தீனா அன்றைய வேலை முடிந்து மனைவியை அழைத்துப் போக மாமியார் வீட்டிற்கு வந்தான். நேற்றைய இரவின் கதகதப்பும் தித்திப்பும் நெஞ்சம் முழுக்க நிறைந்து நின்று இருந்தது.
வாழ்க்கையையே இப்போதுதான் வாழ தொடங்கியது போல் இருந்தது. அவள் தன்னை இந்த அளவிற்கு கவனித்துக் கொள்வாள் என்றால் தன் சொத்து மொத்தத்தையும் அவளுக்கு எழுதி வைக்க இவன் தயாராக இருந்தான். வெறும் உடம்புக்கு அலைகிறாய் என்று மனசாட்சி சொன்னது. அவளின் காலில் விழுந்து அடிமை போல் கிடக்க போகிறாயா என்று அந்த மனசாட்சி குத்தி கேட்டது.
ஆனால் இவனுக்கு மனசாட்சியின் வார்த்தை முக்கியமில்லை. மானசா, அவளின் விழி பார்வை போதும் இவன் செத்துப் பிழைக்க. அவளின் விரல் அசைவு போதும் இவன் வாழ்ந்து பார்க்க.
மாமியாரின் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் நெஞ்சை நிமிர்த்தியபடி வீட்டின் காலின் பெல்லை அழுத்தினான்.
இனிமேல் தன் மாமியார் வீட்டில் இருப்பவர்களும் தன்னை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று சந்தோஷத்தில் பூரித்தான்.
கதவை திறந்த பூரணி இவனை பார்த்துவிட்டு முறைக்க ஆரம்பித்தாள். “நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்க?” என்று கேட்டாள்.
மாமியார் மன்னிக்க தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டவன் நேரமெடுத்து பொறுமையாக மன்னிக்கட்டும் என்று நினைத்தபடி “மானசாவை கூட்டிப் போக வந்தேன்..” என்று சொன்னான்.
அவள் புருவம் சுருக்கினாள். “மானசாவா? அவளை எதுக்கு இங்கே வந்து தேடுறிங்க?” என்று கேட்டாள்.
இவன் கை கடிகாரத்தைப் பார்த்தான். அதற்குள் நம் வீட்டிற்கு போய்விட்டாளா என்று யோசித்தவன் “நான் வர வரைக்கும் வெயிட் பண்ண சொன்னேன்!” என்றான் மாமியாரிடம்.
பூரணி இவனை புரியாமல் பார்த்தாள்.
“எப்ப இங்கிருந்து கிளம்பினா?” என்று கேட்டான் தீனா.
“யாரை கேக்கிறிங்க? என்ன கேக்கிறிங்க?” என்று சீறினாள் மாமியார்.
இந்த மாமியாரின் சீறலை பார்க்கும்போது நம் மனைவி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது இவனுக்கு.
“காலையில் மானசாவை இந்த வீட்டுல விட்டுட்டு போனேனே.. அவளைதான் கேட்கிறேன்..” என்றான்.
இவனை கொடூரமாக முறைத்தாள் பூரணி.
“இங்க என் பொண்ணு வரல. உங்களை கல்யாணம் பண்ண பிறகு அவ எங்க வீட்டு பக்கமே வரல. அவ போன் பண்ணா கூட நானோ அவங்க அப்பாவோ பேசுறது கிடையாது.. நீங்க இங்கே வந்து என்ன கதை அளந்துக்கிட்டு இருக்கிங்க?” என்று கேட்டாள்.
இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “இல்லைங்க காலையில் இதே வீட்டு வாசல்லதான் இறக்கி விட்டுட்டு போனேன். எதுக்கு நீங்க என்கிட்ட பொய் சொல்றிங்கன்னு எனக்கு சுத்தமா புரியல..” என்றான்.
“என் பொண்ணு என் வீட்டுக்கே வரலைன்னு சொல்றேன். அதுக்கப்புறமா சும்மா நின்னு கத்திக்கிட்டு இருக்கிங்க..” என்று மாமியார் சத்தமிட்டாள்.
இவர்களின் சத்தத்தில் மானசாவின் தம்பி வீட்டுக்குள் இருந்து வந்தான்.
