குழந்தையை இவள் பார்க்க வந்ததும் அவளை முறைத்து பார்த்த சுலோச்சனா “உன்னோட நிழல் கூட இனிமே என் பேத்தி மேல படக்கூடாது..” என்று கண்டிப்போடு சொல்லிவிட்டாள்.
இன்றைக்கு அந்த தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணி வீட்டிற்க்கே வந்து விட்டாள். ஹாலிலேயே அமர்ந்து துண்டைப் போர்த்திக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் தர ஆரம்பித்தாள்.
மானசாவுக்கு நெஞ்சு வலித்தது. இப்படி ஒரு வலியை இதற்கு முன் அவள் அனுபவித்ததே இல்லை. காதலில் பொசசிவ் வரும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் குழந்தையின் விஷயத்தில் இந்த அளவுக்கு பொசசிவ் வரும் என்று அந்த நொடிதான் அவளுக்கு தெரியும்.
நெஞ்சை பிடித்தபடி அறைக்குள் ஓடிவிட்டாள்.
கட்டிலில் கவிழ்ந்து படுத்தவள் தேம்பி அழுதாள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
குழந்தை தன்னை விட்டுப் போய்விட்டது போலவே நினைத்து மருகினாள்.
இது என்ன சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம் என்று நினைத்து கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
தாய்ப்பால் கொடுத்தவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள். அடுத்த சில வேளைகளுக்கான பாலை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருந்தார்கள்.
குழந்தை தொட்டிலில் படுத்து அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மாமியார் குழந்தையின் தொட்டிலை ஒரு கையால் ஆட்டியபடி மறு கையில் புத்தகம் ஒன்றை வைத்து படித்துக் கொண்டிருந்தாள்.
இவள் தொட்டிலை நெருங்க நினைக்க, தொட்டிலின் அருகில் வந்து பணிப்பெண் ஒருத்தி நின்றாள்.
“உங்களை குழந்தை பக்கத்துல விடக்கூடாதுன்னு மேடம் கண்டிஷன் போட்டு இருக்காங்க..” என்று சொன்னாள்.
அதிர்ந்த மானசா தன் மாமியாரை பார்த்தாள். அவள் திரும்பி கூட பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் கணவன் குழந்தையை பெற்று தருவதாக சொல்லிவிட்டானே! அதன் பிறகும் எதற்காக வீணாய் மனம் கலங்க வேண்டும் என்று தன்னையே கேட்டுக்கொண்டவள் அன்றைய நாளும் மருத்துவமனைக்கு சென்றாள்.
ஆனால் இன்று அவள் வெளியே சென்ற போது சுலோச்சனா டிரைவரை அனுப்பவில்லை.
அவள் வெளியே செல்கிறாள் என்று பணிப்பெண் ஒருத்தி போன் செய்து தீனாவுக்கு சொன்னாள்.
குழந்தையை விட்டுவிட்டு அவள் எங்கும் ஓடிப் போக மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். அதனால் மனைவி வெளியே சென்ற விஷயத்தை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இரண்டாம் நாள் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவனை நெருங்கிய மானசா “இன்னைக்கு குழந்தையை வாங்கி தரேன்னு சொன்னிங்களே!” என்றாள்.
சென்ட் அடித்துக் கொண்டிருந்தவன் பாட்டிலை ஓரம் வைத்து விட்டு திரும்பி பார்த்து அவளின் முகத்தை அள்ளினான்.
அவன் மீதிருந்து வந்த வாசம் இவளுக்கு வாந்தி வர வைப்பது போலவே இருந்தது.
“அவசரம் என்ன? என்னைக்கு இருந்தாலும் அந்த குழந்தையை நீதான் வளர்க்க போற. இப்போதைக்கு ரெஸ்ட் எடு..” என்று சொன்னான்.
அதிர்ந்தவள் “ஆனா நீ வாக்கு கொடுத்தியே..” என்றாள்.
“ஆமா. ஆனா அதுக்காக உடனே வாங்கி வர முடியுமா? அம்மாவுக்கு இன்னமும் கோபம் தீரல. உனக்கு தலைவலி. தினமும் தலைவலி மருந்து பூசுற. அதுக்கு பதிலா ரெஸ்ட் எடுத்து உடம்பை சரி பண்ணு. அப்புறம் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்..” என்றான்.
