குழந்தையும் உறங்கி விட்டிருந்தது. மானசா துண்டுக்குள் இருந்த நைட்டியின் ஜிப்பை இழுத்து விட்டாள்.
“என்ன பழக்கம் இது? எதுக்கு நீ குழந்தைக்கு பேக்கா பசியாத்திட்டு இருக்க?” என்று கேட்ட தீனா குழந்தையின் உதட்டோரம் வழிந்த பாலை பார்த்து விட்டு அவள் முகத்தை சீற்றமாக பார்த்தான்.
அவள் தனது வீண் பயத்தை ஓரம் ஒதுக்கினாள்.
“பொய்யா எதுவும் செய்யல. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுத்துட்டு இருக்கேன்..” என்று கர்வத்தோடு சொன்னாள்.
‘குழந்தையை என்னிடம் தராமல் மறுத்தீர்களே! பாருங்கள் இந்த குழந்தைக்கு நான் எப்படிப்பட்ட தாயாக மாறி இருக்கிறேன்!’ என்று என்ற கர்வம் அவள் கண்களில் ஒளிர்ந்தது.
இந்த குழந்தைக்கு இனிமேல் நான் நிஜ தாய். என்னையும் இவளையும் பிரிக்க இனி எங்கே யாராலும் முடியாது என்று சொல்லாமல் சொல்லியது அவளின் முகம்.
“என்ன சொல்ற? தாய்ப்பாலா? எப்படி?” புரியாமல் கேட்டான் இவன். அவள் குழந்தைக்கு போலியாக பசி தீர்ப்பதாக நினைத்ததற்கே அவனுக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது. இப்போது இவள் சொன்ன சொல் அவனின் புத்தியை நிலைகுலைக்க செய்யும் அளவுக்கு இருந்தது.
“ட்ரீட்மென்ட் மூலம் தாய்ப்பால் சுரக்க வச்சிருக்கேன். என் குழந்தைக்காக..” என்றவள் குழந்தையின் முகத்தை ஆதூரமாக பார்த்தாள்.
குழந்தையை படுக்கையில் கிடத்தி அவளின் வாயை துடைத்து விட்டாள்.
தீனாவுக்கு அதிர்ச்சியில் இதயமே சில நொடிகள் நின்று விட்டது. ஏதோ பெரிய துரோகத்தை சந்தித்தது போல் இருந்தது. அவள் வேறு ஒரு ஆணோடு கூடிக் குலாவி இருந்தால் கூட இந்த அளவிற்கான துரோகத்தை நெஞ்சம் உணர்ந்து இருக்காதோ என்னவோ?
என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவளின் கையை பிடித்து இழுத்து கீழே நிறுத்தினான். அவனின் முகத்தில் இருந்த கோபம் கண்டு இவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அவன் இந்த அளவுக்கு கோபமாக இருந்து இதற்கு முன் அவள் பார்த்தது இல்லை.
சிவந்த கண்கள் அவளை கொல்ல பார்த்தன.
“உன்னை யார் இப்படி செய்ய சொன்னது? உனக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று கேட்டு அவளின் தோள்பட்டையை இரண்டு கைகளாலும் பிடித்து உலுக்கினான்.
பூந்தளிர் போல் தள்ளாடியது அவளின் மேனி.
இவனுக்கு ஆத்திரமே அடங்கவில்லை. கோபத்தில் சிவந்த அவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவன் முகத்தில் இருந்த வேதனையை பார்க்கும் போது இவளுக்கு குழப்பமாய் இருந்தது.
“பெரிய மனுசிதனமா இந்த மாதிரி முடிவுகளை எடுக்க சொன்னது? என்னை நீ கேட்டியா? நீ எனக்கு சொந்தம். இந்த அமுதம் என் குழந்தைக்கு மட்டும்தான் சொந்தம்..” என்று அவளின் நெஞ்சை தொட்டு சொன்னான்.
அவள் உறைந்து விட்டாள்.
