இங்கு அபி தன் அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தாள். “ஏன்டி இப்படி பண்ண? போயும் போய் அவன்கிட்டயா வம்பிழுப்ப? அவன போய் பகைச்சிக்கிட்ட. நீ சும்மா இருந்திருந்தா அவன் யாரோ பொண்ணு வீட்டுல இருந்தா இருந்துட்டு போறான்னு நினைச்சிருப்பான். இதுக்குள்ள நாம நாடகம் வேற போட்டுட்டு இருக்கோம். இதுக்கு நீ ஆதித்ய வர்மா மாமா பொண்ணுன்னு தெரிஞ்சா நம்ம கதை காலி. எனக்கு பயமா இருக்குடி. முதல்ல கிளம்பு. நீ இங்க இருக்க வேணாம். கார்த்திக் வீட்ட விட்டு போனதும் உன்ன திரும்ப கூட்டி வரேன். ” என்று அபி பயத்தில் உலர
“என்னடி சொல்ற? அவன் எப்போ போறது நான் எப்போ வர்ரது? அவன் போறதுக்குள்ள நான் மேல போய்டுவேன். நான் இங்கேயே இருக்கேன். அவனுக்கு என்னோட எதுவுமே தெரியாம நான் பாத்துக்கிறேன். அவனுக்கெல்லாம் பயப்பட்டு வீட்ட விட்டு என்னால போக முடியாது. நீ சும்மா இரு.” என்று கூறி அபியின் வாயை அடைத்து விட்டாள் யூவி.
“என்னதான் நடக்க போகுதுன்னு தெரிலையே. சொந்த வீட்டுக்கே துரோகம் பண்னேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ… கொன்னாலும் கொன்னுடுவான்.” என்று புலம்பிக் கொண்டே இருக்க வெளியில் இருந்து மகாலக்ஷ்மி
“அபி. அந்த பொண்ண கூட்டிட்டு வெளில வா. சாப்பிடலாம்.” என்று அழைத்தார்.
யூவியை பார்த்தவள் “நீ இங்கேயே இருடி. நான் சாப்பாடு எடுத்து வரேன். ஆனால் தயவு செஞ்சு வெளில மட்டும் வந்துடாத தாயே. என் கண்ணு முன்னால வராதன்னு சொல்லிருக்கான். அத பண்ணி காரியத்தை கெடுத்துடாதடி.” என்று தான் ஆதியிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொண்டு வெளியேற முயல
“இல்லடி எனக்கு பசிக்கல. மனசு நிறைஞ்சு போச்சு. சாப்பாடு வேணாம்.” என்று யூவி சொன்னதும்
“ரெண்டு போட்டேன்னா. டெப்ளெட் போடணும். ஞாபகம் இருக்கா? தட்டுல போட்டு எடுத்து வரேன். மூடிக்கிட்டு சாப்பிடு.” என்று அவளை திட்டிவிட்டு வெளியில் எட்டிப் பார்த்து ஆதியை நோட்டமிட்டாள். அவன் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“அப்பாடா… பரவால்ல. வில்லங்கம் சாப்பிட்டுட்டு இருக்கு. சத்தமே போடாம அமைதியா போய் வேலைய முடிச்சிட்டு வந்துட வேண்டியதுதான்.” என எண்ணியவாறே சென்று அவளுக்கும் யூவிக்கும் உணவை தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு திரும்பினாள்.
அவன் இலையைப் பார்த்து சாப்பிட்டவாறே “அபி…” என்று அழைத்ததும் அவன் மீதுள்ள பயத்தின் விளைவாக உணவுத் தட்டை உதறல் எடுத்து கீழே போட்டுவிட்டாள் பயந்து முழித்தவாறே. ஆதி அவள் தட்டை கீழே போட்டதை நிமிர்ந்து பார்த்தவாறே வாய்க்குள் சாப்பட்டை பூத்திக் கொண்டிருந்தான்.
“ஹேய்… அபி… எங்கடி உன் கவனம் எல்லாம் இருக்கு? பாத்து எடுத்து போக மாட்டியா? சாதம்டி. அத கொட்டி விட்டுட்ட. இது இல்லாம எவ்ளோ பேர் தினம் தினம் பசில துடிக்கிறாங்க தெரியுமா?” என்று மஹாலக்ஷ்மி சிடுசிடுக்க,
“இல்லம்மா அது அண்ணா கூப்பிட்டானா? அதுதான் தெரியாம…” என்று இழுத்தவாறே அரைவாசி வார்த்தையை வாயினுள் விழுங்கிக் கொண்டாள் அவனைப் பார்த்தவாறே.
