Episode – 01
அது சென்னையில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலுடன் கூடிய நட்சத்திர விடுதி.
இருள் பூசும் மாலை நேரத்தில் கூட அந்த ஹோட்டல் மாத்திரம் பளிச்சென்று தெரிந்தது.
அந்த ஏரியாவே அந்த ஹோட்டல் மூலம் தான் பேமஸ் ஆனது.
அந்த அளவுக்கு பெயர் பெற்ற நட்சத்திர விடுதி தான் ஆரா நட்சத்திர விடுதி.
விடுதியின் பெயர் சற்று பழையதாக தெரிந்தாலும், அந்த விடுதியின் ஆடம்பரம் மிகப் பெரியதாக இருந்தது.
உள்நாட்டில் உள்ள நம்பர் ஒன் பணக்காரர்கள், புகழ் பெற்ற அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலமான வெளிநாட்டு தலைவர்கள்…. என அனைவரும் வந்து தங்கிப் போகும் பிரமாண்ட இடம் அது.
அந்த விடுதியில் இல்லாத வசதிகளே இல்லை.
நீச்சல் தடாகம், ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் பேர் கூடும் சொகுசுக் கூடங்கள், தலை சிறந்த உணவகங்கள், அதி சொகுசு அறைகள், மதுபான கூடங்கள் என எங்கு திரும்பினாலும் ஆடம்பர உச்சம் மின்னும் இடம் அது.
ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் செழுமை கொட்டிக் கிடக்கும் இடம் அது.
அந்த இடத்திற்குள் சாமான்யர் கள் யாரும் சாதாரணமாக நுழைந்து விட முடியாது.
அங்கு உள்ள உணவகத்தில் ஒரு நபருக்கான ஒரு வேளை உணவே சில ஆயிரங்களைத் தொடும்.
அந்த இடத்திற்கு தான் முதன் முதலாக தனது தந்தையுடன் வருகை தந்து இருந்தாள் சொர்ணாம்பிகை.
அந்த இடத்தின் மேற்கத்தேய கலாச்சாரத்திற்கு கொஞ்சமும் பொருந்தாது, அழகிய மஞ்சள் நிறப் புடவையில், கூந்தல் இடை தாண்டி அசைய, நளின நடையுடன், முகத்தில் ஒரு புன்னகை உடன், மகா லட்சுமி களை முகத்தில் தாண்டவம் ஆட, ஆரெஞ்சு நிற அழகியாக அந்த இடத்திற்குள் தனது தந்தையுடன் உரையாடிய lபடி உள்ளே நுழைந்தாள் பெண்ணவள்.
அவள் சாதாரணமாக வந்து இருந்த போதும், அவளது அக்கராஹார அழகு அங்கு இருப்பவர்களை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்தது என்னவோ நிஜம் தான்.
வேஷ்டி சட்டை அணிந்து இருந்த தந்தையை பாசமாக கை பிடித்து அழைத்துக் கொண்டு வந்தவளின் முகத்தில் அப்படி ஒரு வாஞ்சை குடி கொண்டு இருந்தது.
தந்தையை அழைத்துக் கொண்டு குறித்த தளத்திற்கு வந்து சேர்ந்தவள்,
அங்கு இருந்த மேனேஜரிடம் ஆங்கிலத்தில் உரையாட,
அவளையே பெருமிதமாக பார்த்துக் கொண்டு இருந்தார் அவளது தந்தையார்.
அவளும், மேனேஜரிடம் பேசி விட்டு, அவர் சுட்டிக் காட்டிய, டேபிளில் தந்தையுடன் சென்று அமர்ந்தவள்,
“இந்த இடம் பார்க்க,ரொம்ப…. ரொம்ப…. அழகா இருக்கு இல்ல அப்பா. உங்களுக்கு பிடிச்சு இருக்கா?” என கேட்டாள் சொர்ணா.
