மானசா மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ரூமுக்குள் புகுந்தாள்.
ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்து முகத்தை சுத்தம் செய்தாள். விழிகள் கண்ணீரால் பளபளத்தது.
தீனா தன்னை மிஸ் செய்திருப்பது எந்த அளவிற்கு உண்மை என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அவனை மிஸ் செய்தது உண்மை. அவன் செய்த கொடுமைகளையும் தாண்டி, தோழியின் கணவன் என்பதையும் தாண்டி அவன் மீது வந்த இந்த நேசத்தை இவள் அடியோடு வெறுத்தாள். இதற்காக அவள் தன்னை திட்டிக் கொள்ளாத நேரமே இல்லை.
அருகில் இருக்கும் போதெல்லாம் அவன் மீது வெறுப்பாக இருந்தது. ஆனால் தொலைவில் சென்ற பிறகு அவனை நினைக்காத நேரமில்லை. தன்னைக் கொடுமை செய்த ஒருவனை எதற்காக நினைக்கின்றோம் என்று அவளுக்கே புரியவில்லை.
இப்போது இங்கு வந்த பிறகும் “அவனின் முகத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திரு, அவனை ஆர தழுவிக் கொள், அவன் முகம் முழுக்க முத்தமிட்டு ஐ மிஸ் யூ என்று சொல்!” என மனது சொன்னது. ஆனால் அதை செய்வதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்வதே பரவாயில்லை என்று இவளின் ரோஷம் இவளோடு சண்டை போட்டது.
அவனோடு வந்தது காதல் என்று இவள் நினைக்கவில்லை. இங்கே இருக்கும் போதெல்லாம் அவன் தன் உடம்பை கொண்டாடியிருந்தான். அதற்காக இந்த உடம்பு அவனுக்கு அடி பணிந்து விட்டது, வெறும் உடல் பசியின் காரணமாக அவனை நேசிக்க ஆரம்பித்து விட்டது என்று நினைத்தாள்.
ஆனால் தன் உடம்பு தன் கட்டுப்பாட்டை தாண்டி செல்வதும் இவளுக்கு பிடிக்கவில்லை.
சுலோச்சனா வெகு நேரம் குழந்தையை கையில் வைத்திருந்தாள். மானசா பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். தனது கேசத்தை வாரினாள். கட்டிலில் பெட்ஷீட்டை உதறி போட்டாள். மாமியாரை தாண்டி போய் எறும்பு சாக்பீஸை எடுத்து வந்து கட்டிலை சுற்றி கோடுகளை போட்டாள். எல்லா பிரச்சனையும் ஒரு எறும்பால் ஆரம்பித்தது. இனிமேல் எந்த எறும்பும் தனது மகளை தொடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.
பாட்டில் ஒன்றை எடுத்து தண்ணீரை நிரப்பி கொண்டு தனது படுக்கையறைக்கு வந்தாள்.
குழந்தையை சுலோச்சனாவின் மடியில் இருந்து எடுத்தாள்.
“இவ்வளவு நேரம் ஆகியும் குழந்தை அழவே இல்லை. எனக்கு இதுவே பெரிய சந்தோஷமா இருக்கு..” என்றாள் சுலோச்சனா.
இவள் புன்னகைத்தாலே தவிர அதற்கான காரணத்தை சொல்லவில்லை.
சுலோச்சனா தனது ரூமுக்கு சென்று விட்டாள். இவள் குழந்தையோடு தனது கட்டிலுக்கு வந்தாள். இரவு மாற்றுவதற்கு தேவையான பேம்பர்ஸையும் குழந்தைக்கான உள்ளாடைகளையும் எடுத்து கட்டிலில் ஓரமாய் வைத்தாள்.
கதவை தாழிட்டு விட்டு வந்து குழந்தையின் அருகில் படுத்து கொண்டாள். மும்பையில் இருந்தபோது பெட்ஷீட்டில் விழுந்து விட்டாலே உறக்கம் வந்துவிடும். ஆனால் இப்போது புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை. குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது.
