தன் காலை பிடித்துக் கொண்டிருந்தவனை உதைத்து தள்ளினாள் மானசா.
அவனின் தலை முடியை கொத்தாக பிடித்தவள் “எதுக்கு என்னோட பிரெண்டை ஏமாத்தின?” என்று கேட்டாள்.
அவன் நெஞ்சில் உதைத்தாள். பின்னால் சென்று விழுந்தான்.
“உன்னால என் பிரெண்டு அவளோட வாழ்க்கையை தொலைச்சிட்டா. உன்னால அவளுக்கு எவ்வளவு கெட்ட பேர் தெரியுமா? அவ்வளவு தப்பையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நீ எனக்கும் லவ் லெட்டர் கொடுத்த. உன்னாலதான் அவ என்னை விட்டு போனா..” என்றவள் கோபத்தோடு அவளின் முகத்தில் அடுத்த உதையை விட்டாள்.
வினோத் மாட்டி கொண்டு விட்டான். சத்தமிட்டான் என்றால் பெண் வீட்டார் வந்து விடுவார்கள். இந்த விஷயம் தெரிந்தால் இவனுக்கு தனி சடங்கு செய்து விடுவார்கள். தன் திருமணத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவே வாயை மூட வேண்டிய நிலைமை இவனுக்கு.
ஆனால் மானசா கொடுத்த ஒவ்வொரு அடியும் மோசமானதாக இருந்தது. தீனா அருகில் இருக்கிறான் என்ற தைரியத்தில் அவள் இஷ்டத்திற்கு அடித்து உதைத்தாள்.
அவளுக்கு கை வலித்தால் நாம் அடியை கொடுக்கலாம் என்று அவன் காத்திருந்தான். ஆனால் அவள் அவனுக்கு எந்த வேலையும் வைக்கவில்லை.
மானசா வினோத் முகத்தில் தனி நலுங்கு வைத்து விட்டாள். அவன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்தது.
தீனா கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு மானசாவை பிடித்தான். “போதும் இதுக்கு மேல அடிக்காத. ஆள் போய் சேர்ந்துட போறான். அப்புறம் போலீஸ் வந்து உன்னைதான் பிடிக்கும்..” என்றான்.
தனது முகத்தை துடைத்துக்கொண்டு தள்ளி நின்றவள் “நீ உருப்படவே மாட்ட..” என்று வினோத்துக்கு சாபம் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
கதவைத் திறந்தவள் திருமண மண்டபத்தை நோட்டமிட்டாள். மணப்பெண்ணின் குடும்பத்தாரை நெருங்கியவள் “நீங்க பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப கெட்டவன். என்னோட பிரெண்டுக்கு குழந்தை கொடுத்து ஏமாத்திட்டான். அவ இப்ப செத்துட்டா. இந்த நாய் எனக்கும் லவ் லெட்டர் குடுத்து என்னை ஏமாத்த பார்த்தது. இன்னும் எத்தனை இடத்துல இந்த நாய் மேஞ்சு வச்சிருக்கோ? பார்த்து இருங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவர்கள் தீனாவையும் அவளையும் குழப்பத்தோடு பார்த்தார்கள்.
வினோத்திடமே விஷயத்தை கேட்டு பார்க்கலாம் என்று மணமகன் அறைக்கு சென்றார்கள். அடிபட்டு இருந்தவன் இவர்களைப் பார்த்ததும் அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
கொஞ்சம் ஓய்வெடுக்க கூட விடாமல் உடனே வந்து விட்டார்களே என்று அவனுக்கு கவலை.
“நீ ஒரு பொண்ணுக்கு குழந்தை கொடுத்து ஏமாத்திட்டன்னு ஒருத்தி சொல்லிட்டு போறா? என்ன விஷயம்?” என கேட்டார் பெண்ணின் தந்தை.
“அவங்க சும்மா சொல்றாங்க மாமா..” என்று வினோத் சொல்ல, நெருங்கி வந்து அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார் அவர்.
“பொய் சொல்றாங்கன்னா ஏன்டா அவங்க உன்னை அடிக்கும்போதே எங்களை உதவிக்கு கூப்பிடல?” என்று கேட்டார்.
அடித்துவிட்டு அமைதியாக போய்விடுவாள் என்று நம்பி கொண்டு இருந்தான். ஆனால் படுபாவி இப்படி போட்டு கொடுத்து விட்டாளே!
