சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 8

3.7
(3)

அத்தியாயம் – 8

ரிஷிக்கு அன்றோடு கடைசி நாள் கல்லூரி. ஆருவின் முகமே கலையிழந்து போயிருக்க, அடிக்கடி கலங்கும் கண்களை ஜான்சியிடமிருந்து மறைப்பது தான் பெரிய சவாலாய் போனது.

“இத்தனை நாளும் கேட்டு அமுக்கினி மாதிரி இருந்துட்டு, இன்னைக்கு என்ன கண்ணா கலங்குது.. சீனியர நினச்சா..” வகுப்பு நடந்துகொண்டிருந்த போதே, ஆரு காதில் கிசுகிசுத்தாள் ஜான்சி.

“சொல்ல கூடாதுனு இல்ல ஜான்சி, அது கூச்சமா இருந்தது அவ்வளவு தான்”

“எங்கிட்ட சொல்ல கூச்சம், ஆனா சீனியர்கிட்ட பேச மட்டும் கூச்சமா இருக்காது, அப்டிதானே..”

“ச்சீ.. போடி, நானே சீனியர் காலேஜ் விட்டு போறாரேன்னு கவலைல இருக்கேன், நீ வேற கிண்டல் பண்ணிட்டு..”

“கவலை காலேஜ் விட்டு போறதா, இல்ல உன்ன விட்டு போறதா சரியா சொல்லு..” ஜான்சி அப்போதும் விடாமல் வம்பு பண்ண, அவள் தோளில் அடித்து சிணுங்கி நகர்ந்தாள் ஆரு.

“இன்னையோட காலேஜ் முடிஞ்சிது, இனிமே இந்த சைட்டிங் டீசிங் ப்லேயிங் இது எல்லாத்தையும் ஓரம் தள்ளி வச்சிட்டு, பொறுப்பான பசங்களா நல்ல வேலைல ஜாயின் பண்ணனும் மச்சா..” இத்தனை பொறுப்பாக சொல்லும் அந்த அவன் வேறு யாராக இருக்க கூடும்! நம்ம சபரி தம்பியே தான்.

“டேய் பொறுப்பு அவியலே, நீயும் அவனும் போயி பொறுப்பா வேலைய பாருங்க டா, கூட என்னையும் எதுக்கு கூட்டு சேக்குற.. ஆல்ரெடி கேப்பில்லாம தொடர்ந்து படிச்சி மண்டை சூடா கெடக்கு, அதுக்குள்ள வேலைக்கு போயி உண்டைகட்டி வாங்கவா..

இப்ப தானே காலேஜ் முடிஞ்சிது, ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு வேளா வேளைக்கு மூக்கு முட்ட சாப்பிட்டு, நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்த பிறகு தான், வேலைக்கு போறத பத்தியே யோசனை பண்ணனும்..” சிவா அவசரமாக சொல்லிக்கொண்டிருக்க,

“கேப் இல்லாம படிச்சதுல ஐயாக்கு கோல்டு மெடல் கன்பார்ம் அப்டி தானே..” துள்ளல் நடையோடு ஓடி வந்த வந்தனாவை, முறைத்து வைத்தான் சிவா.

“இந்தா, நீ நல்லா படிக்கிற பொண்ணு தான், அதுக்காக என்னைய வாரி விடுற வேலையெல்லாம் வச்சிக்காத.. ஆமா என்ன திடீர்னு இந்த பக்கம் காத்து வீசுது” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தியபடி.

“கடைசி நாள் சும்மா பாத்துட்டு போக தான்.. அதுவும் உன்ன இல்ல, இவங்க ரெண்டு பேத்தையும்..” என்றாள் உதட்டை சுழித்தவளாக.

“அய்யடா, பாத்து சுளிக்கிக்க போது.. அப்புறம் வர்ற மாப்பிளையும் தெறிச்சி ஓடிடுவான்..” இவனும் பதிலுக்கு சீண்டி, நகைத்து வைத்தான்.

