கனவு -27
‘ஆஆஆஆஆ செத்துருவானு நினைச்சா உயிர் பிழைச்சிட்டாளே’ என்று ஆத்திரத்தை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் சாயரா.
கௌதமோ சாயரா அங்கு நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் நேராக அமராந்தியின் அறைக்கு சென்று விட்டான்.
அவன் உள்ளே வந்ததும்,
“டாக்டர் துவாரகா இப்ப எப்படி இருக்கா இனி எந்த பிரச்சினையும் இல்லையே அவ நல்லா ஆயிட்டா இல்ல”
என்று ஆர்வமாக கேட்டான் கௌதம்.
“வாங்க கௌதம் முதல்ல உட்காருங்க
இவங்க உடல் தான் விழிச்சுருக்கு ஆனா மூளை இன்னும் கனவு நிலைக்கு அடிமையா தான் இருக்கு.
இவங்களை நிஜ உலகத்துக்கு முழுமையா திருப்பிக் கொண்டு வர ஒரே வழி மெதுவான ஹிப்னாட்டிசம்.
அதுல அவங்களுக்கு நாம குரல் வழியாக ‘வாழ வேண்டிய காரணம்’ நினைவூட்டணும்.
அப்ப தான் அவங்களுடைய உள்ளம் கனவு கதவுல இருந்து வெளியே வரும்”
என்றார்.
கௌதம் உடனே ஒப்புக்கொண்டு,
“டாக்டர், நீங்க செய்யுங்க. ஆனா அவளுக்கு நான் பக்கத்தில் இருப்பேன். என் குரல் அவளுக்கு செவியில விழணும்”
என்றான்.
அதற்கு டாக்டரும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார்.
“ஆனா கௌதம் நீங்க அங்க எமோஷனல் ஆகக்கூடாது அப்படி எமோஷனல் ஆனீங்கனா நம்ம நினைச்ச மாதிரி எதுவும் நடக்காது சோ நிலைமையை உணர்ந்து நடந்துக்கணும்”
“ஓகே டாக்டர் கண்டிப்பா எனக்கு என் துவாரகா பழைய படி திரும்ப வேணும் நான் அங்க உணர்ச்சிவசப்பட மாட்டேன் என்ன நம்புங்க டாக்டர்”
“சரி நம்ம அப்ப நேரத்தை கடத்தாம உடனே அவங்களுக்கு ஹிப்னாடிசம் பண்ண ஏற்பாடு பண்ணலாம்”
என்றவரோ ஹிப்னாட்டிசத்துக்கு தேவையான சூழலை தயார் செய்தார்.
மெதுவான விளக்குகள், அமைதியான சத்தம், ஒழுங்கான சுவாச ஒலி.
அவள் விழிகளோ மூடிய இமைகளுக்குள் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தன
ஆனா அது முழுமையான விழிப்பு அல்ல.
கண்ணில் உயிர் தெரிந்தாலும், மனம் இன்னும் அரை தூக்கம், அரை மயக்கம் போல இருந்தன.
கௌதம் அவளுடைய கையை தன்னுடைய கைகளோடு கோர்த்துக்கொண்டு அருகில் நின்று கொண்டிருக்க, டாக்டர் அமராந்தியோ அவளிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
“துவாரகா நான் பேசுறது உனக்கு கேக்குதா”
அதற்கு அவளுடைய கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வழிந்தது.
கௌதமோ பதரியவன்,
“டாக்டர் ஏன் அவளுடைய கண்ணிலிருந்து கண்ணீர் வந்துகிட்டே இருக்கு”
என்று அவளுடைய விழிகளை துடைத்து விட்டவாறு டாக்டரிடம் கேட்டான் மெதுவான குரலில்.
அதற்கு அமராந்தியோ,
கௌதம் அவங்க கனவு உலகத்துல இருந்து மீண்டு வர முயற்சி பண்றாங்க அதோட வெளிப்பாடு தான் இந்த கண்ணீர் கொஞ்சம் அமைதியா இருங்க”
என்று அவனிடம் சொன்னவர் மீண்டும் துவாரகாவிடம்,
“துவாரகா நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல உங்களுக்கு நான் பேசுறது கேக்குதா”
என்று அவர் கேட்க.
இப்பொழுது அவளுடைய இதழ்களோ மெதுவாகத் திறந்து ஆம் என்றது.
கௌதமோ அந்த ஒரு வார்த்தை அவள் உதிர்த்ததை எண்ணி மிகுந்த ஆனந்தம் அடைந்தான்.