அவளின் விழிகளில் இருந்து ஒற்றை கோடாக கண்ணீர் வழிய “அழுது தொலைக்காத. எனக்கு பார்க்க சகிக்கல. நீ ஒன்னும் அந்த குழந்தையை பெக்கல. அது உன் பிரெண்டோட குழந்தை. அவ்வளவுதான். வீட்ல அத்தனை வேலைக்காரங்க இருக்கும்போது எதுக்கு எல்லா பொறுப்பையும் உன் தலை மேல போட்டுக்கிற.?” என்று கேட்டான்.
இவள் அவனை விட்டு விலகி நடந்தாள்.
அவள் விழிகளில் கொலைவெறியே தெரிந்தது.
தன் பேக்கை எடுத்து தோளில் மாட்டியவன் “ஆபிஸ்க்கு போறேன். திரும்பி வரும்போது சிரிச்ச முகமா வரவேற்க பாரு. உனக்கு கடைசி வரை நான்தான் துணை வர போறேன்..” என்று சொல்லிவிட்டு போனான்.
இவள் வெளியே சென்று தூரமாக அமர்ந்தபடி குழந்தையை பார்த்தாள். இவள் அருகில் சென்றாலே பணிப்பெண்கள் குழந்தையை தனி அறைக்கு எடுத்து சென்று விடுகிறார்கள். இவளால் அந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. அதனால் தூரமாக இருந்தபடி குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையை தூக்காமல் கைகளை பிடிக்கவில்லை. குழந்தையை சாய்க்காமல் தன் நெஞ்சை பிடிக்கவில்லை. விழிகள் கலங்கிக் கொண்டே இருந்தது. மாமியார் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தாள்.
மாமியாரை பார்க்கும்போதெல்லாம் விழிகளால் கெஞ்சினாள் இவள். சுலோச்சனாவுக்கு இவள் நடிக்கிறாள் என்றே தோன்றியது. தேவையில்லாமல் சீன் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தாள்.
மானசா தினமும் இரு வேளை தன் தோழியின் புகைப்படத்தின் முன் விளக்கேற்றி வைத்து வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு அதுவும் சுலோச்சனாவுக்கு பிடிக்கவில்லை.
“என் மருமகளுக்கு நீ ஒன்னும் விளக்கேத்த வேணாம்..” என்று சொல்லி விட்டாள்.
அந்த வேலையையும் ஒரு பணிப்பெண்ணே செய்தாள்.
அன்று மாலையில் தீனா வந்த போது “உங்கம்மா என்னை ப்ரீத்தி போட்டோவுக்கு விளக்கேத்த கூட விட மாட்டேங்கிறாங்க..” என்றாள்.
இவன் இவளை ஏற இறங்க பார்த்தான். “நீ நிறைய குறை சொல்ற மானசா. எனக்கும் என் அம்மாவுக்கும் நடுவுல சண்டை மூட்டி விட பார்க்கிறியா?” என்று கேட்டான்.
இவளுக்கு இதயத்தில் ஆணி இறங்கியது போல் இருந்தது.
“என்னை ஏமாத்திட்ட நீ..” என்றவளின் விழிகள் கலங்க ஆரம்பிக்க, “தயவுசெஞ்சி அழ ஆரம்பிக்காத. எனக்கு உன் கண்ணீரை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.” என்றான்.
இவள் வீழும் முன்பே அந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
இவனுக்கு அவளை பார்க்கும்போது மனம் வலித்தது.
அவளின் முகத்தை அள்ளியவன் “நம்ம கல்யாணத்தால அம்மா நம்ம மேல கோபமா இருக்காங்க. அந்த எறும்பு மேட்டர் ஒரு சாக்கு. குழந்தையை வாங்கிக்கிட்டாங்க. இனி அவங்களை சமாதானம் செய்வது அவ்வளவு ஈசி இல்ல. நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. நாம பொறுமையா அவங்ககிட்ட இருந்து மன்னிப்பை வாங்கிக்கலாம்.” என்றான்.
