தீனாவின் செயலில் ஸ்டேஷனில் இருந்த அனைவருமே அதிர்ந்து விட்டார்கள்.
மனைவியின் கால்கள் இரண்டையும் பிடித்தவன் தலை உயர்த்தி அவளின் முகத்தைப் பார்த்தான். “நான் செஞ்சது எல்லாமே தப்புதான். இனிமே ஒரு மில்லிமீட்டர் சைஸ் கூட நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன். ஒரே ஒரு வாய்ப்பு கொடு. நீ இல்லன்னா நான் செத்துடுவேன் மானசா. எனக்கு இதுக்கு மேல தண்டனை கொடுக்காதடி. முடியலடி என்னால..” என்றான்.
நாம் முடியாது என்று சொன்னபோது நம்மை விடாதவன் இப்போது அவனால் முடியவில்லை என்று சொல்கிறான். இதையெல்லாம் நம்புவதா? இவன் நாடகமாடுகிறான் என்று நினைத்தாள் மானசா.
அவளின் கால்களை விடாமல் பிடித்திருந்தவன் “என்னுடைய எல்லாம் சொத்தையும் உன் பேர்ல எழுதி வைக்கிறேன். நீ சொல்லும் பேச்சு எல்லாத்தையும் கேட்கிறேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சி என்னோடு வா..” என்று கெஞ்சினான்.
பூரணிக்கும் அவளின் கணவருக்கும் தீனாவை பிடிக்காதுதான். ஆனால் திருமணமான பிறகு இவர்களால் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனை மகள் ஏற்றுக் கொள்வதுதான் நலம் என்று நினைத்தார்கள்.
“ஒரே ஒருமுறை மன்னிப்பு கொடு..” என்று கெஞ்சியவனின் கண்ணீர் அவளின் காலின் மீது விழுந்தது.
இவள் குழந்தையின் முகம் பார்த்தாள்.
“நீ காணாம போன நாள்ல இருந்து இவன் ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிடல. பட்டினியா உனக்காக காத்திருந்தான். கருணை காட்டும்மா..” என்று மாமியாரும் கெஞ்சினாள்.
ஒரு வாரமாக சாப்பிடாமல் இருக்கும் அளவுக்கு இவனுக்கு நம் மீது காதலா? இவளுக்கு நம்பதான் முடியவில்லை.
“இப்படி கல் மனசா இருக்காதாம்மா. எந்த வீட்ல புருஷன் பொண்டாட்டி தகராறு வராம இருக்க? ஆரம்பத்துல எல்லா பிரச்சனையும்தான் வரும். தினமும் பைத்தியம் பிடிச்சி ரோடு ரோடா உன்னை தேடி அலைஞ்சாரு. புருஷனோட அன்பை புரிஞ்சிக்கம்மா..” என்று பணிப்பெண் ஒருத்தி அட்வைஸ் தந்தாள்.
எல்லாரும் சேர்ந்து தன்னை கார்னர் செய்வது போலவே தோன்றியது இவளுக்கு.
“குழந்தை கடத்திய கேஸ்ல ஜெயிலுக்கு போறதுக்கு பதிலா புருஷனோடு வாழப் போயிடலாம்..” என்று கான்ஸ்டபிள் ஒருவர் இவளை மறைமுகமாக மிரட்டினார்.
இந்த புகாருக்காகவே இவனை கடைசி வரை மன்னிக்க கூடாது என்று அவளின் மனம் சொன்னது.
அவளின் பாதத்தை பிடித்திருந்தவன் “கொல்வதா இருந்தா கூட உன் கையால கொன்னுட்டு போ மானசா. தனியா விட்டு போகாத..” என்றான்.
ஸ்டேஷனில் இருந்த குற்றவாளிகள் கூட இவளையும் அவனையும் வேடிக்கை பார்த்தார்கள். இவளுக்கு உடம்பு கூசியது.
அம்மாவும் “இவ்வளவு பிடிவாதம் ஆகாது..” என்று மிரட்டினாள்.
“எல்லாத்தையும் நீதான் தலை மேல தூக்கி போட்டுக்கிட்ட. இப்ப புருஷன் வேணாம் குழந்தை மட்டும் வேணும்னு சொன்னா எந்த புருஷன் ஏத்துப்பான்.?” என்று கேட்டார் அப்பாவும்.
இவளுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது. மும்பையில் இருந்து ட்ரெயினில் வரும்போது எக்கச்சக்கமாக பயந்து விட்டிருந்தாள்.