இத்தனை நாட்கள் கோமாவில் இருந்தவளுடைய முதல் வார்த்தை அவனுடைய செவியை தீண்டியது.
டாக்டரும் மெதுவாக புன்னகைத்தவர் கௌதமின் புறம் திரும்பி அமைதியாக இருக்கும்படி கண்களால் சைகை செய்தவர்,
“துவாரகா இப்போ உங்க கண்ணு முன்னாடி என்ன தெரியுது எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா”
என்று கேட்டார் அவர்.
“நான் நான் நான் என்னோட கௌதம் கௌதம் அந்த சாயரா கூட சேர்ந்துகிட்டு என்ன துரத்துறாரு என்ன தொரத்துறாரு”
என்று கூறியவளோ அழுக ஆரம்பித்தாள்.
டாக்டரோ,
“ஓகே ஓகே கூல் இங்க பாருங்க துவாரகா உங்க ஹஸ்பண்ட் உங்க ஹஸ்பண்டுக்கு உங்களை பிடிக்காதா”
“இல்லை என்னோட கௌதமுக்கு நான்தான் உயிர்”
“அப்புறம் எப்படி துவாரகா உங்க ஹஸ்பண்ட் சாயராவோடு சேர்ந்துகிட்டு உங்கள தொரத்துவாரு”
“ஆமா அவ ஒரு சூனியக்காரி என் புருஷன வசியம் பண்ணி மயக்கி என்ன அவர்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறா அவர் கூட ஒன்னா வாழணும்னு நினைக்கிற”
“இங்க பாருங்க துவாரகா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது இது ஒரு கனவு மட்டும் தான் நீங்க முதல்ல அதிலிருந்து வெளியே வாங்க.
உங்க ஹஸ்பண்ட் உங்க மேல ரொம்ப அன்பு வச்சிருக்காரு”
“இல்ல அவருக்கு என் மேல பாசமே இல்ல என் மேல முதல்ல ரொம்ப பாசமா தான் இருந்தாரு ஆனா இப்போ குறைஞ்சு போச்சு இல்லைனா என் கூட இருக்காம ஆபீஸ் வேலை தான் முக்கியம்னு இந்த ஒரு வாரமா என்ன அவர் பார்க்கவே வரல அவருக்கு நான் முக்கியமே இல்ல அந்த சாயரா பின்னாடி தான் அவர் போவாரு” என்றவளுக்கோ அழுகை தொடர்ந்தது.
“இல்லை துவாரகா நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க அவருக்கு உங்க மேல ரொம்ப அன்பு இருக்கு சரி துவாரகா அப்போ இந்த ஒரு வாரம அவர் வந்து உங்களை பார்க்கலைன்னு சொல்றீங்க அப்போ நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்க”
என்று டாக்டர் கேட்க கௌதமோ தன்னுடைய செவிகளை கூர்மையாக்கி அவள் என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக கேட்க தயாரானான்.
அவளோ,
“அவர் எப்பவும் எனக்கு போன் பண்ணிக்கிட்டே இருப்பார் சாப்டியா மாத்திரை போட்டியா அப்படின்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு ஆனா நான் மாத்திரை போடல அவர்கிட்ட பொய் சொன்னேன்.
எனக்கு எப்பவும் அந்த கனவுதான் என்னோட மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கும்.
நானும் அதை மறக்கணும் மறக்கணும்னு நினைப்பேன் ஆனா ஒரு நிமிஷம் கூட அந்த கனவு என்னோட நினைப்புல இருந்து போகவே இல்லை.
நான் தூங்கினா தானே அந்த கனவு வரும் கனவு வராதுல்ல அப்படின்னு நினைச்சு அதனால இனி தூங்கவே கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.
எங்க நான் தூங்கினா அந்த கனவு மறுபடியும் வந்துருமோன்னு நான் தூங்க கூட ரொம்ப பயந்து போனேன்.
அதனால நான் தூங்கவே இல்ல முழிச்சே இருந்தேன்.
ஆனா எனக்கு அந்த கனவு மட்டும் மறையவே இல்ல.
இந்த கௌதமும் என் கூட இல்ல”
என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க கௌதமுக்கோ மிகுந்த குற்ற உணர்ச்சி அதிகமாகிப் போனது.
அந்த ஒரு வாரமும் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்பதை அவள் வாயாலே கேட்டு அறிந்தவனுக்கோ அவனுடைய உள்ளம் சுக்கு நூறாய் உடைந்தது போல இருந்தது.
ஆம் அவள் அந்த ஒரு வாரமும் ஒரு நாள் கூட அவள் தூங்கவேயில்லை.