“நான் எந்த தப்பும் பண்ணல மாமா..” என்றவனின் உச்சி முடியை பிடித்து ஆட்டியவர் “கல்யாணம் பண்ணும் முன்னாடி என் பொண்ணுக்கே குழந்தை கொடுத்தவன்தானே நீ? உனக்கு இனிதான் நான் விருந்தே தரப் போறேன். என் வீட்ல இனி தினம் தினம் உனக்கு விருந்துதான்..” என்று சொன்னார்.
இவனுக்கு பயத்தில் வியர்த்தது. மாட்டிக்கொண்டோம், இனி தப்பிக்க வழியே இல்லை என்பது புரிந்து போனது. மானசா ஜெயில் தண்டனையை விட மோசமான ஒரு தண்டனையை அவனுக்கு கொடுத்து விட்டாள் .
திரும்பும் வழியில் காரில் டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்திருந்த மானசா அழுது கொண்டே வந்தாள்.
“எதுக்கு அழுற? அதுதான் அவனை அவ்வளவு அடிச்சிட்டியே..” என்றான் தீனா.
“நான் என் பிரீத்தியை நினைச்சு அழுறேன்..” என்றவள் தேம்பினாள்.
“நீ நினைக்கிற மாதிரி ப்ரீத்தி ஒன்னும் அவ்வளவு நல்ல பொண்ணு கிடையாது. உனக்கும் அவன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான். அவ நல்ல பொண்ணா இருந்திருந்தா வினோத்தை பத்திய உண்மைகளை உன்கிட்ட சொல்லி இருக்கணும்தானே?” என்று கேட்டான்.
“ஆனா அவளுக்கு காரணம் இருந்திருக்கும். அவ என் வீட்டை விட்டு போக காரணம் கூட நான் அவனோடு பிரேக் அப் பண்ணணும்ன்னு அவ நினைச்சதாலதான் இருக்கணும்..” என்றாள்.
அவனுக்கு சிரிப்புதான் வந்தது. “உன் பிரண்டு விஷயத்துல நீ ஒரு முட்டாள். அவ லவ் பண்ண விஷயத்தை உன்கிட்ட இருந்து மறைச்சிருக்கா. குழந்தை உருவான விஷயத்தை மறைச்சி இருக்கா..” என்றான்.
யோசித்தாள் இவள். கடவுள் வந்து சொன்னால் கூட தன் தோழியை இவளால் தவறாய் நினைக்க முடியாது.
”அவளோட பாயிண்ட் ஆஃப் வியூ படி அவளே வேற ஒரு வீட்ல இருக்கா. லவ்வுல ஏமாந்துட்டேன்னு சொன்னா எல்லோரும் தப்பா நினைப்பாங்களேன்னு அவ அதை சொல்லாம இருந்திருக்கலாம்..” என்றவளிடம் “உங்கிட்ட இருந்து லவ்வை ஏன் மறைச்சா.? இதுக்கு ஒரு நல்ல காரணத்தை சொல்லு பாக்கலாம்..” என்று நக்கலாக கேட்டான்.
“அவளோட காதல் அவ மனசை தொடாம இருந்திருக்கலாம். வினோத் அவளை அப்ரோச் பண்ண டைம்லயே அவளை யூஸ் பண்ணவும் ஆரம்பிச்சிருக்கலாம். காதல் நமக்கு ஒரு நம்பிக்கை கொடுத்த பிறகு என்கிட்ட சொல்லலாம்ன்னு அவ காத்திருந்திருக்கலாம்..” என்றாள்.
ப்ரீத்தியின் விஷயத்தில் இவள் வைப்பதுதான் சட்டம் என்று அவனுக்கு புரிந்து போனது. அதனாலேயே அவளிடம் அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
கோபத்தில் இருந்த மானசாவுக்கு வினோத்தை உயிரோடு விட்டு வந்தது பிடிக்கவே இல்லை. ஆனால் பெண் வீட்டார் நமக்கு பதிலாக அவனைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
“சாரி. இந்த விஷயத்துல அதிகமா பாதிக்கப்பட்டது நீங்கதான். என் பிரண்ட் உங்களை மனசு வந்து ஏமாத்தியிருக்க மாட்டா. ஒருத்தன் ஏமாத்தினாலும் இன்னொருத்தன் நமக்கு வாழ்க்கை தருவான்னு நம்பி உங்களை கல்யாணம் பண்ணி இருப்பா. ஆனா உருவான குழந்தை அவளோட வாழ்க்கை பாதையை மாத்தி விட்டுடுச்சி..” என்றாள்.