“ஆமா அம்மாடி, ஏதோ வேற லோகத்துக்குள்ள புகுந்தது மாதிரி ஒரு உணர்வும்மா.”
“உண்மை தான் அப்பா. இங்க எல்லாம் பணத்த தண்ணீர் மாதிரி செலவு செய்வாங்க. சரி அப்பா நான் சாப்பாடு ஆர்டர் பண்றேன்.” என்றவள்,
அங்கு வந்து கொண்டு இருந்த, உணவு பாரிமாறுபவனை அழைக்க,
அவளை மேலிருந்து கீழாக கூர்ந்து பார்த்தவாறு, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் அந்த ஆர்டர் எடுப்பவன்.
அவனது அந்தப் பார்வை ஒரு நொடி, சொர்ணாவுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வைக் கொடுத்தாலும்,
வெளியில் எதனையும் காண்பிக்காது, அவனிடம் தங்களது ஆர்டரைக் கொடுக்க,
அவளது ஆர்டரை ஒரு விதமான உதட்டு வளைவுடன் எடுத்துக் கொண்டவன்,
மனதிற்குள், “சரியான தயிர் சாதம் போல…. இவ எல்லாம் எதுக்கு இந்த மாதிரி ஹோட்டலுக்கு வர்றா. இந்த சாப்பாட்டை வீட்டிலயே செய்து இருக்கலாமே. பேப்பர் தோசை…. பன்னீர் தோசை…. சாம்பார்ன்னு…. இரிடேட்டிங் இடியட்.” என எண்ணிக் கொண்டு,
அவளது ஆர்டரை ஒரு வித எரிச்சல் கலந்த குரலில் கூற,
அவனது செய்கைகள் ஒருவித ஒவ்வாமைத் தன்மையைத் தான் கொடுத்தது சொர்ணாக்கு.
அதுவும் அவனது மாஸ்க் போட்ட முகம் அவளுக்கு ஒரு வித வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது.
அந்த இடத்தில் மாஸ்க் அணிந்து இருந்தது அவன் ஒருவன் தான்.
ஆனாலும், வெளியில் காட்டவும் முடியாது, கேட்கவும் முடியாது,
அவன் கூறிய ஆர்டர் எல்லாம் சரி என அமைதியாக தலையை மட்டும் ஆட்டினாள்.
அவன், வெறுமனே “ஓகே.”என்று விட்டுப் போகவும்,
போகும் அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.
அவனது நடையும், தோரணையும், அவனின் வேலைக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாது இருந்தது.
நடந்து கொண்டு இருந்தவனும், திடீரென, நின்று அவளின் புறம் திரும்பிப் பார்க்க,
தனது பார்வையை சட்டென மாற்றிக் கொண்டாள் சொர்ணா.
அதன் பிறகு அவள் தனது தந்தையுடன் உரையாடவும் தொடங்கி விட்டாள்.
சரியாக, இருபது நிமிடங்கள் கழித்து, அவள் கேட்ட உணவுகள் யாவும் வந்து சேர்ந்தது.
ஆர்டர் எடுத்த அதே நபர் தான் உணவையும் கொண்டு வந்து வைத்தான்.
வைத்தவன், எதுவும் கூறாது அடுத்த டேபிள்ற்கு சென்று விட்டான்.
அந்த டேபிளில் இருந்த வெளி நாட்டவர்களிடம் அவன் நடந்து கொண்ட முறையும், சிரிப்புடன் பேசியதையும் கண்ட சொர்ணாக்கு, தங்கள் மீது அவன் காட்டிய இளக்கார பார்வை கண்டு கோபம் வந்தாலும்,
“இவன் எல்லாம் ஒரு ஆளா?” என எண்ணிக் கொண்டு,
“அப்பா, இங்க சாப்பாடு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட்டுப் பாருங்கோ. இந்த ஸ்பெஷல் பேப்பர் தோசை இங்க சரியான பேமஸ் அப்பா.” என கூறி, உணவை அவருக்கு தானே பரிமாறினாள் அவள்.