“அந்த கவலையெல்லாம் உனக்கு வேணாம் டா அரைட்ரவுசர் வாயா..” அவன் உயரத்திற்கு எக்கி நடு மண்டையில் கொட்டு வைக்க,

“ஸ்ஆஆ.. ஏய் குள்ளச்சி என்னையேவா கொட்ற, உன்ன இன்னைக்கு என்ன பண்றேன்னு பாரு..” பரபரவென மண்டையை தேய்த்துக்கொண்ட சிவா அவளை பிடிக்கப் போக, அவன் கையில் சிக்காமல் ஓடி ஆட்டம் காட்டிய வந்தனா,

“நீ கடைசி வரைக்கும் ஆண்டி லவ்வர் தான்டா” மீண்டும் அவனை கலாய்த்து விட்டு கலகலத்தபடி ஓட,

“இவளஆஆ..” பற்களை கடித்து நின்றான் சிவா.

“ஏன் மச்சா, இந்த வந்தனா பொண்ணுக்கும், நம்மாளுக்கும் நடுவுல ஏதோ ஒரு தனி ட்ராக் ஓடுற மாதிரி தோணல..” இருவரையும் பார்த்தபடி சபரி தான் கேட்டது.

“என்ன டா நீ, பிரண்ட்லியா பேசி விளையாடுறதையெல்லாம் ட்ராக் போட்டு யோசிக்கிற.. சிவாக்கு லவ்க்கும் ஏணி வச்சாலும் எட்டாது மச்சா..”

“நீ தான் டா அப்படி சொல்லிக்கணும்.. கொஞ்ச நாளா நானும் கவனிக்க தான் செய்றேன், இந்த சிவா பையன் வந்துவ குறுகுறுன்னு பாக்குறதும், பதிலுக்கு அவளும் இவனை பாத்து ஒரு மார்க்கமா சிரிச்சிட்டு போறதும், சம்திங் ராங் டா மச்சான்.. பீல்ஸ் லைக் த ப்ளாசம் ஆப் லவ்..

இதெல்லாம் ஆரு கூடவே சுத்துறதால நீ தான் கவனிக்காம விட்ட..” சிவாவின் நடவடிக்கை பற்றி சபரி சொல்லிக்கொண்டிருக்க, அதுவரை ஆவலாக கேட்டுகொண்டிருந்த ரிஷி, ஆரு பெயரை சொன்னதும் தன்னால் சிரித்தவனாக,

“டேய் பேசிட்டு இருக்கும் போதே, பாதில எழுந்து எங்க ஓடுற..” சபரி கத்த கத்த காதில் வாங்காது தன் மோகினியை தேடி ஓடினான் குதூகலமாக.

கேண்டினில் ரிஷிக்காக காத்திருந்த ஆராதனா, அவனை பிரிய போகும் சோகத்தில் உள்ள வாடிப்போனாளோ!

“ஓய் ஆரா..” எப்போதும் அழைக்கும் உற்சாக அழைப்பில், மீண்டும் புத்துயிர் பெற்ற மலர்ந்த புன்னகையுடன், தன்மன நாயகனை ஆவலாக பார்த்தாள் அவள்.

“மேடம் ரொம்ப சோகத்துல ஆழ்ந்திருக்குறது போல தெரியிதே” வேண்டுமென்றே சீண்டியபடி அவளருகில் அமர,

“அப்ப உங்க கண்ணுல கோளாறு சீனியர், நல்ல டாக்டரா பாருங்க..” முகத்தை திருப்பியபடி தள்ளி அமர்ந்தாள் ஆரு.

“ஓஹோ.. சரி பாத்திடலாம், அதுக்கு முன்னாடி என் முகத்தை பாத்து பேசு ஆரா, இப்டி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டா எனக்கும் பீலிங்கா இருக்கா இல்லையா..” அவள் தாடை பற்றி தன்னை காண செய்ய, சிறிது நேரம் வரை அவனை அமைதியாக பார்த்தவளாக,

“அடிக்கடி வருவீங்க தானே சீனியர்..” என்றாள் எங்கே மறந்து விடுவானோ என்ற அச்சத்தில்.

