சோதிக்காதே சொர்க்கமே 12

4.9
(9)
தனது நெற்றியை தொட்டு காட்டிய தீனா “எட்டு தையல் போட்டு இருக்காங்க. ஏன் தெரியுமா? என் அம்மா என் நெத்தியை அடிச்சி உடைச்சிட்டாங்க..” என்றான்.
எட்டு தையல் என்பது இவளுக்கும் அதிர்ச்சியாகதான் இருந்தது.
அவளின் தோள்கள் இரண்டையும் பிடித்து உலுக்கியவன் “நான் ஏன் அடி வாங்கினேன்? உன்னால. ஆமா உன்னாலதான் நான் குடிச்சேன்? நான் ஏன் குடிச்சேன். உன்னாலதான். ஆமா உன்னை நான் அடிச்சதாலதான் கில்ட்டி ஃபீலிங் தாங்க முடியாம குடிச்சேன். என்னை கில்டியா மாத்தியது நீதான். பொண்டாட்டின்னா புருஷன் சொல்வதை கேட்டு நடக்கணும். அப்படிக் கேட்க முடியலன்னா அதை தனியா இருக்கும் போது சொல்லணும். என்னோட பிரெஸ்டீஜை நாசம் பண்ணும் அளவுக்கு சர்வன்ட்ஸ் முன்னாடி என் மானத்தை வாங்கி இருக்கக் கூடாது..” என்றான்.
அவன் சொன்னது கேட்டு அவளுக்கு சிரிப்புதான் வந்தது. அவனின் வாதமே முட்டாள்தனமாக இருப்பது போல் தோன்றியது.
“மானங்கறது வெளிய போட்டுக்கும் பட்டு சட்டை போலவே உங்களுக்கு தோணுது. அதனாலதான் இப்படி நினைக்கிறீங்க. அவங்க எல்லோரும் உங்களை மதிக்கிறாங்கன்னு நீங்க இன்னும் நம்புறிங்களா? பொண்டாட்டி இறந்த ஒரே வாரத்துக்குள்ள இன்னொருத்தியை கல்யாணம் பண்ணி வந்த உங்களை யாருமே மதிக்க மாட்டாங்க. தாலி கட்டிட்டா நான் உங்களை புருஷனா நினைப்பேனா? யூ ஆர் நாட் மை ஹஸ்பண்ட். என்னை மிரட்டி அடிமையா வச்சிருக்கும் ஒரு அரக்கன் நீங்க.. அடிச்சதும் குடிச்சதும் உங்க தப்பு. என் மேல பழி போடாதிங்க..” என்றாள்.
இவன் சிறு ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான். அவள் இப்படி பேசுவது கூட அவனுக்கு பிடித்திருந்தது. அவள் தன்னோடு சண்டை போட்டால் அவனுக்கு பிடிக்கும். அவள் தன்னை அடித்தால் கூட அவனுக்கு பிடிக்கும். தன்னை ஒரு சராசரி மனிதனாக நினைத்து அவள் ட்ரீட் செய்ய ஆரம்பித்தால் இவனுக்கு சொர்க்கத்தில் வாழ்வது போல் இருக்கும்.
“நீங்க குழந்தையை தூக்காம இருந்திருந்தா இங்கே எந்த பிரச்சனையும் வந்திருக்காது. என் ஃப்ரெண்ட் ப்ரீத்தி ஏன் செத்துப்போனா தெரியுமா? உங்களாலதான். முழு காரணமும் நீங்கதான். என் பிரெண்டை நீங்க அப்யூஸ் பண்ணி இருக்கிங்க. அவளோட உடம்புல காயம் இருந்ததை நான் பார்த்தேன். ஒரு கர்ப்பிணி பெண்ணை அப்படி எல்லாம் கொடுமை பண்ணினா எப்படி அவ உயிரோடு பிரசவத்தை தாண்டி வருவா?” என்று கேட்டாள்‌.
இதற்காகவே ஒருநாள் இவனை கொல்ல வேண்டும் என்று அவளுக்கு கோபம். எப்போது வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை.
புருவத்தை சுருக்கியவன் “அடிப்பாவி. உன்னை ஒரு அடி அடிச்சிட்டேன்னு இரண்டு பாட்டில் சரக்கடிச்சேன் நான். அப்படிப்பட்ட நான் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கொடுமை பண்ணுவேனா?” என்று கேட்டான். இப்படி ஒரு பழியை போட இவளுக்கு எப்படி மனம் வந்தது என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நெற்றியைப் பிடித்தவன் “போதும் இதை இத்தோடு விட்டுடு. இதுதான் நம்ம மூனு பேருக்கும் நல்லது..” என்று சொல்லிவிட்டு அவளை விட்டு விலகினான்.
