“எனக்கு பசிக்கல. என்னை தொந்தரவு பண்ணாம தூர போங்க..” என்றவனுக்கு நம் கோபத்தின் காரணமாக அம்மாவை காயப்படுத்தி விடுவோமோ என்று பயமாக இருந்தது.
ஏற்கனவே அர்த்தமில்லாமல் நிறைய பேசி விட்டோம். அதிலேயே அம்மாவுக்கு சந்தேகம் வந்திருக்கும். வேறு ஏதாவது பேசினால் நிச்சயம் அனைத்தையும் கண்டுபிடித்து விடுவார். அதன் பிறகு அம்மாவுக்கு தான் மனம் காயப்படும். அப்படி அம்மா காயப்படுவதில் இவனுக்கு துளி கூட விருப்பமில்லை.
ஆனால் அம்மாவுக்கு இப்போதே முக்கால்வாசி சந்தேகம் வந்து விட்டிருந்தது.
மகனின் முகத்தை பார்த்தவள் அவனின் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அங்கிருந்து சென்றாள்.
உணவைக் கொண்டு போய் டைனிங் டேபிள் மீது வைத்தாள். மாத்திரைகள் விழுங்க வேண்டும் என்பதற்காக இவள் நேர நேரத்திற்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த உணவை மனம் ஜீரணிக்கவில்லை.
தீனா குளிப்பதற்கு சென்றான். விழுந்த தண்ணீர் அனைத்தும் நெருப்பு போல் சுட்டது.
அந்த தண்ணீரோடு கலந்தது இவனின் கண்ணீர். அன்று ஒருநாள் அவள் சொல்ல சொல்ல கேட்காமல் இந்த தண்ணீரோடு சேர்த்து அவளை திருடி இருந்தான். அன்று அந்த கண்ணீருக்கு இவன் பாவம் பார்க்கவில்லை. இன்று இவன் கண்ணீர் விடும்போது பார்ப்பதற்கு கூட அவள் பக்கத்தில் இல்லை.
முகத்தை பொத்தியபடி பின்னால் இருந்த சுவரோடு சாய்ந்தான். இந்த பாத்ரூம் கூட அவளின் வாசத்தைதான் வீசிக்கொண்டிருந்தது.
இந்த விதி ஏன் இப்படி செய்ய வேண்டும் மானசாவை ஆரம்பத்திலேயே பார்த்திருக்க வேண்டும். அவளை அப்போதே காதலித்து இருக்க வேண்டும். இவனின் கண்ணீர் நிற்கவே இல்லை.
குளித்துவிட்டு வெளியே வந்தவன் அரைகுறையாய் ஆடை உடுத்தி கட்டிலில் விழுந்தான். கண்ணீர் மீண்டும் இமைகளை தாண்டி இறங்கியது. அவளை எந்த அளவுக்கு காதலித்திருக்கிறோம் என்பதே இந்த பிரிவின் போதுதான் இவனுக்கே தெரிய வந்தது.
தலையணையை இறுக்க அணைத்தவனுக்கு அவள் திரும்பி வராவிட்டால் செத்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் நெஞ்சு முழுக்க நிறைந்து நின்றது. அவள் பணத்தையோ நகையோ இந்த வீட்டில் இருந்து எடுத்து போயிருக்கவில்லை.
அவளுக்கு முன்னாள் காதலன் யாருமில்லை. அவளை பார்த்த அடுத்த நாளே ஆளை செட் செய்து அதைப்பற்றி கண்டுபிடித்து விட்டான் இவன்.
பணம் கூட இல்லாமல் எங்கே எப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாளோ என்று இவனுக்கு கவலையாய் இருந்தது. அதுவும் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு தனி ஒரு பெண்ணாக வாழ்வது மிகப்பெரிய கஷ்டம் என்று இவனுக்கும் தெரியும்.
எல்லாவற்றுக்கும் காரணம் அந்த குழந்தை. அந்த குழந்தையை அவளிடம் இருந்து பிரிக்க முயன்றிருக்கா விட்டால் அவள் விட்டு போயிருக்க மாட்டாள் என்று அந்த குழந்தையின் மீது இவனுக்கு கோபம் வந்தது. அதே சமயம் அந்த குழந்தைதான் தன் காதலை சேர்த்து வைத்தது என்பதையும் அவன் மறக்கவில்லை.
