Home Novelsஇதய வானில் உதய நிலவே...!!எபிலாக் (இதய வானில் உதய நிலவே!)

எபிலாக் (இதய வானில் உதய நிலவே!)

by Shamla Fasly
5
(2)

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️

 

எபிலாக் 🌚

 

சூரியக் காதலன் தன் இடத்தை தன்னவளுக்கு விட்டுக் கொடுத்து மறைய காதலனின் அதீத காதலில் பெருமிதத்துடன் ஆகாய சிம்மாசனத்தில் ஒய்யாரமாக ஏறத் துவங்கிற்று நிலவும்.

 

காதலர்களின் அன்பில் ஆனந்தமும் ஆச்சரியமும் ஒரு சேர மின்னி மின்னிப் பிரகாசிக்கலாயின தாரகைகள்.

 

உதய்யின் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள் பத்து வயது ஷாலு. “க்யூட்டி இந்த வாலுங்களைப் பார்த்தியா?” என்று நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்து விட்டுக் கேட்டான் உதய்.

 

“இல்லை வர்ஷு! இரண்டையும் பார்த்து ரொம்ப நேரமாச்சு” என தோளைக் குலுக்கினாள் அவள்.

 

“எங்கே போய் இருப்பாங்களோ தெரியலை. உன் அத்து வேற சூடா இருக்கா” பாவமாகக் கூறினான் அவன்.

 

பின் ஏதோ தோன்ற டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை சத்தத்தைக் கூட்டி போட்டு விட்டு சோபாவில் அமர்ந்து கொள்ள அவன் தோளில் சாய்ந்து டிவி பார்க்கத் துவங்கினாள் கியூட்டி.

 

“வாவ் கார்டூன்!” துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தான் சிறுவன்.

 

“டாடி! டாம் அண்ட் ஜெர்ரி போட்டு இருக்கீங்களா. சோ ஸ்வீட்” தந்தையின் நாடி பிடித்துக் கொஞ்சியவன் உதய்யின் ஐந்து வயது இளவல்!

 

“எங்க இருந்தாலும் இந்த சவுண்டுக்கு மட்டும் டான்னு ஆஜர் ஆயிடுவியே” சிரித்தாள் ஷாலு.

 

“நீங்க மட்டும் என்ன? இத்தனை வயசாகியும் சின்ன பாப்பா மாதிரி கார்ட்டூன் பார்க்கிறீங்க. இதுல உங்க வர்ஷு சுத்தம். போங்க கியூட்டி கா” கிண்டலடித்தான் அவன்.

 

“டேய் ஆதி இதுல என்னை ஏன்டா இழுத்து விடுறே?” என்று பாவமாகக் கேட்டான் தந்தை.

 

“அவசியம் இருக்கு டாடி” என கன்னக்குழி விழச் சிரித்தான் ஆதி! ஆதித்ய ராவ்!

 

“ஆமா! குட்டிமா எங்கே டா?” உதய் கேட்க, “அவள் குட்டிமா இல்லை. பாட்டிமா. சரியான ஜக்கம்மா. ராணி மங்கம்மா” என கடுகடுத்தான் சின்னவன்.

 

“ஏன் டார்லு இவ்ளோ கோபம்? என்ன பண்ணாள் அராத்து?” ஆவலுடன் வினவினாள் ஷாலினி.

 

“என் சாக்லேட்டை தராம மொத்தத்தையும் அவளே சாப்பிட்டாள் தீனிப் பண்டாரம்” என்று அவன் சொல்ல,

 

“டேய்! யாருடா தீனிப் பண்டாரம்? இந்தப் பெயர் மட்டும் சொல்லாத” என்ற கீச்சுக் குரலில் திரும்பிய மூவரும் பக்கென சிரித்தனர்.

 

முகம் முழுவதும் சாக்லேட்டை அப்பிக் கொண்டு இடுப்பில் கை குற்றி தன் அண்ணனைப் பார்த்தாள் தங்கை.

 

“அப்படித் தான் சொல்லுவேன். என் சாக்லேட்டையும் நீ சாப்பிடல்ல. ஆளையும் மூஞ்சையும் பாரு” முகம் சுளித்தான் ஆதி.

 

“என் மூஞ்சு நல்லாத் தான் இருக்கு. உன் மூஞ்சியைத் தான் பார்க்கவே சகிக்கல” பதிலுக்கு எகிறினாள் அவள்.

 

“மரியாதையா பேசு குட்டிப் பிசாசு”

 

“உனக்கென்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?”

 

“ஹேய் வாயாடி! அவன் உன் அண்ணன். அதை ஞாபகம் வெச்சுக்க” இடை புகுந்தாள் ஷாலு.

 

“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாத கியூட்டி. என்ன விட ஒரு நிமிஷம் முந்தி வந்தவன். ஒரு வருஷம் மூத்தவன்னாலே மரியாதை குடுக்க மாட்டேன். இதுல ஒரு நிமிஷத்தை எல்லாம் அண்ணானு கூப்பிடனுமா? நோ நெவர்” என்று விவேக் பாணியில் சொன்னாள் உதய்யின் குட்டிமா.

 

“சரிம்மா தாயே. என்னை அண்ணானு கூப்பிடவும் வேணாம். வெண்ணெய்னு கூப்பிடவும் வேணாம். அதே நேரம் என் சாக்லேட்டை ஆட்டைய போடவும் வேண்டாம்” என கும்பிடு போட்டான் மூத்தவன்.

 

“சரிடா இந்த தடவை சாரி. இனிமேல் எடுக்க மாட்டேன்” அவனை அணைத்துக் கொண்டாள் சாந்த சொரூபினியாய்.

 

“இதுங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கீரியும் பாம்புமா சண்டை போட்டுச்சுனு சொன்னா யாராச்சும் நம்மள லூசுன்னு சொல்லுவாங்க கியூட்டி. பார்த்தியா இப்போ எப்படி பசை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்குதுங்க” ஷாலுவின் காதில் சொன்னான் காளை.

