உயிர் 41:
பாண்டியன் மற்றும் புகழனியின் திருமண நாளும் வந்தது.
புகழினியிடம் பேசவே இல்லை பாண்டியன். இரண்டு முறை புகழினியும் பேச முயற்சித்தாள் ஆனால் பாண்டியனோ முகம் கொடுத்து பேசவில்லை.
அவளுக்கும் அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் விட்டுவிட்டாள்.
பாண்டியனின் திருமணத்திற்கு வந்திருந்தனர் ஆதி மற்றும் மீனாட்சி.
ஈஸ்வரன் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தான்.
தங்கைக்கென்று அனைத்து வகையான சீர் வரிசைகளும் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்திருந்தான்.
புது வீட்டிற்கு கிரகப்பிரவேசத்தை மட்டும் முடித்திருந்தான்.
இருப்பினும் சில வேலைகள் முடியாததால் அங்கு குடிபோக முடியாத நிலை .
ஈஸ்வரனின் மனம் முழுவதும் நேஹாவைப் பற்றிய சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது.
புகழினி தனது திருமணத்திற்கு அவளை அழைத்திருந்தாள்.
நேஹா மும்பைக்கு வந்ததை ஈஸ்வரனிடமும் புகழினியிடமும் தெரிவிக்க வில்லை.
ஆதியும் மீனாட்சியும் கூட அதனைப் பற்றி பேசாததால் ஈஸ்வரனுக்கு எந்த விபரமும் தெரியாமல் போயிற்று.
தாம்பூல பைகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில், “ ஹாய்…ஈஸ்வரன்..! எப்படியிருக்கீங்க..?”என்ற குரல் கேட்டவுடன் குற்றாலச் சாரல் வீசியது அவனது மனதில்.
வேகமாக திரும்பியவன் முதலில் ஆராய்ந்தது அவளது கால்களை தான்.
அந்த மக்கிற்கு அது புரியாமல் ,” என்ன பேச மாட்டீங்களா…? கீழ என்னத்தை தேடுறீங்கன்னு சொன்னா…நானும் தேடுவேன்ல….” என்றது.
வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டவன் , “ஒண்ணுமில்ல….நீ உள்ளாற போ…வலது பக்க ரூம்ல புகழு இருக்கா…” என்றான்.
“ அய்யோடா…! ரொம்ப தான் பண்ணுறீங்க…எப்படியிருக்கீங்கன்னு கேட்டேன்…அதுக்கும் பதிலில்லை…அட்லீஸ்ட் நான் எப்படி இருக்கேன்னாவது கேக்கலாம் ல…” என்றவள் ஒரு பெருமூச்சுடன் , “அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் போல…”எனப் புலம்பிக் கொண்டே சற்று சாய்ந்து சாய்ந்து நடந்தாள்.
அவள் செல்வதையே விழியகற்றாமல் பார்த்திருந்தவன், “பைத்தியகாரி…அதுக்குதேன் கால்ல பாத்தேன்….அது கூட புரியலை இவளுக்கு…”என முணுமுணுத்தான்.
சங்கர பாண்டியன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
மீனாட்சியும் கோமதியுமே அனைத்து வேலைகளையும் செய்தனர்.
வடிவாம்பாள் கழுத்து நிறைய நகைகளையும் , ஒரு சாண் அளவிற்கு கெட்டி ஜரிகையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு அங்குமிங்கும் வம்பு பேசிக் கொண்டிருந்தாரே ஒழிய சிறு துரும்பையும் கிள்ளி இங்கிருந்து அங்கு போடவில்லை.
வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த பாண்டியனை ரசனையோடு பார்த்த வண்ணம் அவனருகே வந்து அமர்ந்தாள் புகழினி.
அரக்கு நிற தங்க இழையோடும் புடவையில் தேவதையென தன்னருகே அமரந்தவளை ஒரு கணம் பார்த்துவிட்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான் பாண்டியன்.
அவன் புறமாக லேசாக சரிந்து மெல்லிய குரலில்,
“ ரொம்பத்தேன் பண்ணுதீக….நைட்டுக்கு பாத்துகிடுதேன்…” என்றாள்.
அவனோ அவளை முறைத்து விட்டு, “சீ..போடி…”என முகத்தை திருப்பிக் கொண்டான்.
“ என்னது சீ…போடியா…? இருக்கட்டும் “ என நினைத்தவள் அவனது தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ ஆஆஆஆ…”என்று அலறினான் பாண்டியன்.
“ என்னாச்சு மாப்பிள்ளை…? ஏன் கத்துறேள்…?” என்றார் அய்யர்.
“எறும்பு அய்யரே…!கடிச்சிருச்சு…” என்றான்
“ அதை நசுக்கி அந்த பக்கம் போட்டுடுங்கோ…இல்லன்னா திரும்ப கடிக்கப் போறது…” என்றார் அய்யர் விவரம் புரியாமல்.
புகழினியை முறைத்துக் கொண்டே, “ இன்னிக்கு அந்த எறும்பை நசுக்காம விடப் போறதில்லை…” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
புகழினியோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.
மீனாட்சியுடன் வளவளத்துக்கு கொண்டிருந்தாள். லட்சுமியோ அவளது காதில் ,” கொஞ்சம் உன் வாயை மூடிட்டு சபையை பாத்து நேரா உக்காரு…எப்பப்பாரு வாயடிக்கறது…” என கடிந்து கொண்டார்.
அவரை முறைத்துக் கொண்டே முன்னால் திரும்பி அமர்ந்தாள் புகழினி.