அத்தியாயம் – 11
காலையில் இருந்து கொளுத்தி எடுத்த சூரியன் முற்றிலுமாக மறைந்து, இரவு நேர கருமை சூழ்ந்து குளுங்காற்று வீசி மழை பொழியும் அறிகுறியாக, சிலுசிலுவென்ற துளி துளி தூறல் பூவாக தூற துவங்கிய தருணம் அது.
“என்னபா, இன்னும் ரெண்டு இட்லி வைக்கவா” சரஸ்வதி இன்னும் இரண்டு வைக்க போக, கை மடக்கி தடுத்த ரிஷி,
“போதும்மா, இதுவே வயிறு ஃபுல்” வாயில் இருந்த இட்லியை கூட விழுங்காமல் அவசரமாக உரைக்க,
“சரிப்பா மெதுவா சாப்புடு எதுக்கு இவ்வளவு வேகம்” வேகமாக வேகமாக உணவை பிய்த்து வாயில் போடும் மகன் தலையினை மென்மையாக வருடி விட்டார் சரஸ்வதி.
“பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க ம்மா, நைட் வர்ற லேட் ஆகும்.. எனக்காக வெயிட் பண்ணாம டோர் லாக் பண்ணிட்டு தூங்குங்க.. எங்கிட்ட ஸ்பேர் கீ இருக்கு, நானே டோர் ஓபன் பண்ணி வந்துப்பேன்” என்ற ரிஷி வேகமாக தனது இருசக்கர வாகனத்தில் பறந்து விட,
“இந்த மழையில பொறப்பட்டு போறானே” தாயுள்ளம் தான் கவலையில் மூழ்கியது.
தூறல் மழை சிறுக சிறுக வேகமெடுத்து பொழியத் துவங்குவதையெல்லாம் கருத்தில் கொள்ளாது நேராக பேக்கிரி வந்த ரிஷி, ஆருக்கு பிடித்த காஜு கத்லி, கார சிப்ஸ் வகைகளை வாங்கிக்கொண்டவனாக அவள் வீட்டின் அருகே வந்து சத்தமின்றி பைக்கை நிறுத்திய ரிஷி, பெருக்கெடுத்த மழையிலும் நனைந்தபடியே அண்ணாந்து அவ்வீட்டு காம்பவுண்டை பார்த்தான்.
“விட்டா சீனப் பெருஞ்சுவருக்கே டஃப் கொடுத்திருப்பான் போல, இந்த முன்னால் வீட்டு ஓனர்.. அப்படி எவன் உள்ள புகுந்திடுவான்னு இந்தேதண்டி சுவத்தை கட்டி வச்சிருக்கான்..” வாய் விட்டே புலம்பிய ரிஷிக்கு, பழமையான பெரிய மரத்தை துண்டு துண்டாக வெட்டி சுவற்றினருகே போட்டு வைத்திருந்தது வசதியாய் போனது.
நல்லவேளை மழை காரணமாக வாட்ச்மேன் தனது கூடாரத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்க, எப்படியோ குரங்கு வித்தை காட்டி சுவரேறி குதித்த ரிஷி, நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த சன்னல் கம்பிகளை பிடித்தேறி, ஆருவின் அறை சன்னலை அடைந்திருந்தான்.
கல்லூரி விடுமுறை என்றால் போதும், இங்கிருந்து தானே இருவரின் பார்வைகளும் ரகசிய பரிமாற்றம் நடந்தேறும். அதனாலே எளிதாக அவளறையினை கண்டுகொண்ட ரிஷி, சாளரம் வழியே உள்ளே பார்த்தான்.
லைட் லாவண்டர் நிறத்திலான இரவு உடையினை அணிந்து, மொட்டு வாய் லேசாக பிளந்து, பஞ்சி படுக்கை மீது ஆழ்ந்த நித்திரை கொண்டவளின் வண்ண வதனத்தில் நிலவொளி விழுந்து, மேலும் தானே பிரகாசத்தை கூட்டியது.
பளிச்சிடும் அவள் அழகை மறைக்கவே, மெல்லிய காற்றில் சரிந்து முகத்தில் படர்ந்தனவோ அந்த கார்கூந்தல்.