இவளது நடத்தைகளை கவனித்துப் பார்த்துவிட்டு “சாப்பாட எடுத்துட்டு எங்க போற? எல்லாரும் இங்க சாப்பிடுறாங்கல்ல… உட்கார்ந்து சாப்பாடேன். அதுவும் ரெண்டு ப்ளேட். நீ ரெண்டு ப்ளேட்ல சாப்பிடுற அளவு எல்லாம் வேர்த் இல்லையே. பேசாம இங்க வா. இப்டி வந்து பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு.” என்று அவன் அழைக்க அவள் என்னவோ வாயிலிருந்து வார்த்தை வராமல் திணறிக் கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவள் தன் பேச்சை மதிக்கததால் கோபமானவன் “உன்ன இங்க வான்னு கூப்பிட்டேன்.” என்று அழுத்தமாக கத்த, சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு ஆதியின் மேல் பார்வையை செலுத்தினார்கள்.
“என்ன? நான் அவளைதான் கூப்பிட்டேன். உங்களை இல்லை. எல்லாரும் சாப்பிடுங்க.” என்று அவர்களையும் திட்ட அனைவரும் தன் பாட்டிற்கு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அபி முகம் வெளுக்க அவன் கத்திய அடுத்த நொடி அவனருகில் பயத்துடன் வந்து நின்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் “உட்கார்.” என்று கண்சிமிட்டி சொல்ல கீழே அவன் முன் அமர்ந்தாள். அவன் கொஞ்சம் அதிக உணவை இலைமேல் போட்டு “சாப்பிடுமா.” என்று வாஞ்சையாக சொன்னான்.
“இல்லண்ணா. நானே சாப்பிட்டுக்குறேன்.” என்று திக்கித் திணறி அவள் சொல்லி முடிக்க
“ஏன் என்னைப் பார்த்து இப்படி பயப்படுற? நான் என்ன பூதமா? இல்லை பேயா? உன்னை கடிச்சி சாப்பிட போறனா என்ன?” என்று அவளது பயத்தின் காரணத்தை கேட்டான்.
அவள் பயத்தில் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாமல் “இல்லை. அதுக்கும் மேல.” என்று உலரி வைத்தாள்.
“வாட்?” என்று அவன் முகம் சுருக்கினான்.
“இல்ல அண்ணா. தெரியாம சொல்லிட்டேன்.” என்று வேகமாக பதில் கூறினாள். அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்துவிட்டது.
அவன் ஒருத்தனுக்கு கொடுத்த தண்டனையை அவள் இரண்டு கண்களாலும் நேரில் பார்த்தவள் ஆச்சே. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவள் இன்று வரை அதே அதிர்ச்சியில் அவனைக் கண்டு நடுங்குகிறாள்.
பேச்சை மாற்றுமாறு “அது… வந்து… ப்ரண்ட்… இருக்கா அண்ணா. நான் அவக் கூடவே சாப்பிட்டுக்குறேன்.” என்று அவள் கூறி முடித்திருந்தாள்.
அதைக் கேட்டு நிமிர்ந்தவன் “ஹோ… ப்ரண்டா? அப்போ சரி. போ. போய் நல்லா சாப்பிடு.” என்று அவளை விடுவித்தான். அவள் ஆளை விட்டால் போதும் என்று தப்பித்து ஒரே ஓட்டமாய் ஓடி வந்து யூவியிடம் நிற்க
“என்ன ஆச்சுடி? ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வர?” என்று யூவி கேட்டிட
“அதை விடு சீக்கிரமா வா. நாம வெளில உட்கார்ந்து சாப்பிடலாம். கார்த்திக் உள்ள இருக்கான். நாம வெளில உட்கார்ந்து சாப்பிட்டா எதுவும் இல்ல.” என்று அவள் கைகளை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல என்தான் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் யூவியின் கால் செல்லும் வழியையும் அவள் வெள்ளிக் கொளுசு அசைவதையும் நுணுக்கமாக பார்த்தவாறே கீழே குனிந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அபி யூவியை ஆதியின் கண்களில் படாமல் வெளியில் அழைத்து வந்து விட்டோம் எனற நிம்மதியில் இருக்க மஹாலக்ஷ்மி அவர்களுக்கு உணவை பரிமாரினார். அந்த நேரமாக சரியாக ஆதி சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் வர இருவரையும் பார்த்துக் கொண்டான். ஆனால் அவன் பார்வை என்னமோ சாப்பிடாமல் போனை நோன்டிக் கொண்டிருந்த யூவியிடமே நின்றது.
அவளை பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு கோபம்தான் எழுந்தது. அவள் அருகில் சென்றவன் அங்கு இருந்த சொம்பை எடுத்து அவள் சாப்பிடும் இலையின் மீதே தன் சாப்பிட்ட கைகளைக் கழுவ அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தனர் அபியும் யூவியும்.
அபிக்கு சாப்பாடு தொண்டைக் குழியில் சிக்கி புரையேறி விக்கலே வந்துவிட்டது. யூவிக்கு அவனைப் பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள். கைகள் இரண்டையும் நன்றாக கழுவியவன் யூவியின் துப்பட்டாவை இழுத்து அதில் கைகளைத் துடைத்துவிட்டு அவள் முகத்தில் எறிய அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு தலைக்குள் ஏறியது. அவன் எதையும் பொருட்படுத்தாமல் தனது ஸூவை எடுத்து காலில் போட்டுக் கொண்டிருக்க,
“டேய்… சைக்கோ…” என்று இருந்த இடத்திலே இருந்து அவனை கோபமாக அழைத்தாள்.
