காம்பௌண்ட் சுவரில் சாய்ந்து நின்று இருந்த மானசாவும் கார் நின்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.
தீனா இவள் அருகில் வந்தான்.
‘இவனா?’ என்று யோசித்தவள் அவசரமாக முகத்தை துடைத்து கொண்டாள்.
இரவெல்லாம் கற்பனையின் மூலம் வந்து உறங்க விடாத ராட்சசி, உறங்கினாலும் கனவில் வந்து கொள்ளை கொண்ட ராட்சசி இப்போது நிஜத்திலேயே வந்து விட்டாளே என்று இவனுக்கு ஆச்சரியம்.
“இங்கே என்ன செய்றிங்க?” என்று கேட்டான்.
மனைவியின் இறப்புக்கு முழுமனதாக துக்கம் அனுசரிக்காத இவனிடம் பேசவே அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற சுயநலத்தின் காரணமாக வாயை திறந்தாள்.
“குழந்தையை பார்க்க வந்தேன். உங்க வீட்டுல விடல..” என்றாள்.
இவன் கார் டிரைவரை திரும்பி பார்த்தான். “கால் மணி நேரம் வெயிட் பண்ணுங்க..” என்று சொன்னவன் மானசாவிடம் திரும்பி “வாங்க நான் உங்களை கூட்டி போறேன்..” என்று அழைத்தான்.
மனைவி இறந்த தூக்கம் இப்போதும் கூட அவன் கண்களில் இல்லை. ஆனால் நமக்கு உதவி செய்ய முன் வந்ததன் காரணம் என்ன என்று யோசித்தபடி அவனோடு சேர்ந்து நடந்தாள்.
இப்போது கேட் தானாக திறந்தது.
வீடு கேட்டில் இருந்து வெகு தூரம். இவன் கொஞ்சம் மெதுவாகவே நடந்தான். அவளோடு நேரத்தை செலவழிக்க அவனுக்கு விருப்பம். அதனால்தான் இப்படி நடந்தான்.
மானசா அந்தப் பாதையின் இருபுறமும் இருந்த பூச்செடிகளையும் அழகான புதர் செடிகளையும் வேடிக்கை பார்த்தாள்.
தூரத்தில் ஒரு செயற்கை நீரூற்று கூட தெரிந்தது. இவளின் விழிகள் அங்கும் சென்று வந்தது.
அருகில் நடந்தவன் இவளின் முகத்தை ஓர கண்களால் கவனித்துக் கொண்டிருந்தான். பார்வையால் இவளை தின்று கொண்டிருந்தான். அவனுக்கு மோகம் தலையில் ஏறி உட்கார்ந்து ஆட்டம் ஆடியது.
அவளை கட்டி அணைக்க சொல்லி கரங்கள் இரண்டும் அவனிடம் சண்டை போட்டன.
“உங்க நேம்?” என்று கேட்டான் அவன்.
“மானசா..” என்று பதிலளித்தாள்.
இவனுக்கு அவளின் பெயரையும் பிடித்து விட்டது. நாவில் அசை போட்டு பார்த்தான் அவளின் பெயரை உச்சரிப்பது சக்கரையை கடிப்பது போல் இருந்தது.
இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஹாலில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அம்மா இவன் மானசாவை அழைத்து வருவது கண்டு புருவம் நெரித்தாள்.
நாம் முடியாது என்று சொன்ன பிறகும் இந்த பெண் வீட்டுக்குள் வந்திருக்கிறாள் என்றால் இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று மானசாவை மனதுக்குள் திட்டினாள்.
குழந்தை இருந்த அறைக்கு மானசாவை அழைத்து போனான். மானசா சுலோச்சனாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அந்த அம்மையாருக்கு நம் மீது ஆத்திரம் என்பதை அந்த முகத்தை பார்த்தே இவளும் கண்டுக் கொண்டாள்.
குழந்தையை பார்க்க விடாததற்காக சுலோச்சனாவின் மீது இவளுக்கும் கோபம் வந்தது. அதே சமயம் இந்த வீட்டில் அந்த குழந்தையை ஓரளவு அன்பாக கவனித்துக் கொள்வதும் இந்த அம்மையார்தான் என்பதை யூகிக்கவும் முடிந்தது.
அறையினுள் குழந்தை தனியாக இருந்தது. உறங்கிக் கொண்டிருந்தது.
