சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 12

4.5
(4)

அத்தியாயம் – 12

 

என்ன நடக்கிறது? மூளை திடுக்கிட்டு கலக்கம் கொள்ள, நடப்பது தவறென்று ஆழ்மனம் அவனை தள்ளி விட உந்தினாலும், ஆழமாக பதிந்திருக்கும் உள்ளத்தின் நாயகன் திடீரென கொடுக்கும் இதழ் உண்ணும் முத்தத்தில், அகல விரிந்த கண்கள் மெல்ல குடை சாய்ந்தனவோ, உணர்வுகளை சூரையாடும் ஆணவனின் ஸ்பரிச சுகத்தில் மூழ்கி.

 

இரண்டு வருட கால விரசமில்லா காதல்நயமுள்ள நட்பு, தனித்திருக்கும் மோகன சூழலில் இருவரின் மனமும் தடுமாறி, இருவருமே தங்கள் கட்டுப்பாட்டை இழந்து போயினரோ! அந்த மோக மயக்கத்தில் சிக்கி.

 

எந்த பெண்ணிடமும் கண்ணியம் தவறாது பழகும் ரிஷி, இவளிடம் மட்டும் தன்னிலை இழந்து போன காரணம் புரியாது, ஒற்றை உயிர் பருகும் முத்தத்தில் மந்தாரை மலரை தன்வசமிழுத்து கொண்டிருக்க, மழையின் சத்தத்தோடு சேர்ந்து, இதயங்களின் தாளங்களும் இன்றிணைந்து எல்லை கடந்த தூண்டுதல் உருவாகி விட்டது அங்கே!

 

“ஆராஆஆஆ..” ரிஷியின் ஒவ்வொரு ராக அழைப்பிலும்,

 

உணர்ச்சியின் பிடியில் சிக்கித்தவித்த பருவப் பெண்ணின் கள் வடியும் தேகம் தன்னால் மாயோனிடம் குழைந்து, யோசிக்கும் திறனை இழந்து, மெல்ல மெல்ல தன்னையே மறந்த நிலையில், தடையின்றி தன்னை தொலைத்தாள் சிந்தை தவறியவளாய்.

 

மழையின் வேகம் குறைந்த போதும், காதலர்களின் மோகம் குறையாது வேட்கை தொடர்ந்துகொண்டிருக்க, சூரியன் உதயமாகும் நேரம் தங்களை மீறி கண்ணசந்த சில மணித்துளியில் டொக் டொக்.. கதவு தட்டும் சத்தத்தில் பதறி எழுந்தாள் ஆராதனா.

 

இரவு நடந்த ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வந்து போக, மொத்த உடலும் குப்பென வியர்த்த நிலையில் தலை குனிந்து பார்த்த ஆரு, தன் வெற்றிடையில் கை போட்டு சொகுசாக கண்ணுறங்கும் காதலனை கண்டதும், அச்சத்தில் தேகம் வெடவெடத்து இறுக்கமாக வாய் பொத்திக்கொண்டாள்.

 

விடாது தட்டும் கதவு சத்தம் வேறு பெண்ணின் இதயத்தை அதிர வைக்க, அவசரமாக உடை மாட்டியபடி தரையில் பாதம் பதிக்கவும், நிற்க வலுவின்றி தடுமாறி விழப்போனவளின் வயிற்றில் கரமணைத்து,

 

“ஏய் பாத்து ஆரா” என்றபடி தாங்கிப் பிடித்திருந்தான் ரிஷிவர்தன்.

 

எகிறிய உயிர்த்துடிப்போடு சிவந்த விழிகளால் அவனை ஏறிட்டு பார்த்த செந்தாழை கன்னியை, ரசனை மின்னும் விழிகளால் ஊடுருவினான் கள்ளன்.

 

“ய்.யாரோ கதவு தட்றாங்க சீனியர், சத்தம் போடாம இருங்க பாத்துட்டு வர்றேன்..” அவனை நேர்கொண்டு பார்க்கவே திராணியற்ற நிலையில், தயக்கம் இருந்த போதும் வேறு வழியின்றி உரைத்தவளாக கட்டாயமாக அவன் கரத்தை தட்டி விட்ட ஆரு, வேகமாக கதவருகே வந்து நின்று ஆழ்ந்த மூச்செடுத்து, கலைந்த தலையினை சீர்திருத்தியபடி அறைக்கதவை லேசாக மட்டும் திறந்து பார்த்தாள் படபடப்பு குறையாது.

 

“ஆரு பாப்பா..” சமையல்க்கார பெண்மணியின் குரலில் தன்னிலை அடைந்தவளுக்கு,

 

“ஹப்பா, குக் அக்காவா..” என்ற ஆசுவாசம் வந்தது.

