அத்தியாயம் – 13
ரிஷி சென்ற சிலமணி நேரத்தில் திருப்பதி சென்ற குடும்பம் திரும்பி வந்திருக்க, திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வோடு யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு குற்றவுணர்ச்சியில் சிக்கி அல்லோல் பட்ட ஆரு, முடிந்த மட்டும் அனைவரோடும் இயல்பாக பேசி, நலம் விசாரித்துவிட்டு அறைக்கு வந்தவளுக்கு கண்ணாளனின் நினைவுகள் தான் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
நாட்கள் வேகமாக கரைந்து இதோ அடுத்த இரண்டு தினங்களில் கல்லூரியும் முடிய போகிறது. ஆனால் என்ன ஆருவின் முகம் தான் முற்றிலுமாக கலையிழந்து காணப்பட்டது.
சிறிது நேரம் கிடைத்தாலும் உடனே பார்க்க ஓடி வந்துவிடுபவன், வர்ற முடியாத போதெல்லாம் மூச்சிக்கு முந்நூறு முறை அழைப்பு விடுப்பவன், அன்றைய கடைசி நாளுக்கு பிறகு ரிஷியாக ஒரு போன் கூட செய்யவில்லை.
இவளாக அழைத்தாலும் “வேலையா இருக்கேன் ஆரா அப்புறம் பேசுறேன்” என்று பட்டும் படாமலும் பேசி அழைப்பை துண்டித்து விட, பெண் மனம் தான் ஏதேதோ சிந்தனையில் தத்தலித்து போகும்.
கேட்காமலே காண ஓடி வருபவன், இப்போது வாய் விட்டு ஏக்கமாக கேட்டும் “வர்ற நேரமில்லை” என்று சொன்னதை கேட்டு தொண்டை அடைத்து விட்டது.
“என்ன பிரச்சனை ஆரு, கொஞ்ச நாளா ரொம்ப டிஸ்டர்பா இருக்க, சீனியர் கூட சண்டையா..” தோழியின் முகம் வாடி இருப்பதை கண்டு சந்தேகமாக கேட்டாள் ஜான்சி.
“அதெல்லாம் இல்ல ஜான்சி, அவர் முன்னாடி மாதிரி சரியா எங்கூட பேசல அதான் கஷ்டமா இருக்கு” என்றாள் துளிர்த்த கண்ணீரை உள்ளடக்கியபடி.
“அட கடவுளே இதுக்கா டி இந்த சோகம், அவர் என்ன முன்னாடி மாதிரி சும்மாவா இருக்கார், இப்ப அவர் பெரிய பிசினஸ்மேன் டி, வர்க் ஜாஸ்தியா இருக்கும் அதுனால கூட பேசாம இருக்கலாம்ல..
அதுவும் உங்கூட பேசாம அவர்க்கு நாளே போகாது, நீ வேணும்னா பாரு தன்னோட வேலையெல்லாம் முடிச்சிட்டு, சீனியர் கண்டிப்பா உன்ன பாக்க வருவாரு..”
ஜான்சி முடிந்த அளவிற்கு ஆறுதல் சொன்னாலும், காதலனின் நினைவில் அனுதினமும் தவிப்பவளுக்கு அவையெல்லாம் காதிலே விழவில்லை என்பது தான் மெய்.
‘இன்றோடு கடைசி நாள் இப்போதாவது என்னவன் வருவானா?’ வழி மேல் விழி வைத்து காத்திருந்த பாவையின் முகம் திடீரென பிரகாசம் கூடி, மகிழ்ச்சியில் இருதயம் துள்ளியது.
“ஹைய்ய்.. சீனியர் ஒரு வழியா வந்துடீங்களா.. இனிமே எப்டி உங்கள பாக்க போறேன்னு தெரியாம ரொம்பவே பயந்து போய்ட்டேன்.. எப்டியோ இன்னைக்காவது வந்தீங்களே அதுவே போதும்..” வந்தவன் கரத்தை இறுகப் பற்றியபடி புன்னகை பூ பூக்க உரைத்தவளை, வெறுமையாக நோக்கின அவன் விழிகள்.
“என்ன சீனியர் எப்பவும் நீங்க தான் அதிகம் பேசுவீங்க, இன்னைக்கு ரொம்ப அமைதியாக இருக்கீங்க..” காலியான வகுப்பறையில் அவனை நெருங்கி அமர, எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை அவன்.
“நத்திங் ஆரா, ஆமா என்ன விஷயமா போன் பண்ணிட்டே இருந்த” எப்போதும் அழைப்பு விடுத்தால் அதற்கெல்லாம் காரணமா இருக்கும்! தானே வைக்கிறேன் என்றாலும் வைக்க விட மாட்டானே! இன்றென்ன புதிதாக கேட்கிறான் என புரியாமல் விழித்த ஆரு,
“ரொம்பவே கில்ட்டியா இருக்கு சீனியர், அண்ணா அண்ணி யாரையுமே நிமிர்ந்து பாக்க முடியல.. எம்மேல ரொம்ப நம்பிக்கையா இருக்காங்க, அவங்களுக்கு நான் உண்மையா இல்லைனு நினைக்கும் போது, கஷ்டமா இருக்கு..