அம்மாவையும் மாமனையும் மாறி மாறி பார்த்தவன் “அக்காவை காலையில இவர் நம்ம வீட்டு வாசல்ல இறக்கி விட்டாரும்மா..” என்று தாயிடம் சொன்னான்.
பூரணி மகனை குழப்பத்தோடு பார்த்தாள். “நீ அவளை பார்த்தியா?” என்று கேட்டாள்.
“ஆமா அம்மா. அவர் இறக்கி விட்டுப் போனதும் ஆட்டோ பிடிச்சி இங்கிருந்து போய்ட்டா. அவ என்னை பார்க்கல. அவ கையில குழந்தை கூட இருந்தது..” என்றான் தம்பி.
பூரணிக்கு தன் மகள் ஏன் இப்படி செய்தாள் என்று புரியவில்லை.
ஆனால் தீனாவுக்கு புரிந்து விட்டது. குழந்தை அவளின் கையில் கிடைத்தால் அவள் வீட்டை விட்டு ஓடி விடுவாள் என்று இவனின் மனசாட்சி வெகு நாளாகவே எச்சரித்து கொண்டு இருந்தது. இவனும் முடிந்த அளவிற்கு அவள் மீது கண்ணாகதான் இருந்தான். ஆனால் இப்போது அவள் தன் வேலையை காட்டி விட்டாள்.
நேற்று இரவு அவள் அப்படி நடந்து கொண்டதற்கான அர்த்தம் கூட இப்போதுதான் இவனுக்கு புரிந்தது. நம்மை மயக்கி இருக்கிறாள். ஏமாற்றி குழந்தையை வாங்கி இருக்கிறாள். இப்போது நம்மை விட்டு ஓடியே போய்விட்டாள்.
கோபத்தில் இவனுக்கு ரத்தம் கொதித்தது. ஆனாலும் அவசரப்பட்டு அவளை சந்தேகப்படக் கூடாது என்று முடிவெடுத்தவன் வீட்டிற்கு போன் செய்து மானசா அங்கே இருக்கிறாளா என்று விசாரித்தான்.
“அவங்க இங்க வரல சார்..” என்று பணிப்பெண் சொன்னாள்.
இவனின் சந்தேகம் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. உடனே அங்கிருந்து கிளம்பினான். முதல் வேலையாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவள் தன் குழந்தையை கடத்திவிட்டதாக புகார் அளித்தான். இப்படி புகார் அளித்தால்தான் அவளை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்தான்.
மானசாவின் புகைப்படத்தையும் குழந்தையின் புகைப்படத்தையும் போலீஸ் வாங்கிக் கொண்டார்கள். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் எக்கச்சக்கமான பணத்தையும் கொடுத்தான்.
“சீக்கிரம் அவளை கண்டுபிடிச்சி கொடுங்க..” என்று வேண்டி கேட்டுக் கொண்டான்.
வீட்டிற்கு வந்தவனுக்கு பைத்தியமே பிடிக்கும்போல் இருந்தது.
ஹாலில் ஓரமாய் அமர்ந்து இருந்த அம்மா இவன் வந்ததும் “அவ எங்கே? குழந்தை எங்கே?” என்று கேட்டாள்.
இவன் தன் மனதில் இருந்து மொத்த கடுப்பையும் அம்மாவின் மீது காட்ட ஆரம்பித்து விட்டான்.
“எல்லாம் உங்களால வந்ததும்மா. அவகிட்ட குழந்தையை கொடுக்க மாட்டேன்னு நீங்கதான் பிடிவாதம் பிடிச்சிங்க. அவ உங்க மேல இருந்த கோபத்துல என்னையும் விட்டுட்டு போயிட்டா..” என்று கத்தினான்.
மேஜை மேல் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தவன் “என் பொண்டாட்டி என்னை அனாதையா நிறுத்திட்டு போயிட்டா. இப்ப உங்களுக்கு நிம்மதியா?” என்று கேட்டான்.
“குழந்தையை வேற வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறாளோ? அவளை இப்ப எங்கே தேடி கண்டுபிடிப்பேன்? என் வாழ்க்கையை நீங்க நாசம் பண்ணிட்டிங்க. இப்ப என் உயிரையே நான் தொலைச்சிட்டேன்..” என்றவன் தலையை பிடித்தபடி சோபாவில் வந்து அமர்ந்தான்.