 

“என்ன க்கா, இவ்வளவு காலையிலே கூப்பிடுறீங்க” சகஜமாக பேசினாலும், உள்ளே அத்தனை பயம் நெஞ்சை கவ்வி தொங்கலாடியது.

 

“காலையா, மதியமே ஆக போது பாப்பா.. நைட் சுட்டு வச்ச இட்லியும் சாப்பிடல, சரி காலை சாப்பாடாச்சி சாப்பிட வருவீங்கன்னு பாத்தா, அதுவும் வரல.. இப்டி இருந்தா சீதாம்மாக்கு நான் என்ன பதில் சொல்றது, முக்கியமா உடம்பு என்னத்துக்கு ஆகுறது..

 

அதான் மதியமாவது சாப்பிட கூப்பிடுவோமேன்னு நானே வந்தேன்..” சிறு கண்டிப்பான அக்கறையுடன் அப்பெண்மணி உரைக்க, பதில் சொல்ல தெரியாது விழிகளை உருட்டினாள் ஆரு.

 

“எனக்கு பசி இல்ல க்கா, அதான் சாப்பிட வரல.. கொஞ்ச நேரத்துல பிரஷப்பாகி கீழ வர்றேன் நீங்க போங்க” திக்கித் தடுமாறி சொன்ன ஆரு கதவடைக்க போக,

 

“காலேஜ்க்கும் போகல போலயே பாப்பா, உடம்புக்கு எதுவும் முடியலையா என்ன..” மீண்டும் தொடுத்த கேள்விதனில் படபடப்பானவளாக,

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல க்கா, நானா தான் ஸ்டடி லீவ் எடுத்துக்கிட்டேன்..” முடிந்த மட்டும் இயல்பாக பதிலளிக்கவும் அந்த பெண்மணியும் சரி என்று கீழே சென்று விட, இவள் வேகமூச்சு விட்டு திரும்ப கூட இல்லை, சூடான அணைப்பிற்குள் சிக்குண்டு மூச்சடங்கிய நிலையில் பட்டுதேகம் சிலிர்த்து நின்றாள்.

 

“ஸ்.சீனியர் என்ன பண்றீங்க..” கழுத்து வளைவில் உரசும் அவன் முகமும், வயிற்றில் பதிந்திருந்த கரமும் அதீத குறுகுறுப்பூட்ட, காதலனின் அனல் சூட்டில் விரும்பியே உருகினாள் மாது.

 

“பாத்தா தெரியல, ஹக் பண்ணிட்டு இருக்கேன்..” குட்டி குட்டி முத்தங்கள் இடைவிடாது வைக்க, கீழ் உதட்டை கடித்து தன்னை சமன் செய்த ஆரு,

 

“இதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல சீனியர், என்னால எதையும் தெளிவா யோசிக்க முடியல, ப்ளீஸ் இங்கிருந்து முதல்ல போங்க..” ரிஷியை விட்டு விலகியவளாக, சன்னல் புறம் கரத்தை நீட்ட, சோம்பல் முறித்தபடி மீண்டும் நெருங்கினான் வாடிய கள்மலரிடம்.

 

“எ.எதுக்கு இப்ப கிட்ட வரீங்க..” பின்னால் அடியெடுத்து வைத்தபடியே, அச்சத்தை விழிகளில் காட்டினாள் பேதை.

 

“எதுக்குன்னா, எல்லாம் அதுக்கு தான் டி..” குறும்பு புன்னகையுடன் நெருங்கி இடை வளைத்து இழுக்கவும், அவன் நெஞ்சிக்கூட்டில் முட்டி அவஸ்தையாக நெளிந்து நின்றாள் ஆராதனை பெண்.

 

“தப்பு சீனியர்..” தவிப்பாக சொன்ன பெண்ணுக்கும் அவன் மீது கொண்ட ஆசையினால், கண்டிப்புடன் விலக்க முடியாத அவலநிலை.

 

“உனக்கு பிடிச்சிருக்குதுல்ல அப்புறம் என்ன.. விருப்பம் இருந்தா எதுவும் தப்பில்ல டி” கிறுக்கத்துடன் அவள் இதழ் கவ்விக்கொள்ள, மீண்டும் மீண்டும் மதி இழந்த மாது, மன்னவனிடம் மயங்கி போனாள்.