“அம்மாடி, நேக்கு இந்த சாப்பாடு எல்லாம் ஒத்து வராதுன்னு நோக்கு தெரியும் தானே. இந்தப் பெரிய ஹோட்டல்ல, சைவம் வேறா…. அசைவம் வேறா சமைச்சுத் தருவாங்களா?, பாத்திர பண்டம் எல்லாம் சுத்த பத்தமா இருக்குமோ என்னவோ….”
“அப்பா, ப்ளீஸ். ஆயிரம் தடவை சொல்லிட்டேன். இப்போ தான் எனக்கு வேலை கிடைச்சு முதல் மாச சம்பளம் வந்திருக்கு. நான் நல்லா விசாரிச்சு தான் உங்கள இங்க கூட்டிக் கொண்டு வந்தன். இங்க சைவம் தனிய, அசைவம் தனியன்னு தனித் தனி செக்ஷன் இருக்கு அப்பா. நீங்க யோசிக்காம சாப்பிடுங்க.”
“அம்மாடி, நீ என்னவோ சொல்றாய். நம்ம ஊரில இருந்து வந்ததுக்கு அப்புறம், இது தான் முதல் தடவை வெளில சாப்பிடுறேன்.. உன்னோட அம்மா இருந்திருந்தா…. அவளும் இங்க வந்து இருப்பா. உன் வளர்ச்சிய பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பா.” என கூறி கண் கலங்கினார் வெங்கட மூர்த்தி குருக்கள் அவர்கள்.
அவரின் பேச்சில் கண்கள் கலங்கினாலும்,
“அப்பா…. அம்மா நம்ம கூடத் தான் இருக்காங்க. எப்பவும் இருப்பாங்க. நீங்க கவலைப்பட்டு என்னையும் கவலைப் படுத்தாம சாப்பிடுங்க அப்பா.”
“அம்மாடி, சொர்ணா நீ சென்னைக்கு வந்து ஆளே மாறிப் போய்ட்டாய். நீ பேசுற விதமே இங்க உள்ள மனுஷால் மாதிரி மாறிப் போச்சும்மா….” என கூற,
“என்னப்பா செய்ய…. இருக்கிற இடத்துக்கு தகுந்தாற் போல நாமளும் மாறித் தானே ஆகணும். சரிப்பா, என்னப் பத்தி யோசிச்சது, பெருமை பேசினது போதும், வாங்க சாப்பிடலாம்.” என கூற,
அவரும் திருப்தியாக ஒரு வாய் சாப்பிட்டவர், அடுத்த வாய் எடுத்து வைக்கும் போது தான் கவனித்தார்.
சாம்பாரில் குட்டி இறால் மிதந்து கொண்டு இருப்பதை. அவரது கண்களில் பட்ட அடுத்த நொடி,
“அச்சோ…. இது என்ன அபச்சாரம்.” என கத்தியவர், சாப்பாட்டுத் தட்டை அவசரமாக தட்டி விட்டு எழ,
“அப்பா என்னாச்சு?” என பதறிப் போய் கேட்டாள் சொர்ணா.
அவரோ, “என்னாச்சா?, இங்க பாரும்மா. சாம்பார்ல அசைவம் இருக்கு. இதுக்கு தான் சொன்னன் வெளி சாப்பாடு எல்லாம் வேணாம்னு. இப்போ பார்த்தீயாம்மா. இவங்க ஏதோ பெரிய ஹோட்டல்…. அது இதுன்னு சொன்னீயேம்மா. என்னம்மா இவ்வளவு கவனக்குறைவா இருக்காங்கம்மா.” என அவர் கத்த ஆரம்பிக்க,
“அப்பா…. அப்பா…. கொஞ்சம் பொறுங்க. டென்ஷன் ஆகாதீங்க. என்னன்னு கேட்கலாம்.” என அவரை சமாதானம் செய்தாலும், சொர்ணாக்கும் உள்ளுக்குள் கோபம் உண்டானது என்னவோ உண்மை தான்.