ப்ச் உச்சிகொட்டிய ரிஷி, நிசப்தமான அறைக்குள் பெண்ணவளின் சுவாசத்தின் சப்தமே இசையாக கலந்திருக்க, தானும் அதனை ஆழ சுவாசித்தபடி அவளருகே வந்தவனாக, மெதுவாக குனிந்து முகத்தில் படர்ந்த முடிக்கற்றுகளை விலக்கி விட, ஆடவனின் ஈரமான ஸ்பரிசத்தில் பால்முகம் சுருக்கவும், உடனே கரத்தை இழுத்துக்கொண்டான் ரிஷி.
“தனியா இருக்க போர் அடிக்குதுன்னு பீல் பண்ணாளேன்னு, அடிக்கிற மழையையும் பொருட்படுத்தாம தொப்பறையா நெனஞ்சிக்கிட்டு இவளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்க ஓடி வந்தா, இவ என்ன இப்டி தூங்குறா..” தன் முகத்தில் வடிந்த மழை நீரை சுண்டி விட்டவனின் தேகமோ, குளிரில் நடுங்கியது.
“அடியே ஆரா, என்ன டி இப்டி தூங்குற.. இதுல ஏசி வேற புல் ஸ்பீட்ல வச்சிருக்கா பாரு” உள்ளே நொந்தாலும், அத்தனை குளிரை தாண்டி பெண்ணவளின் அருமுகத்தை ரசிக்கத் தவறவில்லை அவன்.
எத்தனை நேரம் மழைநீர் சொட்டும் ஈர உடையோடு நின்றிருந்தானோ!
மாலை பொழுதே உறங்கியவளுக்கு வயிறு பசிக்கவே, மெல்ல கண் விழித்து பார்த்த ஆராதனா அதிர்ந்து போனாள்.
“ஸ்.சீனியர் நீங்க எப்டி இங்க..” வந்திருப்பது மெய்யாலுமே அவன் தானா! இல்லை கனவா! என்ற ஐயத்தோடு கண்ணை கசக்கிப் பார்த்தும் அங்கேயே தான் நின்றான் ரிஷி.
“அம்மா தாயே இப்பவாது எந்திரிக்க மனசு வந்துதே, ஒரு டவல் இருந்தா குடேன் குளிர் தாங்கல..” பற்கள் டைப்படிக்க பாவமாக மொழியவும் தான், அவனை முழுமையாக பார்த்தாள்.
“அச்சோ என்ன சீனியர் இது, இப்டி நனைஞ்சு வந்திருக்கீங்க.. ஆமா இந்த மழைல எதுக்காக இங்க வந்தீங்க, யாராவது பாத்து அண்ணா அண்ணிகிட்ட சொன்னா அவ்வளவு தான், என்ன தொலைச்சிடுவாங்க..”
ரிஷிக்கு உடல் குளிர் என்றால் இவளுக்கு பயத்தில் குளிர் காய்ச்சலே வந்து விட்டதை போல, கைகால்கள் நடுங்கிய நிலையில் டவலை எடுத்து அவனிடம் நீட்ட, ஆருவின் ஆச்சத்தை உள்வாங்கியபடியே அதனை வாங்கி தலையினை துவட்டியவனை கண்டு திருத்திருவென முழித்து நின்றாள் ஆரு.
“இவ்வளவு தூரம் பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல டி, நான் வந்தத யாரும் பாக்கல.. வாட்ச்மேன் மழைக்கு ஒதுங்கியாச்சு, உன் வீட்டு சர்வண்ட்ஸும் யாரும் இல்ல, சோ பயப்படாம இரு சரியா.. வந்தது போலவே யார் கண்ணுக்கும் படாம திரும்ப போய்டுவேன்..”
அழுத்தம் திருத்தமாக அவன் சொன்னதை கேட்ட பின்பு தான், சற்றே தெளிவடைந்தது பெண் முகம்.
“என்ன சீனியர் திடீர்னு வந்திருக்கீங்க, அதுவும் அன்டைம்ல..” என்னதான் இயல்பாக பேச முனைந்தாலும், மனதை களவாடிய கண்ணனாகவே இருந்தாலும், வீட்டில் யாருமில்லாத இரவின் தனிமையில் ஒரு வயது பையன் தன்னை காண, தன் அறைக்கே வந்திருப்பதை எண்ணி நெஞ்சம் கதிகலங்காமல் இல்லை.