சுலோசனாவுக்கு அவனைப் பார்த்து கோபம்தான் வந்தது. மனைவி இறந்தபோது கொஞ்சமும் வருத்தப்படாதவன், இப்போது இவள் காணாமல் போனதற்காக இத்தனை சீன் போடுகிறான். இவனின் சுயநலத்தை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
“எல்லாம் என் தப்பு. அவளை ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணிட்டேன். அவளோட பார்வையில் நான் வில்லன்தானே, ஏன் அவகிட்ட நல்லவனா நடந்துக்கணும்ன்னு நினைச்சி என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருந்தவளை அப்படியே விட்டுட்டேன். இப்ப மொத்தமா என்னை அனாதையா நிறுத்திட்டு போயிட்டா..” என்றவனின் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டியது.
அவன் திட்டும் போதும் கத்தும் போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சுலோச்சனா அவனின் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கியது கண்டு அதிர்ந்து போனாள்.
இவனைப் பார்த்தால் வெறும் உடல் மோகத்திற்காக அழுபவன் போல தெரியவில்லை. அவளை தொலைத்து விட்டோமே என்ற சோகத்தில் உண்மையான வேதனையில் அழுது கொண்டிருந்தான்.
இப்படிப்பட்டவன் ப்ரீத்தியின் இறுதி சடங்கின் போது கொஞ்சம் கூட வருத்தப்படாதது ஏன் என்று இவளுக்குள் புது கேள்வி எழுந்தது.
பணியாட்கள் ஆளுக்கொரு மூலையில் நின்று தீனாவை பார்த்து பரிதாப பட்டார்கள்.
“அவ போனதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” என்று அம்மா கேள்வி எழுப்பினாள்.
கண்ணீரோடு நிமர்ந்து அம்மாவை பார்த்த தீனா “அதுதானே நீங்க என்ன பண்ணுவிங்க? நீங்களா ஒருத்தியை தேடிப் பிடித்து கட்டி வைப்பிங்க. அப்ப நான் எதுவும் சொல்லாம கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா நானா ஒருத்தியை விரும்பி அவளை பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணி வந்தா அவளை கொடுமை பண்ணுவிங்க. அவ இந்த குழந்தைக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா..” என்று புலம்பினான்.
“அவ தூக்கி போனது என்னோட பேத்தியை..” என்று அம்மா எரிச்சலாக சொன்னாள்.
“ஆனா காணாம போனது என்னோட பொண்டாட்டி. என் வாழ்க்கையை தவிர உங்களுக்கு மீதி எல்லாமே முக்கியம்..” என்று வெறுப்போடு சொன்னான்.
போலீசுக்கு போன் செய்து விசாரித்தான். மானசாவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னார்கள் போலீசார்.
இரவில் அவன் சாப்பிட வரவில்லை. குழந்தை இல்லை என்ற துக்கம் சுலோச்சனாவை வதைத்தது. காலியாக கிடந்த தொட்டிலை பார்த்துக் கொண்டிருந்தவள் மனம் கேட்காமல் மகனை தேடிப் போனாள்.
அவன் தன் படுக்கை அறை கட்டிலில் மனைவியின் தலையணையை கட்டிப்பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. அவன் இந்த அளவிற்கு அழுவான் என்று சுலோச்சனா எதிர்பார்க்கவே இல்லை.
“சாப்பிட வாடா..” என்று அவனை அழைத்தாள்.
“என் வாழ்க்கையே இப்ப என்னோடு இல்ல. சாப்பாடு ரொம்ப முக்கியமா?” என்று சீறியவன் “என்னை தனியா விட்டு போங்க. அவ மட்டும் திரும்பி வரலன்னா நான் செத்து போயிடுவேன்..” என்று அம்மாவை மிரட்டினான்.
அவன் வார்த்தைகளில் அதிர்ந்து விட்டாள் சுலோச்சனா.
“ப்ரீத்திக்கிட்ட இல்லாத எது இவகிட்ட இருக்கு?” மனம் தாங்காமல் கேட்டாள்.