 

“எங்களுக்கும் கேட்குது. உங்க கியூட்டி கூட ரகசியம் பேசாதீங்க. கியூட்டியும் தீஞ்ச ரொட்டியும்” நொடித்துக் கொண்டவளைப் பார்த்து,

 

“உனக்கு பொறாமை போடி. என் வர்ஷு என் கூட ரகசியம் பேசுவாரு கொஞ்சுவாரு. நீ சும்மா பொங்காத” என்று முறைத்தாள் ஷாலு.

 

“ஒகே கியூட்டிகா! நம்ம டான்ஸ் ஆடலாமா?” சட்டென சரண்டர் ஆனாள் வர்ஷனின் புத்திரி.

 

“டான்ஸ் ஆட மட்டும் அக்கான்னு பாசமா கூப்பிடுறல்ல. ஆனாலும் நீ நெஜமாவே அராத்து தான் ஆரு” அவளைக் கொஞ்சினாள் பெரியவள்.

 

“என்னையும் கொஞ்சுங்க. நான் உங்களை எப்போவும் அக்கானு தானே கூப்பிடுவேன்” என்ற ஆதியைப் பார்த்து, பழிப்புக் காட்டின சிரித்தாள் தங்கை.

 

அவள் ஆரு! உதய், நிலாவின் குட்டி தேவதை, சஷி ஆராத்யா!

 

உதய் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலை ஒலிக்க விட மூவரும் சேர்ந்து ஆட, “நீங்களும் வாங்க டாடி” என உதைய்யை இழுத்தனர் மகவுகள்.

 

அவர்களின் ஆசைப்படி அவனும் இணைந்து நடனமாட திடீரென நின்றது பாடல். “ஓ! கரண்ட் போச்சா?” தலையில் கை வைத்து வாண்டுகள் இரண்டும் திரும்ப,

 

“உன் அத்து ருத்ர தாண்டவம் ஆட வந்துட்டா டா” ஷாலுவின் காதில் கிசு கிசுத்தவாறு இளித்துக் கொண்டு திரும்பினான் உதய்.

 

அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் இடுப்பில் கை குற்றி வேக மூச்சுகளை வாங்கியவாறு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள் அதிய நிலா.

 

“ஹி ஹி. மம்மி நீங்களா?” ஆருவும் தந்தையைப் போல் இளித்து வைக்க,

 

“குத்தாட்டம் போட்டுட்டு இப்போ திருட்டுப் பூனைங்க மாதிரி பல்லைப் பல்லைக் காட்டுங்க” என்றவள் தன்னவனிடம் திரும்பி,

 

“உதய்! நீ வர வர சின்னப் பிள்ளையாகிட்டு வரடா. உனக்கென்ன குட்டிப் பாப்பானு நினைப்பா?” முறைப்பை அள்ளி வீசினாள் வஞ்சி.

 

“நீங்க இப்படி டீச்சரம்மா மாதிரி திட்டுவதை பார்த்தால் எல்லோரும் என்ன குட்டிப் பையன்னு தான் நினைப்பாங்க” என்று அவன் பாவமாக சொல்ல, “ஆமா ஆமா” ஆமா சாமி போட்டு ஒத்து ஊதினர் மூன்று சிட்டுக்களும்.

 

“அவனுக்கு மட்டும் சப்போர்ட் பண்ண வந்துருங்க எல்லாம்”

 

“யார் இல்லை என்றாலும் நான் உங்களுக்குத் தான் அதிம்மா எப்போவுமே சப்போர்ட்” அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் கணவன்.

 

“வர்ஷு சப்போர்டுனா நானும் சப்போர்ட்” என அவனது கையைப் பிடித்தால் ஷாலு.

 

“கியூட்டிக்கா சப்போர்ட்னா நானும் தான்” ஷாலினியின் கையைப் பிடித்தாள் ஆராத்யா.

 

“ஆரு சப்போர்ட்னா நானும் சப்போர்ட் மம்மி” ஆருவின் தோளில் கை வைத்தான் ஆதித்யா.

 

“சரிடா சரி. எல்லோருமே சப்போர்ட் பண்ணுங்க” தலையில் கை வைத்தாள் அதி.

 

“கூல் பெண்டா பேபி! இப்படியே நீங்களும் வாங்க ஒரு ஆட்டம் போடலாம்” அதியின் கையைப் பிடித்து இழுத்தான் உதய்.

 

அவன் முகம் பார்த்தவளுக்கு தன்னையும் மீறி சிரிப்பு வர, “உன் மேல கோபத்தை ஒரு நிமிஷம் கூட இழுத்துப் பிடித்து வைக்க முடியல டா மாயக்காரா” மென்மையாகப் புன்னகைத்தாள் அவனவள்.

 

ஷாலு சென்று பாட்டை போட ஐவரும் மகிழ்வுடன் நடனம் ஆடினர். இப்படித்தான் தினமும் இவர்களது வாழ்வு சேட்டைகளும் செல்ல சண்டைகளும், குறைவில்லாத சந்தோசமாக செல்கின்றது.

 

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் பழமொழி கூட உதய்யின் விடயத்தில் பொய்யாகியது.

 

நாளுக்கு நாள் குறைவில்லாத அன்பைத் தன் குடும்பத்துக்கு அள்ளி அள்ளி வழங்கினான் இந்த அதிசய வர்ஷன். சிறு வயது முதல் அதியா கிடைக்கும் வரை அவன் தனக்குக் கிடைக்க வேண்டுமென ஆசைப்பட்ட, கிடைக்காதா என ஏங்கிய அத்தனை பாசத்தையும் தன் குழந்தைகளுக்கு வாரி வாரி வழங்கினான்.

 

ஆடி முடித்து அப்படியே அமர்ந்து விட ஜூஸ் வந்து கொடுத்தாள் அதி. “யஷு! இன்னைக்கு நாம எங்கேயோ போகணும்னு சொன்னல்ல”

 

“எஸ்! நாம சென்னைக்குப் போகப் போறோம்” என்று அவன் சொல்ல, சிறுவர்கள் குதூகலிக்க “வாட் சென்னையா?” அதிர்ச்சியுடன் நின்றாள் அதிய மங்கை.