 

இவள் வருவாள் என காத்திருந்த சமையல்க்கார அக்கா அடுத்த ஒருமணி நேரத்தில் திரும்பவும் வந்து கதவினை தட்டவும், அதுவரை காதலனோடு ஒன்றாக இழைந்த பூமயிலோ பீதியாக அவனை தள்ளி விட்டு குளியலறை ஓட, ருசி கண்ட பூனை சும்மா விடுமா!

 

புதிதாக கண்ட பெண் போதையில் மூழ்கி தவித்தவன், மின்னல் வேகத்தில் அவளை பின்தொடர்ந்து உள்புகுந்த கேடி, நீரில் நனைந்த தாமரையை துள்ளத் துள்ள களவாடினான்.

 

“என்ன பாப்பா சாப்பாடு புடிக்கலையா” தாமதமாக உண்ண வந்தும், யோசனையாக அமர்ந்திருப்பவளை கூர்ந்து பார்த்தார் சமையல் அக்கா.

 

“இல்ல அக்கா நல்லா இருக்கு, எனக்கு தான் தலைவலி சரியா சாப்பிட முடியல, ரூம்க்கு போய் மெதுவா சாப்ட்டுக்குறேன், நீங்க வேலைய முடிச்சிட்டு கிளம்புங்க”

 

மேலே ஒரு கள்ளப்பூனை உண்ணாமல் இருக்க, அவனை விட்டு தனியே உண்ண மனம் வராமல், ஏதேதோ சாக்கு சொல்லி காதலனுக்காக உணவை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள் ஆரா.

 

“உங்களுக்கு தான் கொண்டு வந்தேன், சீக்கிரம் சாப்ட்டு கிளம்புங்க சீனியர்” எங்கோ பார்த்து உணவை நீட்டியவளை விழிகளால் விழுங்கியபடியே அமைதியாக வாங்கிக்கொண்ட ரிஷி, உணவை பிசைந்து ஒரு வாய் வாயில் வைக்க போனவன் திடீரென என்ன நினைத்தானோ!

 

தன் பக்கம் பார்வை திருப்பாமல் நின்றிருக்கும் ட்ரவுசர் போட்ட அன்னமயிலை சுழட்டி தன் மடியில் அமர்த்திக்கொண்டவனாக, பிசைந்த உணவை அவளுக்கு முதலில் ஊட்ட, முதலில் மறுக்க நினைத்தாலும் பின் அமைதியாக வாய் திறந்து வாங்கிக்கொண்டவளின் கரமோ, தானாக உயர்ந்து ரிஷியின் கலைந்த சிகையினை வருடி அழகாக சரி செய்து விட்டது.

 

நேரங்கள் மட்டுமின்றி அடுத்த நாளும் கடந்தன. ஆருவும் கல்லூரி மட்டம் போட்டு காதலனோடு ஆட்டமாட, ரிஷியும் அலுவலகம் செல்லாமல் வீட்டிற்கும் போகாமல், இதயம் கவர்ந்த பெண்ணோடு ஒரே இன்ப கொண்டாட்டம் போட்டான்.

 

நடுநடுவே ரிஷி வீட்டிலிருந்து வந்த அழைப்பிற்க்கு, நண்பர்களோடு இருக்கிறேன் என்று சமாளித்து வைத்து விட, ஆரு வீட்டிலிருந்து வரும் அழைப்பிற்கு தடுமாறாமல் பொய் பேச தான் மிகவும் திண்டாடிப் போனாள்.

 

காதல் வந்து விட்டால் கள்ளமும் உடன் வருவது சகஜம் தானே! ஆனால் இவர்களின் சொல்லாத காதலுக்கு இந்த கள்ளம் தான் மிகப்பெரிய ஆபத்தாக உருமாறப் போகிறது என்றறியாமல், ஆனந்தக் கடலில் மூழ்கி, மோக தூறளில் நனைந்து திகட்டா இன்பங்களை அனுபவித்தனர்.

 

ராகவ் சீதா வரும் வரை ஆருவின் நெஞ்சமே ரிஷியின் மஞ்சமாய் போக, அந்த பேரின்ப தருணங்களை மனதில் சேமித்து வைத்துக்கொண்ட காதல் கிளிகளுக்கு ஒருவரை ஒருவர் பிரியவே மனமில்லை போலும்.

 

நீண்ட நெடிய கடைசி முத்தம் கொடுத்து விட்டு, கடைசி முத்தமா? ஆம் கடைசி முத்தம் தான். இந்த இனிய நாட்களே இருவரது தலைவிதியும் மாற்றியமைக்க போவது தெரியாமல், இறுகிய அணைப்பையும் கொடுத்து விட்டு, வந்தது போலவே அரவமில்லாமல் சென்றிருந்தான் ரிஷிவர்தன்.

 

தொடரும்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!