காளையன் நன்றாக யோசித்து ஒரு முடிவுடன் பூஜை நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே அம்பாளுக்கு தீபாராதனை நடந்து கொண்டு இருந்தது. அவன் வரும்போது வாசலில் இருந்த அம்பாளின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை எடுத்து வந்திருந்தான். மெல்ல கண்களை மூடிக் கொண்டு நின்ற மலர்னிகாவின் அருகில் வந்து, அவளது கழுத்தில் தாலியைக் கட்டினான். முதலில் கண் விழித்துப் பார்த்த பெருந்தேவனார் காளையனின் செயலைப் பார்த்தார்.
“காளையா, நீ என்ன பண்ற?” என்ற பெருந்தேவனாரின் சத்தத்தில் மற்றவர்களும் காளையைப் பார்க்க, அவன் மலர்ணிகாவின் அருகில் நின்றிருந்தான். மலர்னிகாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கியது. எல்லோரும் அவளைப் பார்ப்பதை உணர்ந்த மலர்னிகா தன்னை குனிந்து பார்க்க, கழுத்தில் கிடந்தது மஞ்சள் கயிறு. யாருக்கும் எதுவும் புரியவில்லை. இருவருக்கும் பேசி வைத்திருக்கும் போது, இவ்வளவு அவசரமாக காளையன் தாலி கட்டியதற்கான காரணம் புரியவில்லை.
அதே நேரம் கதிர் அங்கே வேகமாக ஓடி வந்தான். “அண்ணே, சீக்கிரம் வாங்க. ஒரு பிரச்சனை” என்றான். காளையன் வீட்டினரைப் பார்த்து, “நான் பண்ணதுக்கான காரணத்தை வீட்டில போய் சொல்றன். முதல்ல என்னை பிரச்சனைனு பார்த்திட்டு வர்றன்.” என்று கதிருடன் சென்றான்.
இங்கே எல்லாரையும் விசாகம் தான் சமாதானப்படுத்தினார். துர்க்காவும் நடந்தவற்றுக்கு வருந்தவில்லை. நடக்க வேண்டியது நடந்திருக்கு என்று நினைத்துக் கொண்டார். மலர்னிகா அங்கிருந்த படியில் அமர்ந்தாள். அவளின் இருபுறமும் காமாட்சியும் நிஷாவும் இருந்தனர். மூவரும் பேசவில்லை.
கதிர் காளையனை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வெளியே வந்தான். பின் சற்று தூரமாக இருந்த மருந்துக் கடையில் இருந்து ஏதோ வாங்கிக் கொண்டு இருவர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை சுட்டிக் காட்டிய கதிர், “அண்ணே இதோ வர்றானுங்கல ரெண்டு பேரு, இவனுங்க நம்ம ஊர்காரவங்களே இல்லை. இவனுங்க சமையல் நடக்கிற பக்கமாகவே சுத்திட்டு திரியுறானுங்க.
நம்ம வீட்டாக்களை பார்த்துக்கிட்டே போன் பேசுறாங்க. நானும் எதேச்சையாக நடந்ததுனு பார்த்தா, அப்படி தெரியலை அண்ணே. எனக்கு இவனுங்களை பார்க்க சந்தேகமா இருக்கு. ” என்று கதிர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் இருவரும் கோயிலில் பின்பக்கமாக சென்றனர்.
உடனே காளையனும் கதிரும் அவர்களை கொஞ்சம் இடைவெளி விட்டே பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் இருவரும் திரும்பிப் பார்த்து விட்டு, அன்னதானத்திற்கு சமைத்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே அன்னதானம் நடக்கும் இடத்திற்கு கொண்டு போவதற்கு ஒவ்வொன்றையும் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் சாம்பார் வைத்திருக்கும் அடுப்பின் அருகே வந்து நின்றனர். ஒருவன் பையை மற்றவனிடம் காட்டினான். அவன் பைக்குள் கையை விட்டு, ஒரு சிறிய போத்தலை வெளியே எடுத்தான். மூடியை திறந்து கொண்டு இருக்கும் போது அவனது கையை வந்து பிடித்தான் காளையன். மற்றவன் தப்பிக்கப் பார்க்க, அவனைப் பிடித்தான் கதிர்.
இருவரும் சேர்ந்து அவர்களை குளக்கரைப் பக்கமாக இழுத்து வந்தனர். இருவரின் கைகளையும் துண்டினால் கட்டினார்கள். காளையனுக்கு வந்த கோபத்தில் இருவரையும் புரட்டி எடுத்தான். அவனால் அவர்கள் செய்ய இருந்த காரியத்தை நினைக்க நினைக்க, வந்த கோபத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் வாங்கிய பூச்சி மருந்தை கறியில் கலந்திருந்தால் எத்தனை உயிர்கள் போயிருக்கும் என்ற நினைத்தவனுக்கு கோபம் அடங்கவில்லை.