அதில் உண்மையிலேயே சைக்கோவாக மாறியவன் திரும்பி வந்து யூவியின் கைகளின் மீது தன் கால்களை வைத்து அமர்த்தி தன் ஸூ லேஸ்களை கட்டினான். அவன் பாரத்தில் யூவியின் விரல்களில் வலி தாங்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு
“கால எடுடா.” என்று லேஸ்களை கட்டிக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்துக் கொண்டே சத்தமாக கத்தினாள்.
இதை எதிர்பாராத ஆதி அவளது கைகளை வேண்டும் என்றே இன்னும் அழுத்தம் கொடுத்து நசுக்க எழும்புகள் உடையும் அளவு வலித்தது.
அதனை தாங்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும் “கால எடுடான்னு சொன்னேன்.” என்று கத்தினாள். அதில் இன்னும் கோபம் தலைக்கேறியது ஆதிக்கு.
“இன்னும் உனக்கு திமிரு அடங்கலல்ல? சைக்கோன்னு சொன்னியே. சைக்கோ என்ன பண்ணுவான்னு தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே அருகில் சுட சுட கொதித்துக் கொண்டிருந்த கறியினை எடுத்து அப்படியே அவள் முகத்தில் சளாரென்று ஊத்தினான்.
ஏற்கனவே அவன் அடித்து சிவந்து போய் இருந்த கன்னத்தில் காரமும் வலியும் சுள்ளென்று ஏறியது. “ஆ… அம்மா…” என்று கத்தி தன் வேதனையை வெளிப்படுத்தினாள் யூவி. அதைப் பார்த்து அந்த இடமே அதிரும்படி சிரித்தவன் அவள் முகத்தின் அருகில் நெருங்கி அவள் கண்ணீரைப் பார்த்துக் கொண்டே
“இதுதான். இதுதான் வேணும். நீ கதறி அழுறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. கத்து. இன்னும் நல்லா கத்து. எங்கிட்ட நீ கெஞ்சனும். என் கால்ல விழுந்து கதறனும். என்ன விட்டுடுங்க ப்ளீஸ்னு கத்தனும். கம் ஓன். கத்து… கத்து… இன்னும் நல்லா சத்தமா கத்து. பத்தல…” என்று கண்களை மூடிக் கொண்டு கத்தியவனை உண்மையிலேயே சைக்கோ என்றுதான் சொல்ல வேண்டும் போல இருந்தது.
இதனைப் பார்த்து மிரண்டு போன அபி “அண்ணா ப்ளீஸ்ணா. அவ ஏதோ தெரியாம சொல்லிட்டா. விட்டுடு ப்ளீஸ். இனிமேல் அவ இப்படி எல்லாம் பண்ண மாட்டா. தயவு செஞ்சு விட்டுடு.” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவன் தங்கையை ஏளனமாகப் பார்த்து “அபி… ப்ரண்டுன்னா அவ்ளோ பிடிக்குமோ? அவளுக்காக நீ என்கிட்ட கெஞ்சுற? அவளுக்கு வலிச்சதுன்னா… அவதான் கெஞ்சனும். நீ கிடையாது. தெரியாம பண்ற வயசா இது. தெரிஞ்சுதான் பண்ணிருக்கா.” என்று அருகில் இருந்த முள் கரண்டியை எடுத்து குனிந்து கொண்டு அழும் அவள் தாடையில் வைத்து உயர்த்தி அவள் கண்களை நோக்க கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதனைப் பார்த்து விட்டு “வட் எ ப்ளஸன்ட் சீன்…. ஐம் ஸோ ஹெப்பி டு சீ யூ லைக் திஸ். ரொம்ப அழகா இருக்க. இவ்ளோ வலியிலையும் அந்த திமிர விட்டுட்டு ஒரு வார்த்தை வாயிலை இருந்து வருதா பாரு.” என்று அவன் கத்த அதற்கு சற்றும் கூட பயமில்லாமல்
“தப்பு பண்ணிட்டு நீயே மன்னிப்புக் கேட்காம திமிராப் போறப்போ தப்பு பண்ணாத நான் எதுக்குடா உன்னப் போல ஒருத்தன்கிட்ட கெஞ்சனும்?” என்று அவன் மீது கொண்ட வெறுப்பின் உச்சத்தில் வார்த்தைகளை கடித்தாள்.