“நீ என் குழந்தைக்கு இப்படியொரு துரோகத்தை பண்ணி இருக்க கூடாது. உனக்கு என் மேல கோபம்ன்னா எனக்கு கூட துரோகத்தை பண்ணிக்க. ஆனா என்னோட குழந்தைக்கு துரோகம் செய்ய உனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏதோ ஒரு குழந்தைக்காக உன் உடம்பை நீயே மாத்தி..” என்று கத்தியவன் அங்கிருந்த மேஜையை உதைத்ததில் அதன் மீதிருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
அவள் பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
தன் நெஞ்சின் மீது கை வைத்தவளுக்கு ஏதோ ஒரு குழந்தை என்று அவன் சொன்னதன் அர்த்தமே புரியவில்லை.
ஆனால் அவனின் மானசா என்ற முதல் குரலிலேயே அங்கே வந்து விட்ட சுலோச்சனாவுக்கு விசயம் புரிந்து விட்டது.
அவள் சந்தேகப்பட்டது சரிதான். ப்ரீத்தி ஒரு நாளும் இவனின் மனைவியாக வாழ்ந்திருக்கவில்லை. இவனுக்கு ப்ரீத்தியின் மீது அன்பும் இல்லை. உரிமையும் இல்லை.
ப்ரீத்தி விஷயத்தில் மகன் கல்லாக இருந்தது கண்டு சந்தேகப்பட்டவள் காரணத்தையும் அப்போதே சந்தேகப்பட்டு இருக்க வேண்டும்.
நம் மகனை நாமே புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்ற குற்ற உணர்வு சுலோச்சனாவின் நெஞ்சை அழுத்தியது.
மானசாவுக்கும் இப்போது தீனாவின் மீது கோபம் வந்தது.
“பைத்தியக்காரன் மாதிரி கண்டதும் உளறிக்கிட்டு இருக்காத.. இது ஏதோ ஒரு குழந்தை இல்ல. உன்னோட குழந்தை..” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
இவனின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.
“இது என்னோட குழந்தை இல்ல. போதுமா? உன் பிரெண்ட் என்கிட்ட வாங்கிய சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இவ்வளவு நாளும் நான் உன்கிட்ட உண்மையை சொல்லாம இருந்தேன். ஆனா நீ எப்ப என்னோட குழந்தைக்கு துரோகம் பண்ணிட்டியோ இனிமே நான் ஏன் சத்தியத்தை காப்பாத்தணும்? இந்த குழந்தை என்னோட குழந்தையும் இல்ல. உன் பிரெண்ட் எனக்கு ஒரு நாளும் பொண்டாட்டியாவும் இல்லை..” என்றான்.
குழப்பமாக பார்த்தாள். ஆனால் கோபத்தோடு அவனின் சட்டையை பிடித்தாள். “என் பிரெண்ட் மேல பழி போட உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று கேட்டாள்.
அவளின் கையை தள்ளி விட்டவன் “நான் ஒன்னும் பழி போடல. உனக்கு சந்தேகம்ன்னா அந்த குழந்தைக்கும் எனக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பாத்துக்க.. ஆனா இனிமே நீ இந்த குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது..” என்று எச்சரிக்கும் விதமாக சொன்னான்.
இவளால் தன் தோழியை சந்தேகப்பட முடியவில்லை. அவளால் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது. அதுவும் கட்டிய கணவனுக்கு அவள் துரோகம் செய்திருப்பாள் என்று இவளால் துளி கூட நம்ப முடியவில்லை.
ப்ரீத்தியின் மீது போட்ட பழி கூட தன் மீது போட்ட பழி போல் நினைத்து கண் கலங்கியது இவளுக்கு.
“இன்னும் நமக்கு குழந்தை பிறக்கல. நாம இன்னும் வாழவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள பெரிய தியாகி போல உன்னோட உடம்பை இந்த குழந்தைக்கு அர்ப்பணிச்சி இருக்க. உனக்கும் எனக்கும் நடுவுல ஆயிரம் சண்டை இருக்கட்டும். ஆனா இதைப் பத்தி சொல்லணும்ன்னு உனக்கு கொஞ்சம் கூட தோணலையா? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு இந்த முடிவுக்கு வரணும்ன்னு தோணலையா?” என்று கேட்டான்.
