அத்தியாயம் – 10
திருப்பதி போகும் நாளும் இதோ பரபரப்பாக வந்து விட்டது.
ராகவின் தாய் சத்தியாவின் ஆசைப்படி அனைவரும் ரங்கநாதனை தரிசிக்க புறப்பட்டுககொண்டிருந்தாலும், ஆருவை தனியே விட்டு செல்கிறோமே என்ற கவலை அனைவர் மனதிலும் இருக்கவே செய்தன.
“ஆருமா பத்திரமா இருக்கணும் சரியா.. கரெக்ட் டைம்க்கு சாப்டு, ஏதாவது வேணும்னா குக் அக்கா இருப்பாங்க தயங்காம கேளு செஞ்சி தருவாங்க.. காலேஜ்க்கு டிரைவர் அண்ணா பிக்கப் ட்ராப் பண்ணுவாங்க.. கவனமா போய்ட்டு வரணும்..” கிளம்பும் முன் சீதா ஆயிரம் முறையேனும் பத்திரம் சொல்லி இருக்க, புன்னகைத்தபடியே அனைத்திற்கும் சரி சொன்னாள் ஆரு.
“ஆரு தனியா இருந்துப்ப தானே..” அண்ணனவன் அவள் தலை கோத,
“நான் இன்னும் சின்ன பொண்ணு இல்ல அண்ணா, தனியா இருப்பேன் பயப்படாம போய்ட்டு வாங்க” கோதிய கரத்தை கெட்டியாக பிடித்த அழுத்ததில் தன் உறுதியை தெளிவுபடுத்தவும், சிறு புன்னகை தந்த ராகவ்,
“ஓகே டேக் கேர் ஆரு” எனும் போதே,
“பாய் அத்தைஇஇஇஇ..” என்ற கூச்சலோடு அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தத்திட்ட ஷாமை தானும் கொஞ்சி முத்திட்டு காரில் அமர வைத்த ஆரு, அன்னையிடமும் பத்திரம் சொல்லி கொஞ்சி அனுப்பிவைத்தவளின் மனமே பாரமேறி போன உணர்வு.
இதுவரை தனித்திருந்தபோதெல்லாம் தோன்றாத ஒருவித நடுக்கம், தற்போதைய தனிமையில் ஏன் படபடப்பாக தோன்றுகிறது? என்ற குழப்பத்துடனே விட்டத்தை பார்த்தபடி படுத்திருக்க, அலைபேசி ஒலிரும் சத்தத்தில் தன்னை மீட்டெடுத்தாள் பாவை.
“எத்தனை போன் பண்றது ஆரா, இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த..” எடுத்ததும் கொண்ட உரிமை பேச்சில் தானாக பெண்ணின் முகம் ரோஜாவாக மலர்ந்தனவோ!
“கவனிக்கல சீனியர், ஏதோ யோசனைல சும்மா தான் படுத்திருந்தேன்”
“போன் வர்றது கூட கவனிக்காத அளவுக்கு, மேடம்க்கு அப்படி என்ன யோசனையாம்..” அப்பக்கம் அலுவலகத்தின் மேசையில் சாய்ந்து அமர்ந்தான் ரிஷி.
“அதுதான் புரியல, பட் யாரும் இல்லாம ஒருமாதிரி லோன்லியா இருக்கு.. பேசாம நானும் அவங்களாடே போகாம விட்டேனேன்னு இப்போ யோசிக்கிறேன்..” என்றவளின் பேச்சில் உள்ள சோகம் நாயகனின் மனதையும் சென்றடைந்தன போலும்.