“ம்ம்.. அன்டைம்ல உங்க வீட்டு காம்பவுண்ட தாண்டினா ஐம்பது கோடி தராங்கன்னு கேள்விபட்டேன், அதான் வாங்கிட்டு போக வந்தேன்.. நிலைம புரியாம ஏன் டி இப்டி கேள்வியா கேக்குற,
குளிருது ஆரா, முதல்ல அந்த ஏசிய கம்மி பண்ணு..” மார்பின் குறுக்கே கரங்களை கட்டி நின்றவனின் தேகம் நடுங்குவதை உணர்ந்த ஆரு, அவசரமாக ஏசியை குறைத்து வைத்தவளாக,
“இப்ப பரவால்லையா சீனியர்” என்றாள் ஒன்றும் புரியாத நிலையில்.
“என்னத்த பரவால்ல, தனியா என்ன பண்ணுவியோன்னு நினைச்சி ரிஸ்க் எடுத்து இந்த மழைல வந்தேன் பாரு, என்ன சொல்லணும்.. இந்தா உனக்காக வாங்கிட்டு வந்தேன், போரடிச்சா சாப்பிடு, நான் அப்டியே கிளம்புறேன்..” என்றவனுக்கு தான் படுபயங்கர ஏமாற்றம் அவளின் இந்த அச்சம் நடுக்கம் கண்டு.
“என்ன சீனியர் வந்ததும் போறேன்னு சொல்றீங்க, அதுவும் இந்த மழையில எப்டி போவீங்க..” பரிதவிப்பாக கேட்ட பெண் மனம் தானே செய்வதறியாது அல்லாடியது. இந்த நேரத்தில் அவனை தனியே விடவும் மனம் வராமல், தன்னோடு தங்க வைக்கவும் முடியாமல் தவிப்பாக அவன் முன் வந்தாள் ஆராதனா.
“வேற என்ன பண்ற சொல்ற ஆரா.. உன்ன பாக்க ஆசையா வந்தா, ஏன்டா வந்தான் அப்படின்ற மாதிரியே ரியாக்ட் பண்றியே..” என்றான் முகத்தை தூக்கி வைத்து.
“ஏன் இப்டி நிலைமை புரியாம கோவப்படுறீங்க சீனியர்.. என்னதான் நம்ம பிரண்ட்ஸா இருந்தாலும், நீங்க பையன் நான் பொண்ணு, இந்த டைம்ல வீட்டுக்கு வந்தா பயம் இருக்காதா.. சரி முதல்ல வாங்க அண்ணா ட்ரெஸ் தர்றேன், மாத்திக்கோங்க, மழை விட்டதும் போலாம்..” படபடப்பாக மொழிந்த ஆரு, ராகவின் உடையினை கொண்டு வந்து கொடுத்தவளாக,
“ரெஸ்ட் ரூம் அங்க இருக்கு யூஸ் பண்ணிக்கோங்க..” இடது பக்கம் கை நீட்ட, வேகமாக உள்ளே சென்றான் ரிஷி.
கிட்டத்தட்ட இருவருமே ஃபிட்டான உயரமான தேகம் கொண்டவர்கள் என்பதால், மேற்சட்டையின் அளவு ரிஷிக்கும் பொருந்தி போக, தளர்வான ட்ராக் பேண்ட்டை அணிந்துக்கொண்டு வெளியே வந்தவனை இமைக்க மறந்து பார்த்தாள் ஆரு.
“என்னாச்சி ஆரா..” அவள் பார்வையின் மாற்றத்தில் தன்னையே ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டான் ரிஷி.
“அது ஒண்ணுமில்ல, இந்த ட்ரெஸ்ல பாக்க அப்டியே எங்க அண்ணன போலவே இருக்கீங்க சீனியர்” வியப்பு மேலிட அவள் சொன்னதை கேட்டு,
“சந்தடி சாக்குல என்னைய அண்ணான்னு சொல்ற.. ம்ம்..” இவன் பொய்யாக முறைக்க, இவள் நாக்கை கடிக்க என்று இருவரது செயலையும் தங்களை மீறி ஆழமாக ரசித்துக்கொண்டனர்.