இதையெல்லாம் கேட்கவும் அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. அவன் இன்னும் அவளது கைகளை காலால் நசுக்க அவள் வலியில் துடிதுடித்துப் போய் விட்டாள். இதையெல்லாம் பார்க்க மனம் தாங்காத அபி “அம்மா…” என்று மகாலக்ஷ்மியை வேகமாக கத்தி அழைக்க அதில் எரிச்சலானவன் உச்சிக் கொட்டியபடி
“என்ன அபி சின்னக் குழந்தை மாதிரி பண்ற? அம்மா வந்தா நான் பயந்துடுவேனா என்ன? நெவர்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இங்கு நடப்பது எதுவும் அறியாத மஹாலக்ஷ்மி
“என்னடி? எப்போ பார்த்தாலும் அம்மா அம்மான்னு கத்திக்கிட்டு? ஒருவேலை என்ன நிம்மதியா பண்ண விடுறியா?” என்று திட்டிக் கொண்டே வெளியில் வர நடப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டார்.
“டேய். கார்த்திக். என்னடா பண்ற? அந்த பொண்ண விடுடா. அவ வலி தாங்க மாட்டா. டேய்… தயவு செஞ்சு அவளை விட்டுடுடா. அம்மான்னு கூட பார்க்காம உன் கால்ல வேணா விழுறேன். ஏன்டா ஈவு இரக்கம் மனசாட்சி எதுவுமே இல்லாம இப்படி நடந்துக்குற?” என்று அவன் கையை பிடித்து உலுக்க அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் மனசாட்சியைக் கொன்றதே அவர்கள்தானே.
“ஈவு இரக்கமா? அப்படின்னா என்ன? அது எந்த கடையில கிடைக்கும்? சொல்லுமா வேணும்னா வாங்கிட்டு வந்து தரேன். என்ட் மனசாட்சின்னு ஏதோ சொன்னியே. எனக்கு மனசே இருக்கான்னு தெரில. இதுல மனசாட்சி வேறயா? ஏன்மா சீரியஸான நேரத்துல ஜோக் அடிக்கிற? உன் அம்மாதானே… என் மனசாட்சியையே கொன்னுட்டாங்க. பின்ன எந்த நியாயத்துல என்கிட்ட வந்து ஆந்த கேள்விய கேட்குற? அவளுக்காக அவளே என்கிட்ட கெஞ்சல. ஆனால் நீங்க ரெண்டு பேரும் இப்படி விழுந்து விழுந்து கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க? வட் அ லவ். என்ன ஒரு பாசம்… என் அக்கா மேல கூட இல்லாத பாசம்.” என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தான். இருவரும் அவனையே அதிர்ந்து போய் பார்த்திருந்தனர்.
இடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வர அதை ஏற்றவன் “இதோ டென் மினிட்ஸ்ல வந்துர்ரேன்.” என்று கூறுவிட்டு காலை அவள் கையிலிருந்து பிரித்து எடுக்க அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது போல் இருந்தது. அவளது கைகளில் சிவந்து நரம்புகள் நீலமாகி இரத்தம் உறைந்து திமித்து உணர்ச்சியே இல்லாமல் போய் விட்டது.
“ஹ்ம்… இந்த போன் கோல் வந்ததால நீ தப்பிச்ச இல்லன்னா…’ என்று திமிராக உதிர்த்தவன் உணவுப் பாத்திரங்களை பார்த்தவாறு
“எல்லாரும் சாப்பிட்டாங்களா?” என்று கேட்டதும் இவனின் நோக்கம் அறியாத மகாலக்ஷ்மி “ஆமாம்.” என்று தலையாட்டிய அடுத்த கனம் உணவு இருந்த பாத்திரங்களை கீழே போட்டு காலால் தட்டி விட்டும் நாசம் செய்து விட்டான்.
“டேய் நீ இப்படி பண்ணா, அப்போ அந்தப் பொண்ணு எத சாப்பிடுவா?” என்று அதிர்ந்து மகாலக்ஷ்மி கேட்டதும்
“இன்னைக்கு பட்டினி கிடந்து சாகட்டும். ஒருநாள் சாப்பிடலன்னா செத்துப் போயிட மாட்டா.” என்று கூறிக் கொண்டே கூலிங் க்ளிஸை மாட்டிக் கொண்டு வெளியில் போனவன் திரும்பி யூவியை நோக்கி
“இது சாதாரண ட்ரையல்தான். நாளைக்கு மீதியைக் கன்டினிவ் பண்ணிக்கலாம். ஓக்கே?” என்று கூறிக் கொண்டு தன் வேலைக்காக வெளியில் சென்று விட்டான்.
ஆதி இங்கு வந்தது சாதாரணமாக பல்லவியுடன் டூயட் பாடி காதல் வசனம் பேசிக் கொண்டு அவளை திருமணம் செய்து அவளோடு குடும்பம் நடத்துவதற்காக அல்ல. அவளுடன் காதல் வசனம் பேசியது குடும்பத்தை ஏமாற்றுவதற்காக. மற்றபடி அவனுக்கு பல்லவியை கண்டாலே ஆகாது. அவன் வந்ததன் நோக்கமோ வேறு. அந்த கடவுளுக்கும் அவனுக்கும்தான் தெரியும் அவன் இங்கு வரக் காரணம் அவன் அக்கா ஸ்ரீதானியா காவ்யா என்று.