 

சென்னை! அவள் பிறந்த இடம்! தன் பெற்றோருடன், குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ்ந்த இடம்! சித்தப்பாவால் மனமே இன்றிப் பிரிந்து வந்த இடம்! இனிமேல் செல்லவே கூடாது என்று நினைத்த இடம்!

 

“ஆமா சென்னை தான். பிரகாஷ் வர சொல்லி கட்டாயப்படுத்துறான். நானும் முடியாதுன்னு தள்ளிப் போட்டுட்டே வந்தேன். இதுக்கு மேல மறுக்கிறது சரியில்லை. அதான் இன்னைக்கு ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்தா அவனுக்கும் திருப்தியா இருக்கும் இல்லையா?” என்று அவன் எடுத்துச் சொல்ல அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

 

“இருந்தாலும் வர்ஷு இன்னைக்கே போகனுமா? இப்போ வேற நைட்டாக போகிறது. நாளைக்கு அத்து பர்த்டே. இங்கே இருந்து அதை செலிப்ரேட் பண்ணிட்டு அடுத்த நாளைக்கு போகலாமே” உதய்யின் முகத்தை அண்ணாந்து நோக்கினாள் ஷாலு.

 

“இல்ல செல்லம். நான் பிரகாஷ் கிட்ட வரேன்னு சொல்லிட்டேன். இப்போவே கிளம்பினா தான் மார்னிங் அங்கே ரீச் ஆகலாம்” என்றவனுக்கு அதியின் முகத்தில் இருந்த விருப்பமின்மை புரியத்தான் செய்தது.

 

‘அங்கே போனால் எனக்கு அப்பாம்மா ஞாபகம் வரும். எங்க வீட்டில் வேற யாரோ இருக்கிறதை பார்த்தால் என்னால தாங்கிக்க முடியாது. ஆனாலும் உனக்காக வரேன் டா. எனக்காக என்னெல்லாமோ பண்ணியிருக்க. உனக்காக நான் இதைக்கூட பண்ண மாட்டேனா?’ மனதினுள் பேசியவள் ரெடியாக சென்றாள்.

 

ஏற்கனவே உதய் கூறியபடி டிராவலிங் பேக்கில் அனைவருக்குமான உடைகளை அவனோடு சேர்ந்து மடித்து வைத்திருந்தாள். அனைவரும் ஆயத்தமாக உதய் காரை எடுத்து வர பயணமும் ஆரம்பமாகியது.

 

தன் தோளில் சாய்ந்திருந்த மகனைப் பார்த்தாள் பெண். அப்படியே தந்தையை உரித்து வைத்திருப்பவனைக் காணும் போது பாசம் பெருகியது.

 

மகளுக்கு அவளிடம் பெயர் தெரிவு செய்யுமாறு கூறிவிட்டு மகனுக்கு அவன் தெரிவு செய்வதாகக் கூறி ‘ஆதித்ய ராவ்’ என்று தன் உயிர்த் தந்தையின் பெயரையும் சேர்த்து வைத்தவன் அவள் மனதில் மேலும் ஆழமாய்த் தடம் பதித்தான்.

 

ஷாலுவுடன் கதையளந்து கொண்டு வருபவனை ஏறிட்டாள் அவள். தன் குழந்தைகளை விட ஷாலுவுடன் தான் அவ்வளவு பிரியமாக இருக்கிறான்.

 

பாவையவளின் மனதில் இன்று காலையில் நிகழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆதியும் ஆருவும் நர்சரி சென்றிருக்க அதியிடம் வந்து, “நாளைக்கு உங்க பர்த்டேக்கு டிரஸ் எடுக்கணும்னு கியூட்டி சொல்லுறா. போய் வாங்கிட்டு வாங்க. நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரேன்” என விடை பெற்றான் கணவன்.

 

அதியும் ஷாலுவுடன் ஸ்கூட்டியில் பக்கத்தில் இருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றான். அங்கிருந்த உடைகள் பிடிக்காமல் போய்விடவே, “அத்து! நாம அங்கிளை ஃபர்ஸ்ட் மீட் பண்ண ஷாப்பிங் மாலுக்கு போகலாமா? அங்கே போய் டிரெஸ் இருக்கான்னு பார்க்கலாம்” என்றாள் ஷாலு.

 

தலையசைத்து விட்டு பைக்கை செலுத்தியவளுக்கு மனதில் ஏதோவொரு உணர்வு. சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு இதே ஷாப்பிங் மாலில் தான் உதய்யை சந்தித்தாள். அவள் வாழ்வில் நுழைந்து புது அத்தியாயத்தை திறந்து வைத்தான்.

 

அன்று பெண்டாவாக அவன் இருந்த இடத்தை நோக்கினாள்.

 

மனதில் ஒரு வித வெறுமை. இன்றும் அவன் வந்து விடமாட்டானா என்று!

 

அதே நினைவுகளுடன் உள்ளே நுழைந்தாள். ஷாலுவுக்கு உடை எடுத்தவள் அவளது ஆசைப்படி தனக்கும் எடுக்க சென்றாள். ஒன்று கூட அவளுக்குப் பிடித்தது போல் இல்லை.

 

“பாப்பா எதுவும் சரி வரலை. போகலாமா?” எனும் போதே அவளை நோக்கி நீண்டது ஒரு கரம். அக்கையில் பிளாக் அண்ட் வைட் சுடிதார் ஒன்று இருந்தது.

 

அதில் கண்கள் பளிச்சிட நிமிர பெண்டா உடை அணிந்த ஒருவர். இது உதய்யாக இருக்குமோ என மனம் அடித்துக் கொண்டது.

 

இருந்தாலும் அவ்வாறு தோன்றவில்லை. ஷாலுவிடம் திரும்ப, “இது வர்ஷுவா இருக்குமா அத்துக் குட்டி?” எனக் கேட்டாள் அவள்.