போலீஸிடம் இருந்து தகவல் வந்து விடாதா என்று இவன் தூங்கும் வரையிலும் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் கண் மூடினான்.
விடிகாலை நேரத்தில் சுலோச்சனாவுக்கு உறக்கம் கலைந்து விட்டது. சக்கர நாற்காலியில் ஏறி அமர்ந்தவள் தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
பிரீத்தியை மனதார வேண்டிக் கொண்டவள் “இதுக்கு முன்னாடி நான் என்ன தப்பு செஞ்சேனோ எனக்கு தெரியல. ஆனா இனியாவது நடக்கும் எல்லாமே சரியானதா இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன். என் பையனோட மனசுல அந்த பொண்ணுதான் இருக்கான்னா அவளை எப்படியாவது திரும்ப கூட்டி வந்துடு. உன்னோட குழந்தைக்கு அவதான் அம்மாவா இருக்கணும்ன்னு நீ முடிவு பண்ணியிருந்தா அதை நான் இனிமே தடுக்க மாட்டேன்..” என்றாள்.
கண்களைத் திறந்து புகைப்படத்தை பார்த்தவள் “என் பையன் ஒரு நாள் பட்டினி கிடந்தா கூட மனசு தாங்காது. ஆனா இப்ப இத்தனை நாள் பட்டினியா இருக்கான். என்னை இதுக்கு மேல கஷ்டப்பட விடாதம்மா. வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்துட்டு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். இந்த நிம்மதி பறி போக வேண்டாம்..” என்று கெஞ்சினாள்.
ப்ரீத்தியோடு அவன் கூடி அமர்ந்து பேசியதை இவள் ஒரு நாளும் பார்த்திருக்கவில்லை. ஒருநாளும் அவளை அவன் வெளியே கூட்டிப் போனதில்லை. அவளுக்காக எதையும் வாங்கி வந்து தந்ததில்லை. அவளைப் பார்த்து சிறு கண் சைகை கூட காட்டியதில்லை. இப்போது யோசித்துப் பார்க்கும்போது கணக்கு எல்லாம் சரியாகதான் வந்தது.
இரவு விளக்கின் வெளிச்சத்தில் மகன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளையே திருமணம் செய்து கொள் என்று அம்மா சொன்னது மறு வார்த்தை பேசாமல் அவளை வாழ்க்கை துணையாக ஏற்றவன் இந்த மகன். இவனை சந்தேகப்பட்டு இருக்கக் கூடாது என்று அவளின் மனம் இப்போது அடித்துக்கொண்டது.
உறங்கிக் கொண்டிருந்த மகனின் கேசத்தை கோதியவள் ‘கண்டிப்பா உன்னோட பொண்டாட்டி உன்கிட்ட திரும்பி வந்துடுவா..’ என்று மனதோடு சொன்னாள்.
தீனா கண் விழித்த போது மணி பகல் ஒன்பதாகி இருந்தது. இப்போதெல்லாம் உறங்கும் நேரமும் தெரிவதில்லை. எழும் நேரமும் தெரிவதில்லை. அலுவலகத்தின் பக்கமே செல்லவில்லை. அதையெல்லாம் அவனின் அசிஸ்டென்ட்களும் பிஏவுதான் பார்த்துக் கொள்கிறார்கள். நேரத்தை வீண் செய்து கொண்டிருக்கிறான். இப்படி ஒரு கம்பெனியை உருவாக்கவும் அதை நிர்வகிக்கவும் நிறைய கஷ்டப்பட்டிருந்தான். இந்த சில நாட்களில் ஒரு சில ப்ராஜெக்டுகள் கையை விட்டு போயிருந்தன.
அவற்றையெல்லாம் திரும்ப எப்படி கைப்பற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லாத அளவுக்குதான் இவனின் மனதுக்குள் மானசாவை பற்றிய எண்ணங்கள் இடம் பிடித்திருந்தன.
குளித்தவன் வெளியே வந்தபோது அம்மா பிரீத்தியின் புகைப்படத்தின் முன்னால் இருந்த விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
இவன் பக்கம் திரும்பி பார்த்தவள் “இப்பவாவது சாப்பிடு..” என்று சொன்னாள்.