காவ்யா உண்மை, நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் அதிகம் நம்புபவள். அதற்கு மேல் ஒரு காலத்தில் சட்டத்தை நம்பியவள். ஆனால் அவள் கணவனுக்கு நடந்த கொடுமையால் சட்டத்தைத் தானே கையில் எடுத்துக் கொண்டாள். துரோகிகளை எப்போதும் மன்னிக்கவே மாட்டாள். இந்த குணம் அவளிடமிருந்து தான் ஆதிக்கு தொற்றிக் கொண்டது. காவ்யாவுக்கு அவளது கணவனிடம் இருந்து தொற்றிக் கொண்டது. காவ்யா ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் கணவனின் மரணம் அவளை இப்படியான ஒரு நிலமைக்குத் தள்ளிவிட்டது. ஆதிக்கு காவ்யா என்றால் உயிர். தன் அன்னையை விட ஒரு படி மேலே தான் அவளை வைத்துள்ளான்.
அதே போல்தான் காவியாவுக்கும் தன் தம்பி. ஆதிக்கும் அவளுக்கும் ஒரு வருடமும் ஏழு மாதமும்தான் வித்தியாசம்தான். காவ்யா எள் என்றால் எண்ணெய்யாக நிற்பான். அவள் கூறுவதை மறுப்பேதும் கூறாமல் செய்வான். காவ்யாவிற்கு சடங்கு சம்பிரதாயங்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. அதே போல்தான் ஆதிக்கும். வீட்டின் வாரிசுகள் இருவர்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உடன்பாடு சுத்தமாக காவ்யாவுக்கு இல்லை. ஆதித்ய வர்மா விடயத்தில் அடிக்கடி காவ்யாவிற்கும் பாட்டிக்கும் முரண்பாடுகள் ஏற்படும். தத்தம் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை. அதனை இவ்வாறு பறித்து எடுக்க கூடாது என்பது அவள் எண்ணம்.
அதனாலேயே தனக்கு பிடித்த தனது உயிர் நண்பனை காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள். அவள் வீட்டின் பெண் வாரிசாக இருப்பதாலும் அவளைத் திருமணம் செய்து கொள்ள யாரும் அந்த குடும்பத்தில் இல்லாததாலும் அவளை ஆதித்ய வர்மா போல் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு பிரச்சினை எதுவும் வரவில்லை.
ஆனாலும் அவள் காதலித்தவனை அந்த குடும்பத்தில் யாருக்கும் பிடிக்காததால் அவர்கள் இருவரது திருமணத்திலும் வீட்டில் இருப்பவர்கள் குழப்பமடைய, அதைப் பொருட்படுத்தாமல் தன் வாழ்க்கையில் தனக்கு எவ்வாறு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறும் வகையில் கோவிலாக எண்ணும் தனது வீட்டிலேயே அனைவரது கண் முன்னும் தன் காதலனை திருமணம் செய்து கொண்டாள் காவ்யா. அவளுக்கு கல்யாணம் செய்து வைத்தான் ஆதி. இதில் ஆதியின் மீதும் காவ்யாவின் மீதும் மிகப்பெரிய மனவருத்தத்தில் இருந்தார் பாட்டி.
ஆனால் காவ்யா தன் வாழ்க்கை தன் இஷ்டம். அதில் முடிவை தன்னை தவிர யாரையும் எடுக்க விட மாட்டாள். அவ்வாறான ஒரு தைரியமும் நேர்மையும் கொண்ட அழகே பார்த்து பொறாமைப்படும் அளவு பேரழகி. அவளது தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் அவள் தற்கொலை செய்யக் கூடிய அளவுக்கு எல்லாம் முட்டாள் இல்லை. ஆரம்பத்திலேயே ஆதிக்கு காவ்யா மரணம் ஒரு கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது.
அவள் மரணத்திற்குரிய காரணத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வரும் வரை மூன்று வருடமாக காத்திருந்து இப்போது அவன் சகோதரியை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வந்துள்ளான். சாதாரணமாக தன் கண்ணெதிரே ஒரு அநீதி நடக்கும் போது அதை தட்டிக் கேட்க கொஞ்சமும் தயங்காதவன் தனது அக்காவை கொன்றவனை விட்டு வைப்பானா?
ஆனால் அவனிடம் இருக்கும் ஒரே குறை. காவ்யா இறந்த பின் மிகவும் மாறிப் போய்விட்டான். எல்லார் மேலும் கோபமடைய ஆரம்பாத்துவிட்டான். தான் நேசிப்பவர்களுக்காக எதையும் செய்ய தயங்காத அவன் இப்படி அடுத்தவர்களை நோகடிக்கும் ஒரு பாத்திரமாக மாறிவிட்டான்.