நீங்களும் அன்னைக்கு பிறகு பேசாம விட்டீங்களா, நான் பயந்தே போய்ட்டேன் சீனியர்.. ஆனாலும் உங்கமேல வச்ச நம்பிக்கை மட்டும் குறையல..” அத்தனை வருத்தம் அவள் முகத்தில் தோன்றிய போதும், தன்னை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் பளிச்சிட்ட பெண் முகத்தை சஞ்சலமின்றி பார்த்தான் ரிஷி.
“ஸ்ஸ்ஸோ.. இதை சொல்ல தான் கூப்ட்டியா” அவன் பேச்சில் இருந்த ஒட்டா தன்மையை உணர்ந்து முகம் சுருங்கிய ஆரு,
“எ.என்ன சீனியர் அசால்ட்டா கேக்குறீங்க.. நம்ம வீட்டுக்கு தெரியாம அதெல்லாம் தப்பில்லையா..” என்றாள் உள்ளடங்கிய குரலால்.
“ஓ கம் ஆன் ஆரா, இந்த காலத்துல இதெல்லாம் சகஜம் தானே.. இப்ப எதுக்கு நீ ஓவரா ரியாக்ட் பண்ற” அலுப்பாக கேட்டு கண்ணை சுழட்டிட, நெஞ்சிக்கூடு தடக்தடக்க பீதியாக ஏறிட்டாள் அவனை.
“சகஜமா.. அது மத்தவங்களுக்கு சீனியர், எனக்கு அப்படி இல்ல.. என்னதான் நம்ம லவ் பண்ணாலும், மேரேஜ்க்கு முன்னாடி யோசிக்காம அவசரப்பட்டது ரொம்ப பெரிய தப்பு..” எமோஷனலான ஆரு பேசிக்கொண்டே போக,
“ஹேய்.. வெயிட் வெயிட் என்ன சொன்ன லவ்வா..” இடை நிறுத்தி வேடிக்கையாக நகைத்தவனை, விழிகள் கலங்க பார்த்தாள்.
“ஸீ ஆரா, இதுவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றதா என்னைக்காவது சொல்லி இருக்கோமா.. இல்லைல, வீ ஆர் ஜஸ்ட் குட் பிரண்ட்ஸ், ஓகே..
அன்னைக்கு நான் வந்தது கூட ஒரு பிரண்டா உன்ன பாத்துட்டு போகலாம்னு தான், சீரியஸ்லி வேற எந்த இன்டென்ஷனும் இல்ல ஆரா.. பட் அன்னைக்கு எந்த இடத்துல ஸ்லிப்பாச்சின்னு தெரியல, ஆக்சிடென்ட்லி வீ பிகேம் இண்டிமேட்..
இதுல நம்ம ரெண்டு பேர் விருப்பமும் இருந்தது, முக்கியமா பிடிச்சிது, ஸோ என்ஜாய் பண்ணோம்.. அதை தாண்டி நமக்குள்ள வேற எந்த கம்பல்ஷனும் இல்ல ஆரா, நானும் உன்ன கட்டாயப்படுத்தல..
ஸோ இதுல எந்த கில்ட்டி பீலிங்ஸும் வேண்டாம், எப்பவும் போல கூலா இரு டி..” பெஞ்சில் இருந்த அவள் கரத்தின் மீது அவன் அழுத்தம் கூட்டி இயல்பாக உரைக்க, எங்கே அதெல்லாம் அவள் காதில் விழுந்தது.
“பட் ஐ அம் இன் லவ் வித் யூ, சீனியர்.. உங்கள விரும்பினதால மட்டும் தான் என்னையே உங்ககிட்ட மறந்திருந்தேன்..” தெறித்த விழிகளில் நீர் கோர்த்து சிவக்க, உறுதியாக உரைத்தவளை கண்டு,
“ஓஹ்.. காட்..” என தலையினை உளுக்கிக்கொண்டான் ரிஷி.
“லிசன் ஆரா, நான் உங்கூட பழகினத நீ லவ்னு தப்பா புரிஞ்சிகிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.. எப்பவும் நீ எனக்கு ஒரு குட் பிரண்ட் அவ்வளவு தான், அதையும் மீறி அன்னைக்கு நடந்தது ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்..
அதுமட்டுமில்ல எனக்கும் உனக்குமான தேவைகள் பூர்த்தியாச்சி, இப்போல்லாம் பிரண்ட்ஸ்குள்ள இது சாதாரணம் ஆரா..