“உனக்கும் இன்னும் சில மாசத்துல காலேஜ் முடிய போகுது, அதுவரைக்கும் கண்டிப்பா உன்ன பாக்கவே வருவேன் ஆராகுட்டி..” அவள் கன்னங்கள் பிடித்து ஆட்டிக்கொஞ்ச,

“ஏன் அதுக்கு பிறகு என்ன..” விழிகள் அலைப்புருல சிறு ஐயம் கொண்டு வினாவினாள்.

“அதுக்கு பிறகு என்னன்னா, நீ தான் நம்ம மீட் பண்ண ரூட் போட்டு குடுக்கணும்.. வீட்டுக்குள்ள இருந்தா மேடம் தான் வெளிய வரவே மாட்டிங்களே, அப்புறம் எப்டி எங்க வச்சி பாக்குறதாம்” பெரிதாக அலுத்துக்கொண்டவனுக்கு தானே தெரியும், இவள் வீட்டை சுற்றி வருவதற்கு பதிலாக, கோவிலை சுற்றி இருந்தால் கூட பிரசாதம் கிட்டி இருக்கும் என்று.

“நான் என்ன பண்றது, நீங்க வர்ற நேரமெல்லாம் வீட்ல யாராவது இருக்காங்க.. பைக் ஹாரன் சவுண்ட் கேட்டதும், உடனே ஓடி வந்து எட்டி பார்த்தா சந்தேகம் வராதா சீனியர்..

அண்ணா கண்ணுல இருந்து கூட சில நேரம் தப்பிச்சிடலாம் சீனியர், ஆனா எங்க அண்ணி இருக்காங்களே, நான் சின்னதா அசைஞ்சா கூட அதுக்கான காரணத்தை சரியா கண்டு பிடிச்சிடுவாங்க..” அவளும் ரிஷிக்கு மேல் சலித்துக்கொள்ள, இவளுக்கும் மூன்று மாதத்தில் கல்லூரி முடிந்தால் எங்கு வைத்து காண்பது என்ற யோசனை தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“ஓகே ஆரா, அப்புறம் நடக்க போற விஷயத்தை அப்ப பாத்துக்கலாம் விடு, அதுவரைக்கும் இங்க பாத்துக்கலாம்..” அப்போதைக்கு அந்த பேச்சிக்கு முற்று புள்ளி வைத்திருக்க, ஆருவும் தலையசைத்துக்கொண்டாள்.

“எப்போ உங்க அப்பா ஆபிஸ் போறீங்க சீனியர்”

“நெக்ஸ்ட் வீக்ல இருந்து போகணும்”

“அதுக்கு ஏன் சலிப்பு”

“ச்ச ச்ச சலிப்பு இல்ல டி, இனிமே நான் தானே அப்பாவோட பிசினஸ்ஸ ரன் பண்ணனும், அதுக்காக தானே இத்தனை தூரம் கஷ்டப்பட்டு படிச்சதே, இருந்தாலும் சரியா பண்ணிடுவேனான்னு லேசா ஷிவராகுது”

“அதெல்லாம் நீங்க அசால்ட் பண்ணிடுவீங்க சீனியர், உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆல்ரெடி நீங்க உங்க அப்பா கூட இருந்து பிசினஸ் ரிலேட்டடா நிறைய கத்துக்கிட்டது தானே.. அப்புறம் என்ன, தைரியமா ஆபிஸ் போங்க, கெத்தா எம்டி சேர்ல உக்காந்து கவனமா வர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. எல்லாமே நல்லதா நடக்கும்”

குழப்ப முகத்துடன் இருந்தவன் கரத்தை மென்மையாக பற்றி இதமாக தட்டிக்கொடுக்க, தாயின் சொல்லுக்கு நிகரான அவளது இந்த வார்த்தைகளை ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டான் ரிஷிவர்தன்.