“நிஜமா எனக்கு பிடிக்கும்னா இதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க சீனியர்..” பசி மறந்த ஆரு, காதலன் வாங்கி தந்த நொறுக்கு தீனிகளை காலி செய்வதில் முனைப்பாக இருந்தாள்.
“இல்ல, உன் வீட்டு பக்கத்துல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்காளே அவளுக்கு வாங்கிட்டு வந்தேன்” முறைப்பாக அவன் சொல்ல, தலை குனிந்து புன்னகைத்த ஆரு, தன் மெத்தையில் உரிமையாக படுத்திருந்தவனை கள்ளமாக பார்த்தவளுக்கு உள்ளமெல்லாம் சிலிர்ப்பாக தோன்றியது.
எப்போது அவனை காதலனாக மனதில் உருவகப்படுத்தினாளோ, அப்போதிலிருந்தே ரிஷியுடனான அந்யோய கனவுகளை காண தொடங்கி விட்டாள் தான். அதற்காக நேரில் வருவான் என்று ஒருநாளும் நினைத்ததில்லையே!
இதோ தன் அண்ணனின் வெள்ளை நிறத்திலான இரவு ஆடையில், தலை கலைந்த போதிலும் இன்னும் அவன் வசீகரம் கூடி, பார்க்கவே திகட்டாத சௌந்தர்யத்துடன் மல்லாக்க படுத்து கண் மூடி இருந்தவனை தன்னை மீறி இவள் ரசித்து பார்க்கும் நேரம், திடீரென புரண்டு ரங்கநாதன் போசில் படுத்து தன்னையே ஆழமாக பார்வையால் களவாடுவான் என்றும் நினைத்தாளா என்ன!
அவன் திடீர் செயலில் இமைகள் படபடத்து நெஞ்சிக்கூடு திடுக்கிட்டு தடுமாறிய ஆரு, “என்ன” என பார்வையாலே விசாரிக்க, “ஒண்ணுமில்ல” என கண்ணை சிமிட்டி சைகை செய்த கள்ளனின் பார்வை தானோ, இப்போது இன்ச் விடாமல் பெண்ணை விழுங்கியது.
லைட் லாவண்டர் நிற தளர்வான லோ நெக் இரவு ஆடை, கன்னிகையின் மெல்லிய வடிவத்தை லாவண்யமாக காட்டிட, ஒன்னும் பாதியுமாக முடியை சுருட்டி கேட்ச் கிளிப் போட்டு அடக்கி இருக்கும் அழகோடு, தூங்கி எழுந்த போதும் மங்காத அவள் முக பொலிவின் வர்ணனைகளை எல்லாம் காலம் முழுக்க கண்டு களிக்கலாம் போலிருந்தது ஆடவனுக்கு.
அதிலும் அந்த சொக்க வைக்கும் பூ விழிகளை கண்டால், எப்பேர்ப்பட்ட வேத மந்திரங்களை கற்ற விஷ்வாமித்ரனாகவே இருந்தாலும், புத்தி தடுமாற செய்யுமே! அதில் இந்த ரிஷிவர்தன் எம்மாத்திரம்.
மனம் கொண்டாடும் பெண்ணின் அறையில், யாருமில்லா தனி உலகில் இருவர் மட்டும் தனித்திருக்க, ஒருவர் முகத்தை மற்றொருவர் இயல்பாக பார்த்துக்கொள்ளவே தயக்கமாய் போனது.
“உன் ரூம் நல்லா இருக்கு ஆரா..” அவனாக தான் முதலில் பேச்சு கொடுத்தது.
“ம்ம்..” மட்டும் கொட்டியவளை ஆழ்ந்து பார்த்த ரிஷி,
“நீயும் தான்..” சட்டென சொன்னவனை தலை தூக்கி பார்த்தவளுக்கு தானே, பேச நா எழாமல் திணறிப் போனது.
“என்ன பதிலே காணல..”
“ஹாங்..”
“கண்ண கண்ண உருட்டி அப்படி பாக்காத டி, உள்ள என்னவோ பண்ணுது” தன் இதயப் பக்கம் மென்மையாக தடவிக் கொண்டவனை, அப்போதும் விழித்து பார்த்து, இதழ் துடிக்கும் அந்த குறுஞ்சிரிப்பை அடக்குவதை காணக் காண, இதுநாள் வரை தோன்றாத ஏதோ ஒரு தீவிர உணர்வு விறுவிறுவென உள்ளூரப் பாய்ந்து, ஆடவனின் சித்தம் கலைக்க வெட்ப மூச்சி வெளிவந்தது.