இவன் எந்த பதிலும் சொல்லாமல் வெளியே கிளம்பினான்.
அவளின் பெற்றோரின் வீட்டிற்கு வந்தான்.
மகளைக் காணவில்லை என்று அவர்களும்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவனுக்கு அவர்களின் மீது நம்பிக்கை இல்லை.
அவன் வீட்டிற்கு வந்தபோது அவனின் மச்சான் பள்ளிக்கு சென்று இருந்தான். மாமனாரும் மாமியாரும் மகள் எங்கே போயிருப்பாள் என்று பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
இவன் வந்ததும் இருக்கையை விட்டு எழுந்து நின்ற மாமியார் இவனுக்கு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
மருமகன் என்று அவள் மெச்சி கொள்ளவில்லை. ஆனால் வீட்டுக்கு ஒரு மனிதர்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்பது தமிழர் பண்பாடு. அதற்காக இந்த தண்ணீரை கொடுத்தாள்.
மாமனாரின் முன்னால் வந்து தரையோடு மண்டியிட்டான். தனது குதிகாலியின் மீது அமர்ந்தவன் “அவ எங்கே இருக்கான்னு உங்களுக்கு தெரிஞ்சா தயவு செஞ்சி சொல்லுங்க. அவளோட மனசு நோகும்படி இனிமே எப்பவும் நடந்துக்க மாட்டேன்..” என்று விரல்களை கோர்த்து கெஞ்சினான்.
அப்படி என்றால் இவன் மகளின் மனம் நோகும்படி நடந்து கொண்டு இருக்கிறான் என்று அப்பாவுக்கு புரிந்தது.
ஆனால் அவன் மனைவியை பிரிந்ததால் படும் கஷ்டம் என்னவென்று பூரணிக்கு புரிந்தது. “அவ இருக்கும் இடம் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவோம் தம்பி. அவ எங்ககிட்டயும் சொல்லாமதான் போய்ட்டா..” என்றாள்.
“நீ சரியில்லடா. உன்னாலதான் ப்ரீத்தி இறந்து போயிருக்கா. அவளோட உயிர் இல்லாத உடம்பை பார்த்தும் கூட ஒரு சொட்டு கண்ணீர் விடாதவன் நீ. உனக்கு இதெல்லாம் கம்மி. இனிமேதான் உன்னை மொத்த பாவமும் பிடிச்சி ஆட்ட போகுது..” என்று சாபம் வைத்தார் மாமனார்.
“இதுவரைக்கும் நான் செஞ்சதெல்லாம் தப்புதான். ஆனா மானசா எங்க இருக்கான்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்..” என்று காலில் விழாத குறையாக கேட்டான்.
“நிஜமாவே அவ இங்க இல்ல தம்பி..” என்று பூரணி சொன்ன அதே நேரத்தில் அவனின் செல்போன் ஒலித்தது.
அழைப்பை ஏற்றவன் “சார் உங்க குழந்தையை கண்டுபிடிச்சிட்டோம்..” என்று போலீஸ் சொல்லவும் உடனே எழுந்து நின்றான்.
மாமியாரையும் மாமனாரையும் பார்த்தவன் அவர்களும் மகளை பிரிந்து கஷ்டப்படுகிறார்கள் என்பதால் “மானசாவை கண்டுபிடிச்சிட்டாங்க..” என்று சொன்னான்.
அவர்களுக்கும் இப்போதுதான் உயிரே வந்தது.
உடனே மூன்று பேருமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள்.
“மும்பையில ஒரு வாடகை வீட்டுல இவங்களை கண்டுபிடிச்சோம். போலீஸ் அவங்களை ட்ரெயின்ல இங்கே கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்க. நைட்டுக்குள்ள வந்துடுவாங்க..” என்று சொன்னார் அந்த ஸ்டேஷனில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இவன் அங்கிருந்த பெஞ்சின் மீது அமர்ந்தான். அவள் வந்த பிறகு நாம் அழைத்தால் நம்மோடு வருவாளா என்று கவலை பிறந்தது.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவனுக்கு இதயம் தடதடத்து கொண்டே இருந்தது.