இவள் இரண்டு மூன்று தரம் பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி வந்தாள்.
நள்ளிரவு தாண்டிய பிறகே உறக்கம் வந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பசிக்காக எழுந்து விட்டது. குழந்தை அழ வேண்டும் என்று தேவையே இல்லை. குழந்தை எழுந்தாலே இவளால் உணர முடிந்தது. இப்போதும் குழந்தை அழும் முன்பே எழுந்து குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் பசியாற்றினாள்.
எப்படியும் சில மாதங்களுக்கு இந்த பால் குழந்தைக்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இணை உணவு தந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். அந்த அளவுக்கு இவளின் உடம்பு குழந்தைக்காக ஒத்துழைத்தது.
குழந்தையின் உருவத்தில் ப்ரீத்தியை பார்த்தாள். குழந்தையை அணைக்கும் போது ப்ரீத்தி தன் அருகில் இருப்பதாகவும் உணர்ந்தாள். ஆனால் அவளை மிஸ் பண்ணாத நேரமே இல்லை
இப்படியே போனால் பைத்தியமாகி விடுவோமோ என்றும் அவளுக்கு பயமாகதான் இருந்தது. குழந்தை மீதான பாசத்தை நேரடியாக காட்ட முடிந்தது. ஆனால் ப்ரீத்தி இல்லை என்பதை வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவு அழுதும் அந்த சோகமும் தீரவில்லை.
குழந்தை பசி தீர்ந்து உறங்கியதும் இவளும் உறங்க ஆரம்பித்தாள்.
மறுநாள் இவள் எழுந்த பொழுது மணி பகல் பத்தாக இருந்தது.
குழந்தைக்கு பசியாற்றி விட்டு தனது காலை நேரத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
அந்த அறையின் வாசலிலேயே தீனா நின்றிருந்தான். எவ்வளவு நேரமாக நிற்கிறான் என்று தெரியவில்லை.
அவன் கண்களில் ஏக்கமும் காதலும் சரிவிகிதமாக கலந்து தெரிந்தது. இவளுக்குதான் எதையும் ஏற்க விருப்பமில்லை. ‘என் தோழியை நேசிக்காதவன்! இவனின் காதல் நமக்கு எதற்கு?’ என்று மனதுக்குள் கேட்டாள்.
“சாப்பாடு ரெடியாயிடுச்சி..” என்று சொல்லிவிட்டு டைனிங் ஹாலுக்கு நடந்தான்.
குழந்தைக்கு பசியாற்ற வேண்டும், அதற்காக இவளும் நேரம் தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
இவள் வந்து டைனிங் ஹாலில் அமர, எதிரில் இருந்த மாமியார் “என் பையன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்..” என்று ஆரம்பித்தாள்.
திடீரென்று இந்த மாமியாருக்கு என்னவானது? முன்பெல்லாம் தீனா நம்மோடு பேச வந்தாலே மாமியார் எரிந்து விழுவார், என் மகனை மயக்கி விட்டாய் என்று நம் மீது பழி போடுவார், இப்போது திடீரென்று மகனின் காதலுக்கு கொடி பிடிக்கிறாள். அவன் திமிரெடுத்து சாப்பிடாமல் இருந்ததால் இந்த அளவிற்கு மனம் மாறி விட்டாரா என்று இவளுக்கு குழப்பமாய் இருந்தது.
தீனா தன் மனைவிக்கு உணவை பரிமாறினான். இவன் கையால் சாப்பிட வேண்டுமா என்று இவளுக்கு வெறுப்பு வந்தது. ஆனால் அடிக்கடி சண்டை போடவும் விருப்பமில்லை.
சாப்பிட்டு முடித்தவளிடம் “பத்திர பதிவு ஆபீஸ்க்கு போகணும். ரெடியாயிடு..” என்றான் தீனா.
இது குழந்தையின் எதிர்காலத்திற்காக இவள் எடுத்த முடிவு. இதுவரையிலும் துளி அளவு கூட நேசத்தை கூட குழந்தையிடம் காட்டாத ஒருவனை நம்புவதற்கு அவள் தயாராக இல்லை.