கதிர் தான் காளையனை பிடித்து நிறுத்தினான். “அண்ணே, இதுக்கு மேல அடிச்சா செத்துருவனுங்க அண்ணே. விட்டுடுங்க.” என்றான். அதன் பிறகே அவர்களை விட்டான். “இங்க பாருங்க, நீங்க இந்த ஊரு கிடையாது, யாரு சொல்லி நீங்க இதை பண்ண வந்தீங்கனு சொல்லிடுங்க, இல்லை உயிரோட வீடுபோய் சேர மாட்டீங்க” என்றான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.” நாங்க வெளியூருங்க, எங்களுக்கு பணம் குடுத்து, இங்க சாப்பாட்டில விசத்தை கலக்க சொன்னாங்க. “என்றான் ஒருவன். காளையனுக்கு கோபம் வர அவனது வாயை உடைத்தான்.”ஏன்டா காசு குடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களா? யாருடா உங்ககிட்ட இந்த வேலையை செய்ய சொன்னது? சொல்லுடா” என்றான்.
ஒருவன்,” கேசவன் சாரும், அவரோட பையன் முகேஷ் சாரும் தான் சொன்னாங்க” என்றான். “கேசவனா? அது யாரு அண்ணே? “என்று கேட்டான் கதிர். காளையனுக்கு அந்தப் பெயரை எங்கேயோ கேட்டதாக ஞாபகம் இருந்தது. எங்கயோ கேட்டிருக்கேனே எங்க கேட்டிருக்கிறன் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஞாபகம் வந்தது. துர்க்கா இனியரூபன் இறந்த பின்னர் கேசவன் அவர்களை ஏமாற்றியதாக சொன்னார்.
காளையனுக்கு யோசனையாக அப்போ கேசவன் மாமா கஷ்டப்பட்டதை, அவனோட பெயருக்கு மாற்றிருக்கிறான். மகன், மலரோட சொத்தை எழுதி வாங்கியிருக்கிறான். இவனுங்க ரெண்டு பேரும் எதுக்காக இவங்களை குறி வைக்கணும்? அதுவும் இப்போ நம்ம மொத்த குடும்பத்து மேலேயும் குறி வைச்சிருக்கிறானுங்க. யாரு இவனுங்க? என்று யோசித்தவன். கதிரிடம் அவர்களை போலீஸில் ஒப்படைக்க சொல்லிச் சென்றான்.
ராமச்சந்திரனும் தேவச்சந்திரனும் காளையன் இப்படி செய்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் வந்தவன், “அன்னதானம் குடுத்திட்டு வீட்டிற்கு போகலாம் தாத்தா.” என்றான் பெருந்தேவனாரிடம். அவரும், “அதை இங்க இருக்கவங்க குடுப்பாங்க, எல்லோரும் வாங்க முதல்ல வீட்டிற்கு போகலாம்.” என்று சொல்லி விட்டு செல்ல, அவர் பின்னால் எல்லோரும் சென்றனர்.
அதே நேரம் இங்கே நடைபெற்ற காளையன், மலர்னிகா திருமணம், அன்னதானத்தில் விசம் கலக்க வந்தவர்களை போலிஸிடம் அழைத்துச் சென்றது என்று அனைத்தையும் முகேஷ்க்கு போன் பண்ணி சொன்னான். முகேஷ் கோபத்தில் கையில் இருந்த பியர் பாட்டிலை தூக்கி எறிந்தான்.
வீட்டிற்கு வந்தவர்கள் கூடத்தில் கூடினர். “சொல்லு காளையா, எதுக்காக யார்கிட்டையும் சொல்லாமல் இப்படி ஒரு காரியத்தை பண்ணின?” என்றார். அதற்கு காளையன், “தாத்தா, நான் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன். நிச்சயமா உங்க எல்லோர்கிட்டையும் நான் செய்ததுக்கு காரணம் சொல்லுவன். ஆனால் அது இப்போ இல்லை. யாரும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க.” என்றான்.
காளையன் பேச்சில் தெரிந்த ஏதோ ஒன்று அவர்களை மேலும் பேச விடாமல் தடுத்தது. அப்போது சபாபதி,” தாத்தா, எனக்கு சென்னைல வேலை இருக்கு, நான் காலையில போறன். ” என்று சொன்னதைக் கேட்ட பெருந்தேவனார், “நீ சென்னைக்கு இனிமேல் போக வேண்டாம் சபா, அங்க போனால் உனக்கு பிஸ்னஸ் பண்ணணும்னு ஆசை அதிகமாகும். இந்த பிஸ்னஸ் பண்ணப் போனதாலதான் இந்த வீட்டு மாப்பிள்ளையை இழந்துட்டு நிற்கிறம். அதனால நீ எங்கேயும் போக வேண்டாம்” என்றார்.
அதற்கு சபாபதி மறுத்துப் பேச ராமச்சந்திரன்,” சபா தாத்தாகிட்ட எதுத்து பேசக்கூடாது. அவரோட முடிவுதான் இங்கே எல்லாமே. பேசாமல் போ இங்க இருந்து” என்றார். அவன் எதையும் பேசாமல் மேலே சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
Super kalyanam nanadhuttu