“ஓய்.. அதான் நான் இருக்கேனே பிறகென்ன, தனியா இருக்க பயமா இருந்தா சொல்லு சொடக்கு போடுற நேரத்துல உன் முன்னாடி வந்து நிக்கிறேன்.. என்ன பயமா இருக்கா..” குறும்பாக அவன் கேட்ட தொனியில் முகம் சுருக்கிய ஆரு,
“என்ன சீனியர் நீங்க, தனியா இருக்க போரிங்கா இருக்குனு சொன்னா, பயமா இருக்கான்னு கிண்டல் பண்றீங்க..” இங்கு அவள் சிணுங்க, அங்கு அவன் சிரிக்க என்று அர்த்தங்களே இல்லாத ஏதேதோ பேச்சு வார்த்தைகள் ஏராளமாக ஓடியது.
“சரி ஆரா, நீ கொஞ்ச நேரம் எக்ஸாம்க்கு பிரிப்பேர் பண்ணு.. நான் வேலைய முடிச்சிட்டு திரும்ப கூப்பிடுறேன், நாளைக்கு மார்னிங் எப்பவும் போல காலேஜ் வந்திடு, அங்கிருந்தே உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றவனாக போனை வைக்க, அதுவரை இருந்த உற்சாகம் வடிந்த நிலையில் படபடப்பு சூழ்ந்து விட்டது.
“அண்ணாக்கு தெரியாம ஃபர்ஸ்ட் டைம் சீனியர் கூட வெளிய போறேன், ப்ராப்லம் எதுவும் வந்திடாம பாத்துக்கோ கடவுளே!” பதைபதைப்புடன் கடவுளுக்கு வைத்த வேண்டுதல் அவர் செவியை சென்றடையும் முன்னவே, அதலபாதாளத்தில் சென்று சிக்கிக்கொண்டது போலும்.
இதோ காலேஜ் வந்தாச்சு, டிரைவர் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு, ரிஷியோடு நீண்ட தூர தனிப் பயணம். போகும் வழியெங்கும் அவள் கரத்தை விடாமல், விரலோடு விரல் பின்னியபடி தன் மடியிலேயே வைத்திருந்தான் ரிஷி.
சொகுசுக்காரினுள் உள்ள குளுமையினை தாண்டிய பரவசம் இருவரது நெஞ்சிலும் குடிகொள்ள, மெரினா கடற்கரைக்கு முதலில் வந்து சேர்ந்தனர்.
“சீனியர், வெளிய வர்ற பயமா இருக்கு நீங்க மட்டும் போய்ட்டு வாங்களேன்..” விழிகளை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தபடி ஐயத்துடன் கூறிய பெண்ணை, கை கட்டி முறைத்தான் ரிஷி.
“நான் தனியா போகதான் இவ்வளவு தூரம் உன்ன கூட்டிட்டு வந்தேன் பாரு, சும்மா பயப்படாம வா ஆரா..” தானே காரை திறந்து அவளை வெளியே அழைத்து வர்ற, காலை பத்து மணி வெயிலே உச்சி மண்டையை பிளந்து விட்டது.
“என்ன சீனியர் இன்னைக்கு பெருசா கூட்டம் எதுவும் இல்லாம பீச்சே வெறிச்சோடி இருக்கு..” தலையில் ஸ்கார்ஃப் போட்டு மூடி, சன் கிளாஸ் அணிந்து கண்ணை கவர் செய்துகொண்ட ஆரு, ரிஷி கரத்தை இறுக பற்றி நடக்க,
“ஈவினிங் கூட்டமா இருக்கும்னு நினைக்கிறேன் டி, நானும் அதிகம் இங்க வந்ததில்ல” என்றவனாக தானும் கண் கண்ணாடியினை அழுத்திவிட்டுட்டபடி அவள் தோளோடு அணைத்து நடக்க, நேசம் கொண்ட நெஞ்சம் விலக்கி விட நினைக்குமா என்ன!
பொங்கும் அலையில் இருவரும் ஒருசேர கால் நனைத்து, கடல் நீரை மேல் தெளித்து விளையாடி, சில்லறை சிதறும் சிரிப்பொலி மங்காமல் ரெஸ்டாரெண்ட் சென்றவர்கள், பிடித்த உணவு வகைகளை வயிறு முட்ட உண்டு முடித்ததும் தீம் பார்க் அழைத்து வந்தான் ரிஷி.