என்றாவது ஒருநாள் இவளுக்கு தன் காதல் புரியும் என்ற நம்பிக்கையோடு அவன் அலுவலகம் செல்வதற்காக தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.
நெற்றியில் இருந்த காயம் வலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அலுவலகம் கிளம்பினான்.
மானசா குளித்துவிட்டு வெளியே வந்ததும் திட்டங்களை வேகமாக போட ஆரம்பித்தாள்.
எளிமையாக ஒரு சுடிதாரை அணிந்தாள். கப்போர்டில் அவன் வைத்திருந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டாள். அவளின் அக்கவுண்டில் பணம் இருந்தது. இருந்தாலும் கூடுதலாய் கொஞ்சம் பணம் கையில் இருந்தால் நல்லதுதான் என்று நினைத்தாள்.
வெளியே வந்தவள் அங்கே தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை கையில் எடுத்தாள். எல்லா குழந்தைகளும் நாளாக நாளாக எடை கூடுவார்கள். வளருவார்கள். ஆனால் இந்த குழந்தை மட்டும் எடை குறைந்து கொண்டே சென்றது. இவளுக்கு அது வேறு கவலையை கொடுத்தது.
“நான் என்னோட பேரன்ட்ஸ் வீட்டுக்கு போயிட்டு வரேன்..” என்று மாமியாரை பார்த்து சொன்னாள் மானசா.
அவளின் கையிலிருந்த குழந்தையை பார்த்த சுலோச்சனா “போறதா இருந்தா போ. குழந்தையை எதுக்கு தூக்கி வச்சிருக்க?” என்று கேட்டாள்.
“பாப்பாவை பார்க்கணும்ன்னு அம்மா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. போயிட்டு உடனே வந்துடுவேன்..” என்றாள்.
சுலோச்சனாவுக்கு தன் பேத்தியை அவளோடு கொடுத்து அனுப்ப விருப்பமே இல்லை. ஆனால் குழந்தைக்கு அம்மாதான் இல்லை. அவர்களாவது இருக்கட்டுமே என்று எண்ணமும் வந்தது. நேற்று குழந்தை அழுததும் மானசாவும் சேர்ந்து அழுதுவிட்டு இருந்தாள். அதனால் சுலோச்சனாவுக்கு குழந்தை விஷயத்தில் மானசாவின் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது.
“சரி போயிட்டு சீக்கிரம் வரணும்..” என்று அனுமதி கொடுத்தாள் சுலோச்சனா.
இவளுக்கு மாமியாரின் பாதம் தொட்டு நன்றி சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் குழந்தையின் பொருட்கள் இருந்த பேஸ்கட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நடந்தாள்.
“டிரைவர் தம்பி.. இவளை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு அரை மணி நேரம் கழிச்சி கூட்டி வந்துடு..” என்று டிரைவரிடம் சொன்னாள் சுலோச்சனா.
அவள் சொன்னதில் அதிர்ந்த மானசா இனி என்ன செய்வது என்று யோசித்தாள்.
வேறு வழியே இல்லை. டிரைவரிடம் ஏதாவது பொய் சொல்லிவிட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவள் வாசலுக்கு சென்றாள். டிரைவர் கார் கதவை திறந்து விட்டார். அமைதியாய் ஏறி அமர்ந்தாள்.
கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த வீட்டை விட்டு தாண்டும் வரையிலும் அவளின் இதயம் திக் திக் என்று துடித்துக் கொண்டே இருந்தது.
இவள் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள். அம்மாவின் வீட்டிற்கு போய்விட்டு அங்கே அம்மாவிடம் உதவி கேட்டு அதன் பிறகு பின்வாசல் வழியாக தப்பித்து போய்விடலாமா என்று யோசித்தாள்.
ஆனால் வீட்டிற்கு போனால் அம்மா செருப்பால் அடிப்பாள். குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறேன் என்று சொன்னால் உனக்கு எதற்கு இந்த தலைவலி என்று கண்டிப்பாக கேட்பாள். அம்மாவுக்கும் குழந்தையின் மீது பாசம்தான். ஆனால் தன் மகளின் வாழ்க்கையை அடமானம் வைக்கும் அளவுக்கு பாசம் இல்லை.