பத்திர பதிவு அலுவலகம் செல்வதற்காக தயாராகி குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
இவர்கள் போனதுமே அலுவலகத்தில் கூப்பிட்டு விட்டார்கள். தீனா அத்தனை பேப்பர்களிலும் கையெழுத்து போட்டு கொடுத்தான்.
அவனிடம் ஒரு துளி கூட இதற்காக வருத்தம் இல்லை. இவன் எந்த அளவிற்கு நல்லவனா என்று நம்புவதற்கு இவளுக்குதான் மனம் வரவில்லை.
அவன் உள்ளே வேலையாக இருந்த போது இவள் காரில் அமர்ந்து குழந்தைக்கு பசி தீர்த்து முடித்தாள்.
பதிவு முடிந்து இவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டவன் “இனிமே என்னை விட்டு எங்கேயும் போக மாட்டதானே?” என்று கேட்டான்.
“ஆனா ஏன் இது திடீர்ன்னு மாறின?” என்று இவள் சந்தேகம் கேட்டாள்.
“நீ என்னை விட்டுப் போக மாட்டேன்னு நினைச்சேன்..” என்றவனுக்கு குரல் கரகரத்தது.
“நீ மிரட்டி கல்யாணம் பண்ணுவ. எனக்கு பிடிக்கலன்னு சொன்னாலும் கட்டில்ல உனக்கு என்ன தேவையோ அதை சாதிச்சிப்ப. குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணி வந்தாலும் குழந்தையை என்கிட்ட கொடுக்காம என்னை அழ வைப்ப. ஆனாலும் நான் உன்னை விட்டு போகாம இருக்கணுமா? ரோஷமுள்ள யாரா இருந்தாலும் செத்து போவாங்க. ஆனால் நான் ஓடி மட்டும்தான் போனேன்..” என்று அவள் சொல்ல இவன் காரை நிறுத்தி விட்டான்.
“ப்ளீஸ் இப்படி சொல்லாத. இனிமே உன்னோட அனுமதி இல்லாம உன்னை தொடமாட்டேன். ப்ராமிஸ்..” என்றான்.
“சரி காரை எடுத்து தொலை..” என்றாள் வேண்டாவெறுப்பாக.
கார் மீண்டும் வீட்டை நோக்கி கிளம்பியது.
“சரி இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உண்மையை சொல்லு. என்னோட ஃப்ரெண்டோட டெத் இயற்கையா வந்ததா இல்லை நீ பிளான் பண்ணி கொன்னுட்டியா?” என்று கேட்டாள்.
அதிர்ந்தவன் “குழந்தை பெத்தெடுத்த ஒரு பொண்ணை அதே நாள்ல கொல்லும் அளவுக்கு நான் கொடூரமானவன் கிடையாது. ஆமா நான் உன்கிட்ட மோசமா நடந்துக்கிட்டேன். உன்னோட விருப்பம் இல்லாம உன்னை தொட்டேன். ஆனா இந்த உலகத்திலேயே நான் உனக்கு மட்டும்தான் கெட்டவன். வேற யாருக்கும் நான் தீங்கு செய்ய நினைச்சதில்ல..” என்றான்.
நான் மட்டும் அப்படி என்னை இளிச்சவாய் என்று இவளுக்கு கோபம் வந்தது.
“ஒருவேளை என் பிரெண்ட் டெத்க்கு நீதான் காரணம்ன்னு தெரிஞ்சா அன்னைக்கு நான் உன்னை கொன்னுடுவேன்..” என்றாள். எந்த நம்பிக்கையில் மிரட்டுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
“உன் பிரெண்ட் டெத்க்கு எந்த வகையிலும் நான் காரணம் கிடையாது. இன்னும் சொல்லணும்ன்னா அவங்க உயிரை காப்பாத்த எவ்வளவு வேணாலும் செலவழிக்க தயாரா இருந்தேன்..” என்றான்.