வாழ்க்கையில் முதன் முறை தந்தையை, அவரது விருப்பங்களிற்கும் மீறி, உணவு உண்ண அழைத்து வந்தவளுக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது.
அவள் எத்தனை பேரிடம் தெளிவாக கேட்டு விசாரித்து, இந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
அப்படி இருக்கும் போது “ஏன்?, எதுக்காக இப்படி?” என எண்ணியவள், தங்களுக்கு உணவு பரிமாறியவனை உடனடியாக வரும்படி அழைத்தாள்.
அதற்குள் வழக்கம் போல, அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடி இருக்க, அந்த தளத்திற்கு பொறுப்பான மேனேஜர் ஓடி வந்து,
“மேடம், என்னாச்சு?, என்ன பிரச்சனை?, ப்ளீஸ் முதல்ல உட்காருங்க.” என பதட்டமாக கூற,
அப்போதும் சொர்ணா அமைதி கொள்ளாது, பார்வையை அங்கும் இங்கும் திருப்பி தனக்கு உணவு கொண்டு வந்த அந்த ஆடவனை அங்கும் இங்கும் தேடியவள்,
மனதில், “என்ன அட்டிடீ யூட் எல்லாம் காட்டினார் அந்த ஆளு இப்போ வரட்டும்.” என எண்ணிக் கொண்டு,
“எனக்கு உணவு பரிமாறியவர் எங்க?, மெனு கார்ட் தரும் போது நல்லாப் பேசுறாங்க, ஆர்டர் சூப்பரா எடுக்கிறாங்க. எல்லாம் கொண்டு வந்து வைச்சதும் காணாம போய்டுறாங்க.” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே….
“சொல்லுங்க மேடம் உங்களுக்கு என்ன வேணும்?”என கேட்டபடி, அங்கு வந்து சேர்ந்தான் அவர்களுக்கு உணவு பரிமாறிய அந்த நபர்.
ஆறடி உயரத்தில், மாஸ்க் அணிந்த நெடியவன் ஒருவன் தனக்கு முன்னால் வந்து நிற்கவும்,
அவனை நிமிர்ந்து பார்த்த சொர்ணாக்கு, அவனது கண்களின் கூர்மை, இதயத்தை துளைத்து எடுத்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“என்னது இது?, ஆர்டர் எடுத்தது என்ன?, இதில இருக்கிறது என்ன?, பியோர் வெஜ்னு போட்டுட்டு இப்படி அதில நான் வெஜ் கலந்து கொடுக்கிறது சரியா…. இது தான் நீங்க ஹோட்டல் நடத்துற லட்சணமா?” என அவள் எகிறிக் கொண்டு கேட்க,
அவளது கோபத்தில் மூக்குத்தி குத்திய அவளின் மூக்கு கூட செவ்வரளிப் பழம் போல சிவந்து போனது.
அவளையே கையைக் கட்டிக் கொண்டு எந்த டென்ஷனும் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தவன்,
அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடை மறித்து,
“மேடம் கூல். நீங்க டென்ஷன் ஆகிற அளவுக்கு இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. ரொம்ப சின்ன விஷயம். நான் வேற பூட் பிரீயா கொண்டு வர சொல்றேன். ப்ரோப்லேம் சோல்வ். கஸ்டமர் அதிகமா வர்ற நேரம் ப்ளீஸ் சத்தம் போடாதீங்க.” என கூறினான்.
அவனது தொனியில் இப்போது அவள் வாயை மூடியே ஆக வேண்டும் என்கிற ஒரு கண்டிப்பு இருந்தது போலத் தோன்ற,
சொர்ணாவின் கோபம் மேலும் அதிகம் ஆகியது.
