சோதிக்காதே சொர்க்கமே 1

4.5
(6)

விடிகாலை நேரம்.. அலாரம் ஒருபுறம் அடித்தது. செல்போன் ஒருபுறம் ரிங்கானது.

பச்சை நிற இரவு விளக்கின் ஒளி அந்த அறையெங்கும் பரவி இருந்தது.

மானசா திரும்பி படுத்தாள். முகத்தை மூடியிருந்தது அவளின் கேசம். அலாரம் ஓயாமல் அடிக்கவும் கேசத்தை விலக்கிக் கொண்டு கண்களை திறந்தாள்.

சலிப்போடு அலாரத்தை அணைத்தாள். ரிங் ஆகிக் கொண்டிருந்த போனை எடுத்தாள்.

புது எண்ணாக இருந்தது. அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“மேடம்.. நான் சொல்வதை முழுசா கேட்காம போனை வச்சிடாதிங்க..” என்று எடுத்ததும் பீடிகை போட்டாள் போனில் பேசியவள்.

“என்ன?” தூக்க கலக்க குரலில் பேசினாள் இவள்.

“உங்க பிரெண்ட் ப்ரீத்திக்கு குழந்தை பிறந்திருக்கு..”

இவள் சடாரென்று எழுந்து அமர்ந்தாள்.

“வாவ்.. பேபியா? என்ன பேபி?” எனக் கேட்டாள்.

“கேர்ள் பேபி. நான் அவங்க வீட்டுல வொர்க் பண்றேன். அவங்க உங்களை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறாங்க. ஹாஸ்பிட்டல் வர முடியுமா? நீங்களும் அவங்களும் பேசிக்கிறது இல்லன்னு தெரியும். பட் இந்த ஒருமுறை மட்டும் வந்துட்டு போகலாமே! ப்ளீஸ்..” என்றாள்.

இவள் தலைமுடியை ஓரம் தள்ளினாள். கொஞ்ச நேரம் யோசித்தாள். போய் குழந்தையை மட்டும் பார்த்து விட்டு வரலாம் என்று முடிவெடுத்தாள்.

“எந்த ஹாஸ்பிட்டல்?” எனக் கேட்டாள்.

அந்த பெண்ணும் சொன்னாள்.

இவள் குளித்து விட்டு ஒரு அழகான சேலையை அணிந்தாள்.

அவளுடையது நடுத்தரமான குடும்பம். சொந்த வீடு, ஒரு பழைய கார், அப்பாவுக்கு டீசன்டான வருமானம் என்று குடும்பம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த வாரத்தில் கூட ஒரு இன்டர்வியூ இருக்கிறது. அந்த வேலை கிடைத்தால் குடும்பத்தின் நிலை இன்னும் சற்று உயரலாம்.

மானசா அறையை விட்டு வெளியே வந்தபோது அம்மா பூரணி “என்னடி அதிசயமா காலங்காத்தால எழுந்திருக்க? அதுவும் கல்யாண பொண்ணு மாதிரி ரெடியாகி இருக்க?” எனக் கேட்டாள்.

“ப்ரீத்திக்கு குழந்தை பிறந்திருக்கும்மா..”

பூரணி ஆச்சர்யத்தோடு தன் கன்னங்களில் கைகள் பதித்தாள்.

ப்ரீத்திக்கு குழந்தை!? இவளின் சந்தோசத்தை அளக்க அளவுக்கோல் இல்லை.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டு பெண்மணியும் பூரணியும் ஒரே சமயத்தில் கர்ப்பமடைந்து இருந்தார்கள். கடைசியில் ஒரே நாளில் பிரவச வலி வந்து விட்டது. பூரணிக்கு மானசா பிறந்த இரண்டு மணி நேரத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி ப்ரீத்தியை பெற்றெடுத்தாள்.

பிறந்த முதல் நாளே உண்டான உறவு அவர்களுடையது. ஒரே பள்ளி. ஒரே கல்லூரி. உறவும் இரட்டையாய் பிறந்த சகோதரிகளுடையது போலதான். உயிர் தோழிகள்.