 

“இல்லைனு நினைக்கிறேன் டா” தலையை இடம்வலமாக ஆட்டியவள் மறுபுறம் திரும்ப அங்கு பெண்டா இல்லை. மறுபடியும் முகம் வாட ஷாலுவின் உடையை மட்டும் பில் போட்டு எடுத்துச் செல்ல வெளியில் நின்றது ஒரு பெண்டா.

 

அழகான சாரல் காற்று அவள் மேனியில் மோத இதயமும் பந்தயக் குதிரையாய் தடதடக்க சுற்றம் மறந்து ஓடிச் சென்று அதனை அணைத்தாள் இம்முறை யாரென்று உணர்ந்து.

 

“பெண்டா பேபி” அதே அன்மான அழைப்பு இன்றும் செவியோரம்.

 

“ம்ம் கண்ணாஹ்!” உணர்ச்சி மிக்க அழைப்புடன் விலகினாள். ஒரு கையால் முகமூடியைக் கழற்றி, “எப்படியோ கண்டுபிடிச்சிட்டீங்க?”  ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான் உதய வர்ஷன்.

 

“உன்னைக் கண்டுபிடிக்காமல் இருப்பாளா உன் நிலா?” அவனைப் போன்று புருவத்தை உயர்த்தினாள்.

 

“அதிய நிலா…!!” என அவன் அழைக்க,

 

“நாட் அதியநிலா. ஐ அம் யூர் இதய நிலா!” செல்லக் கோபத்துடன் முறைத்தாள்.

 

“பாலைவனமாய் இருந்த என் வாழ்வில் வசந்தம் வீசிடவே எனை அணைத்தாயடி செங்காந்தள் நிலவே…!!” தலை சாய்த்துக் கவி பாடினான் ஆடவன்.

 

“வர்ஷு! எனக்கு அப்படியே ஆறு வருஷத்துக்கு முன்னால போயிட்ட மாதிரி பீல். இப்படித்தான் நீ எங்க முன்னாடி வந்த. இதே மாதிரி ப்பாஹ் சூப்பர்! இதே நாள்ல இதே இடத்தில் இதே மாதிரி பெண்டா ட்ரெஸ் போட்டு இதே மாதிரி அத்து உன்னை ஹக் பண்ணா” ஷாலு உதய்யின் கையைப் பிடிக்க,

 

“எல்லாம் அந்த கடவுளோட வேலைடா” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான் அவன்.

 

இருவரும் வீடு சென்றிட ஷாலுவுக்கு எடுத்த உடையை வெளியில் எடுக்க கடையில் பார்த்த சுடிதார் உள்ளே இருந்தது. இது உதய்யின் வேலை தான் என்பதும் புரிந்தது.

 

மதியம் வீட்டுக்கு வந்த உதய்யிடம், “டேய்…! நீ தான் இதை வெச்சியா?” என்று கேட்டாள்.

 

“ஆமா. ஹாஸ்பிடல் விட்டு வரும்போது கிட்ஸ் கமிட்டியில் இருந்து கால் வந்தது ஷாப்பிங் மால் வர சொல்லி. அங்க உங்களைக் கண்டது அதிர்ச்சியா இருந்தது. அப்புறம் லீலா கிட்ட இந்த டிரஸ்சை கொடுத்து அனுப்பினேன். அவளை நான்னு நினைத்து விடுவீங்களோனு அப்போது தான் தோணுச்சு.ஆனாலும் என்னை கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க”

 

“நீ எப்படி இருந்தாலும் என்னால உன்னைக் கண்டுபிடிக்க முடியும். அதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமா இருக்கு” வியந்து கூறினாள் நிலா.

 

“பெண்டா! என் லைஃப்ல அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த ஒரு அம்சம். நான் மட்டும் அன்னிக்கு அந்த டிரஸ் போடலைனா நீங்க என்னை ஹக் பண்ணிருக்க மாட்டீங்க. நானும் உங்களை கண்டிருக்க மாட்டேன். என் கவனம் உங்க பக்கம் திரும்பி இருக்காது. நான் உங்களை காதலிச்சு இருக்க மாட்டேன். நீங்க இப்போ என் கிட்ட இருந்திருக்கவும் மாட்டீங்க. நீங்க என் லைஃப்லையே வந்து இப்படி ஒரு அழகான உறவுகளும் கிடைச்சி இருக்காதே” அவனைக் காதல் பொங்கும் நயனங்களால் ஏறிட்டவனின் பேச்சில் தன்வசம் இழந்தாள் இதயா.

 

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைக் கலைத்தது ஆருவின் “மம்மி” எனும் குரல்.

 

“ஆங் சொல்லுடா” என அவள் பக்கம் திரும்ப, “என்ன யோசனை? எத்தனை தடவை கூப்பிடுறது” என்று வினவினாள் மகள்.

 

“அ….அது” என அவள் தடுமாற, “வேற என்ன யோசனை ஆரு? அவங்க ஹஸ்பண்ட்டை பத்தி நினைச்சுட்டு வந்து இருப்பாங்க. இல்லனா அவங்க முகத்தில் டார்ச் லைட் அடிக்குமா?” நமட்டுச் சிரிப்புடன் தங்கையிடம் சொன்னான் ஆதி.

 

ஷாலு சிரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க யன்னல் புறம் பார்வையை செலுத்திய மனைவியைக் கண்ணாடி வழியாக ரசித்தான் அவளின் கண்ணாளன். பல மணி நேரங்களில் சென்னையை அடைந்திட தங்கி விட்டு செல்லலாம் என்று ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தான் உதய்.

 

சென்ற கலப்பில் சிறுசுகளும் உதய்யும் உறங்கி விட அதிக்குத் தான் உறக்கும் தொலை தூரம் சென்றது.

 

‘பிரகாஷ் வீட்டுக்கு போக போறோம். திரும்ப இங்க வருவேன்னு நினைக்கவே இல்லை. சித்தப்பாவை பார்த்த நான் எப்படி ரியாக்ட் பண்ணுறது? என்னால அவர் கூட சகஜமா பேச முடியுமா?’ என்ற கேள்வி பூதாகரமாக தோன்றியது.