“சீனியர் எனக்கு ஜெயிண்ட் வீல் போக ரொம்ப பிடிக்கும் அதில ஒரு ரைட் போலாமா..” ஆசையாக அவள் துள்ளிக் கேட்க, மாட்டேன் என்பானா ரிஷி.
இதோ இருவர் மட்டும் தனித்தொரு இருக்கைக் கூண்டில், மூச்சி தீண்டும் தூரத்தில் மிக நெருக்கமாக அமர்ந்திருக்க, மெல்ல மெல்ல மேலுயர்ந்து சுற்ற தொடங்கியது அந்த பெரிய சக்கரம்.
“சீனியர் உங்களுக்கு பயமா இருந்தா தயங்காம என்ன பிடிச்சிக்கோங்க..” கண்களை இறுகமூடியபடி கத்தி சொன்னவளை பற்கள் நரநரக்க குனிந்து பார்த்தான் ரிஷி.
“அடியேய் பயந்தாங்கோலி.. நீயே உயரத்தை பாத்து பயந்து என்ன கட்டி பிடிச்சிக்கிட்டு இருக்க, இதுல நான் வேற உன்ன பிடிச்சிக்கவா அதுவும் பயந்து.. இவ்வளவு பயத்தை வச்சிக்கிட்டு எதுக்கு இந்த ஆசை..” முதலில் அவன் தோளில் முகத்தை புதைத்து, சக்கரம் உயர உயர அவன் நெஞ்சமெனும் மஞ்சத்தில் சரிந்தது கூட உணராத பாவையோ, ரிஷியின் சட்டை காலரை இறுக்கமாக பற்றி இருந்தாள்.
“எனக்கு ஒன்னும் பயமில்லை சீனியர், அண்ணா கூட டூ த்ரீ டைம்ஸ் போயிருக்கேன், அப்போல்லாம் எங்க அண்ணா என்ன இப்டி தான் பிடிச்சி வச்சிப்பார்.. வீல் சுத்தி முடிக்கிற வரைக்கும் என்ன அசைய கூட விடமாட்டார்னா பாத்துக்கோங்க.. அப்ப அவர்க்கு எவ்வளவு பயம் இருந்திருக்கணும்..
அதான் நீங்களும் பயந்துடுவீங்களோன்னு என்ன பிடிச்சிக்க சொன்னேன்.. அதுக்கு போய் என்ன பயந்தாங்கோலினு சொல்றீங்க பாத்தீங்களா..” சிணுங்கி சொன்ன மாபெரும் தைரியசாலி இன்னும் கண்ணை கூட திறந்து பார்க்கவில்லையே!
“அட லூசு..” அவள் செயலை கண்டு பொங்கி வரும் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்ட ரிஷியின் கரம் தானாக உயர்ந்து, அவள் தோளோடு அரவணைத்து இதமாக வருடிக்கொடுத்தவன் மனம் தானோ, இப்போது தடுமாறி தரிகெட்டு போனது.
முதல் இரண்டு மூன்று சுற்றுவரை தேகம் நடுங்கிக்கிடந்த ஆரு, அடுத்தடுத்த சுற்றுக்கு மெல்ல தலை தூக்க பழகியவளாக, அரைக்கண்ணால் சுழலும் அழகை ரசித்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவள், கடைசி வரைக்கும் ரிஷியின் அணைப்பில் இருந்து விலகாது, ஆஆ.. உஉஉஉ.. என்று ஒரே உற்சாகக் கூச்சலிட்டு கத்தி அலப்பறை செய்து விட்டாள் பரவசம் பொங்க.