அடுத்த ஒருவாரம் வரை வகுப்பு இடைவேளையின் போது ஆருவை பார்த்து விட்டு சென்றான் ரிஷி. பிறகு சொன்னது போலவே தந்தையின் பிஸ்னஸ் சாம்ராஜ்யத்திற்குள் காலடி எடுத்து வைத்து, தொழில் நுனுக்கங்களை யாவும் ஆசானான தந்தையிடமே கற்றுக்கொள்ள தொடங்கி நன்றாக தான் சென்றது அனைத்தும்.

மகன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் சற்றே நிம்மதியாக உணர்ந்தார் திவாகர். செல்ல மகள் ரிதன்யாவும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி முதல் வருடம் சேர்ந்தாச்சி. பிள்ளைகள் இரண்டும் பெரியோர்களாக வளர்ந்து விட்ட உணர்வு பெற்றோருக்கு.

“ரிஷி ஆபிஸ் போய்ட்டானா சரசு..” எப்போதும் இருட்டோடு வாக்கிங் சென்று வருபவர், இப்போதெல்லாம் விடிந்த பின்னே நிதானமாக வாக்கிங் முடித்து வரும் திவாகர், மதியத்திற்கு மேல் தான் அலுவலகத்தை மேற்பார்வையிட போவது.

“இப்ப தாங்க சாப்ட்டு கிளம்பினான், முக்கியான கிளைண்ட் மீட்டிங் இருக்காமே”

“ஆமா மா, இந்தோனேஷியா பிராஜெக்ட்டை எடுத்ததும் சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டான் நம்ம பையன், அதுக்காக தான் நம்ம கம்பனி கூட அடுத்த பெரிய பிராஜெக்ட் சைன் பண்ண இந்த மீட்டிங்..” அத்தனை பெருமையோடு அவர் சொல்ல,

“கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, உங்கள போலவே ரிஷிக்கும் நல்ல பிசினஸ் மூளை தான்” கணவனையும் மகனையும் எண்ணி மிகுந்த பூரிப்பு கொண்டார் சரஸ்வதி.

மனைவி சொல்லில் புன்னகைத்தவர், “சரிமா, ரித்து வந்தா சாப்பிட வை, அதுக்குள்ள நான் பிரெஷாகிட்டு வந்து காலேஜ்க்கு கொண்டு போயி விட்டு, அப்டியே ஆபிஸ் கிளம்புறேன்” என்றவராக அறைக்கு செல்ல போக, அதுவரை இருவரது சம்பாஷனைகளும் கேட்டப்படியே ஹாட் பாக்சில் சுட சுட இருந்த இட்லியும், சரஸ்வதியை நைசாக பேசி செய்ய வைத்த நாலு வகை சட்னியையும் குழைத்து அடித்துக்கொண்டிருந்த சோபனா,

“அண்ணா ஒரு நிமிஷம்” என தடுத்தார்.

“என்ன சோபா”

“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அண்ணா..” அப்போதும் உண்ணுவதை நிறுத்தவில்லை.

“சரி சொல்லு சோபா”

“ஒண்ணுமில்லண்ணே, நம்ம ரிஷி ஷர்மி கல்யாணத்தை பத்தி பேச தான்..” என ராகம் இழுக்கவும், யோசனையாக கண்ணை சுருக்கினார்.

“அவங்க கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் சோபா..” சரஸ்வதி தான் முன் வந்து கேட்டது.

“அவசரகொடுக்க எதுக்கு அனாவசியமா நடுவுல விழுந்து கேள்வி கேக்குறா.. கல்யாணம் பண்ணி வச்சிட்டு அன்னக்காவடி உன்னையும் உனக்கு பொறந்த புள்ளைம்களையும் எனக்கு கீழ வச்சி ஆட்டிப் படைக்கிறது என் முதல் வேலையே..” வன்மமாக எண்ணிய சோபனா,

“அவசரம் தான் அண்ணி, ஷர்மிக்கும் படிப்பு முடிய போது, ரிஷியும் பிசினஸ் திறன்பட கையாளுறேன்.. இதுக்கு மேல எதுக்கு தாமதிக்கணும்” அவசரமாக பதிலளிக்க, சரஸ்வதிக்கு நெஞ்சி நெருடி விட்டது.