மானசா தொட்டிலின் அருகில் வந்து அமைதியாக நின்று விட்டாள். தொட்டிலின் கம்பியை பிடித்தவளுக்கு கண்கள் கலங்கியது. அந்த குழந்தையை அள்ளி கொஞ்சம் சொல்லி மனம் கெஞ்சியது. ஆனால் இவள் குழந்தையை தொந்தரவு செய்யவில்லை. உறங்கும் குழந்தையை எழுப்புவது மகா பாவம் என்று அறிவாள்.
பிரீத்தியை உரித்து வைத்திருந்தது அந்த குழந்தை. இவள் அந்த குழந்தையை விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளை விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீனா.
இவள் தயக்கத்தோடு அவன் முகம் பார்த்தாள். ஒருமுறை கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது.
“இந்த குழந்தையை என்கிட்ட கொடுத்துடுறிங்களா? நான் இந்த குழந்தையை வளர்க்கிறேன். ஸ்கூல் போகும் வயசுல திருப்பி அனுப்பிடுறேன். என் பிரண்டோட கடைசி ஆசை இது..” என்று கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.
அந்த கடிதத்தை வாங்கி படித்தவனுக்கு கடைசி வரியில் எழுதி இருந்தது பிடிக்கவில்லை. மானசாவின் அனதர் சோல் நான் மட்டும்தான். வேறு யாரும் இல்லை என்று உள்ளம் கோபப்பட்டது.
“இதை பத்தி வெளியே போய் பேசலாமே!” என்று அழைத்தான்.
அவள் சிறு நிம்மதியோடு அவனோடு கிளம்பினாள். ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட போதும்.
அவளை தன் காருக்கு அழைத்துப் போனவன் காரின் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.
இன்று முக்கியமான ஒரு மீட்டிங் இருந்தது. ஆனால் அதைக் கூட மறக்கடித்தது இவளின் அருகாமை.
வழியில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவளின் காதோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த கேசத்தையும், நெற்றியில் அவள் வைத்திருந்த குட்டி ஸ்டிக்கரின் பேரழகையும், அவளின் சேலையின் அழகையும், சேலை மறைக்காமல் விட்டிருந்த அவளின் மேனி அழகையும் மாறி மாறி ரசித்து கொண்டு இருந்தான்.
பூவனத்தின் நடுவில் இருப்பது போல் இருந்தது. பெண்மையின் புயல் இவனை வாட்டி வதைத்தது. அவளின் செம்மாதுளை உதடுகளில் தனது ஜென்மங்களையே தொலைத்து விட்டான். அவளின் இதழை சுவைப்பதற்காகவே பிறப்பெடுத்ததாக நினைத்தான்.
அந்த பயணத்தின் போது அமைதியாக இருந்ததே அவனின் மிகப்பெரிய சாதனையாய் இருந்தது.
தனது அலுவலகம் செல்லும் வழியில் இருந்த ஒரு காபி ஷாப்பின் முன்னால் காரை நிறுத்த சொன்னான்.
அவளை காபி ஷாப்புக்குள் அழைத்துப் போனான்.
தனியான ஒரு மேஜையை தேர்ந்தெடுத்து இருவரும் எதிரெதிரே அமர்ந்தார்கள்.
இன்னமும் லெட்டர் அவனிடம்தான் இருந்தது. அதை மீண்டும் ஒருமுறை படித்தான். பிரீத்தியும் மானசாவும் எந்த அளவிற்கு நெருக்கமாய் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது அந்த கடிதத்தை படிக்கும்போதே புரிந்தது.
“குழந்தையை நீங்க வளர்க்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..” என்றான் அவன்.
இவளுக்கு நிம்மதி பெருமூச்சு நெஞ்செங்கும் பரவியது.
ஆனால் அவன் ”ஆனா..” என்று ஆரம்பித்தான்.
இவள் என்னவென்பது போல் பார்க்க, “அந்த குழந்தைக்கு ஒரு அம்மாவைப் போல நீங்க பாசம் காட்டுவதை விட ஒரு அம்மாவாவே பாசம் கட்டலாமே..” என்று இழுத்தான்.
“இப்பவும் அம்மாதான்.. ப்ரீத்தியோட குழந்தை என்னோட குழந்தை போலதான்..” என்றாள் வெள்ளை மனதோடு.
