்…” என்றான்.
“ எதைப் பத்தி…?” என்றாள்.
“ அதை நாளைக்கு தெரிஞ்சுக்கோ…” என்றான்.
சலிப்பாக தலையை ஆட்டியபடி எழுத வேண்டியவற்றை கணினியில் இருந்து குறிப்பெடுத்து கொண்டிருந்தாள்.
ஆதியோ அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் மெதுவாக எழுந்தாள் மீனாட்சி.
வழக்கம் போல நாள்காட்டியில் நாளைக் கிழித்த போது தான் கவனித்தாள்.
அன்று அவர்களின் இரண்டாம் வருட திருமண நாள்.
ஏதோ யோசித்தபடியே காலை உணவை தயார் செய்து வைத்தாள்.
ஆதியும் எழுந்து கீழே வந்தான்.
பால்கனியில் நின்று தலைமுடியை காய வைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
“ குட் மார்னிங் மீனாட்சி…” என்றவன் அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
பதிலுக்கு சிரித்தவள் அவனது பார்வையை எதிர் கொள்ள முடியாமல் திரும்பி நின்றாள்.
பின்னோடு அவளை ஒட்டியபடி வந்து நின்றவன் அவளது தோளில் தன் தாடையை வைத்தான்.
ஏதோ சிந்தனைகளில் சிக்குண்டு கிடந்தார்கள் இருவரும்.
ஆதவனின் மெல்லிய வெளிச்சம் கண்ணை கூசச் செய்தது.
“ ஒரு நிமிஷம் உள்ள வாயேன்…” என்றான் ஆதி.
“ எதுக்கு..? எப்ப நேஹாவை பார்க்க போகணும்..?” என்றாள்.
“ மதியம் போகலாம்…நீ உள்ள வா..” என்று கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
அவளிடம் ஒரு பெட்டியை கொடுத்து பிரித்து பார்க்கச் சொன்னான்.
அதைப் பிரித்து பார்த்தாள் மீனாட்சி.
அழகிய வேலைப்பாடமைந்த சந்தன நிறத்தில் அரக்கு பார்டரை உடைய பட்டுப்புடவை அது…மற்றும் அதற்கு தோதாக மெல்லிய தங்க நகைகளும் இருந்தன.
“இது ஏன்…?எதுக்கு…?” என்றாள் தடுமாறியபடியே..
“ இதை வெறும் ஆடம்பரமா பாக்காத…நம்ம கல்யாணம் ஏகப்பட்ட மனக்கசப்புல நடந்தது. அதுல ரொம்பவே ஹேர்ட் ஆனது நீ தான். அதே நினைவுகளால வாழ்க்கையை தொடங்க விரும்பல…ப்ளீஸ் மறுக்காம இதை போட்டுட்டு கிளம்பி வா…ஒரு இடத்துக்கு போகணும்…” என்றான்.
மீனாட்சியுமே சற்று முன்பு அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
எனவே மறுப்பேதும் கூறாமல் அதனை வாங்கி அணிந்து கொண்டு வந்தாள்.
ஆதியுமே சந்தன நிற சட்டையும் ,கருப்பு நிற கால் சட்டையும் அணிந்து கொண்டு வந்தான்.
தேவதையென மிளிர்ந்தவளின் அழகு அவனை கொள்ளை கொண்டது.
அவளது நீண்ட பின்னலில் மனம் சிக்கி கொண்டது. எடுப்பான நாசியும் அதிலிருந்த சிறு கல் மூக்குத்தியும் ,செம்பவள உதடுகளும் அவனை போதை கொள்ளச் செய்தன.
அவளருகே வந்தவன் அவளது முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் அழுத்தமான ஒரு முத்தத்தை வைத்து விட்டு,
“ வா…போகலாம்…” என்று அவளது கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
ஆதியின் கார் நேராக சென்று நின்றது ஒரு கோவில் வாசலில்.
அவளும் சரி கோவிலுக்கு தான் வந்திருக்கின்றான் போலும் என நினைத்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள்.
பூசாரி வரவே அவரது கையில் ஒரு சிறிய பெட்டியை கொடுத்து அர்ச்சனை செய்து கொடுக்கச் சொன்னான்.
அவரும் அர்ச்சனை செய்து அவனிடம் அப்பெட்டியுடன் குங்குமம் மஞ்சளுடன் பூக்களை சேர்த்து கொடுத்தார்.
அதனை வாங்கி பெட்டியை திறந்தான்.
அதில் புதிய திருமாங்கல்யம் இருந்தது.
“மீனாட்சி …நம்ம வாழ்க்கையை தொடங்கறதுக்கு முன்ன எந்த ஒரு கசப்பான விஷயமும் உன் கிட்ட இருக்கக்கூடாது…இந்த தாலியை சந்தோஷமான மனநிலையில தான் உனக்கு கட்டுறேன்…நீயும் சந்தோஷமான மனநிலையில் ஏத்து விரும்புறேன்..உனக்கு சம்மதம் தானே..?” என்று கேட்டு அவளது முகத்தை பார்த்தான்.
சம்மதம் தெரிவித்தவுடன் அவளது கழுத்தில் அணிவித்து நெற்றியில் குங்குமமும் வைத்தான்.
புதியதொரு தொடக்கத்திற்கு அனைத்துமே புதிதாக இருக்க வேண்டும் என நினைத்தான்.
நெடுநாள் அழுத்திய ஏதோ ஒரு பாரம் சட்டென்று நீங்கியது போலிருந்தது மீனாட்சிக்கு.