வழியில் இருந்த ஒரு குழந்தை நல மருத்துவமனையை பார்த்த மானசா “ஒரு நிமிஷம் காரை நிறுத்துங்க..” என்றாள்.
டிரைவரும் நிறுத்தினார்.
“குழந்தை சரியா பால் குடிக்கல. அந்த ஹாஸ்பிட்டல் போகணும்..” என்று மருத்துவமனையை கை காட்டினாள். மருத்துவமனைக்குள் நுழைவதாக இவருக்கு போக்கு காட்டி விட்டு வேறு வழியில் தப்பித்து ஓடிவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.
“இந்த குழந்தை மேல நீங்க ரொம்ப பாசம் வச்சிருக்கிங்க. இதே பாசத்தை எப்பவும் வைப்பிங்கன்னு நம்புறேன். நிறைய பேர் கல்யாணமான புதுசுல சக்களத்தி பிள்ளைகள் மேல உயிரா இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு ஒரு குழந்தை வந்ததும் சக்களத்தி குழந்தைகளை கவனிக்க மாட்டாங்க. நீங்க அப்படி இருந்துடாதிங்க..” என்று சொன்ன டிரைவர் காரை மருத்துவமனை கேட்டுக்குள் விட்டார்.
காரை நிறுத்தியது மட்டுமல்லாமல் இவளோடு சேர்ந்து மருத்துவமனைக்கும் வந்தார்.
“நான் ஹெல்ப் பண்றேன் மேடம்..” என்று சொல்லி ரிசப்ஷனில் குழந்தையின் பெயரில் ரிப்போர்ட் நோட்டையும் அனுமதி சீட்டையும் வாங்கினார்.
மனாசாவுக்கு வேறு வழியே இல்லை. அங்கிருந்த இருக்கையில் அமைதியாய் அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள். டிரைவர் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிமிடத்தில் வேறு எங்காவது செல்வார். அப்போது நாம் கிளம்பி விடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள்.
ஆனால் சற்று நேரத்தில் மானசாவின் காத்திருப்பு எண் திரையில் ஓடியது.
மருத்துவரை பார்க்க கிளம்பினாள்.
அங்கிருந்த பெண் மருத்துவர் இவளை அமர வைத்துவிட்டு குழந்தையை பார்த்தார்.
“அழகான குழந்தை..” என்றவரிடம் “ஆனா சரியா சாப்பிட மாட்டேங்கிறா..” என்றாள் மானசா.
“சாப்பிடலையா?” என்று மருத்துவர் குழப்பமாக கேட்க “பால் சாப்பிட மாட்டேங்கிறா..” என்றாள் இவள்.
“குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆச்சி?”
இவளும் எண்ணி பார்த்துவிட்டு சொன்னாள்.
“மில்க் ப்ளோ எப்படி இருக்கு?” என்று மானசாவை பார்த்து கேட்டாள்.
மானசா சோகத்தோடு “இது என் பிரண்டோட குழந்தை. குழந்தை பிறந்ததும் அவ இறந்துட்டா..” என்று சொன்னாள். சொல்லும்போது விழிகளில் இருந்து அருவி போல் கொட்டியது கண்ணீர்.
“சாரி..” என்று மருத்துவர் “குழந்தைக்கு என்ன பால் கொடுக்குறிங்க?” என்று விசாரித்தார்.
“ஃபார்முலா மில்க்..” என்றாள் மானசா.
மருத்துவர் குழந்தையை சோதித்தார். “குழந்தை ரொம்ப வீக்கா இருக்கு. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா நீங்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாகணும்..” என்று சொன்னார்.
“ஆனா இவங்க அம்மா இறந்துட்டாங்களே..” என்ற மானசாவிடம் “எத்தனையோ தாய்மார்கள் தங்களோட தாய்ப்பாலை தானம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க யார்கிட்டயாவது உதவி கேட்டு அது மூலம் இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமே!” என்றார் மருத்துவர்.
இவள் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்தாள். ‘நம் குழந்தைக்கு வேறு யாரோ தாய்ப்பால் கொடுப்பார்களா?’ இவளால் ஏற்க முடியவில்லை. ஆனால் ஏற்றுதான் ஆக வேண்டும் என்று குழந்தையின் உடல்நிலை சொல்லாமல் சொன்னது.