காவ்யா நல்ல குணம் அத்தனையும் கொண்டவள். தன்னிடம் நன்றாக நடப்பவரிடம் நன்றாக இனிமையாக நடந்து கொள்வாள். அடுத்தவர் தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்டாலும் தான் தவறு செய்து விட்டால் பாதிக்கப்பட்டவரிடம் உடனே மன்னிப்புக் கேட்பாள். அதீத புத்திக் கூர்மையுடையவள். பிடிவாதத்தின் உச்சக் கட்டம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று சாதித்துக் காட்டுவாள்.
ஆதி தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர அதனைத் தொடர்ந்து வெளியில் சென்றுவிட்டான். ஆனால் இங்கு யூவி அவன் செய்த செயலால் கையை அசைக்கக் கூட முடியாமல் வலியில் “ம்மா… ரொம்ப வலிக்கிது ம்மா… ஆ…” என்று வலியில் கத்திக் கொண்டிருந்தாள்.
இதுவரை எந்த வலியையும் அனுபவிக்காது வளர்ந்தவளுக்கு இவ்வாறு செய்து நரகத்தை நேரில் காண்பித்து விட்டான் ஆதி. மகன் யூவிக்கு இவ்வாறு செய்ததை தாங்காத மஹாலக்ஷ்மி அழுது கொண்டே அவளது கையைப் பிடித்து மஞ்சள் கட்டுப் போட்டு விட சிறு அசைவிலும் “ஆ….” வென்று கண்ணை மூடி தலையை உயர்த்தி கத்திக் கொண்டிருந்தாள் யூவி.
யூவியின் முகத்தை தண்ணீரால் கழுவி துணியால் மெதுவாக துடைத்துக் கொண்டிருந்தாள் அபி. “இன்னும் கொஞ்சம் தான்மா. கட்டுப் போட்டா சரியாகிடும். கொஞ்சம் பொறுத்துக்கோ.”
என்று கூறியவர் வெகு நேரத்தில் கட்டை போட்டு முடித்தார்.
“மன்னிச்சிடுமா. என் பையன் பண்ண தப்புக்கு உன்கிட்ட நான் மன்னிப்புக் கேட்குறேன்.” என்று அவர் கையெடுத்து மன்னிப்புக் கோரிட
“ஹைய்யோ ஆன்டி. நீங்க பெரியவங்க. என்கிட்ட இப்படி கேட்க கூடாது. ஏன் அவன் பண்ணதுக்கு நீங்க மன்னிப்பு கேட்கனும்? உங்க பையன் ஸ்லேங்க்ல சொல்லனும்னா தப்பு பண்ணவங்கதான் அதுக்காக கெஞ்சனும். மத்தவங்க கிடையாது. அவன்தான் இதுக்காக மன்னிப்பு கேட்கணும்.” என்று அவரது கையைப் பிடித்து கூறிட,
“மனசாட்சியே இல்லாத மிருகம் மாதிரி நடந்துக்குறான். நல்லாதானே இருந்தான். ஏன் இப்போ எல்லாம் இப்படி ஆகிட்டான்.” என்று புலம்பினார்.
அதைக் கேட்ட அபிக்கு கோபம் பொத்துக் கொண்டு வர “இவன் தான் உண்டு தன் வேல உண்டுன்னு தானேமா இருந்தான். அவ சும்மாவா இருந்தா? அநியாயத்தை தட்டிக் கேளு. அதர்மத்தை தட்டிக் கேளு. அநீதியத் தட்டிக் கேளுன்னு. அவன உசுப்பேத்தி விட்டுட்டு போய் சேர்ந்துட்டா. அவ அநியாயத்தை தட்டிக் கேளுன்னு சொன்னது எல்லாம் உன் பையனுக்கு அநியாயம் பண்ணு அநியாயம் பண்ணுன்னு காதுல விழுந்திருக்கு. அதுதான் இப்படி மனசாட்சியே இல்லாம பண்ணிட்டு இருக்கான்.” என்று எண்ணெய்யில் போட்ட கடுகு போல் வெடிக்க அதில் மனம் உருகியவர்
“அவ பண்ண ஒரே தப்பு அந்த சத்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான். சொல்ல சொல்ல கேட்டாளா? பிடிவாதமா அவனைதான் கட்டிப்பேன்னு சொன்னாளே. இவரு பெரிசா போய் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு. இவன் தடுத்திருந்தா அவளுக்கு இப்படி நடந்திருக்குமா? இப்போ எல்லாரையும் விட்டு போய்ட்டா.” என்று தான் பெற்ற மகளை நினைத்து கண்கள் கலங்கினார்.