அனைத்து தவறுகளையும் நீ செய்தாய். நான் ஏன் தண்டனைகளை ஏற்க வேண்டும் என்று இவளுக்குள் கேள்வி எழுந்தது.
இவர்கள் செய்வது எல்லாம் அநியாயம் என்று மனம் கொந்தளித்தது.
அவளின் முகத்தை பார்த்தவன் “என்ன யோசிக்கிற பேபி? என்னை வில்லனா பார்க்காத. நீ பார்க்கும் அனைத்தும் உண்மை கிடையாது. நீ நினைக்கும் அனைத்தும் உண்மை கிடையாது. ஐ லவ் யூ. இது மட்டும்தான் உண்மை..” என்றான்.
ஆனால் அவள் அதன் பிறகு மொத்தமாக மாறி விட்டாள். அன்றிரவு சாப்பிட்டு விட்டு வந்ததும் தலையணையில் சாய்ந்தவள் அவன் வந்து மேலே சரிந்த போது எதுவும் சொல்லவில்லை.
இரவு அவன் உறங்கிய பிறகு எழுந்து தனியே அமர்ந்து கணக்கை போட ஆரம்பித்தாள். எதை எப்போது செய்வது என்று யோசித்தாள்.
அடுத்த சில நாட்களுக்கும் ட்ரீட்மென்ட் வழக்கம் போலவே சென்றது. இவளுக்கும் தாய்ப்பால் துளி துளியாக சுரக்க ஆரம்பித்தது.
அன்று கடைசி நாள் ட்ரீட்மென்ட்டும் முடிந்து விட்டது.
தன் பழைய போனை விற்று விட்டு புது போனை வாங்கியவள் அதில் புது சிம்மையும் போட்டு எடுத்துக் கொண்டாள்.
இனி இந்த உலகத்தில் யாரும் நமக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
அன்று மாலையில் தீனா வீட்டிற்கு வந்ததும் இவளை தேடி ஓடி வந்தான்.
ஓரமாக அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை எழுப்பி நிறுத்தியவன் அவளை கண்ணாடியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான்.
“புதுசா ஒரு ப்ரோஜெக்ட் கிடைச்சிருக்கு..” என்று சொல்லி ஒரு நெக்லஸை எடுத்து காட்டினான்.
“நானே செலக்ட் பண்ணி வாங்கி வந்தேன்..” என்றவன் அவளின் கழுத்தில் அந்த நெக்லஸை அணிவித்தான்.
கண்ணாடியில் இருந்த அவளின் பிம்பத்தை பார்த்தான். பல நாளாக இல்லாமல் போயிருந்த கண்களின் ஒளி இப்போது திரும்பி வந்திருந்தது. அது இந்த நெக்லஸால்தான் என்று நினைத்தவன் அவளின் முதுகின் புறம் நெருங்கி நின்று அவளை அணைத்தான். அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“என் மறுபாதி நீ..” என்றான்.
அவளின் கன்னத்தில் மீண்டும் மீண்டும் இதழ் பதித்தான். அவன் கொடுத்த முத்தம் காரணமாக ஒவ்வொரு முறையும் இவளின் தலை அந்த பக்கம் சாய்ந்து நிமிர்ந்தது. இவனுக்கு பூச்செடியில் பூ ஒன்று காம்போடு சேர்ந்து அசைந்தாடுவது போலவே இருந்தது.
“அழகே நீதான்..” என்றான்.
அன்று இரவு இவளே விளக்கை அணைத்து விட்டு அவனுக்கான சேவைகளை செய்தாள். அவனை கண்டு தனக்கு காமநோய் பீடித்துக் கொண்டது போல் அப்படி நடித்தாள். அவனின் மேனிக்கு சிறப்பான கவனிப்பு தந்தாள்.
அவனுக்கு ஆச்சர்யம். நாம் தொட்டால் கூட முகத்தை திருப்பிக் கொள்பவள் இன்று இப்படி நடக்க காரணம் இந்த நெக்லஸ்தான் என்று நினைத்தவன் அவளின் சேவையை மனதார ஏற்றுக் கொண்டான். உயிர் வரை நேசித்தான்.