அதிலும் நான் உன்ன எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தல, அதை முதல்ல புரிஞ்சிக்கோ.. நம்ம க்ளோஸா இருந்ததை வச்சி லவ், மேரேஜ்னு தேவை இல்லாததை யோசிச்சி நீயும் டென்ஷனாகி என்னையும் படுத்தாத சரியா..” சற்றே கடுகடு தொனியில் அலுப்பாக கூற, தொண்டைக்குள் பலமாக ஏதோ ஒன்று அழுத்திய உணர்வோடு தலை குனிந்து அமர்ந்திருந்தவளை ஆயாசமாக பார்த்தான் ரிஷி.
“ஏய் ஆரா இங்க பாரேன்” ஆழமூச்செடுத்து மீண்டும் அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைக்க போக, அவன் கரம் தீண்டும் முன் அதே விசையில் தன் கரத்தை விளக்கிய ஆரு, முட்டி வரும் கண்ணீரை கடினப்பட்டு அடக்கியவளாக நேராக அமர்ந்து ரிஷியை பார்க்க, அவனும் தான் அவளையே கூர்ந்து பார்த்தான்.
“ப்ளீஸ் எல்லாத்தையும் மறந்துடு ஆரா, நம்ம பழைய மாதிரி நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம்..” மென்மையாக அவன் உரைக்கும் போதே விருட்டென எழுந்துகொண்ட ஆரு,
“இத்தனை நாளா என் அண்ணா அண்ணிய ஏமாத்தி அவங்ககிட்ட மாட்டாம தப்பிச்சிட்டதா நினச்சேன்.. ஹ்ம்.. ஆனா உண்மை என்ன தெரியுமா, கடைசில என்னை நானே ஏமாத்தி இப்டி கேவலமா ஏமாந்து முட்டாளா நிக்கிறேன்..
தொட்டதும் செருப்பால அடிச்சி விரட்டி விடாம மயங்கி நின்னேன்ல அதுக்கான பலனை நான் தானே அனுபவிக்கனும்.. தப்பு முழுக்க எம்மேல, அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நீ பேசுறதையெல்லாம் கேட்டு கூனிக்குறுகி நிக்கிறேன்..
இனி என் வாழ்க்கைல உன்ன நான் தெரியாம கூட பாத்திடவே கூடாது..” மனம் முழுக்க ஏமாற்றம் பரவி, தன்னை மீறி பெருக்கெடுத்த கண்ணீருடன் அழுத்தம் திருத்தமாக திடமாக சொன்னவளின் காதல், அஃதே கரிந்து சாம்பலாகி போனதோ!
அவனை ஏரெடுத்தும் பாராமல் திரும்பி நடந்தவளின் உள்ளம், ஏமாற்றத்தின் ரணத்தில் கதறி துடிப்பது எதையும் உணராது போனானோ, அந்த காதல் துரோகக்காரன்.
விட்டது போதும் என நினைத்து விட்டான் போலும், அவள் ஒரு திசையிலும் இவன் ஒரு திசையிலும் கால் போன போக்கில் நடந்து வந்து, அவரவர் வீட்டை எப்படி வந்து சேர்ந்தனரோ!
மாறி போனது இருவரின் பாதை மட்டுமல்ல, வாழ்க்கையும் தான் என்பதை தெரிந்தே விலகி விட்டிருந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு,
“டேய் ரிஷி, ஆருக்கு கல்யாணமாம் டா, உனக்கு தெரியுமா..” சபரி சிவா இருவரும் பதறி வந்து ரிஷியிடம் சொல்ல, அரைஷண அதிர்வு அவன் கண்களில் நிழலாடி பின் இயல்பு நிலைக்கு வந்த ரிஷி,
“நல்ல விஷயம் தானே, நீங்க மேரேஜ்க்கு போனா, என் விஷ்ஷ அவள்ட்ட கன்வே பண்ணிடுங்க டா..” என்றவனாக கண்ணை மூடிக்கொள்ள, நண்பர்கள் தான் திருத்திருத்து போயினர்.
“என்னடா அசால்ட்டா சொல்ற, அப்ப உங்க லவ் என்னத்துக்கு டா ஆகுறது..”
“லவ்வா.. என்னடா நீங்களும் முட்டாள்த்தனமா பேசுறீங்க.. நான் என்னைக்கு அவளை லவ் பண்ணதா உங்கள்ட்ட சொன்னேன்..
ஒரு பொண்ணோட கொஞ்சம் க்ளோஸா பழகினா, லவ்வுன்னு நீங்களே முடிவு பண்ணிடுவீங்களா..” அலட்சியமாக பதிலுரைத்தவனை புரியாமல் நோக்கினர்.