“ஏன்மா லூசு மாதிரி பேசுற? அவன் பண்ணத நான் என் ரெண்டு கண்ணாலையும் பார்த்தேன். இதை இன்னைக்கு வரைக்கும் யார்கிட்டையும் சொல்லல. ஆனால் இனிமேலும் சொல்லாம இருக்கக் கூடாது. ஒரு நாள் நான் ராத்திரி தூக்கம் வரலன்னு பின்னாடி இருக்குற அருவி பக்கமா போனேன். அப்போ அவன் என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியுமா மா? பென்சில வெச்சி ஒருத்தன் கண்ணு ரெண்டையும் குருடாக்கிட்டான். அதோட விட்டானா? அவனோட இடது கையோட மணிக்கட்ட துடிக்கத் துடிக்க இரக்கமே இல்லாம வெட்டி எடுத்துட்டான். அதாவது பரவாயில்ல. வலது கையில ஒவ்வொரு விரலையும் துண்டு துண்டா வெட்டி வீசிட்டான். இதையெல்லாம் பண்ண சொன்னது யார் தெரியுமா? உன் பொண்ணு காவ்யாதான். பொய் சொன்னா தெய்வம் கண்ண குத்திடும்னு கேள்வி பட்டினுக்கேன். பொய் சொன்னா தெய்வம் கண்ண குத்துமோ இல்லையோ. அவன் கண்ண குத்திடுவான்னு அன்னைக்குதான் எனக்கு புரிஞ்சது.” என்றாள் கோபமாக.
“செத்தவங்களை பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால கொஞ்சம் பாத்து பேசு அபி.” என்று தன் மகளை திட்டிட
“இல்லன்னா மட்டும் உன் பொண்ணும் பையனும் சுத்தவாளிங்கதான்.” என்று கோபமாக கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
இது அனைத்தும் உண்மைதான். இதெற்கெல்லாம் காரணம் காவ்யாதான். ஆனால் அன்று நடந்தது வேறு. காவ்யாவும் ஆதியும் தன் வீட்டின் பின் இருக்கும் நீர் வீழ்ச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். ஆதியின் நண்பர்கள் இருவர் ஒருவனது தோள்பட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்க காவ்யா அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“என் சட்டப்படி, ஒரு தடவை பண்ணா, அது தவறு. மன்னிச்சு விட்டுடலாம். ரெண்டாவது தடவை பண்ணா அது தப்பு. கண்டிச்சி விட்டுடலாம். ஆனால் நிறைய தடவை பண்ணா அது குற்றம். தண்டிக்காம விடவே கூடாது. ஆதி… அந்த கட்டரை எடு.” என்று அவனிடம் கூர்மையான பார்வையை வீசிய கைகளை நீட்டியவாறு கேட்க
அவர்கள் பிடித்திருத்தவன் “தயவுசெஞ்சு என்னை விட்டுடு காவ்யா. நான் இனிமேல் திருந்தி வாழுறேன். இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன். தயவு செஞ்சு என்னை விட்டுடு.” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“என்ன? உன்னை விட்டுடனுமா? நான் தான் உன்னை வோர்னிங்க் பண்ணேனே. நீ பண்றது தப்பு இதெல்லாம் நிறுத்தினா உனக்கு நல்லதுன்னு சொன்னேனே. அப்போவும் என் பேச்ச கேட்காம இப்படி பண்ணிருக்க? அப்போ அது தப்பு தான? அன்னைக்கும் இப்டிதான் சொன்ன. ஆனால் அதே தப்பை திரும்ப பண்ணல? இன்னைக்கு இப்படி சொல்லிட்டு நாளைக்கு இதெல்லாம் மறந்துட்டு இன்னொரு பொண்ணு மேல கை வெப்ப.” என்று கோபமாக கத்தினாள்.
“ஹா. நான் பண்ணது தப்புதான் காவ்யா. ப்ளீஸ் இந்த தடவை மட்டும் விட்டுடு. இனிமேல் நான் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன்.” என்று அவன் கதறி அழ உச்சிக் கொட்டியவள்
“யுவர் டைம் இஸ் ஓவர். நான் ஒரு தடவை தான் சான்ஸ் கொடுப்பேன். ஆனால் உனக்கு ரெண்டு தடவை கொடுத்தேன். அத நீ மிஸ் யூஸ் பண்ணிட்ட. என் ப்ரண்ட் மேலயே கை வெச்சிட்டேல்ல? இப்போ நரக வேதனைய நேர்ல அனுபவி.’ என்று கூறி ஆதியின் பக்கம் திரும்பியவள்,
“ஆதி… நீ என்ன பண்றன்னா, பொண்ணுங்கள தப்பா தொடுற இந்த கை இருக்குல்ல? அந்த இடது கைய மணிக்கட்டுல இருந்து கட் பண்ணிடு. என்ட் வலது கை விரல ஒவ்வொன்னா வெட்டி எடுத்துடு. என்ட் பொண்ணுங்கள தப்பா பார்க்குற அந்த கண்ணு ரெண்டையும்…. வெய்ட்… வெய்ட்… நீ என் தம்பிடா. உனக்கு என்ன பண்ணணும்னு நல்லாவே தெரியும்ல? அதைப் பண்ணிடு.” என்று அவன் தோளில் தட்டி கூறிடவே
“ஓக்கே காவ்யா. அதுக்கு என்ன? பண்ணிட்டா போச்சு. நீ போய் நிம்மதியா தூங்கு.” என்றவன் அவள் சொன்ன அனைத்தையும் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை… இல்லை பல பெண்களின் வாழ்க்கையை அழித்தவனை தண்டித்து விட்டான். அபி பார்த்தது இவ்வளவும்தான் ஆனால் அவனை கட்டி வைத்து தினம் தினம் சித்தரவதை செய்து கொன்று போட்டது அவளுக்குத் தெரியாது.