இவள் தினம் இது போல் நடந்துக் கொண்டால் சொர்க்கமே இவளிடம்தான் இருக்கிறது என்று நம்பி விடுவான்.
அவளின் சின்ன சின்ன செயல்கள் கூட அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் நகங்களும் இதழ்களும் தன் மேனியின் மீது விழுந்தபோது புதிதாக சில முறை உயிர் பெற்ற கர்வத்தை கொண்டான்.
அவனுக்கு விழுந்து விழுந்து சேவை செய்து தன்னை அடிமை போல் தந்தவள் மோகத்தின் உச்சத்தில் அவன் இருக்கும்போது “குழந்தையை வாங்கி தரிங்களா? நானும் பாப்பாவும் நாளைக்கு எங்கம்மா வீட்டுக்கு போய் வரோம்.” என்றாள்.
இவன் உணர்ச்சியின் பிடியில் இருந்தான். “போய் வா..” என்றான்.
கொஞ்சம் நிம்மதியடைந்தாள் இவள்.
மறுநாள் காலையில் எழுந்தவள் அவன் ஏமாற்றி விட கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.
நல்லவேளையாக அவன் ஏமாற்றவில்லை.
தன் அம்மாவிடம் சென்றவன் “குழந்தையை அவகிட்ட கொடுங்கம்மா. அவளும் பாவம்..” என்றான்.
சுலோச்சனா அவனை முறைத்தாள். “நான் ஏன் தரணும்?” எனக் கேட்டாள்.
“நான் உங்களுக்காகதான் இரண்டரை வாரமா அமைதியா இருந்தேன். குழந்தைன்னா அழதான் செய்யும். சின்ன சின்ன விசயத்துக்கு கூட அவ மேல கடுப்பை கொட்டாதிங்க. எத்தனை நாளைக்கு உங்களால் இந்த குழந்தையை பார்த்துக்க முடியும்? அவளை நீங்க வெறுத்தா அப்புறம் அவ குழந்தையை வெறுப்பா. கடைசியா குழந்தையோட வாழ்க்கைதான் பாதிக்கப்படும். கொஞ்சமாவது புரிஞ்சிக்கங்க..” என்றான்.
சுலோச்சனாவுக்கு எதுவும் புரியாமல் இல்லை. ஆனால் மகனையும் மருமகளையும் நம்புவதற்குதான் இஷ்டம் இல்ல.
அவன் அம்மாவின் மௌனத்தை பார்த்து விட்டு சென்று குழந்தையை கையில் எடுத்தான்.
சுலோச்சனாவுக்கு அப்போதே சந்தேகம்தான். அன்றும் இதே போல்தான் அம்மா வீட்டுக்கு செல்வதாக சொன்னாள். ஆனால் அங்கே போகவில்லை. இப்போது மீண்டும் எதற்காக செல்ல நினைக்கிறாள் என்று யோசித்தாள்.
மானசா குழந்தைக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். கணவனோடு சேர்ந்து கிளம்பினாள்.
அவனே டிரைவ் செய்தான்.
அவளின் தாய் வீட்டின் முன் காரை நிறுத்திய தீனா “ஈவ்னிங் வரை நீ இங்கேயே இரு. நான் திரும்பி வந்து கூட்டி போறேன்..” என்றான்.
“தேங்க்ஸ்..” என்றவளின் கழுத்தின் கீழே பார்த்தவன் “நீ என் பக்கத்துல வளர்ந்துட்டு இருக்க..” என்றான்.
அவன் பார்வையும் வார்த்தையும் இவளை முகம் சிவக்க வைத்தது.
“சரி போய் வா..” என்றான்.
இவள் குழந்தையை அணைத்தபடி காரை விட்டு இறங்கினாள்.
அவனின் கார் அங்கிருந்து சென்றதும் தாய் வீட்டின் கேட்டை திறக்காமல் அந்த பக்கமாக வந்த ஆட்டோவை கை நீட்டி மறித்து அதில் ஏறினாள். இனி அந்த சைக்கோவை பார்க்க மாட்டோம் என்ற சந்தோசத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.