எப்படி தப்பிப்பது என்று யோசித்து மண்டையை குழப்பியதுதான் மிச்சம்.
அவ்வளவு கஷ்டப்பட்டு பிளான் போட்டு தப்பித்து போய் இவ்வளவு சுலபமாக மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.
இதற்கு மேல் இவனோடு வாழ செல்லாவிட்டால் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நம்மை வலுக்கட்டாயமாக இந்த உறவுக்குள் தள்ளி விட்டு விடுவார்கள் என்பது இவளுக்கே தெளிவாய் புரிந்து போனது.
இவன் சொல்லும் வார்த்தைகள் மீது இவளுக்கு நம்பிக்கை இல்லை.
வீட்டிற்கு சென்ற பிறகு மீண்டும் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று பயமாகவே இருந்தது.
தரையோடு படுத்து கிடந்தவனை பார்த்தவள் “சொத்துக்களை எழுதி வைங்க. நான் உங்களோடு வரேன்..” என்றாள்.
அம்மாவும் அப்பாவும் அவளை அதிர்ச்சியோடு பார்த்தார்கள். மகள் கோல்ட் டிக்கரா இல்லை தனது பாதுகாப்புக்காக இந்த சொத்தை உறுதி செய்கிறாளா என்று அவர்களுக்கு புரியவில்லை.
எழுந்து நின்ற தீனா உடனே தனது பிஏவுக்கு போன் செய்தான்.
குழந்தை பசிக்காக அழுதது. இவள் அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளிடம் தனியிடம் கேட்டு குழந்தையை தூக்கி கொண்டு போனாள்.
இருந்த பரபரப்பில் இவள் எங்கே போகிறாள் என்று யாரும் கவனிக்கவில்லை.
சென்றவள் சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பி வந்து விட்டாள்.
அடுத்து அரை மணி நேரத்தில் பிஏ வந்துவிட்டார். தீனாவின் சொத்துக்கள் அனைத்தும் மானசாவின் பெயருக்கு மாற்றப்படுவதாக பத்திரம் எழுதப்பட்டது.
“நாளைக்கு பத்திர ஆபீஸ் போய் இதை பதிஞ்சிடலாம்..” என்று மனைவியிடம் சொன்னான் தீனா.
இவள் அவன் கையில் இருந்த பத்திரத்தை வாங்கி பார்த்தாள்.
அத்தனையும் இவள் பேருக்கு எழுதி வைத்திருந்தான்.
அம்மாவும் அப்பாவும் இப்போது இந்த மாப்பிள்ளையை முழுமனதாகவே ஏற்று கொண்டார்கள். மகளின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான்? அவள் கேட்டதும் சொத்தை மாத்தி எழுதி வைத்து விட்டானே என்று அவன் மீது இவர்களுக்கு பாசம் பொங்கியது.
போலீஸாரர்களின் புறம் திரும்பிய மானசா “இவர் வீட்டுல இருக்கும் போது எனக்கு ஏதாவது ஆகிட்டா அதுக்கு காரணம் இவர்தான்னு முன்னாடியே கம்ப்ளைன்ட் தரணும்..” என்றாள்.
அவள் சொன்னதை பெண் போலீஸ் ஒருவர் புகாராக எழுதி அவளிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்.
தீனாவுக்கு இதயம் வலித்தது. எப்படியாய் இருந்தாலும் அவள் தன்னை தவறாகதான் நினைக்க போகிறாள் என்பதற்காக அவளிடம் முழுக்க முழுக்க தவறாக மட்டுமே நடந்து கொண்டது இப்போது எப்படிப்பட்ட விளைவை கொடுத்திருக்கிறது என்பது இவனுக்கு இப்போதுதான் புரிய வந்திருந்தது. இதற்கு பதிலாக அவளின் மனதை பெறுவதற்கு ஏதாவது முயன்றிருக்கலாம் என்று காலம் கடந்து புத்தி வந்தது.
“இவரோட வீட்டுல எனக்கு பிசிகல் அல்லது மெண்டல் அப்யூஸ் நடந்தா நான் பிரஸ்ல ரிப்போர்ட் பண்ண போவேன்..” என்று போலீஸிடம் முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் மானசா.
மகள் இந்த அளவிற்கு உறுதியாய் இருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலையையும் நிம்மதியையும் ஒரே நேரத்தில் கொடுத்தது.
காரில் அவளுக்கான கதவை தீனாவை திறந்து விட்டான். குழந்தையின் பொருட்கள் இருந்த பையை அவனே வாங்கி அவள் அருகில் வைத்தான்.