கோபத்தோடு உள்ளே சென்ற அபியின் பின்னாலே யூவியும் சென்று விட்டாள். உள்ளே உட்கார்ந்திருந்த அபியினைக் கண்டவுடன் அவள் அருகில் சென்று பேச்சு கொடுத்தாள் யூவி.
“நீ சொல்றது உண்மையாடி? அவன் அவ்ளோ பெரிய அரக்கனா? அவனுக்கு மனசாட்சியே இல்லையா? ஏன் இப்படி நடந்துக்குறான்?” என்றாள் ஆச்சரியம் அகலாத விழிகளோடு.
“அவன் இப்படி ஆகுறதுக்கே எங்க அக்காதான் காரணம். ஆரம்பத்துல அவன் நல்லாதான் இருந்தான். வாயில விரல வெச்சா கூட அவனுக்கு கடிக்க தெரியாது. எங்க அக்காவோட ஹஸ்பன்ட் அநியாயத்தை தட்டி கேட்குறேன்னு சுத்தினாரு. அவர் இறந்ததுக்கு பிறகு காவ்யாவும் கார்த்திக்கும் அவரை போலவே மாறிட்டாங்க. மனிச தன்மையே இல்லாத அரக்கன் அவன். அதனாலதான் சொல்றேன். நீ மட்டும் இப்படி பொய் சொல்லி ஏமாத்திட்டு இருக்கன்னு தெரிஞ்சா அவ்ளோதான். உன்னை உயிரோடவே விட்டு வைக்க மாட்டான்டி. தயவு செஞ்சு இங்க இருந்து போய்டலாம்டி.” என்று அழுது புலம்ப
“என்னடி? அவனுக்கு பயந்து நான் இங்க இருந்து ஓடனுமா? என்ன யாருன்னு நினைச்சிட்ட? ஆதித்ய வர்மா பொண்ணு. எங்கப்பா எனக்கு பிரச்சினைய கண்டு பயந்து ஓட சொல்லி தரல. அத தைரியமா பேஸ் பண்ண சொல்லித் தந்திருக்காரு. சாதாரண மனிசன் தானே? அவன் திமிர நான் அடக்கி காட்டறேன் பாரு.” என்று யூவி சபதம் போட்டுக் கொண்டாள்.
“ஏன்டி புரிஞ்சிக்காம பேசுற? கார்த்திக் பண்ணத ரெண்டு கண்ணால பார்த்தேன்னா இப்படி சொல்லிட்டு எல்லாம் இருக்க மாட்ட.” என்றாள் தவிப்புடன்.
“நான் சொன்னது சொன்னதுதான் அவன் திமிர அடக்கிக் காட்றேன்.” என்று கூறிக் கொண்டிருக்க மஹாலக்ஷ்மி தட்டில் உணவோடு உள்ளே வந்தார்.
“இந்தா. உனக்காக தான் கொண்டு வந்தேன். சாப்பிடு.” என்று நீட்ட அவள் உள்ளங் கைகளை பார்வையால் நோக்கினாள். அவளின் சிந்தனையை அறிந்து கொண்டவர்
“இவ்ளோதானா? உன் பிரச்சினை…” என்று கூறிவிட்டு தானே தன் கைகளால் அவளுக்கு ஊட்டி விட்டார்.
அதில் யூவி கண்கலங்க “என்னம்மா என்னாச்சு? ரொம்ப வலிக்கிதா?” என்று கேட்டிட
“இல்லை. அம்மாவும் இப்படித்தான் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா ஊட்டி விடுவாங்க. அதனால அவங்க ஞாபகம் வந்துடுச்சு.” என்று கண் கலங்கினாள் யூவி.
“நானும் உன் அம்மா மாதிரிதானம்மா…” என்று கூற யூவிக்கு அதிக அன்பில் புரையேறி விட்டது. அதில் மிக விரைவாக தலையில் தட்டி தண்ணீரைக் கொடுக்க, அவர் அன்பில் உருகிப் போனாள் யூவி. உடனே தன் அம்மா ஸ்வேதா லக்ஷ்மி முழுவதுமாக நினைவில் வர மஹாலக்ஷ்மியை கட்டிக் கொண்டு அழுதாள்.
“என்னமா? இப்படி கண்கலங்குற? இனிமேல் நான்தான் உனக்கு அம்மா. சரியா? உனக்கு என்ன வேணுமோ அத தயங்காம கேளு.” என்று அவளது தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
தொடரும்…