மானசா குழந்தையோடு மருத்துவமனைக்கு வந்திருக்கும் விஷயத்தை தீனாவுக்கு போன் செய்து சொன்னார் டிரைவர்.
அவனுக்கு மானசாவின் மீது சிறு கோபம் வந்தது. குழந்தையின் மீது அளவுக்கதிகமாக பாசம் காட்டுகிறாள். இது அவனுக்கு பொறாமையை கொடுத்தது.
அவளின் பாசம் முழுக்க தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது.
இங்கே மருத்துவரிடம் இருந்த மானசா “தாய்ப்பால் கொடுத்த சரியாகிடுமா? குழந்தை ஹெல்தியா ஆகிடுவாளா?” என்று கேட்டாள்.
“கண்டிப்பா.. சில குழந்தைகளுக்கு பார்முலா மில்கும் ஒத்துக்காது. அப்ப அந்த குழந்தைகளை வளர்த்துவதே பெரிய கஷ்டமா இருக்கும். அதுக்காகதான் இந்த தாய்ப்பால் தானம்..” என்றார் மருத்துவர்.
சுலோச்சனா ஏற்கனவே இதற்காக ஒரு தாயைத் தேடிக் கொண்டிருப்பதாக பணிப்பெண்கள் சொல்லியிருந்தார்கள். அக்கம் பக்கத்தில் தாய்ப்பால் தானம் தரும் அளவுக்கு பெண்கள் யாரும் இல்லை அதுதான் பிரச்சினையாக இருந்தது.
அதை மருத்துவரிடம் சொன்ன மானசா “என்னால கொடுக்க முடிச்சிருந்தா நானே தாய்ப்பால் தந்திருப்பேன்..” என்று தேம்பிக் கொண்டு சொன்னாள்‌.
அவளின் கண்ணீரை பார்த்து நெகிழ்ந்த மருத்துவர் “இந்த குழந்தைக்கு நீங்க தாயா இருப்பதே பெரிய வரம்தான்..” என்றார்.
குழந்தைக்கு தேவையான சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார் மருத்துவர். அவள் அங்கிருந்து கிளம்ப இருந்த நேரத்தில் அந்த அறைக்குள் வந்த ஒரு இளம் பெண் “என் பாய்பிரெண்ட் என்னை டார்ச்சர் பண்றான் டாக்டர். எனக்கு சீக்கிரமா தாய்ப்பால் வர மாதிரி ட்ரீட்மென்ட் கொடுங்க..” என்று கேட்டாள்.
மருத்துவர் அந்த பெண்ணிடம் பதில் சொல்லும் முன்னால் மருத்துவரின் மேஜை நெருங்கிய மானசா “இது சாத்தியமா?” என்று கேட்டாள்.
மருத்துவர் அவளை குழப்பமாக பார்த்தார்.
“என்னால என் தத்து குழந்தைக்கு தாய்ப்பால் தர முடியுமா?” என்று கேட்டாள்.
அங்கிருந்த இளம் பெண் “தரலாமே! அதுக்கு ட்ரீட்மென்ட் இருக்கே..” என்றாள்.
மானசா மருத்துவரை கெஞ்சல் பார்வை பார்த்தாள். “ப்ளீஸ் டாக்டர் ஹெல்ப் பண்ணுங்க. இது என்னோட குழந்தை. ஏதோ ஒரு தாயை எதிர்பார்த்து காத்திருப்பதை விட நானே என் குழந்தைக்கு பசி தீர்த்துப்பேன்..” என்று கெஞ்சினாள்.
“இதுல நிறைய சிக்கல் இருக்கு. குழந்தைக்கு தேவையான அளவுக்கு பால் சுரக்குமான்னு தெரியாது. இந்த ட்ரீட்மென்ட் உங்களுக்கு ஒர்க் ஆகுமான்னும் தெரியாது..” என்றார்.
“பரவால்ல டாக்டர். எனக்கு ட்ரீட்மென்ட் கொடுங்க. மீதியை நான் பாத்துக்குறேன். எனக்கு நம்பிக்கை இருக்கு..” என்று சொன்னாள்.
மருத்துவர் அந்த இளம்பெண்ணை சலிப்போடு பார்த்துவிட்டு அதே மருத்துவமனையில் இருந்த மற்றொரு மருத்துவரிடம் மானசாவை அனுப்பி வைத்தார்.
தொடரும்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!