 

“அப்பா! நம்ம சந்தோஷமா வாழ்ந்த வீட்டை சித்தப்பா யாருக்கோ வித்துட்டாருன்னு கேள்விப்பட்டேன். அங்க வேற யாரோ உரிமையா வாழுறதைப் பார்த்தால் கஷ்டமா இருக்கும். உதய்க்காக வந்தேன். ஆனாலும் ஒரு மாதிரி இருக்கு’ அப்பாவிடம் மனசீகமாக உரையாடியவள் தூக்கமின்றித் தான் தவித்தாள்.

 

காலை மீண்டும் இவர்களது பயணம் ஆரம்பமானது. தன்னவன் கொடுத்த உடையை அணிந்திருந்தாள் அதி. அவளுக்கு மட்டுமல்ல ஷாலு, ஆரு, ஆதி என மூவருக்கும் கருப்பும் வெள்ளையும் கலந்த உடையை அணிவித்திருந்தான். அவனும் கூட கருப்பு பேண்டும் பிளெக் அண்ட் வைட் டிசர்ட்டும் அணிந்திருந்தான்.

 

காரில் வரும் போது அதிக்கு தூக்கம் வர சீட்டில் சாய்ந்து கொண்டாள். வீடு வந்ததும் அனைவரும் இறங்க அதியைப் பார்க்க அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

புன் சிரிப்புடன் இறங்கி, “இது குட்டி!” என கன்னம் தட்ட, “தூக்கமா வருது வர்ஷு” அவனது கையைப் பிடித்துக் கொண்டு மறுபக்கம் திரும்பினாள்.

 

“டேய்! வீடு வந்துருச்சு இறங்குங்க” என்று தட்டவே பட்டென கண் திறந்தாள். எழுந்தவளின் கண்களைப் பின்னால் இருந்து தன் கைகளால் மூடினான் அவன்.

 

“என்னடா பண்ணுற?” என்று கேட்க, “வெயிட் பண்ணுங்க. அப்படியே வாங்க” என கேட்டைத் திறந்து அழைத்துச் சென்றான்.

 

அவன் கண்களைக் காட்ட சிட்டுக்கள் மூன்றும் ஹாப்பி பர்த்டே டூ யூ பாட்டுப் பாடி முடித்ததுமே, “சர்ப்ரைஸ் டு யூ மை பர்த்டே கேர்ள்” என்று கைகளை விளக்கினான் வேங்கை.

 

மெல்ல இமை பிரித்தவளுக்கு எல்லாம் மங்கலாகத் தோன்ற மீண்டும் கண்களை மூடித் திறந்தாள். தன் முன்னால் இருப்பதை கண்டு இன்பமாய் அதிர்ந்து போனாள் அதியமங்கை.

 

அவளது வீடு! அவள் பிறந்து வளர்ந்த இடம்! பார்க்க அப்படியே அவள் வாழ்ந்த நேரத்தில் இருந்தது போன்று காட்சியளித்தது.

 

“யஷு எங்க வீடு” அவன் கையைப் பிடித்தாள்.

 

“யாஹ்! இனிமேல் இது நம்ம வீடு” என்றிட வீட்டின் முன் இருந்த பெயர்ப் பதாகையை பார்த்தாள்.

 

‘அதிய ராகவன் இல்லம்’ என்றிருந்தது. வாயில் கை வைத்து அதிசயத்தாள் அவள்.

 

“வாங்க உள்ளே போகலாம்” என அவளது கையைப் பிடித்து ஒன்றாக உள்ளே நுழைந்தான் வர்ஷன். அனைவரும் வீட்டை சுத்தி பார்க்க ஆரம்பிக்க வீடு, சமையலறை, தோட்டம், அறைகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்து பூரித்தாள் அதி.

 

ஹால் சுவரில் அவளது சிறு வயது போட்டோ. ராகவனின் போட்டோ அவளது குடும்ப போட்டோ என அழகாக மாட்டப்பட்டிருந்தது. அவளது அறைக்கு ஓடினாள். அவள் இருந்த இடம்! இங்கு மீண்டும் வருவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

 

கண்களில் ஆனந்த கண்ணீரே வந்தது. உதய்யைத் தேடிச் சென்றாள்.

 

சமையல் அறையில் குழந்தைகளுடன் இருப்பவனை ஓடிச் சென்று அணைத்திடத் தான் பரபரத்தது அவள் மனம்.

 

“என்ன பண்ணுற? ஏதாவது வேணும்னா சொல்லு நானே செஞ்சு தரேன்” என்று கேட்டாள் காரிகை.

 

“இன்னைக்கு நான் தான் பண்ணுவேன். நீங்க சும்மா கையைக் கட்டி வேடிக்கை மட்டும் பாருங்க ராணிமா” என்று கைகளை மார்புக்கு மேலாகக் கட்டி பவ்யமாகக் கூறியவனின் பாவணையில் சிரித்தாள் அவள்.

 

“மம்மியை சும்மா இருக்க சொல்லிட்டு எங்களுக்கு மட்டும் வேலை தரீங்களே டாடி. இது உங்களுக்கே நியாயமா?” என்று கேட்டால் ஆரு.

 

“அவங்க பர்த்டே கேர்ள் தானே ஆருமா. அதான் அப்படி” தங்கையிடம் சொன்னான் ஆதித்யா.

 

“பர்த்டே இல்லன்னா மட்டும் உன் மம்மி வேலை செஞ்சு கிழிச்சிருவா பாரு” நொடித்துக் கொண்டாள் அவள்.

 

“ஏய் அறுந்த வாலு. சும்மா இரு டி” என அவளது காதைத் திருகினான் அண்ணன்காரன்.

 

“கியூட்டிகா இவனைப் பாருங்க” ஷாலுவிடம் குற்றப் பத்திரிகை வாசிக்கலானாள் ஆராத்யா.

 

“அவன் சரியாத்தான் பண்ணி இருக்கான். உன் வாய்க்கு வர்ஷு கிட்ட சொல்லி ஊசி போடணும். அந்த அளவுக்கு வாய்” என்றாள் ஷாலு.

