காளையனை இழுக்கும் காந்தமலரே : 05

4.8
(17)

காந்தம் : 05

டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்…. 

நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு எடுத்து வைக்கிறன்…..” என்றார். தலையசைத்து விட்டு தனது அறைக்குள் சென்றவள், குளித்துவிட்டு நைட் டிரஸ் அணிந்து கொண்டு கீழே வந்தாள். துர்க்கா சாப்பாட்டை பரிமாறினார்.

“நீங்க சாப்டீங்களா அம்மா….?” என்று கேட்டவளுக்கு, “ஆமா மலர் சாப்பிட்டேன்….” என்று விட்டு அவள் சாப்பிடும் வரை அருகிலே இருந்தார். சாப்பிட்ட பின்னர் அறைக்குச் செல்ல முயன்ற மலரை பேச வேண்டும் என நிறுத்தினார் துர்க்கா. 

எதுவும் பேசாமல் சோபாவில் வந்து அமர்ந்தாள். மகளின் அருகில் இருந்து அவளது கையை பிடித்த துர்க்கா, “மலர் அம்மா ஒண்ணு சொன்னால் கேட்பாயா….?” என்றாள். அதற்கு மலர், “நான் கேட்கிற மாதிரி நீங்க சொன்னா கேட்பேன்…..” என்றாள். 

மலரின் கையை வருடியவர், “மலர் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க நான் ஆசைப்படுகிறேன்…. எனக்கும் வயசாகுதில்லை… திடீரென எனக்கு எதாச்சும் நடந்தா… உன்னை தனியாக விட்டுட்டு போயிட்டமேனு எனக்கு வருத்தமா இருக்கும்….” என்றார். 

அவரை பார்த்தவள், “எனக்கு கல்யாணம் வேண்டாம் அம்மா… நீ மட்டும் எனக்கு போதும்…. உனக்கு எதுவும் நடக்காது…. அப்பிடியே நடந்தாலும்… நானும் உங்கூடவே வந்திடுவன்… என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். 

துர்க்கா, மலரை எப்படி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியும் என்ற யோசனையுடன் அவரது அறைக்குள் சென்றார். 

அன்பு இல்லத்தில் பெருந்தேவனார், விசாகம், ராமச்சந்திரன், தேவச்சந்திரன், காளையன், காமாட்சி என அனைவரும் கீழே சாப்பிட அமர்ந்தனர். குணவதியும் நேசமதியும் எல்லோருக்கும் தேவையானதை பார்த்து பார்த்து எடுத்து வைத்தனர். பின்னர் எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவரவர் அறைக்குச் செல்ல, குணவதியும், நேசமதியும் சாப்பிட இருக்க காளையன் வந்து இருவருக்கும் பரிமாறினான். அவர்கள் தடுத்தும் கேட்கவில்லை. அவர்களை திருப்தியாக சாப்பிட வைத்து விட்டே அங்கிருந்து சென்றான். 

அவனது அறைக்கு செல்லும் வழியில், பெருந்தேவனாரும் விசாகமும் பேசிக் கொண்டிருந்தததை கேட்டான். பெருந்தேவனார் தோளில் தலைசாய்ந்து இருந்த விசாகம், “ஏங்க நம்ம பொண்ணு துர்க்காவை பார்க்காமலே போயிடுவனோனு பயமா இருக்குங்க…. எங்க இருக்கா. என்ன பண்றானே தெரியலை….. அவ எப்பவாவது நம்ம கூட பேசுவானு போன் நம்பரை கூட நாம இத்தனை வருஷமா மாத்தவே இல்லை…. எனக்கு என் பொண்ணை ஒரு தடவையாவது கண்குளிர பார்த்திட்டா போதும்ங்க….” என்று அழுத விசாகத்தை தேற்றினார் பெருந்தேவனார். 

இதைக் கேட்டவாறு தனது அறைக்குச் சென்ற காளையன், அத்தையை எப்படி கண்டுபிடிக்கிற? பாட்டி ரொம்ப கஷ்டப்படுறாங்களேனு தவித்தான்.

அந்த பெரிய வீட்டில் உள்ள மினி பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருந்தான் முகேஷ். அவனால் இந்த தோல்வியை தாங்கிக்க முடியவில்லை. எப்படியாவது மலரை பழி வாங்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு யோசனை வர அதை முதலில் செயல்படுத்த நினைத்தவன், அவனது அடியாட்களை அழைத்து. தனது திட்டத்தை கூறினான். அவர்களும் அவன் சொன்னதை செய்வதாக கூறிச் சென்றனர். 