பொதுவாக கோபம் வராத அவளையே அவனது பேச்சு சீண்டி விட்டு இருக்க,
“ஹலோ, என்ன பேசுறீங்க நீங்க?,சோ, உங்களுக்கு எங்கள எல்லாம் பார்த்தா கஸ்டமர் மாதிரி தெரியல. என்ன ஹோட்டல் இது? யாரு உங்க ஓனர், அவர கூப்பிடுங்க. நான் அவர் கிட்ட பேசிக்கிறேன். உங்க கூட பேசி எனக்கு தான் டைம் வேஸ்ட்.” என கூறவும்,
அவன் அப்போதும் விடாது, “உங்களுக்காக அண்ட் இந்த மாதிரி சின்னப் பிரச்சனைக்கு எல்லாம் மேனேஜ்மன்ட்ட தொல்லை பண்ண முடியாது. ஒண்ணு வேற பூட் கொண்டு வர சொல்றேன். இல்லன்னா…. காச திரும்ப தர்றோம் மேடம். அவ்வளவு தான். இதுக்கு மேல இந்தப் பேச்சை வளர்க்க வேண்டாம்.” என அந்த நெடியவன் சற்று எரிச்சலுடன் கூறவும்,
சொர்ணவிற்கு அவனது பேச்சும், தொனியும், மேலும் எரிச்சலை உண்டு பண்ண,
“உங்கள மாதிரி பணத்துக்கு பின்னால போற ஆள் நான் இல்லை. ஏதோ ஹோட்டல் ஓனர் மாதிரி பேச வந்திட்டார். கொஞ்சம் கூட மானேர்ஸ்னா என்னன்னு தெரியாத மனுஷர்.” என பதிலுக்கு எரிச்சலாக கூறினாள் அவள்.
அவளின் பேச்சில் அவனது கண்கள் சிவக்க, கைகள் இரண்டும் இறுகிப் பின் தளர்ந்தது.
ஒரு பெரு மூச்சுடன், “மேடம், உங்களுக்கு உரிய தீர்வு சொல்லியாச்சு இனி உங்க விருப்பம். எல்லாரும் உங்க வேலைகளப் பாருங்க.” என கூறியவன்,
அங்கிருந்து நகர எத்தனிக்க, அவனது மரியாதை இல்லாத செயலில் உள்ளம் கொதிக்க,
“ஏய் மிஸ்டர்.” என கத்திக் கொண்டு அவனை நோக்கி முன்னேறிப் போனவளை இழுத்து தடுத்து நிறுத்தினார் அவளது தந்தை.
அதே நேரம் அவளின் விழிப்பில், அந்த ஆடவனும் அவளை நோக்கி கோபத்துடன் வர,
தன்னைத் தடுத்து நிறுத்திய தந்தையிடம் இருந்து கையைப் பறித்துக் கொண்டவள்,
“அந்த ஆளு என்ன பேச்சு எல்லாம் பேசுறாரு விடுங்க அப்பா.” என கையை விசுக்கியவளின் கை சரியாக அவளுக்கு பின்னால் வந்து நின்று இருந்த அந்த ஆடவனின் கன்னத்தில் பட்டென்று படிந்தது.
அந்த நொடி அந்த இடம் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.
சொர்ணாவே ஒரு நொடி, தான் செய்த செயலில் விக்கித்துப் போய் நின்றாள்.
இப்படி ஒரு தருணம் வரும் என அவளும் எதிர்பார்க்கவில்லை. அவனும் எதிர்பார்க்கவில்லை.
அவள் அடித்ததில் அவனது மாஸ்க் வேறு, ஒரு பக்கம் கழன்று அவனது முகம் சற்று வெளித் தெரிந்தது.