எப்போதும் முன் சீட்டில் மட்டும்தான் அவள் அமர வேண்டும் என்று சொல்பவன் இப்போது பின் சீட்டை கொடுத்திருந்தான்.
அம்மாவும் அப்பாவும் இவள் அருகில் வந்தார்கள்.
“நாங்க வந்து நாளைக்கு உன்னை பார்க்கிறோம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
சுலோச்சனா தன்னுடைய வாகனத்தில் ஏறினாள். இரண்டு கார்களும் வீட்டை நோக்கி கிளம்பியது.
மானசா ஓரக்கண்ணால் தன் கணவனை பார்த்தாள்.
“ஒரு வாரமா சாப்பிடாம இருக்கியா?” என்று சந்தேகம் கேட்டாள்.
ஆம் என்று தலையாட்டினான்.
“சரி போய் ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வா. நீ மயக்கம் போட்டு விழுந்து கார் ஆக்சிடென்ட் ஆயிட்டா நான் என்ன செய்வேன்?” என்று நக்கலாய் கேட்டாள்.
அவள் சொன்னாளே என்பதற்காக இவனும் காரை ஓரம் கட்டினான்.
இறங்கி வந்து இவளுக்கான கதவைத் திறந்தவன் “நீயும் இந்நேரத்துக்கு சாப்பிடாமதானே இருப்ப? சாப்பிடலாம் வா..” என்று அழைத்தான்.
“இந்த குழந்தையை திரும்பி வாங்குறதுக்காக உன் வீட்ல நான் எத்தனை நாள் சாப்பிடாம இருந்தேன் தெரியுமா? அதை ஒரு நாளாவது நீ கவனிச்சியா?” என்று எரிச்சலாக கேட்டாள்
“சாரி. எல்லாம் என்னோட தப்புதான். இனிமே இப்படி எந்த தப்பும் செய்ய மாட்டேன்..” என்று தலை குனிந்து சொன்னான்.
“நல்லாதான் நடிக்கிற..” என்று கசப்போடு சொல்லியபடி குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கினாள்.
ஹோட்டலை நோக்கி நடந்தவள் “ஒரு வாரம் சாப்பிடாம இருந்தும் கல்லு மாதிரிதான் இருக்க..” என்று நக்கல் அடித்தாள்.
“இல்ல அப்பப்ப மில்க் அண்ட் வாட்டர் குடிப்பேன்..” அப்பாவியாக சொன்னான்.
“என் பிரண்டு செத்த போது ஒரு சொட்டு கண்ணீர் விடல. இப்ப எனக்காக சாப்பிடாம இருந்திருக்க. ஏன்டா இந்த அளவுக்கு உடம்பு வெறி பிடிச்சி திரியுற.?” என்று திட்டிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.
அவள் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டட்டும்.. அடிக்கட்டும்.. உதைக்கட்டும்.. வாங்கிக்கொள்ள இவன் தயாராக இருந்தான். ஆனால் அவள் தன்னை விட்டு மட்டும் போகக்கூடாது.
குழந்தையை மடி மீது படுக்க வைத்தபடி இருக்கை ஒன்றில் அமர்ந்தவள் தோசையை ஆர்டர் செய்தாள்.
அவன் தனக்கு இட்லியை ஆர்டர் செய்தான். குழம்பை குறைவாக ஊற்றி சாப்பிட ஆரம்பித்தவளின் ஒரு பக்க தொடை குழந்தையை அனிச்சையாக தாலாட்ட ஆரம்பித்தது.
இவன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டான்.
ஒரு வாரத்திற்கு பிறகு உணவு உண்ட காரணத்தால் அவனின் தொண்டை குழி அடைத்துக் கொண்டது.
தண்ணீரை குடித்தான். அப்படி இருந்தும் உடனே விக்கி கொண்டது. மீண்டும் தண்ணீரை பருகினான்.
அவன் உணவை விட அதிகமாய் தண்ணீர் பருகுவதை கண்டு மனம் இறங்கியவள் “கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு..” என்றாள்.
இவனும் இட்லியை கொஞ்சம் கொஞ்சமாய் பிட்டு உண்ண ஆரம்பித்தான். இப்போது தொண்டை அடைக்கவில்லை.
“தேங்க்ஸ்..” என்றான் நிமிர்ந்து பார்த்து.