ப்ரீத்திக்கு பத்து வயதாகும்போது அவளின் தந்தை இறந்து விட்டார். ஒரு வருடம் முன்பு ப்ரீத்தியின் அம்மாவும் இறந்து விட்டாள். அதன் பிறகு ப்ரீத்தி இந்த வீட்டில்தான் தங்கி இருந்தாள்.

இந்த தோழிகள் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது என்று இந்த தெருவில் இருந்த அனைவரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்‌.

ஆனால் ஒன்பது மாதங்கள் முன்னால் ப்ரீத்திக்கும் இவளுக்கும் சண்டை. என்ன சண்டை என்று இருவருமே சொல்லவில்லை. மானசாவோடு போட்ட சண்டையில் ப்ரீத்தி வீட்டை விட்டு கிளம்பி விட்டாள்.

வீட்டை விட்டு சென்ற சில நாட்களியே ஊரிலேயே வசதியான ஒரு பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்டாள். அதை கூட இவர்கள் நியூஸை பார்த்துதான் தெரிந்துக் கொண்டார்கள். ப்ரீத்தியின் எண் மானசாவின் போனில் ப்ளாக் செய்யப்பட்டிருந்தது. இவளின் எண் அவளின் போனில் ப்ளாக் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் ப்ரீத்தி தங்களோடு இருந்த உறவை கூட முறித்துக் கொண்டாளே என்று அம்மாவுக்கு வருத்தம். அம்மா போன் செய்த போதும் கூட அவள் போனை எடுக்கவில்லை. அவளின் கோபம் தீர்ந்தால் அவளாக வருவாள் என்று இவர்களும் விட்டு விட்டார்கள்.

இன்று அவளுக்கு குழந்தை பிறந்து விட்டது. பூரணிக்கு ஆச்சரியமும் சந்தோசமும் ஒன்றாக முகத்தில் மோதியது.

தன் சேலை தலைப்பை காற்றில் ஆட்டியபடி ஒரு சுற்று சுற்றி நின்ற மானசா “என் குழந்தை முதல் முறையா என்னை பார்க்க போறா.. அதான் அழகா ரெடியானேன்!” என்று அம்மாவிடம் சொன்னாள்.

“பத்து நிமிசம் வெயிட் பண்ணுடி. நாங்களும் ரெடியாகி வரோம்..” என்ற பூரணி தன் கணவனை எழுப்ப ஓடினாள்.

உறங்கிக் கொண்டிருந்த சந்தானத்தை தட்டி எழுப்பியவள் “ஏங்க.. ப்ரீத்திக்கு குழந்தை பிறந்திருக்காம்..” என்றாள்.

எழுந்து அமர்ந்தவர் “நம்ம ப்ரீத்திக்கா?” என்று கேட்டார்.

“ஆமா..” என்றாள் இவள்.

அவர் உடனே தயாராக கிளம்பினார்.

மகன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். எங்கே அழைத்தாலும் வர மாட்டான். ஹோட்டலில் உணவை வாங்கி கொள் என்று அவனிடம் பணத்தை தந்து விட்டு இவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்.

சந்தானத்தின் கார் மருத்துவமனை வாசலில் நின்றது. மானசா தன் பெற்றோரோடு உள்ளே சென்றாள். வரும் வழியில் பூங்கொத்தை வாங்கி இருந்தார் அப்பா.

தனக்கு போன் செய்த பெண்ணுக்கு கால் செய்து “ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். எந்த பக்கம் வரணும்?” எனக் கேட்டாள்.

“ரூம் நம்பர் நூத்தி முப்பத்தாறு..” என்று சொல்லி போனை வைத்தாள் அவள்.

இவர்கள் அந்த ரூமை கண்டுப்பிடித்து கதவை திறந்தார்கள்.