இந்த விஷயத்தில் அவன் மறு வார்த்தை பேசவில்லை. ஏனெனில் அவனுக்குதான் அவளின் நட்பு எந்த அளவுக்கானது என்று புரிந்து விட்டதே.
“அவ வசதியான வாழ்க்கை வேணும்ன்னு நினைச்சிருந்தா பாப்பாவை கலைச்சிட்டு உங்களோடு வாழ்ந்து இருக்கலாம். ஆனா குழந்தை பிறக்கும் வரை உங்க வீட்டுல தங்க உங்கக்கிட்ட அனுமதிதானே கேட்டா? அதை ஏமாத்தினாதான். ஆனா சூழ்நிலை அப்படி ஆகிடுச்சி..” என்றாள்.
வீட்டின் முன்னால் காரை நிறுத்தியவன் அவளின் திசை திரும்பி இரண்டு கைகளையும் கூப்பினான்.
“நான் அவளை எதுவும் சொல்லல. நீ உனக்குள்ள கண்டதையும் யோசிச்சி குழம்பாதே. எனக்கு சூழ்நிலை புரியுது. என் லைஃப்ல ஒரு முள் கிரீடமாதான் அவ வந்தா. ஆனா அவளாலதான் நான் உன்னை கண்டுபிடிச்சேன். பார்த்த நொடியில் வரும் காதல் மேல எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஆனா உன்னை பார்த்ததும் எனக்குள்ள அவ்வளவு காதல். அந்த காதலை நான் உணர காரணம் அவ. அவ தெரிஞ்சே என்னை ஏமாத்தினாளா இல்ல சந்தர்ப்ப சூழ்நிலையால என்னை ஏமாத்தினாளா அது எனக்கு தேவையில்லை. எனக்கு அவ மேல எந்த கோபமும் இல்லை. போதுமா?” என்று கேட்டான்.
அவள் முகத்தில் நிம்மதி என்ற உணர்வு மலர்ந்தது.
அவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான். “ஐ லவ் யூ..” என்று சொன்னான்.
இதழ் விரித்தவள் அவனின் கையைப் பிடித்து முத்தமிட்டாள். அவனின் காதலில் இருப்பது சுயநலமா? இல்லை பொதுநலமா அது அவளுக்கு தேவையில்லை. அவனின் காதல் அவசரத்தில் வந்தது தவறுதான். காண கிடைக்காத பொக்கிஷம் போல் தெரிந்த காதலை உடனடியாய் அடைய வேண்டும் என்று அவன் எடுத்து வைத்த முயற்சிகள் அனைத்தும் தவறுதான். ஆனால் தன் தோழியை அவன் திட்டவில்லை. இவளுக்கு அதுவே போதும்.
இருவரும் வீட்டுக்குள் வந்தபோது சுலோச்சனா குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தாள். அது தன் மகனின் குழந்தை என்று தெரிந்த பிறகும் கூட அவளுக்கு அந்த குழந்தையின் மீது அதே அளவுக்கு பாசம் இருந்தது. ஏனெனில் அவள் காதலில் விழுந்தது பிரீத்தியின் மீதாயிற்றே!
வீட்டுக்குள் வரும்போது இருவரின் கரமும் இணைந்திருந்தது. அதைப் பார்த்து சுலோச்சனாவுக்கு மனம் பூரித்தது. நம் மகனின் வாழ்க்கை இனிமேல் நன்றாக இருக்கும் என்று நம்பினாள்.
மானசா படுக்கையறைக்கு நடக்க, கையைப் பிடித்து நிறுத்தினான் தீனா.
“அதுதான் என் காதலை ஏத்துக்கிட்டியே! உன் கையால ஏதாவது சமைச்சி கொடு! எனக்கு சாப்பிடணும் போல ஆசையா இருக்கு..” என்றான்.
இவள் மறுப்பு சொல்லாமல் கிச்சனுக்கு நடந்தாள். முன்பு குழந்தைக்காக மட்டுமே வீட்டுக்குள் நடமாடி கொண்டு இருந்தாள். இந்த வீட்டை பற்றி அவளுக்கு எந்த அக்கறையும் இல்லை. இந்த வீட்டின் மீது ஆசையும் இல்லை.
ஆனால் இப்போது கணவனின் மீது வந்த உரிமையைப் போலவே வீட்டின் மீதும் உரிமை வந்தது.