 

“இந்த வாயெல்லாம் அந்த மகராசன் பார்த்து வந்தது தான் பாப்ஸ்” ஷாலினியிடம் உதய்யைக் கண் காட்டிக் கூறினாள் அத்து.

 

இப்படியே ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு நேரங்கள் நகர்ந்தன. “நாங்க விளையாட போறோம்” என்ற ஷாலு இரண்டு வாண்டுகளையும் அழைத்துச் சென்று விட அதியும் உதய்யும் மட்டுமே இருந்தனர்.

 

“கேக் வேணும்னா கடையில ஆர்டர் பண்ணிக்கலாமே. எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யுற டா?” அவன் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் தன் துப்பட்டாவால் துடைத்து விட்டாள் அதியா.

 

“கஷ்டமெல்லாம் எதுவுமில்லை. கடைக்காரன் எப்படி செஞ்சாலும் அது நாம செய்யுற மாதிரி வருமா? நான் இந்த திங்ஸ்சை மட்டும் அல்ல இந்த ஹார்ட்டில் இருந்து அன்பையும் அள்ளிப் போட்டு செய்கிறேன். அதனால் கேக் புது மாதிரி டேஸ்டா இருக்கும் பாருங்களேன்” இதயத்தை தொட்டுக் காட்டி சொன்னான் இதழ் கடித்து.

 

“இந்த பேச்சு மட்டும் குறையாதுடா உன்கிட்ட” அவன் மீசையைப் பிடித்து இழுத்து விட்டாள் மாது.

 

“எப்படி டா இந்த வீடு? வாங்கினியா”

 

“ஆமா. பிரகாஷ் தான் ரொம்ப ஹெல்ப் பண்ணான். உங்க சித்தப்பா வேற யாருக்கோ இதை விற்று இருந்தாரு. நாலு வருஷம் அக்ரீமெண்ட் போட்டதால போன மாசம் தான் முடிந்தது. பிரகாஷ் கிட்ட உங்க வீடு எப்படி இருந்தது என்று கேட்டு அது மாதிரி பெயிண்ட் பண்ணி பக்கவா ரெடி பண்ணிட்டேன். இனிமேல் இது உங்க வீடு!

 

இந்த வீட்டோட இளவரசியா உங்க அப்பாம்மா கூட வாழ்ந்தீங்க. இப்போ இந்த வீட்டு மகாராணியா குழந்தைகள் கூட வாழ போறீங்க. இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருக்கலாம்” என்று கூறியவனை இமைக்காமல் பார்த்தாள் பாவை.

 

தனக்காக அவன் செய்யும் அனைத்திற்கும் ஈடாக வேறு எதனையும் கொடுத்திட முடியாது. அவன் மீது மென்மேலும் காதல் பல்கிப் பெருகியது மெல்லியவள் இதயத்தில்.

 

“என் பர்த்டேக்கு நீ கொடுத்த கிப்ட் மிகவும் பெரியது. இதை கிப்ட் என்று சொல்ல முடியாது. இது சாதாரண வீடு இல்லடா எனக்கு! என் அப்பாம்மா கூட வாழ்ந்த நினைவுகள் நிறைந்திருக்கும் பொக்கிஷம். அவங்க பேச்சும், சிரிப்பு சத்தமும், அதி நிலா குட்டினு என்னைக் கூப்பிடுற அழைப்புகளும் கேட்டுட்டே இருக்கு எனக்குள்ள.

 

எவ்வளவு விலை கொடுத்தாலும் எனக்கு கிடைத்த இந்த சந்தோஷத்துக்கு ஈடாகாதுடா” தன்னவனை அன்பு நிறைய நோக்கினாள்.

 

கேக் செய்து முடித்துவிடவே சிட்டுக்களும் வந்துவிட அதி வெட்டி உதய்க்கு ஊட்டி விட்டாள். இவ்வாறு செல்ல சண்டைகளோடு பாதி கேக் வாயில் மீதி முகத்தில் என்று சாப்பிட்டு முடித்து விட்டு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் போட சொன்னான் ஆதி.

 

உதய்யும் போட்டு விட்டு அமர, ஷாலு அவனது வலது பக்கமாக அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள். மறுபக்கத்தில் ஆதி சாய்ந்து கொள்ள அவன் மடிமீது அமர்ந்து மார்பில் வாகாக தலை சாய்த்தால் சஷி.

 

ஸ்னாக்ஸ் எடுத்து வந்த அதி அவளுக்கு உட்கார இடம் தேட அதைப் புரிந்து கொண்டவனோ மகனைப் பார்க்க அவன் எழுந்து உதய்யின் கழுத்தில் ஏறி அமர்ந்தான். அவன் இருந்த இடத்தில் அமர்ந்து தன் மன்னவன் தோளில் தலை சாயத்தாள் அதிய நிலா.

 

அங்கு டிவியில் சென்ற டாம் அண்ட் ஜெர்ரிக்கு மேலாக ஆருவும் ஆதியும் சண்டையிட்டுக் கொண்டு ஸ்னாக்ஸைக் கொறித்தது வேறு கதை.

 

இரவு உணவு முடித்து குழந்தைகள் மூவரும் உறங்கிவிட “உதய்! மேலே என் ஸ்டடி ரூம் இருக்கு. போய் பார்க்கலாமா? அங்கே தான் நான் நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவேன். நாவல் வாசிப்பேன், பேப்பர் எடுத்து ஏதாவது கிறுக்கிட்டு இருப்பேன்” என்று கூறினாள்.

 

“நாலைஞ்சு நாவல் என்கிட்ட இருந்துச்சு. அதைக் கூட எடுக்காம மறந்து விட்டு வந்துட்டேன் டா. ஒரு நாளைக்கு புக் ஷாப் போய் வாங்கணும்” என்று கொண்டு படியில் ஏற,

 

“ஓகே வாங்கிட்டா போச்சு” என அவனும் சென்றான்.