அந்த நொடியில், அங்கு கூடி இருந்த அனைவரும், “இவரு….” என வாயைப் பிளக்க,
சொர்ணா, என்ன, ஏதுன்னு உணர முதல்,
“அம்மாடி, வாம்மா.. இங்க இருந்து முதல்ல கிளம்பலாம்.” என கூறி அவளை இழுத்துக் கொண்டு சென்றார் அவளின் தந்தை.
சொர்ணாவும், அவனை அடித்ததற்கு எந்த விதமான மன்னிப்பும் கேட்காது, தந்தையுடன் இழுப்பட்டு சென்றாள்.
போகும் அவளையே வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் அந்த ஆடவன்.
சொர்ணா போனதும் மேனேஜர் அவனுக்கு அருகில் ஓடி வந்து,
“சார்….” என பதட்டமாக அழைக்க,
“இங்க நடந்தது பத்தி யாரும் மூச்சு விடக் கூடாது. எல்லா சி. சி. டீவி போட்டோசையும் அழியுங்க. அப்பா காதுக்கு எந்த விஷயமும் போக கூடாது.
அப்படிப் போனா…. ஒருத்தரையும் உயிரோட விட மாட்டன். ஜாக்கிரதை.” என கர்ஜித்தவன் அனைவரையும் அவரவர் வேலைகளை கவனிக்க சொன்னான்.
அவர்கள் போனதும் கன்னத்தை தடவியவன்,
“உன்ன நான் ஒரு நாளும் சும்மா விட மாட்டன். நான் யாருன்னு தெரியாம என் மேல கைய வைச்சிட்டாய். இதுக்குரிய பலனை, நீ அனுபவிச்சே ஆகணும். உன் வாழ்க்கையில நீ செய்த இமாலய தவறு இது தான்.
இந்த ஆரண்யன் யாருன்னு இனி மேல் உனக்கு புரிய வைக்கிறன்.” என கோபமாக முணு முணுத்துக் கொண்டான் அவன்.
மறு புறம், ஹோட்டலை விட்டு வெளியே வந்த சொர்ணா, இன்னுமே பதட்டம் விலகாது, கையைப் பிசைந்து கொண்டு நிற்க,
அவளின் அருகே வந்தவர், “என்னம்மா இப்படிப் பண்ணிட் டாய்?, நீ இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டீயே….” என கேட்கவும்,
சொர்ணாக்கு, கண்ணீரே வந்து விட்டது.
மகளின் கண்ணீரைக் கண்டு துடித்துப் போனவர்,
“அம்மாடி, கொஞ்சம் பொறும்மா. நீ தெரியாமல்த் தானே அப்படி நடந்து கொண்டாய். இதுக்காக எல்லாம் அழலாமா?, கண்ணீரைத் துடை. நாம முதல்ல இங்க இருந்து கிளம்பலாம். நீ அப்பாக்கு உன்னோட கையால தோசை சுட்டு தந்தாலே போதும். அந்த சுவைக்கு கிட்ட எந்த ஹோட்டலும் நிற்க முடியாதும்மா. வாம்மா நாம கிளம்பலாம்.” என கூறி அவளை அழைத்தக் கொண்டு சென்றார்.
போகும் போதும் சொர்ணாக்கு ஏதோ மனதை உறுத்த,
திரும்பிப் பார்த்தவளை உறுத்து விழித்தபடி வாசலில் நின்று கொண்டு இருந்தான் அந்த ஆடவன்.
அவனது பார்வை சொன்ன செய்தி அவளுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை.
அடுத்த நொடி அவனில் இருந்து பார்வையை திருப்பி யவள்,
தந்தையுடன் விறு விறுவென அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
அந்த இடத்தில் இருந்து போனால் மட்டும் அவன் கழுகுப் பார்வையில் இருந்து தப்பி விடுவாளா பெண்ணவள்?
அவள் பிடித்து இருப்பது பூனை வாலா…. இல்லை புலி வாலா….?
யார் அந்த ஆடவன்?,
பதில்கள் அடுத்த பதிவில் வரும்….
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….