“கத்தாத. காது வலிக்குது. குழந்தை எழுந்துடும்..” என்றவள் தன் காதுகள் இரண்டையும் பொத்தினாள்.
ப்ரீத்தியின் புனித தன்மையை சந்தேகப்படுவதை விடவும் இங்கே முக்கியமாக இருந்தது இவனின் வாயை அடக்குவதுதான்.
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணமே என் ஃப்ரெண்டோட குழந்தைக்காகதான். நான் இப்ப இந்த வீட்டுல வாழ்வதும் இவளுக்காக மட்டும்தான். இவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இவளுக்கு சத்து குறைபாடு இருக்கு. அதனாலதான் நானே தாய்ப்பால் தர முடிவு பண்ணேன். இது உனக்கு பிறந்ததோ யாருக்கு பிறந்ததோ எனக்கு அது தேவையில்லை. இவ என் பிரண்டுக்கு பிறந்தா. அவ என்னை நம்பி இந்த குழந்தையை விட்டுட்டு போனா. என் உயிர் உள்ள வரைக்கும் இவதான் என்னோட குழந்தை..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் மானசா.
அவள் சொன்னதில் அதிர்ந்தவன் “அப்படின்னா உனக்கு உன் புருஷனை விட ஏதோ ஒரு குழந்தை முக்கியமா?” என்று கேட்டான்.
“நீ எப்படா எனக்கு புருஷனா நடந்துக்கிட்ட?” என்று கேட்டவள் வாசலில் மாமியாரின் சக்கர நாற்காலியை பார்த்துவிட்டு கதவருகே வந்தாள்.
கதவை சாத்தி தாழிட்டாள். வெளியே இருந்த சுலோச்சனாவும் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து போனாள்.
தீனாவின் முன்னால் வந்து நின்ற மானசா “நீ ஒன்னும் என் புருஷன் கிடையாது. என்னை பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணின. இந்த குழந்தையை தராம எத்தனை நாள் நீ என்னை அழ வச்சன்னு எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. என்னோட அனுமதி இல்லாம எனக்கு எத்தனை முறை தொட்டிருக்க தெரியுமா? உனக்கு என்ன ஆம்பளைன்னா அந்த ஒரு விஷயத்துலதான் உன்னோட திறமையை காட்டணும்ன்னு நினைப்பா?” என்று கேட்டாள்.
இவன் கோபத்தில் இருந்ததால் அவள் சொன்னதை காதில் கூட வாங்கவில்லை.
“அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி நீ இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. அவ்வளவுதான்..” என்றான் கண்டிப்போடு.
“நான் கொடுப்பேன் இது என்னோட குழந்தை..”
“நீ கொடுக்கக் கூடாது. இது என்னோட குழந்தை இல்ல..” அவனும் சண்டை போட்டான்.
“என்னை உன்னோட பொண்டாட்டின்னு வெறும் வாயிலதானே சொன்ன இன்னைக்கு? நீ என்னை பொண்டாட்டியா நினைச்சிருந்தா இந்த விஷயத்தை எப்பவோ என்கிட்ட சொல்லியிருப்ப. எனக்கு என் பிரீத்தி மேல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா உண்மையிலேயே அவகிட்ட தப்பு இருக்குன்னா அதை நீ என்கிட்ட முதல் நாளே சொல்லி இருக்கணும்..” என்றாள்.
“நான் உன்னை லவ் பண்றேன். நீ இந்த குழந்தைக்காகதான் இந்த வீட்ல இருக்க. இப்படி இருக்கும்போது யார் உண்மையை சொல்லுவாங்க? உன் பிரண்ட் வாங்கிய ஒத்த சத்தியத்துக்காக என் அம்மாகிட்டயே நான் இந்த உண்மையை சொல்லாதவன். என் பிரண்டோட குழந்தையை நான் தூக்கிட்டு போறேன்னு நீ கிளம்பிட்டா அப்புறம் நான் என்ன செய்வேன்?” என்று இவன் தன் பக்கம் நியாயத்தை கேட்டான்.