மதிய நேரத்தில் மானசாவின் அம்மாவும் அப்பாவும் சாப்பிட கிளம்பினார்கள்.
“சாப்பிட வாங்க தம்பி..” என்று இவனையும் அழைத்தார்கள்.
இவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதே இடத்தில் அமர்ந்து இருந்தான்.
சப் இன்ஸ்பெக்டர் மானசாவை கண்டுபிடித்து விட்ட விஷயத்தை சுலோச்சனாவுக்கும் போன் செய்து சொன்னார். அவளும் பணியாட்கள் இருவரை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து விட்டாள்.
இரவு நெருங்கியது. தீனா நகங்கள் மொத்தத்தையும் கடித்து துப்பி விட்டான். நிமிடத்திற்கு பத்து முறை வாசலை பார்த்தான். எப்போது அவள் வருவாளோ என்று காத்துக் கிடந்தான்.
இரவு ஒன்பது மணி அளவில் ஜீப் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது.
இவனும் மானசாவின் பெற்றோரும் எழுந்து நின்றார்கள். போலீஸ் மானசாவை உள்ளே அழைத்து வந்தார்கள். குழந்தையை அணைத்தபடி உள்ளே வந்தவள் தீனாவை கண்டதும் கொடூரமாக முறைத்தாள்.
அம்மாவும் அப்பாவும் எழுந்து வந்தார்கள். “என்னடி பழக்கம் இது?” என்று அம்மா சண்டை போட்டாள்.
தீனா விழிகளில் நிரம்பிய நீரோடு அவளைப் பார்த்தான்.
விழிகளால் கெஞ்சினான். ஆனால் இவளின் முகத்தில் இருந்த கோபம் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை.
அங்கிருந்த பெண் போலீஸ் “குழந்தையை நீங்க கடத்திப் போனதா இவர் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு..” என்று தீனாவை கைகாட்டி சொன்னார்.
கசந்து புன்னகைத்த மானசா அவன் அப்படி கம்ப்ளைன்ட் கொடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைத்தாள்.
சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு மருமகளை நெருங்கி வந்த சுலோச்சனா மருமகளின் இடது கையை பற்றினாள்.
குனிந்து பார்த்தாள் மானசா.
“எல்லா தப்பும் என் மேல. குழந்தையை உங்கிட்ட கொடுக்காம வச்சிருந்ததும் நான்தான். எனக்கு நீ என்ன தண்டனை வேணாலும் கொடு. ஆனா என் பையனை விட்டு பிரிஞ்சி போகாதம்மா..” என்று கெஞ்சலாக கேட்டுக் கொண்டாள்.
ஆனால் மாமியாரின் வார்த்தைகளை நம்புவதற்குதான் இவளுக்கு மனம் வரவில்லை.
“இனிமே உன்னையும் குழந்தையையும் ஒரு செகண்ட் கூட பிரிக்க மாட்டேன். உன்னை ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். நானோ என் பையனோ ஏதாவது தப்பு பண்ணி இருந்தா அதை மன்னிச்சிடு..” என்றாள்.
நன்றாகதான் நாடகம் ஆடுகிறீர்கள் என்று மனதுக்குள் நினைத்தவள் போலீஸிடம் திரும்பி “இது என்னோட குழந்தை. என்னையும் என் குழந்தையையும் விட்டுட சொல்லுங்க..” என்றாள்.
“குழந்தையோட அம்மா இறந்துட்டாங்க. நீங்க அந்த குழந்தைக்காக இவரை இரண்டாம் கல்யாணம் பண்ணி இருக்கீங்க. எல்லாமே எங்களுக்கும் தெரியும். நீங்க புதுசா கதை சொல்ல வேணாம்..” என்று அவளை அதட்டிய அந்த இன்ஸ்பெக்டர் தீனாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.
“விருப்பம் இருந்தா இவரோடு போங்க. இல்லன்னா குழந்தையை அவர்கிட்டயே கொடுத்துடுங்க..” என்றார்
சப் இன்ஸ்பெக்டர்.
குழந்தையை இவள் இறுக்கமாக தன்னோடு அணைத்த நேரத்தில் தீனா நெருங்கி வந்து இவளின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.