ரிஷி ஆராதனாவின் இணக்கமான நெருக்கமே சொல்லும், சாதாரண நண்பர்களுக்கானதா அல்லது காதலார்களுக்கானதா என்று. உடன் பழகிய நண்பர்களுக்கு பிரித்தரிய தெரியாதா!
“இவன் என்னடா உளறிட்டு இருக்கான்” சிவா வாய் பிளக்க,
“இந்த முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிற கதையெல்லாம் எங்ககிட்ட வேணாம் ரிஷி, கொஞ்ச நாளா நீயும் சரி இல்ல, அவளுக்கும் திடீர் கல்யாணம் நடக்க போது.. எதார்த்தமா ஜான்சிகிட்ட பேசும் போது தான் எங்களுக்கே விஷயம் தெரிஞ்சி ஷாக் ஆனோம்..
இதை இப்டியே விட்டா சரிவராது மச்சா, உங்க சண்டைய அப்புறமா வச்சிக்கோங்க, விடிஞ்சா ஆருக்கு மேரேஜ், இப்பவே ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்தினா தான் உண்டு, எந்திரிச்சி வாடா..” இருவரும் ஆளுக்கொரு கரம் பற்றி இழுக்க, இரும்பாக படுத்துக் கிடந்தான் அசைந்து கொடுக்காது.
“என்னடா மச்சா இவன் நேரம் காலம் புரியாம, இப்டி பண்றான்” சபரிக்கு மனம் பதைத்தது.
“உண்மையாவே அந்த புள்ளைய இவன் விரும்பலையோ என்னவோ டா.. நீ வா நம்ம போலாம், அவனே லவ் இல்லைன்னு சொல்லும் போது நம்ம வற்புறுத்தி ஒன்னும் ஆக போறதில்ல..” சிடுசிடுப்பாக சொன்ன சிவா, சபரியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்லுகையில்,
“மச்சா நில்லுங்கடா” ரிஷியின் குரலில், “என்ன?” என்பது போல் இருவரும் திரும்பி பார்த்தனர்.
“மாப்பிளை யார்னு மட்டும் சொல்லிட்டு போங்க..” காலாட்டியபடியே கேட்டிட,
“அது தெரிஞ்சி நீ என்ன டா பண்ண போற” என்றனர் கடுப்பாக.
“சும்மா ஜெனரல் நாலேஜ் வளத்துக்க தான்..” என்றதும்,
“கொழுப்ப பாத்தியா இவனுக்கு” ஆத்திரத்துடன் முறைத்தவனை நக்கலாக பார்த்த ரிஷி,
“சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லாட்டி போயிட்டே இருங்க டா.. அத்தவிட்டு சும்மா சும்மா இந்த முறைச்சி பாக்குற வேலையெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்” சுட்டு விரலை காதில் விட்டு குடைந்தபடியே திமிராக வாதித்தவனை கண்டு பற்களை கடித்தவர்களாக,
“நியாயமா பாத்தா உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு தான் தோணுது, ஆனாலும் ஒரு நைட் உனக்கு டைம் இருக்கு, அதுக்குள்ள ஏதாவது பண்ணி ஆரு கல்யாணத்தை நிறுத்துவேன்ற நம்பிக்கைல சொல்றேன்,
தி பிக் எம்பைர் ஓனர், சரண் ரமேஷ் சன் கார்த்திக் பிரசாத் தான் ஆருக்கு பாத்திருக்க மாப்பிளை..” நண்பர்கள் சொல்லியும், சாதாரணமாக தலையாட்டிக்கொண்ட ரிஷி,
“ஓகே தேங்க்ஸ்” என்றபடி மீண்டும் கண்மூடிக்கொள்ள, இவர்களுக்கு தான் வெறுப்பாய் போனது.
இதோ திருமண பொழுதும் இனிதே புலர்ந்தது.
கட்டுக்கோப்பான வசீகரத்துடன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லும் மணவாளன் கார்த்திக் பிரசாத் அருகில், அசாதாரண அழகுடன் மணக்கோலத்தில் அமர்ந்த ஆராதனை பெண்ணை ரசனையாக பார்த்தான் அவன்.
சற்று நேரத்தில் திருமணமும் நடக்கவிருக்க, ராகவ் சீதா இருவரின் முகமும் பெயருக்கு மகிழ்ச்சியை காட்டிக்கொண்ட போதும், ஆராதனா மீதான கடுங்கோபத்தில் மனம் இறுகிய நிலையில் கடமைக்காக நின்றிருந்தவர்கள்,
“கெட்டி மேளம் கெட்டி மேளம்..” ஐயரின் சத்தத்தில், மங்கலனான் சூடிய புதுமண தம்பதிகளுக்கு, அட்சதை தூவி ஆசீர்வதித்த அதே நேரம், கண்மூடிப் படுத்திருந்த ரிஷியின் இதழில் விரக்தி புன்னகை தோன்றி மறைந்தது.
தொடரும்.