அறையின் நடுவில் இருந்த கட்டிலில் படுத்திருந்தாள் ப்ரீத்தி. அருகில் தொட்டிலில் குழந்தை இருந்தது. கட்டிலின் அந்த பக்கமாக ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள். அவள்தான் போன் செய்தவளாக இருக்க கூடும்.

ப்ரீத்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது. மானசாவை பார்த்ததும் கை நீட்டினாள்.

ப்ரீத்தியின் முகத்தில் ஒளியே இல்லை. சாவின் களை பளிச்சென்று தெரிந்தது.

குழந்தைக்காகதான் வந்திருந்தாள் மானசா. ஆனால் தோழியை பார்த்ததும் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ தவறாக நடக்க போகிறது என்று உள்ளுணர்வு சொன்னது.

மானசா பதட்டத்தோடு அவளிடம் ஓடினாள். தோழியின் கையை பிடித்த நொடி ப்ரீத்தி விழிகளை மூடி விட்டாள்.

மானசாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ப்ரீத்தி..” என்று அழைத்தாள். அவளிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

அப்பாவும் அம்மாவும் கூட குழம்பி போய் விட்டார்கள்.

“பிரசவம் இப்பதானே நடந்தது.. மயங்கிட்டா போல..” என்றாள் அம்மா.

“இல்ல இவங்க இறந்துட்டாங்க..” என்றாள் பக்கத்தில் இருந்த பெண்.

அம்மாவும் அப்பாவும் அவளை கேள்வியாக பார்க்க, “இப்பதான் டாக்டர் செக் பண்ணிட்டு போனாங்க. பிழைக்க வாய்ப்பு இல்லன்னு சொல்லி இருந்தாங்க..” என்றாள்.

பூரணி வாயை பொத்தினாள். சந்தானம் கையில் இருந்த பூங்கொத்தை கீழே போட்டு விட்டு மருத்துவரை அழைத்து வர ஓடினார்.

மானசா விழிகளில் இருந்து கொட்டிய கண்ணீரோடு ப்ரீத்தியின் முகத்தை பார்த்தாள். தன் இதயம் பாதி செத்து விட்டதை உணர முடிந்தது.

ப்ரீத்தியின் முகத்தை தொட்டாள். பனிக்கட்டியின் சில்லிப்போடு இருந்தது. இவளின் கண்ணீர் ப்ரீத்தியின் முகத்தில் விழுந்தது.

“ப்ரீத்தி எழு..” என்றாள். அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“ப்ரீத்தி.. நானே முதல்ல சாரி கேட்கிறேன். ப்ளீஸ் எழுந்துக்க. இந்த மாதிரி சிக் கேம்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்காது..” என்றாள்.

ப்ரீத்தியிடம் அசைவே இல்லை.

சந்தானத்தோடு சேர்ந்து வந்தார் மருத்துவர்.

ப்ரீத்தியின் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து பார்த்தவர் “இறப்பை உறுதிப்படுத்திய நேரம்..” என்று தன் கை கடிகாரத்தை பார்த்து நேரத்தை சொன்னார்.

அருகில் இருந்த நர்ஸ் நேரத்தை குறித்து கொண்டாள்.

மருத்துவர் சென்று விட்டார்.

அம்மா குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

மானசாவுக்கு இதயமே வெடிப்பது போல இருந்தது. “ப்ரீத்தி..” என்று கத்தியபடி அவள் மேல் விழுந்தாள்.

“ப்ரீத்தி எழுடி..” என்று கதறியபடி அவளை உலுக்கினாள்.

பக்கத்தில் இருந்த பெண் “சத்தம் போடாதிங்க மேடம். சாருக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு..” என்றாள்.

மானசா புரியாமல் பார்த்தாள். பணிப்பெண்ணின் பார்வை அந்த ரூமின் மூலைக்கு சென்றது. கண்ணீரோடு திரும்பி பார்த்தாள் மானசா.