ப்ரீத்தியின் சடலத்தை பார்த்து இவன் இதே போல் ஒரு துளி கண்ணீர் விட்டு இருந்தால் கூட சுலோச்சனாவுக்கு மனம் ஆறியிருக்கும்.
அம்மாவின் கேள்வியில் ஆத்திரமடைந்த தீனா “ஏனா இவ என்னோட பொண்டாட்டி. இது என்னோட காதலி..” என்று கத்தி சொன்னான்.
அவன் வார்த்தைகளில் சுலோச்சனாவுக்கு உடம்பு நடுங்கியது. மகன் திடீரென்று வளர்ந்து விட்டது போல் இருந்தது.
போனவள் திரும்பி வராமல் போய்விடுவாளோ என்று இவனுக்கு அவ்வளவு பயம். அந்த பயத்தை அம்மாவிடம் கோபமாக காட்டிக் கொண்டிருந்தான்.
சுலோச்சனா மகனை குழப்பத்தோடு பார்த்துவிட்டு அங்கிருந்து வந்தாள்.
மானசாவின் புகைப்படத்தையும் குழந்தையின் புகைப்படத்தையும் செய்தித்தாள்களிலும் டிவி சேனல்களிலும் போட்டு விளம்பரப்படுத்தினார்கள். அவர்களை கண்டுபிடித்து தருபவருக்கு ஐம்பது லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று செய்தி வெளியிட்டான் தீனா.
ஒரு வாரம் ஓடிவிட்டது. அவள் இருக்கும் திசையை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரமாக தீனா சாப்பிடவில்லை. ஒரு வாரமாக அவன் தூங்கவில்லை. கண்டிப்பாக இது குழந்தைக்காக இல்லை என்று சுலோச்சனாவுக்கு தெளிவாக தெரிந்தது.
மானசா திரும்பி வராமல் போனால் இவன் பட்டினியிலேயே செத்து விடுவான் என்று அந்த தாயாரால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு வாரமாக சாப்பிடாமல் இருக்கிறானே என்று அன்று இரவு அவன் தன்னை தாண்டி போன போது “சாப்பிட வாடா..” என்று அழைத்தாள் சுலோச்சனா.
நேற்று வரை பேத்திதான் முக்கியம் என்று பிடிவாதமாக இருந்தவளுக்கு இன்று மகனின் பட்டினியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“எனக்கு வேணாம்..” என்று சொல்லிவிட்டு தாண்டி போனான் தீனா.
ஆனால் இவள் மனம் கேட்காமல் உணவை தட்டில் பரிமாறி மகனுக்கு எடுத்து போனாள்.
படுக்கை அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த தீனா செல்போனில் மனைவியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு வாரமாக அவளை பற்றிய செய்தி கிடைத்திருக்கவில்லை. ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ? யாராவது கடத்தி விட்டார்களோ? என்று இவனுக்கு ஏதேதோ பயம் உண்டானது.
‘திரும்பி வந்துவிடு மானசா. உன் காலடியில் விழுந்து அடிமை போல் கிடக்கிறேன். உன்னை அடிக்க மாட்டேன். ஒரு வார்த்தை திட்ட மாட்டேன். நீ சொல்லும் வார்த்தைகளை தாண்டி எதுவும் செய்ய மாட்டேன்..’ என்று மனதுக்குள் கெஞ்சினான்.
அவளின் புகைப்படத்தை பார்க்கும் போது கண்ணீர் அதன் பாட்டிற்கு கொட்ட ஆரம்பித்து விட்டது.
“சாப்பிடுடா..” என்று உணவை ஊட்ட முயன்றாள் சுலோச்சனா.
“எனக்கு பசிக்கலம்மா..” என்றவனின் குரல் பல நாள் பட்டினியின் காரணமாக கிணற்றின் அடி ஆழத்திலிருந்து வரும் சத்தம் போல் ஒலித்தது.
“அவ கண்டிப்பா திரும்பி வந்துடுவா. அவ வரும்போது அவளை நல்ல நாலு வார்த்தை கேட்கவாவது உனக்கு தெம்பு வேணாமா? சாப்பிடு..” என்று கை நிறைய உணவை அள்ளி மகனின் வாயருகே நீட்டினாள் சுலோச்சனா.