இரவுக்கான சமையலை செய்து கொண்டிருந்தார்கள் பணிப்பெண்கள்.
“இன்னைக்கு நான் சமைக்கிறேன். நீங்க ஹெல்ப் மட்டும் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு இவளே இரவு உணவை சமைத்தாள்.
உணவை சாப்பிடும்போது கண்கலங்கிய சுலோச்சனா “ப்ரீத்தியோட கை பக்குவம் போலவே இருக்கு..” என்றாள்.
“நாங்க ரெண்டு பேரும் அப்படிதான். ரெண்டு பேரோட நடை உடை பாவனை கை பக்குவம் படிப்பு எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும்..” என்று சொன்ன மானசாவின் குரலில் அந்த அளவுக்கு பெருமை இருந்தது.
அவளிடம் முடிந்த அளவுக்கு ப்ரீத்தி பற்றி நல்ல விதமாக மட்டும்தான் பேச வேண்டும் என்பது தீனாவுக்கு புரிந்தது. இறந்து போன ஒருத்தியை வில்லியாக நினைக்க இவனுக்கும் விருப்பமில்லை. தன் மனைவிக்கு பிடித்த ஒரு நபரை வெறுக்கவும் மனமில்லை.
இரவு உணவை முடித்த பிறகு குழந்தையை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு அவள் கிளம்ப, தன்னறை வாசலில் நின்று அவளை ஏக்கமாக பார்த்தான் தீனா.
குழந்தையை தூக்கிக்கொண்டு அவனின் அறைக்கு நடந்தாள். அவன் மிட்டாய் கிடைத்த குழந்தை போல புன்னகையோடு சென்று தொட்டிலை கொண்டு வந்து தனது படுக்கையறையில் வைத்தான்.
குழந்தைக்கு பால் ஊட்டினாள். தீனா ஓரக்கண்ணால் குழந்தையை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் கோபம் கொஞ்ச நாளுக்குதான் நீடிக்கும் என்று அவளுக்கு தெரியும்.
நமக்கு குழந்தை எந்த அளவுக்கு வீக்னஸோ அதே அளவுக்கு அவனுக்கு நாம் வீக்னஸ் என்றும் தெரியும்.
குழந்தை உறங்கிய பிறகு தொட்டிலில் கிடத்தி விட்டு வந்தவள் தீனாவின் மீது சாய்ந்தாள்.
அவனின் முகத்தை அள்ளி முத்தங்களை கொடுக்க ஆரம்பித்தாள்.
குழந்தைக்கு இனிசியல் தர தயாராக இருந்தான் அவன். அதற்காக அவள் தன்னைத் தர நினைக்கவில்லை. ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்த பிடிவாதத்திற்காக தன்னை தரவில்லை. இந்த குழந்தை தன் மகனுக்கு பிறக்கவில்லை என்று தெரிந்த பிறகும் அதே பாசத்தை காட்டிய சுலோச்சனாவுக்காகவும் இவள் தன்னை தரவில்லை.
அவனின் காதல் உண்மை என்று இவளின் உள்ளுணர்வு சொன்னது. உயிர் போகும் வேளையிலும் அவன் நம்மை கைவிடமாட்டான் என்று ஒரு நம்பிக்கை. திமிர் பிடித்த இவனின் திமிர் அடங்குவது நம்மிடம்தான் என்ற பெருமிதம். ஊரறிய திருமணம் செய்தும் வாழ்க்கையை தொடங்காமல் இருக்கும் இவனோடு சேர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற ஆசை. மகனுக்கு ஒரு நல்ல பெண் கிடைத்து விட மாட்டாளா என்று எதிர்பார்த்து காத்திருந்த தாய்க்கு இனி ஒரு நல்ல மருமகளாக நாம் இருக்க வேண்டும் என்ற கொள்கை. அத்தனையும் சேர்ந்துதான் அவளை இவனோடு வாழ சொன்னது.
வேறு யாருக்காகவும் கிடையாது. இந்த வாழ்க்கையை அவள் அவளுக்காக தேர்ந்தெடுத்தாள். நமது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தாள்.
அவனுக்கு அவள் கொடுத்த முத்தத்தில் நம்பிக்கையின் வெளிச்சம் மின்ன ஆரம்பித்தது. நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் போலவே அவனுக்குள் இருந்த பயமும் தயக்கமும் உறங்க ஆரம்பித்தது. அவன் கொடுத்த முத்தத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தது.