தீன குணாளன் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான். மடிகணினியில் வேலையாக இருந்தான். அவன்தான் ப்ரீத்தியின் கணவன். பல முறை டிவியிலும் சோசியல் மீடியாவிலும் பிசினஸ் மேன்ஸ் பற்றி வரும் ஆர்டிக்கலிலும் மானசா அவனின் புகைப்படத்தை‌ப் பார்த்திருக்கிறாள்.

இப்போது அவனை பார்த்த மானசாவுக்கு இதயம் இன்னும் வலித்தது.

‘மனைவி இறந்து விட்டாள். இவன் என்ன அந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறான்?’ இவளால் தாங்கவே முடியவில்லை.

கணினியில் கண்ணாக இருந்தவன் அழுகை சத்தம் நிற்கவும் நிமிர்ந்துப் பார்த்தான்.

மானசா தன்னை வெறிப்பதை கண்டவன் “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்..” என்று எழுந்தான்.

மடி கணினியோடு வெளியே நடந்தான்.

‘மனுசனா இவன்?’ என்று மனதுக்குள் திட்டிய மானசாவை அடுத்து எதுவும் யோசிக்க விடாமல் செய்தது குழந்தையின் அழுகை குரல்.

இவள் தொட்டிலை பார்த்தாள். அழகான பஞ்சு பொம்மை போல் இருந்தது குழந்தை.

குழந்தையை பார்த்து விட்டு எதிரில் பார்த்தாள். தீனா குழந்தையின் அழுகையில் கூட திரும்பவில்லை. கதவுக்கும் அவனுக்கும் இடையில் இரண்டடி இடைவெளி இருந்தது.

மானசா குழந்தையை அள்ளி தன் நெஞ்சோடு அணைத்தாள்.

“அம்மா இருக்கேன்.. அழாதிங்க செல்லம்..” என்று அழுகை குரலில் சொல்லி குழந்தையை தட்டி தந்தாள்.

குழந்தையின் அழுகை சத்தத்திற்கு நிற்காத தீனா இப்போது இவள் சொன்னதில் நின்று விட்டான். குழப்பத்தோடு திரும்பி பார்த்தான்.

குழந்தையை அணைத்து மெல்ல தாலாட்டிக் கொண்டிருந்தாள் மானசா. அவளின் கண்ணீர் தாடையை தாண்டி வழிந்துக் கொண்டிருந்தது. குழந்தையையும் ப்ரீத்தியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவன் வெளியே நடந்தான்.

அவள் குழந்தையை அணைத்தபடி ப்ரீத்தியின் அருகில் அமர்ந்தாள்.

“ப்ரீத்தி.. நம்ம பாப்பா அழுது. எழு..” என்றாள்.

அவள் எழவில்லை. இவள் உலுக்கினாள். அவளை அடித்தாள். இரண்டாம் முறை அடித்தபோது ப்ரீத்தியின் மீதிருந்த போர்வை கீழே நழுவியது. அவள் அணிந்திருந்த ஹாஸ்பிட்டல் கவுனும் கொஞ்சம் கீழிறங்கி இருந்தது. ப்ரீத்தியின் கழுத்தின் கீழே தழும்புகள் இருந்தன. அதை கண்டவள் அவசரமாக அந்த ஆடையை இன்னும் கொஞ்சம் இறக்கினாள். காயமாகி ஆறி விட்ட தழும்புகள் அவை.

‘ப்ரீத்தி அப்யூஸ் செய்யப்பட்டு இருக்கிறாள்..’ என்று புரிந்துக் கொண்டவளுக்கு இதயத்தில் புது புயல் அடித்தது.

இவள் மேற்கொண்டு சோதிக்கும் முன் மருத்துவமனையில் பணிப்புரியும் இரண்டு பேர் வந்து ப்ரீத்தியை ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி அங்கிருந்து தள்ளி போனார்கள்.

மானசாவின் அப்பா அவசரமாக அந்த ஸ்ட்ரெச்சரை நிறுத்தினார். “என்ன பண்றிங்க?” எனக் கேட்டார்.