அவனை விசித்திரமாக பார்த்தாள் இவள். நம்மை வா போ என்கிறான். அவளை வாங்க போங்க என்கிறான். இவளுக்கு புரியவில்லை.
அவன் இவளின் பார்வையை அறியாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“ஒரு வாரம் என்னை விட்டு பிரிஞ்சிருக்க உன்னால எப்படி முடிஞ்சது? உனக்கு என் மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா?” எனக் கேட்டான்.
வீடு வந்து விட்டது.
“லவ் எப்படி வரும்? உன்னை நான் லவ் பண்ண ஒரு வேலிட் ரீசன் சொல்லு. நீ என் பிரெண்டோட ஹஸ்பண்ட். நீ என்னை தொடும்போதெல்லாம் நான் என் பிரெண்ட்க்கு துரோகம் பண்றேன்னுதான் என் மனசாட்சி சொல்லுது. இது என்னை பொறுத்தவரை ஒரு கள்ள உறவு..” என்றாள்.
தீனாவுக்கு முகம் கறுத்தது.
“நான் உன் புருஷன்..” என்றான்.
குழந்தையோடு கீழே இறங்கி நின்றவள் “தாலி கட்டுவதால் ஒருவர் புருஷனாகிட முடியாது. மனசு ஏத்துக்கணும். என் மனசு உங்களை ஏற்கல. இப்ப மட்டும் இல்ல. எப்பவும் ஏற்காது. நான் எப்பவும் என் ப்ரீத்திக்கு துரோகம் செய்ய மாட்டேன். உங்க பக்கத்துல படுத்திருக்கும்போது என் மனசாட்சி எந்த அளவுக்கு என்னை அறுக்குதுன்னு நீங்க ஒருநாள் உணர்ந்திருந்தா கூட என் பக்கத்துல வந்திருக்க மாட்டிங்க..” என்றாள்.
அவன் முகம் மேலும் நிறம் மாறியது. வலி அவன் விழிகளில் தெளிவாக தெரிந்தது.
“நீங்க என்னை சூஸ் பண்ணியிருக்க கூடாது. சாரி..” என்றவள் வீட்டுக்குள் நடந்தாள்.
இவன் அவளின் முதுகை வெறித்தான்.
அவளிடம் உண்மையை சொல்லி விடலாமா என்று யோசித்தான். ஆனால் செய்த சத்தியம் அவனை தடுத்தது.
இவன் வீட்டுக்குள் வந்தபோது அம்மா இவனையே பார்த்தாள். அம்மாவின் பார்வையில் கூட மாற்றம் இருந்தது. இவன் அதை கவனிக்காமல் தன் அறைக்கு நடந்தான். இன்றும் அலுவலகம் விடுமுறை. ஆனால் மனைவி வீட்டுக்கு வந்து விட்ட நிம்மதியில் இருந்தான்.
மதியம் வரை தன் கட்டிலில் புரண்டுக் கொண்டிருந்தவன் மனைவியின் முகமாவது பார்த்து வரலாம் என்று அவளை தேடி போனான். இவன் சென்றபோது அவள் குழந்தைக்கு தாய்ப்பால் தந்து பசியாற்றிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த கணம் உறைந்து விட்டான் இவன்.
“மானசா என்ன பண்ற நீ?” என்று கத்தினான்.
இவனின் திடீர் கத்தலில் துள்ளி விழுந்தாள் அவள்.
அவனை திரும்பி பார்த்தாள். நெஞ்சின் மீது துண்டு போட்டு மறைத்திருந்தாள். ஏதோ நினைவில் இருந்தவள் இவன் கத்தியதில் மொத்த உணர்வுகளில் இருந்தும் வெளி வந்து விட்டாள்.
வேங்கை போல் நின்றுக் கொண்டிருந்தான். விட்டால் வேட்டையே ஆடி விடுவான் போல. இவளுக்கு அவனை பார்த்து அர்த்தமில்லாத பயம் வந்தது.