தூங்கினால் அந்தக் கனவு வருமோ என்று நினைத்து தன்னுடைய தூக்கத்தை முற்றிலுமாக தொலைத்தாள்.
அங்கு உள்ள அந்த தனிமை சூழலும் அவள் நினைவில் சுழன்று கொண்டிருந்த அந்தக் கனவும் அவளை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
டாக்டரோ கௌதமை பார்த்து முறைத்தவர் பின்பு துவாரகாவிடம்,
“ஓகே ரிலாக்ஸ் துவாரகா இப்படி நீங்க அழக்கூடாது அதுக்குப் பிறகுதான் நீங்க ரெண்டு பேரும் சிம்லாவுக்கு ஹனிமூன் போனீங்கல்ல அப்பவும் உங்க கௌதம் உங்களை விட்டுட்டு போனாரா இல்ல உங்கள நல்லா பார்த்துக்கிட்டாரா” தன்னுடைய அழுகையை நிறுத்திய துவாரகாவோ,
“ஆமா நாங்க சிம்லாவுக்கு போனோம் அங்க என்னோட கௌதம் எப்பவும் போல என்கிட்ட ரொம்ப பாசமா இருந்தாரு”
என்று சொன்னவளுடைய இதழ்களோ புன்னகைத்தன.
“ஆனா அங்க அந்த சாயரா அந்த சாயரா அவளை நான் அங்க பார்த்தேன்”
என்றாள் அவள்.
“என்ன சொல்றீங்க துவாரகா நீங்க கனவுல பார்த்த அதே பொண்ண நேர்ல பார்த்தீங்களா”
“ஆமா அவளே தான் அது அவளே தான் என்னோட கௌதம என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறாள் என்கிட்ட இருந்து என் கௌதம பிரிச்சுருவா”
என்றவளுக்கோ மீண்டும் அழுகை வந்தது.
உடனே கௌதமோ,
“துவாரகா இங்க பாரு நான் தான் உன்னோட கௌதம் நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காதும்மா நான் எப்பவும் என்னோட துவாரகாவுக்கு தான் இதை அந்த கடவுளை நினைச்சாலும் மாத்த முடியாது சீக்கிரம் நீ இதுல இருந்து மீண்டு வா உனக்காக உன் கௌதம் இருக்கேன்.
ப்ளீஸ் துவாரகா உன்னை இப்படி என்னால பார்க்க முடியல தயவு செஞ்சு சீக்கிரம் எனக்காக திரும்பி வா”
என்றான்.
டாக்டர் அமராந்தியோ கௌதமை அமைதி படுத்தியவர் துவாரகாவுக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு கௌதமை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
“பார்த்திங்களா கௌதம் நீங்க உங்க ஆபீஸ் வேலை தான் முக்கியம்னு அந்த ஒரு வாரமும் துவாரகாவ சரியா கவனிக்காததால அவங்க எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு.
இதுல அவங்க அங்க தனியா வேற இருந்திருக்காங்க எல்லாம் சேர்ந்து அவங்கள ஒரு நோயாளியா மாத்திட்டு.
தூங்குறதுக்கு கூட பயந்து போய் இருந்திருக்காங்க அவங்க இந்த அளவுக்கு கோமாவுக்கு போறதுக்கு காரணமே நீங்கதான் கவுதம்”
“என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க என் மேல தப்பு தான் நான் ஒத்துக்குறேன் நான் இந்த அளவுக்கு வரும்னு எதிர்பார்க்கவே இல்லை டாக்டர்.
அவ என்கிட்ட கரெக்டா டைமுக்கு மாத்திரை எல்லாம் எடுத்துக்கிட்டேன்னு பொய் சொல்லி இருக்கா நானும் வேலை பிசில அதை நம்பிட்டேன் டாக்டர்”
“சரி விடுங்க கௌதம் இன்னும் 24 ஹார்ஸ் குள்ள அவங்க நார்மல் ஆக வாய்ப்பு இருக்கு நீங்க என்ன பண்ணுங்க அவங்க கிட்ட மெதுவா பேசிக்கிட்டே இருங்க உங்களுடைய குரல் அவங்களுக்கு கேட்டுகிட்டே இருக்கணும் நீங்க அவங்க கூட தான் இருக்கீங்கன்னு அவங்க முழுமையா நம்புனாலே அவங்க சீக்கிரம் நார்மல் நிலைக்கு திரும்பிடுவாங்க”
என்றார் அவர்.
“ஓகே டாக்டர் கண்டிப்பா”
என்றவன் துவாரகாவின் அருகில் சென்று அமர்ந்தவன் அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான்.