அடுத்தடுத்ததாக மினி ரோலர் கோஸ்டர், டபுள் ஸீட்டட் பம்மர் கார், டாய் ட்ரெயின், பெடல் போட் என்று ஆருக்கு பிடித்த பல ரைட்களுக்கு சென்று, அவள் பயத்தோடு சேர்ந்து மழைதுளி சிரிப்பையும் நெருக்கத்தையும் வெகுவே ரசித்த ரிஷி, கல்லூரி முடியும் நேரம் வந்ததும், மனமே இன்றி இருவரும் பிரிந்தாக வேண்டிய சூழல் உருவானது.
“எனக்கு மனசே இல்ல சீனியர், பேசாம உங்களோடவே இருந்திடவா..” என்ன நினைத்து அப்படி ஒரு வார்த்தையினை உபயோகப்படுத்தினாளோ! ஆடவனின் உள்ளத்தில் தான், சூறாவளியே சுழட்டி அடித்த உணர்வை உண்டாக்கி சிறு சஞ்சலம் கொண்டது.
“எனக்கும் உன்ன கூட வச்சிக்க ஆசைதான், ஆனா இப்ப முடியாதே பத்திரமா போடி, போன் பண்றேன்..” தூரத்தில் அவள் கார் வருவதை கண்டு சட்டென ஆருவை அணைத்து விடுத்த வேகத்தில், மயிர்க்கூச்செரிந்து தேகம் சிலிர்த்தடங்கினாள் பாவை.
பயத்தை எல்லாம் மறந்து ரிஷியோடு கழித்த அழகிய தருணங்களை நினைத்து தனியாக சிரித்தபடியே குளித்து முடித்து வந்தவளுக்கு, மனம் கொண்டவனோடு ஊர் சுற்றும் போது தெரியாத உடலலுப்பு எல்லாம் இப்போது தான் தெரிந்தது போலும்.
சற்று நேரம் உறங்கலாம் என கண் மூடினால் அலறியது அலைபேசி. அவன்தானா ஆவலோடு எடுத்து பார்த்தவளின் கரம் தன்னால் நடுங்கியது திரையில் மின்னிய ராகவின் எண்னை கண்டதும்.
“ஹ.ஹலோ சொல்லுங்க அண்ணா..” என்றவளுக்கு தொண்டைக் குழியில் மீன் முள் சிக்கிய உணர்வு.
“என்ன பண்ற ஆரு.. காலேஜ் போய்ட்டு வந்துட்டியா..” ராகவின் குரல் மென்மையாக ஒளிக்கவும் தான், சற்று ஆசுவாசமாய் மூச்சிட்டாள்.
“ஹான் அண்ணா, வந்து கொஞ்ச நேரம் தான் ஆச்சி..” இதனை சொல்வதற்குள் நா பிதற்றி தடுமாறி போனது.
“ஓகே ஆரு, இதோ சீதா பேசணுமாம் பேசு” என்றவனாக மனைவியிடம் போனைக் கொடுக்க, சிறிது நேரம் பேசி விட்டு போனை வைப்பதற்குள் வெயிட்டிங் காலில் வந்தான் ரிஷி.
“யாரு ஆரா உன் அண்ணனா..” எடுத்ததும் கேட்ட கேள்வியில் பெருமூச்சு விட்ட ஆரு,
“ஆமா சீனியர், கொஞ்ச நேரத்துல என்ன பேசுறதுன்னே தெரியல, அந்த அளவுக்கு பயத்துல கை கால் எல்லாம் நடுங்க தொடங்கிடுச்சி..” படபடப்பாக சொன்னவளுக்கும் ஏசியிலும் வியர்வை பூத்து விட்டது.
“வீணா பயந்து சாகாம ஒழுங்கா சாப்ட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு டி, நான் நைட் கூப்பிடுறேன்..” என்றவனாக போனை வைக்க, ரிஷி பேசியதும் உள்ளத்தில் சாரல் வீசிய உணர்வோடு, உண்ண கூட மறந்து அப்படியே கண்ணசந்தாள் ஆராதனா.
தொடரும்.