 

மூடிய கதவைத் திறந்தவளின் விழிகள் சாஸர் போல் விரிந்தன. அவளுக்குப் பிடித்த இளநீல வர்ணத்தில் பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. சுவரில் ஸ்டிக்கர்ஸோடு அதியா கன்னத்தில் கை வைத்து புத்தகம் படிப்பது போன்ற போட்டோவும் மாட்டபட்டிருந்தது.

 

“இது எப்போ எடுத்தே?”

 

“நான் தந்த நாவலை வாசித்ததை கியூட்டி கிட்ட சொல்லி எடுத்தேன்” என தோளைக் குலுக்கினான் அவன்.

 

அதியை விட உயர்ந்த புத்தக இறாக்கை இருக்க அதன் அருகில் சென்றாள். புதிய புத்தகங்களை கையில் எடுக்க அனைத்தும் நாவல்கள்!

 

“உதி! இது புதுசா வெளியான நாவல். வாவ் இதை நான் வாசிக்கணும்னு ஆசையோடு இருந்தேன்” ஒவ்வொன்றாக எடுத்து பூரித்துப் போனாள் சிறுமையாக.

 

நமக்குப் பிடித்த விடயங்கள் எதிர்பாராமல் அளவின்றிக் கிடைக்கும் போது நாம் அறியாமலே குழந்தையாகி அதில் லயித்து விடுகின்றோம். அப்படி ஒரு நிலையில்தான் நம் நாயகியும் இருந்தாள்.

 

அவள் முகத்தில் ஜொலித்த மகிழ்ச்சியை மனம் நிறையப் பார்த்திருந்தான் அவளது மணாளன்.

 

“நீ எனக்காக ஒவ்வொன்னையும் பண்ணி என்னை பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத கடனாளியா ஆக்கிடுறியே. உனக்கு நான் என்னதான் செய்யுறது?” அவனது வேல் விழிகளோடு தன் மான் விழிகளை உறவாட விட்டாள்.

 

“நான் பண்ணுறது எல்லாம் அன்பினால். அன்புக்கு விலை என்றும் அன்புதான். சோ உங்க அன்பு ஒன்றை எனக்குக் கைமாறா தந்தால் போதும் கண்ணம்மா” அவள் கன்னங்களைப் பிடித்து ஆட்டினான் ஆடவன்.

 

உதய் சென்று விட  அவன் தந்த ஒரு நாவலைப் படிக்கத் தொடங்கி விட்டாள். ஆரம்பித்தால் முடிக்கவும் மனம் வருமோ? ஆனால் உதய்யைப் பற்றி நினைத்து அதை மூடிவிட்டு அவனைத் தேடிச் சென்றாள்.

 

மூன்றாவது மாடியில் தோட்டம் போல் அமைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு பிடித்த இடம் அது. நடுவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் கணவன்.

 

அவனை இடித்துக் கொண்டு அமர்ந்து தோளில் தலை வைத்தாள். “அதி!இன்னும் தூங்கலையா டயர்டா இருக்கும் இல்ல?” அன்போடு கேட்டான் அவன்.

 

“மனசு நிறைஞ்சு இருக்கும் போது எனக்கு தூக்கம் வராது. இன்னைக்கு என் மனசு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. சொல்ல வார்த்தையே இல்லை. இங்கே வந்ததில் என் அப்பாம்மாவே கூட இருக்கிற மாதிரி உணர்றேன். இப்போவும் எனக்கு உன்னை பார்த்த அதிசயமா இருக்கு இப்படியும் ஒருத்தனால தன் குடும்பத்தை மனைவியை பார்த்துக்க முடியுமான்னு?

 

கதைகளை கற்பனை என்று சொல்வார்கள். ஆனால் அந்த நாவல்களில் கூட உன்னை மாதிரி ஒரு ஹீரோவை நான் பார்த்ததில்லை. ஹீரோ, ஏஞ்சல், மேஜிக் எல்லாத்தையும் தாண்டி நிற்கும் ஒருத்தன் என் வர்ஷு.

 

ரெண்டு வருஷமா உறவுகளை இழந்து, மகிழ்ச்சியை தொலைச்சு, வாழ்க்கையை ஏனோ தானோனு வாழ்ந்தேன். என்னை அடைத்து வைத்திருந்த கண்ணீர்ச் சிறையில் இருந்து இந்த கைதியை அன்பால் மீட்டெடுத்த புன்னகை அரசன் நீ! இப்போ மட்டுமல்ல எப்போவும் உன் புன்னகைக்கு அடிமையாக வாழ ஆசைப்படுறேன்” அவன் விரல்களோடு தன் வெண்டை விரல்களை இறுக்கமாகக் கோர்த்தாள்.

 

“நீங்க புன்னகை தேசத்தின் அடிமையாக வாழனும்னு நான் விரும்பல. புன்னகை தேசத்தின் ராணியா சந்தோஷம் மட்டுமே நிறைய நீங்க வாழனும். நான் உங்களை வாழ வச்சு பாக்கணும்.

 

தன்னந்தனியா இருந்த எனக்கு அதி, ஷாலு, ஆதி, ஆரு அப்படினு நாலு குழந்தைங்க. இப்போவே என் உயிர் பிரிஞ்சாலும் எனக்கு சந்தோஷம் தான்” என்றவனின் வாயைத் தன் கரம் கொண்டு மூடினாள் உதய்யின் மனையாட்டி.

 

“என்ன பேச்சு இது? இப்படி எல்லாம் பேசாத. இது போதாது டா. இன்னும் ஒரு உறவும் உனக்காக காத்திட்டு இருக்கு” என்றவள் அவனது கையைத் தன் வயிற்றில் வைத்து, “உனக்கு நான்கு இல்லை இனிமேல் ஐந்து குழந்தைங்க. ஆமா யஷு நம்ம பேபி என் வயிற்றில் இருக்கு” என்றாள்.

 

ஆனந்தத்தில் கண்கள் கலங்க நின்றான் அவன். வாயில் வார்த்தைகள் வர மறுத்தன. “அதிம்மா! என்னால நம்ப முடியல. நமக்கு ஒரு பேபி. தேங்க்யூ. தேங்க்யூ சோ மச்” அவளது ரோஜாக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் அவன்.