அவளின் கண்கள் ஒளிர்ந்தது. “ரொம்ப கரெக்டா சொன்ன. இதுதான் உன்னோட குழந்தை இல்லையே. இனி ஏன் நான் உன்னோடு இருக்கணும்? குட் பாய்..” என்று சொல்லிவிட்டு குழந்தையை தூக்க முயன்றாள்.
இவன் பாய்ந்து அவளை தோள்களைப் பிடித்து நேராக நிற்க வைத்தான்.
“ஏன் என் மனசை இப்படி டார்ச்சர் பண்ற? நீ இல்லன்னா என்னால வாழவே முடியாது. நீ ஒரு வாரம் காணாம போனதுக்கு என்னோட ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி. என்னை நீ தப்பா நினைச்சாலும் பரவால்ல, நீ என்னோடு இருந்தா போதும்ன்னு நினைச்சிதான் நான் உன் கஷ்டத்தை பார்த்தும் பார்க்காம இருந்தேன். இது என்னோட சுயநலம்தான். எனக்கு நீ வேணும், அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். இந்த குழந்தையை கொல்ல கூட தயங்க மாட்டேன்..” என்று மிரட்டினான். அவளை தடுத்து நிறுத்த இவன் எது வேண்டுமானாலும் செய்வான். எத்தனை விதமான பொய்களை வேண்டுமானாலும் சொல்வான்.
ஆனால் அவன் சொன்னதில் ஆத்திரம் கொண்ட மானசா அவன் நெஞ்சில் ஓங்கி அறைந்தாள்.
“என் குழந்தையை கொல்லுவேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று கோபத்தோடு கேட்டாள். ஒரே நொடியில் பைத்தியம் பிடித்தவள் போலவே மாறிவிட்டாள்.
“இது உன்னோட குழந்தை இல்லன்னு உலகத்துக்கே தெரியும். உனக்கு பைத்தியம் பிடிச்சி போச்சின்னு சொல்லி உன்கிட்ட இருந்து இந்த குழந்தையை பிரிக்க கூட என்னால முடியும்..” என்று அவன் எப்போதும் கூட மிரட்டதான் செய்தான்.
அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் அருவி போல் சுரந்தது.
அவளின் முகத்தை அள்ளியவன் “அழாத மானசா. என்னை புரிஞ்சிக்க பாரு. இது நம்மை குழந்தை இல்ல. உன்னோட உடம்பை நீ வீணாக்க வேண்டாம்..” என்றவனை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பின்னால் தள்ளினாள்.
“என்னோட உடம்பு மட்டும் இல்ல என் உயிரும் இந்த குழந்தைக்காகதான். இந்த குழந்தையை நீ என்கிட்ட இருந்து பிரிச்சாவோ இந்த குழந்தைக்கு உன்னால ஏதாவது ஆபத்து வந்தாவோ நான் அடுத்த செகண்ட் செத்துப் போனேன்..” என்று மிரட்டினாள்.
முதல் முறையாக அவன் கண்களில் பயம் தெரிந்தது.
அவன் நம்முடைய பலவீனத்தை வைத்து மிரட்டும் போது நாம் ஏன் அவனுடைய பலவீனத்தை வைத்து மிரட்டக் கூடாது?
“இது என்னோட குழந்தை. இந்த வார்த்தைக்கு எப்பவும் மாறாது. உனக்கு நான் வேணா இன்னொரு சான்ஸ் தரேன். இந்த குழந்தையை உன்னோட குழந்தையா நம்மோட குழந்தையா ஏத்துக்க. நான் உன்னோட பொண்டாட்டியா முழு மனசா உன்னோடு வாழுறேன்..” என்றாள்.