காளையனும் மலர்னிகாவும் சென்ற பின்னர் பெருந்தேவனார் வீட்டில் வேலை பார்க்கும் லட்சுமி துர்க்காவிற்கு போன் பண்ணினார். நீலகண்டனுடன் பேசிக் கொண்டு இருந்த துர்க்காவின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க லட்சுமியிடம் இருந்து வர உடனே எடுத்தார். அந்தப் பக்கம் இருந்த லட்சுமி, “துர்க்கா அம்மா, ஐயாக்கு…ஐயாக்கு” என்றார். துர்க்காவிற்கு பயமாக இருந்தது. “என்ன சொல்ற லட்சுமி அப்பாவுக்கு என்ன?” என்று கேட்டார்.
லட்சுமியே, “அம்மா பெரியையாவுக்கு ஒண்ணுமில்லை. நம்மளோட ராமச்சந்திரன் ஐயாவுக்கு நெஞ்சுவலினு சொல்லி டவுன் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோனோம். ஆனால் அங்க மருந்து இல்லைனு சொல்லி சென்னை ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸ்ல கொண்டு போறாங்க அம்மா. நாங்க பின்னாடியே வண்டியில போயிட்டு இருக்கிறம். எல்லோரும் உடைஞ்சி போய் இருக்கிறாங்க.
ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. சபாபதி ஐயாவும் போயிட்டாரு. காளையன் தம்பி கூட இருந்தா நல்லா இருக்கும். அம்மா நீங்க எங்க இருக்கிறீங்கனு தெரியலை. ஆனால் சீக்கிரமா காளையன் தம்பியையும் கூட்டிட்டு வாங்க அம்மா”என்று சொல்லி போனை வைத்தார்.
அவர் சொன்னதில் இருந்து பயந்து அழுது கொண்டு இருக்கிறார் துர்க்கா. விசயத்தை அறிந்ததும் காளையனுக்கும் பதறியது. இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் மறைத்தவன்,” சரி வாங்க போகலாம். “என்றான். அதற்கு ஹர்ஷா, “அண்ணா நான் வண்டி ஓட்டுறன். ” என்றான். கதிர் ஹர்ஷா அருகில் இருக்க மற்றவர்கள் பின்னால் இருந்தனர். கார் சென்னை நோக்கி செல்லும் வீதியில் சீறிப் பாய்ந்தது.
போகும் வழியில் காளையன் சபாபதிக்கு போன் செய்து நடந்ததைக் கூறினான். சபாபதிக்கு தந்தைக்கு நெஞ்சுவலி என்று சொன்னதைக் கேட்டதும் பயமாக இருந்தது. தந்தைக்கு தவறாக ஒன்றும் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். விசயத்தை மோனிஷாவிடம் சொல்ல, அவளும் வாங்க ஹாஸ்பிடல் போகலாம். என்றாள். இருவரும் ஹாஸ்பிடல் வரவும், அவர்களது ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.
அங்கே சபாபதியை பார்த்ததும் அங்கிருந்தவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. விசாகம், “சபா உன்னோட அப்பாவை பாருடா, எனக்கு பயமாக இருக்கு. காளையனையும் வரச் சொல்லுடா.” என்றார். அவனும் அவர்களை தேற்றி, “காளையா தான் எனக்கு போன் பண்ணான் பாட்டி, அவன் வந்திட்டு இருக்கிறான்.” என்றான். அதே நேரத்தில் அங்கே வந்த டாக்டரிடம் அவரை எப்படியாவது காப்பாற்றுமாறும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொன்னாள்.
ராமச்சந்திரன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உள்ளே அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. வெளியே எல்லோரும் அழுது கொண்டு நின்றுருந்தனர். காமாட்சியும் அழுதழுது சோர்ந்து உட்கார்ந்தாள். விசயம் அறிந்து கேசவனும் முகேஷூம் வந்திருந்தனர். இவர்களது கஷ்டத்தை பார்த்து சந்தோசப்பட வந்த இருவருக்கும், அவர்களது குடும்ப ஒற்றுமையை பார்த்து வியப்பாக இருந்தது. ஒருவருக்கு ஒன்றென்றால் எப்படி இத்தனை பேர் துடிக்கின்றார்கள் என்று அவர்கள் பாசத்தை பார்த்து வியந்து நின்றனர்.
அதே நேரம் காமாட்சி மயக்கம் வந்து கீழே விழப் போக, அவளை தாங்கிப் பிடித்தான் முகேஷ். “ஹேய்.. எழுந்திரு” என்று அவள் முகத்தில் தட்டினான். அதைப் பார்த்து அருகில் வந்த சபாபதி, “காமாட்சி என்னாச்சிமா?” என்று சத்தம் போட்டும் அவள் விழிக்கவில்லை. உடனே அவளை பக்கத்து அறையில் சேர்த்தனர், அவளை பரிசோதித்த டாக்டர், “ஒண்ணுமில்லை, சாப்பிடாமல் இருந்திருக்கிறாங்க. டென்ஷன் மயங்கிட்டாங்க. ட்ரிப்ஸ் போட்டிருக்கு, கொஞ்ச நேரத்தில கண்முழிச்சிடுவாங்க” என்றார்.