போதையின் மயக்கத்தில் அங்கேயே விழுந்து படுத்து விட்டான் முகேஷ். 

யாருக்கும் காத்திருக்காமல் ஆதவன் தனது கடமையை செய்ய வந்தான். ஆதவன் வருவதற்கு முன்பே தோட்டத்திற்கு வந்திருந்தான் காளையன். அன்றைக்கு மரக்கறிகள் அறுவடை செய்ய வேண்டிய நாள், அதற்காகவே நேரத்திற்கு வந்திருந்தான். 

அவனைத் தொடர்ந்து வேலை செய்பவர்களும் வந்தனர். சாமியைக் கும்பிட்டு விட்டு முதலில் அறுவடையை ஆரம்பித்து வைத்தான் காளையன். அவன் ஆரம்பித்ததும், மற்றவர்களும் தோட்டத்தில் இறங்கினர். 

வேலை செய்து கொண்டிருக்கும் போது, காமாட்சி காலை நேரச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் பரிமாற வேலை செய்பவர்களுடன் சேர்ந்து, காளையனும் சாப்பிட்டான். அவனருகில் இருந்து வாயை திறந்து உணவை வாங்கிக் கொண்டு இருந்தாள் காமாட்சி. 

காலையில் இருந்து துர்க்காவின் மனம் படபடப்பாக இருந்தது. பூஜை அறையில் கண்ணீருடன் வேண்டிக் கொண்டு நின்றார் துர்க்கா. அவரது வேண்டுதலை அந்த இறைவனே அறிவார். பூஜையை முடித்து விட்டு வெளியே வர, மலர்னிகா வந்து கொண்டிருந்தாள். மகளுக்கு காப்பி எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்துக் கொண்டு இருந்தவளிடம், “மலர் இன்னைக்கு உனக்கு வேலை இருக்கா…?” என்றார். 

அதற்கு “ஆமா அம்மா. வேலை இருக்கு. புது ப்ராஜக்ட் கிடைச்சிருக்கு. அதைப் பற்றி இண்டைக்கு மீட்டிங் இருக்கு. எதுக்காக வேலை இருக்கானு கேட்டீங்க…..?” என்று பதில் கேள்வி கேட்டாள். 

துர்க்கா தயக்கத்துடன், “இல்லை மலர் இன்னைக்கு மனசுக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு. அதுதான் கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு நினைக்கிறன்…..” என்றார் துர்க்கா. 

மலர்னிகாவிற்கு கோபம் வந்தது. அவளுக்கு கோயில் போறது, கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. “அம்மா, உங்களுக்கு தெரியும் தானே எனக்கு இதுல நம்பிக்கை இல்லை….. எதுக்காக என்னை கூப்பிடுறீங்க. உங்களுக்கு போகணும்னா நீங்க போயிட்டு வாங்க அம்மா….” என்றவள், துர்க்கா பேச வருவதையும் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள். 

ஒரு மணி நேரத்தின் பின்னர் கம்பெனிக்கு போவதற்காக ரெடியாகி வந்தவள், சாப்பிடாமலே சென்று விட்டாள். துர்க்கா கவலையோடு அடுத்த வேலையை பார்க்கச் சென்றார். கொஞ்ச நேரத்தில் துர்க்காவிற்கு போன் வந்தது. அதை எடுத்து பேசிய துர்க்கா மயங்கி விழுந்தார். 

அவர் விழுந்த சத்தம் கேட்டு வந்த வள்ளி, உடனே தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினார். “அம்மா எழுந்திருங்க என்று அவரை எழுப்ப, “வள்ளி.. வள்ளி….” என்று பதறினார்.” அம்மா என்னம்மா.. பதட்டப்படாதீங்க. போன் யாரும்மா….? என்ன சொன்னாங்க…..?” என்று கேட்டாள். 

“வள்ளி.. வா…போகலாம்….” என்று வெளியே சென்றார். அவருடன் வள்ளியும் வெளியே வர கார் டிரைவரை அழைத்துக் கொண்டு சென்றனர் இருவரும்… 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

1 thought on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 05”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!