சும்மாவே ரிஷிக்கு இவர்களை பிடிக்காது, இதில் திருமணம் வேறா என்றெண்ணும் போதே தலை சுத்த,

“இதுல நம்ம முடிவு எதுவும் இல்ல சோபா, பசங்க ரெண்டு பேர் மனசிலும் என்ன இருக்குனு முதல்ல கேட்டு, அப்புறம் முடிவெடுப்போம்” என்றதும் சோபாக்கு ஆத்திரம் மூண்டது.

“வேலைக்கார நாய்க்கு எகத்தாளத்த பாரு, இன்னும் கொஞ்ச நாளைக்கு உன்னையெல்லாம் மரியாதையா பேச வேண்டிய கட்டாயத்துல இருக்கேன் டி, அதுவரைக்கும் பேசு.. அப்புறம் இருக்கு உனக்கு..” எண்ணம் முழுக்க நஞ்சாக இருக்க,

“இதுல பசங்க முடிவு என்ன இருக்கு அண்ணி, ஏற்கனவே ரிஷிக்கு ஷர்மி தான்னு பேசி வச்சது தானே, இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா தான் ரெண்டு பேத்துக்கும் பொறுப்பு வரும்.. ஒத்துமையா சேர்ந்து வாழ்க்கைல முன்னேற கத்துப்பாங்க..

இதெல்லாம் உங்களுக்கு புரியாது, நீங்க இருங்க அண்ணா சொல்லட்டும்..” கடைசி வரியை மட்டும் அழுந்த கூறி திவாகரை காண, சரஸ்வதிக்கு மகனை கேளாமல் எங்கே முடிவெடுத்து விடுவார்களோ என்ற கவலை தொற்றிக்கொண்டது.

“சரி சோபா, பசங்க வரட்டும் எதுக்கும் அவங்கள்ட்ட ஒரு வார்த்தை கேட்டு மேற்கொண்டு முடிவு பண்ணிக்கலாம்” என்றவராக அறைக்கு செல்ல முனைய,

“நீங்க சொன்னா சரிதாண்ணா, உங்களுக்கே தெரியும் ஷர்மிக்கு ரிஷிய எந்த அளவுக்கு பிடிக்கும்னு. அவ மனசுல ரிஷிய தன்னோட புருஷனா நினைச்சி வாழ்ந்துட்டு இருக்கா.. அவளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்க கை விட்டுட மாட்டீங்கனு எனக்கு தெரியும் அண்ணா..” எப்படி பேசினால் திவாகர் மனம் கரைவாரோ, அப்படி நைசாக பேசி அவரை அனுப்பி இருக்க, அவரும் யோசனையாக தான் தயாராகி வந்தார்.

“என்னங்க, இது மதியத்துக்கு சாப்பாடு உங்களுக்கும் ரிஷிக்கும் தனி தனியா வச்சிருக்கேன், ரெண்டு பேரும் மிச்சம் வைக்காம சாப்டுடுங்க” அக்கறையாக சொன்ன மனைவியை ஆழ்ந்து பார்த்தார் திவாகர்.

“சரசு மதியம் வந்திடுவேன், ரிஷிக்கு மட்டும் சாப்பாடு போதும், மிச்சத்தை எடுத்துடு” திடீரென அவர் அப்படி சொல்லவும், கணவனை குழப்பமாக பார்த்த சரஸ்வதி,

“ஏங்க என்னாச்சி..”

“இல்ல உங்கிட்ட மனசு விட்டு நிறைய பேசியே ரொம்ப நாளான பீல், அதான் மதியம் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்ட்டு எந்த இடையூறும் இல்லாம டைம் ஸ்பென்ட் பண்ண பிளான்..” இப்போதும் மனைவி மீது ஆசைகூடி அவர் கண்ணடிக்க,

“சரி சரி பொண்ணு வரா பாத்து போய்ட்டு வாங்க..” அவர் சொன்னது போலவே மகனுக்கு மட்டும் உணவை வைத்து, சாந்து மல்லி முகத்துடன் கணவனை வழி அனுப்பி வைத்தார் சரஸ்வதி.

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!