ராமச்சந்திரனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. உயிர் பிழைப்பாரா என்றே தெரியவில்லை. நர்ஸ் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தார். எல்லோரும் எல்லாத் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு நின்றிருந்தனர். அப்போது விசாகம்,” ஐயோ கடவுளே என்னோட பையன் ஈ எறும்புக்கு கூட பாவம் செய்யாதவன், அவனுக்கு ஏனு இந்த ஒரு நிலமை? அப்படி என்ன பாவம் பண்ணினான்?” என்று அழுதார்.
அப்போது அங்கே வந்த காளையன், “உங்க பையன் பண்ண பாவத்துக்கு அவரு மட்டுமல்ல, எல்லோருமே அனுபவிச்சுட்டு இருக்கிறம் பாட்டி” என்றவாறு வந்தான். காளையனை அங்கு பார்த்ததும் எல்லோருக்கும் ஒரு தென்பு வந்துது உண்மை. ஆனால் இவன் சொல்வது அவர்களுக்கு புரியவில்லை. தேவச்சந்திரனிடம் வந்தவன், “டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? “என்றான். அவரும்,” எதுவும் சொல்றாங்க இல்லை காளையா” என்றார் அழுது கொண்டு, அவரை தேற்றினான்.
பெருந்தேவனார், “என்ன சொன்ன காளையா என் பையன் தப்பு செய்தானா? என்ன செய்தான்? அவனுக்கு முடியாது என்ற காரணத்துக்காக வீணா பழி போடாத” என்றார். சிரித்த காளையன்,” உங்க பையன் தப்பு பண்ணலை தாத்தா, பாவம் பண்ணியிருக்கிறாரு, ஒரு உயிரை கொலை பண்ணியிருக்கிறாரு.” என்றான். இதைக் கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் கேசவன், முகேஷ், மோனிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
காளையன் சத்தம் போட, அவனருகில் வந்த மலர்னிகா,” இது ஹாஸ்பிடல். அமைதியாக பேசுங்க, இல்லைனா வீட்ல போய் பேசிக்கலாம். “என்றாள். அப்போதுதான் அங்கிருந்த மலர்னிகாவைப் பார்த்தான் முகேஷ். அவளது பழைய தோற்றத்தில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான். அவனை நக்கலாக பார்த்து வைத்தாள்.
“இல்லை மலர் இதை இங்கேயே இப்பவே சொல்லணும். அப்போதான் அவரு பண்ணது எல்லோருக்கும் தெரியும். அவர் பண்ணின ஒரு தப்பால யாரு யாரு பாதிக்கப்பட்டிருக்கிறாங்கனும் தெரியும்.” என்றான். அதற்க்கு பின்னர் அவனை மலர்னிகா தடுக்கவில்லை.
“தாத்தா நான் சொல்லப்போறது ஒண்ணும் கட்டுக் கதை இல்லை. உண்மை அதுக்கான சாட்சியும் இங்க இருக்கு “என்றவன் கேசவனை பார்த்துவிட்டு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லச் சொல்ல அனைவர் முகமும் மாறியது.
“பாட்டி, அப்பா பக்கத்து ஊர் காலேஜ்க்கு போகும் போது, அவர் கூட படிக்கிற பொண்ணான மீனாட்சிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் காலப் போக்கில், காதலர்களானார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். அப்போதுதான் ஒரு பெரிய பிரச்சனை வந்தது. மீனாட்சியோட அப்பா கோயில் நகையை திருடினதாக போலிஸ் அரஸ்ட் பண்ணினாங்க.
இதைக் கேள்விப்பட்ட இவங்க மீனாட்சியிடம் அது பற்றிக் கேட்க, அவர் அப்பா அப்படி செய்யவில்லைனு சொல்லியிருக்கிறாரு. அதை நம்ப மறுத்த ராமச்சந்திரன், மீனாட்சியை திட்டி, ஒரு கொள்ளைக்காரனோட பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க எங்க வீட்டில சம்மதிக்க மாட்டாங்க. அதனால இனிமேல் என் கண்ணு முன்னாடி வராத. உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்லிவிட்டு வந்துட்டாங்க.
இவங்க இப்படி சொன்னதை மீனாட்சியால தாங்கிக்க முடியலை. அழுது கொண்டு வீட்டிற்கு போயிருக்கிறாங்க. அங்க அவங்களோட அப்பாவை திருட்டு கேஸ்ல போலிஸ் அரஸ்ட் பண்ணினதால ஊர்ல உள்ளவங்க அவங்களை ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க, மீனாட்சியும் அவங்களோட அம்மாவும், நம்ம ஊருக்கு வர, தாத்தா நீங்களும் கோயில் நகையை திருடினவனோட குடும்பத்துக்கு இந்த ஊர்ல இடமில்லைனு பேசி அனுப்பிட்டீங்க.
வெளியூர்ல படிச்சிட்டு இருந்த மீனாட்சியோட அண்ணன் ஊருக்கு வர, அவருக்கு எல்லாம் தெரிய வந்தது, உடனே அவரும் அம்மாவையும் தங்கையையும் தேடி அலைந்தார். ” என்று சொல்லிவிட்டு தலையை குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டான் காளையன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
Waiting for next epi divima