“மூஞ்சை பாரு..” என்று திட்டி விட்டு இவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
“நீ இருந்த இடத்துல உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததா? தனியா மும்பையில் என்ன பண்ணின? பணத்தைக் கூட நீ தூக்கி போகலையே! செலவுக்கு என்ன செஞ்ச?” என்று கவலையாய் கேட்டான்.
“ரொம்பதான் அக்கறை.!” என்று முணுமுணுத்தவள் ”நீ என் கழுத்துல கட்டி இருந்த தாலியை வித்துட்டேன். நிறைய பணம் கிடைச்சது. அதை வச்சிதான் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கினேன். வேலை தேடிட்டு இருந்தேன். அதுக்குள்ள போலீஸ் என்னை கண்டு பிடிச்சிட்டாங்க..” என்றாள்.
இவனுக்கு இதயத்தில் ரம்பத்தை வைத்து அறுப்பது போல் இருந்தது. நாம் சரியாக இருந்திருந்தால் இவள் ஏன் நமது தாலியை விற்கப் போகிறாள் என்று தன்னிடமே கேட்டவன் “உனக்கு அங்கே வேற எந்த பிரச்சனையும் இல்லதானே?” என்று அக்கறையாக விசாரித்தான்.
“இப்படி நடிப்பதை நிறுத்து. தயவு செஞ்சி பேசாத. உன் குரலை கேட்டாலே எனக்கு இரிடேட் ஆகுது..” என்றவள் அதன் பிறகு சாப்பிடுவதில் மட்டும் கவனத்தை செலுத்தினாள்.
இவன் அடிக்கடி அவளின் முகம் பார்த்தான்.
இருவருமாக சாப்பிட்டு முடிக்க இருபது நிமிடங்களுக்கு மேல் ஆனது.
அவன் பில்லை கட்டி விட்டு வந்தான்.
அவள் ஏற காரின் கதவை திறந்தவன் “பார்த்து ஏறு..” என்றான்.
“பேசாதன்னு சொன்னேன்..” என்று எரிச்சலாய் சொன்னவள் ஒரு விஷயம் நினைவுக்கு வரவும் அவனின் முகத்தை பார்த்தாள்.
“உன் வீட்டுக்கு வந்தாலும் நான் தனி ரூம்லதான் தூங்குவேன். என்னையோ குழந்தையையோ நீ டிஸ்டர்ப் பண்ணா அப்புறம் நான் மறுபடியும் எங்காவது ஓடிப் போயிடுவேன்..” என்று மிரட்டினாள்.
வேதனையில் எச்சிலை விழுங்கினான். தன் உடம்புக்காக அவள் வேண்டும் என்று மனம் கேட்டது.
ஆனால் அவளின் வெற்று உடம்பை சொந்தம் கொண்டாட நினைத்துதான் இப்படி வந்து சிக்கி இருக்கிறோம் என்பது இவனின் நினைவிற்கு வந்தது. அவனுக்கு தன் காதலின் மீது நம்பிக்கை இருந்தது. அந்த காதல் நிச்சயம் தன்னை சேர்க்கும் என்று நம்பினான்.
காருக்குள் ஏறும் முன்பே மானசாவுக்கு தனி அறையை தயார் செய்ய சொல்லி பணியாட்களுக்கு போன் செய்து சொன்னான்.
இவர்கள் வீட்டிற்கு போனபோது தனி அறை தயாராக இருந்தது. இவனே அழைத்து போய் அந்த அறையை காட்டினான். குழந்தைக்கும் அவளுக்கும் தேவையான அனைத்தும் அங்கே இருந்தது.
அந்த ரூமை பார்த்த பிறகுதான் இவளுக்கு தன் கணவனின் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
“தேங்க்ஸ்..” என்றவளின் பின்னால் வந்து நின்ற சுலோச்சனா “குழந்தை கொடும்மா. ஒரு முறை தூக்கிட்டு தரேன். ரொம்ப ஏங்கி போயிட்டேன்..” என்று கேட்டாள்.
மானசாவுக்கு தன் மாமியாரைப் போல் கல் மனது இல்லை. அதனால் குழந்தையை மாமியாரின் மடியில் வைத்தாள்.
இந்த இரண்டு வாரத்தில் குழந்தை புஷ்டியாகி இருந்தது. வீட்டில் இத்தனை பேர் பார்த்துக்கொண்ட போதும் குழந்தை இந்த அளவிற்கு மாறி இருக்கவில்லை. மானசா குழந்தையின் மீது எந்த அளவிற்கு பாசமாய் இருக்கிறாள் என்பதை குழந்தையை பார்க்கும் போதே இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.