 

அதியா உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் ஏதோ எடுத்து வர அதைக் கண்டவனோ, “ஹய் குலாப் ஜாமூன்” என குஷியானான் அவன்.

 

“ம்ம் உனக்காக பண்ணது கண்ணா. ஆ காட்டு” என அவனுக்கு ஊட்டி விட்டாள் அதி.

 

“நான் கேட்டப்போ முதல் தடவையும் எனக்கும் இதே போல் ஊட்டி விட்டீங்க” அன்றைய நினைவின் தாக்கத்தை இன்னும் மறவாதவனாக உரைத்தான்.

 

“ஆனால் அப்போ நீ என் மனசுல கொஞ்சம் தான் இருந்தே. இப்போ முழுசா இருக்கே. அப்போ விட இன்னிக்கு எக்கச்சக்க காதல் உன் மேல. அதான் டிஃப்ரண்ட்”

 

“பட்! எனக்கு ஒன்னும் டேஸ்ட்ல வித்தியாசம் தெரியல. அப்போவே உங்க மனசுல நான் முழுசா வந்துட்டேன். நீங்க தான் உணரலை” என்று சொன்னவன் குறும்புடன் அவளது விரலைக் கடித்து வைத்தான்.

 

“ஸ்ஸ் டேய்” என அவள் முகம் சுருக்க, “ஒன்னும் பண்ணாதீங்க. நானே மருந்து போடுறேன்” என்றவன் கடித்த இடத்தில் குட்டி குட்டி முத்தங்கள் வைத்தான்.

 

“இதய நிலா…!!”

 

“எஸ்! உன்னோட இதய நிலா தான். சொல்லு”

 

“உங்களுக்கு என்னை ஏன் பிடிச்சுது?” பதிலறிய ஆவலுடன் அவள் முகம் பார்த்தான் ஆணவன்.

 

“இந்த ஓயாத பேச்சு, இந்த இதயத்தில் இருக்கும் அளவில்லாத அன்பு, உன் இதழ்களில் இருக்கும் அழியாத புன்னகை, உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு கொடுக்கிற குறைவில்லாத சந்தோஷமும் தான் காரணம்.

 

இதுக்கு மேல சொல்லத் தெரியல. நான் உன்னை மாதிரி பெரிய பேச்சாளர் எல்லாம் இல்லை டாக்டரே. எவ்ளோ பிடிக்கும்னு சொல்ல முடியாத அளவுக்கு உன்னை பிடிக்கும்” அவன் மார்பில் முகம் புதைத்தாள் பாவையவள்.

 

“நான் உனக்கு யார் யஷு?”  இத்தனை நாளாகக் கேட்க நினைத்த கேள்வியை கேட்டாள் அதி.

 

“என்னை வாழ வைக்கும் ஜீவன்! எனக்குள் உயிரூட்டும் உணர்வு! எனக்காக துடிக்கும் இதயம்! இருபது வருஷத்துக்கு மேல பாசமே கிடைக்காதானு ஏங்கின இந்த அநாதை வர்ஷனுக்கு அன்பை அள்ளித் தரவந்த ஒளிப் பிரவாகம்!

 

இந்த உதய வர்ஷனை ஒளிர வைத்த இதய நிலவு! மொத்தத்தில் இதய வானில் உதய நிலவு நீ தான் அதிய நிலா” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான் உதய வர்ஷன்.

 

அவன் கூறியதில் உருகி, “இப்போதும் என்னை மயக்குற டா என் அழகான மாயக்காரா” அவனது புன்னகையை பார்த்து சிலிர்ப்புடன் சிரித்தாள் இருள் சூழ்ந்த ஆடவனின் இதய வானை விமர்சிக்க வைத்த உதய நிலவானவள்!

 

வானத்தில் வழக்கமாக சூரியனும் நிலவும் ஒன்றாக இருக்காது அல்லவா? இங்கே இயற்கை நியதிக்கு மாற்றமாக காதல் வானில் அதிய நிலவும், உதய சூரியனும் ஒன்றாக சங்கமித்திட, இனி அந்த இதய ஜோடிகளின் வாழ்வில் ஆனந்தத்திற்குக் குறைவேது….? இனி எல்லாம் வசந்தமே…!! எங்கும் ஒளி வெள்ளமே…!!

 

♡ அறியாமல் அணைத்து அதிரடியாய் நுழைந்தாய்….

தனிமை போக்கி ஏக்கமும் தீர்த்தாய்….

வெறுமை நீக்கி கரம் கோர்த்தாய்….

புது வசந்தம் சேர்த்தாய் செந்நிலவே….!! ♡

 

♡ போலிப் புன்னகைக்கு உயிரூட்ட….

பாசமாய் மடியினில் தாலாட்ட….

வானவில் வண்ணங்கள் மனதினில் காட்ட….

என்னுள் உணர்வூட்ட வந்தாய் வெள்ளி நிலவே…!! ♡

 

♡ காதல் தீபங்கள் கணக்கின்றி ஏற்ற….

உதிக்கும் வலிகளை உன் பார்வையே தேற்ற….

மயக்கும் எழிலை உளமாரப் போற்ற….

நின் தோளை எனக்கென மஞ்சமாய் மாற்றுவாய் மஞ்சள் நிலவே…!! ♡

 

♡ நெஞ்சில் நேசமது பீறிட்டுப் பாய….

அழகாய் நானுமே உன் அன்பினில் தேய….

உனக்கென என் சிரம் அணுதினமும் தாழ….

இனிதாய் வீழ்கிறேன் இதய நிலவே…!! ♡

 

♡ ஈரேழு ஜென்மம் உன்னோடு வாழ….

சோகங்கள் தீர உன் மாரில் சாய….

இணையிலா வரம் தருவாய் – என்….

இதய வானில் உதய நிலவே…!! ♡

 

முற்றும்…..🌛

ஷம்லா பஸ்லி

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!