எப்போதும் என்ன பேசுவார்கள் என்றே தெரியாத நிறைய பேச்சுகள் பேசும் இருவருக்குமே, இப்போது பேச வார்த்தை வற்றிவிட்டது போலும். அவ்வப்போது இவள் தயக்கமாக தலை தூக்கி பார்க்கும் போதெல்லாம், அவன் கத்தி பார்வை தன் இயத்தை குத்தி உணர்வுகளை சிதறடிப்பதை போலான படபடப்பு தோன்றுவதை என்ன செய்து அடக்குவது!
நாணத்தில் பூத்திருக்கும் பனிமலரின் கரத்தை அவன் மெல்ல பற்ற, மின்சாரம் தாக்கிய உணர்வில் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அவனை.
“எ.எ.ன்ன” சின்ன சின்ன விரசமில்லா தொடுகை எப்போதும் சகஜம் தான், இன்று ஏனோ ரிஷியின் சிறு செயல் கூட புதிய உணர்வுகளை கடத்தியது இதயத்தில்.
“மச், தெரியல ஆரா, உன்ன பாக்குற வரைக்கும் நல்லா தான் டி இருந்தேன், பட் நவ், மை ஹார்ட் பீல்ஸ் டிஃபரென்ட்..
திடீர்னு என்னென்னவோ தோணுது டி, ம்ம்.. அதை எப்டி உனக்கு சொல்லி புரிய வைக்கிறது.. நீயே இங்க தொட்டு பாரேன், என் ஹார்ட்பீட் வேகத்தை..” பற்றி இருந்த பெண்கரத்தை சட்டென தன் இதய நெஞ்சில் வைத்து அழுத்திக்கொள்ள, பட்டாம்பூச்சி இமைகளை விரித்து பேந்த பேந்த விழித்தாள் பாவை.
ஆடவனின் இதயத்தாளம் ஆருவின் உள்ளகைகுள் ஒலிப்பதோடு, அவன் தேகச்சூட்டின் அளவும் விறுவிறுவென அதிகரிப்பதை உணர்ந்து வெடுக்கென கரத்தை உருவிக்கொள்ள, மீசை முடி துடிக்க அவளை நெருங்கி அமர்ந்தான் ரிஷி.
“ஏதாவது புரிஞ்சிதா ஆரா..” கிசுகிசுக் குரலால் கவிழ்ந்திருக்கும் அவள் முகத்தாடை பற்றி நிமிர்த்த, அவனது இதய ஓசைக்கு இணையாக, ஆருவின் இதயத் துடிப்பும் ஒரே அலைவரிசையில் அதிவேகத்தில் படபடத்துக்கொண்டிருப்பதை, இருவராலுமே உணர முடிந்தது.
“எ.என்ன சீனியர், திடீர் திடீர்னு புரியாத பாஷையெல்லாம் பேசுறீங்க.. எனக்கு எதுவும் புரியல..” அவன் நெருக்கம் அனலாய் கொதிக்க, பட்டென்று கரத்தை தட்டி விட்டு எழ முயன்றவளை தடுத்து மீண்டும் அமர வைத்தவனாக,
“ஸ்வீட் எப்டி இருந்துதுன்னு சொல்லவே இல்லையே..” ஒற்றை புருவம் மேலுயர்த்தி அவள் செவ்விதழை நோக்கியபடியே சம்மந்தமில்லாமல் கேட்டதும், ஹாங்.. என விழித்த ஆரு,
“ந.நல்..நல்லா இருந்துது..” திக்கித் திணறி சொல்லி முடிக்கவில்லை, நொடிக்கும் ஷணத்தில் அவள் உதட்டோரம் ஒட்டி இருந்த இனிப்பை அவன் இதழ் கொண்டு சுவைக்கத் தொடங்கி இருக்க, மூச்சி முட்டும் அதிர்ச்சியில் வெண்பனியாக உறைந்து போனாள் காரிகை.
தொடரும்.