“போஸ்ட் மார்ட்டம் செய்யணும்..” என்றவர்கள் ப்ரீத்தியை கொண்டு போய் விட்டார்கள்.

“மேடம்..” பணிப்பெண்ணின் குரலில் திரும்பினாள் மானசா.

“குழந்தை பசிக்கு அழுது..” என்றாள்

இவள் அவளிடம் குழந்தையை நீட்ட, “சாரி.. பீட் பண்றது என் வேலை இல்ல. நான் ப்ரீத்தி மேடத்தோட அசிஸ்டன்ட். குழந்தைக்கு நானி தேடிட்டு இருக்கோம். இன்னும் ஒன்னு இரண்டு நாள்ல கிடைச்சிடுவாங்க..” என்று சொல்லி புட்டிப்பாலை நீட்டினாள்.

மானசா புட்டியை வாங்கினாள். ஆனால் அதை சரியாக குழந்தைக்கு தர தெரியவில்லை.

அழுதுக் கொண்டிருந்த அம்மா குழந்தையை வாங்கி தரையில் அமர்ந்தாள். பாலை தந்தாள். குழந்தை குடிக்க மறுத்தது. அம்மா கட்டாயப்படுத்தி‌ தந்தாள்.

பணிப்பெண் யாருக்கோ போன் செய்து “ஆமா மேடம்.. ப்ரீத்தி மேடம் இறந்துட்டாங்க. இப்பதான்..” என்றாள்.

மானசா உணர்வுகளை இழந்து அந்த பணிப்பெண்ணை பார்த்தாள். போனில் பேசிக் கொண்டிருந்தவள் இவளை கவனிக்கவில்லை.

அந்த பணிப்பெண் வெள்ளை சட்டையும் இள நீலத்தில் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அந்த ஸ்கர்ட் அவளின் கால் முட்டி வரை இருந்தது.

“போஸ்ட் மார்ட்டம் செய்ய கொண்டு போயிருக்காங்க. இன்னும் டூ ஹவர்ஸ்ல பாடியை தந்துடுவாங்க..” என்றாள் அந்த பணிப்பெண்.

“ஓகே மேடம். நான் அப்புறம் கால் பண்றேன்..” என்று போனை வைத்தவள் எதிரில் இருந்த இவர்களை பார்த்தாள்.

அம்மா குழந்தைக்கு பால் தந்து உறங்க வைத்து விட்டாள். உறங்கிய குழந்தையை தொட்டிலில் கிடத்தினாள்.

“ப்ரீத்தி மேடம் இந்த லெட்டரை உங்கக்கிட்ட தர சொன்னாங்க..” என்று கடிதத்தை எடுத்து மானசாவிடம் நீட்டினாள் அந்த பணிப்பெண்.

“கடைசியா ஒருமுறை உங்களை பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டாங்க. அதனால்தான் கால் பண்ணோம். இனி நீங்க கிளம்பலாம்..” என்றாள்.

அம்மாவும் அப்பாவும் அதிர்ந்தார்கள்.

“எங்களோட வளர்ப்பு பொண்ணு அவ. நாங்க எப்படி போவோம்? பாடியை வாங்கிட்டு போறோம்..” என்றார் அப்பா.

அந்த பணிப்பெண் முடியாதென்று தலையாட்டினாள். “சாரோட வீட்டுல இறுதி சடங்குக்கான வேலை நடந்துட்டு இருக்கு. உங்களால பாடியை கொண்டு போக முடியாது.. அன்ட் முறையான இன்விடேஷன் இல்லாம இந்த இறுதி சடங்குல உங்களால கலந்துக்கவும் முடியாது..” என்றாள்.

இவர்கள் அவளிடம்‌ சண்டை போட இருந்த நேரத்தில் “பரவால்ல. அவங்க வரட்டும் விடு..” என்று அறையின் வாசலில் நின்று குரல் தந்தான் தீனா.

மானசா அவனை வெறுப்போடு பார்த்தாள். அவனோ இவளின் உடம்பை பார்வையால் அளந்தான்.

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!