“நான் அப்படி சொல்ல வரல. அம்மாவாவே மாறிடுங்கன்னு சொல்றேன்..” என்றவன் அவள் புரியாமல் பார்ப்பதை கண்டு விட்டு “என்னை கல்யாணம் பண்ணிக்கங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ திங்க் ஐ லவ் யூ..” என்றான்.
இவள் படக்கென்று எழுந்தாள். பற்களை கடித்தபடி அவன் கன்னத்தில் ஒரு அறையை கொடுத்தாள்.
நீயும் நானும் எப்போதும் பிரியக்கூடாது அதனால் ஒரே ஆணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூட சிறு வயதில் பிரீத்தியும் இவளும் பேசி இருக்கிறார்கள். ஆனால் நிஜம் வேறு மாதிரியானது.
நிஜத்தை தாண்டி இப்போது இருக்கும் சூழ்நிலை மிகவும் மோசமானது. மனைவி இறந்த மறுநாளே இவனால் எப்படி இப்படி பேச முடிகிறது? குழந்தையை பார்த்துக் கொள்ள திருமணம்தான் ஒரே வழி என்று வேறு ஏதாவது மொக்கை காரணம் சொல்லி இருந்தால் கூட இவள் அமைதியாக இருந்திருப்பாள். ஆனால் ஐ லவ் யூ என்று சொல்ல இவனுக்கு எவ்வளவு தைரியம்.
“என் பிரெண்டு உன்னை எவ்வளவு நம்பி கல்யாணம் பண்ணி இருப்பா? அவளுக்கு துரோகம் செய்ய உனக்கு வெக்கமா இல்ல?” என்று கேட்டவளுக்கு கோபத்தின் காரணமாக கண்களில் கண்ணீர் துளிர்த்தது. ப்ரீத்தியின் மீதுதான் கோபம் வந்தது. எப்படி இப்படி ஒரு எருமையை தேடிப் பிடித்து கட்டி இருப்பாள்? இவன் எல்லாம் மனிதனா?
தீனா தனது கன்னத்தை தேய்த்தபடி எழுந்து நின்றான். “ஒன்னும் பிரச்சனை இல்ல. நல்லா யோசிங்க. உங்களுக்கு நிஜமாவே உங்க பிரண்டோட கடைசி ஆசையை நிறைவேத்த விருப்பமா இருந்தா இந்த நம்பருக்கு ஒரு கால் பண்ணுங்க..” என்று தனது விசிட்டிங் கார்டை எடுத்து அவள் முன்னால் வைத்தான். இவளிடம் இதைப் பற்றி எப்படி பேசுவது என்று காத்துக் கிடந்தான் அவன். இப்போது ஒரு சந்தர்ப்பம் வாய்த்து விட்டது. இதை விட்டு விடுவானா?
மானசாவின் முகம் நெருப்பின் பிரதிபலிப்பாக இருந்தது. விட்டால் அவனையே கூட எரித்து விடுவாள்.
“என் அம்மா கண்டிப்பா உங்களுக்கு அந்த குழந்தையை கொடுக்க மாட்டாங்க. உங்களை வீட்டுக்குள்ள கூட விட மாட்டாங்க. ஆனா என் தாலி உங்க கழுத்துல இருந்தா உங்களுக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கும். கொஞ்சம் யோசிச்சி பாருங்க..” என்றவன் அவளின் முகம் அதே போல இருக்கவும் “நீங்க இல்லன்னா வேற ஏதாவது ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணதான் போறேன். அப்படி வேற பொண்ணை கல்யாணம் பண்ணினா என் குழந்தைக்கு கொடுமைகள் கூட நடக்கும். அதுவே நீங்களா இருந்தா கொடுமை பண்ண மாட்டிங்கன்னு நம்புறேன்..” என்றான்.
இவள் ஆத்திரத்தோடு அவன் முகம் பார்த்தாள். நீ யோக்கியமாக இருந்தால் குழந்தைக்கு எப்படி கொடுமை நடக்கும் என்று இவளின் மனம் கேட்டது.
ஆனால் அவள் மனதுக்குள் கேட்டும் கூட இவன் அவளின் முகத்தை வைத்தே விஷயத்தை புரிந்து கொண்டான். ”எனக்கு கொஞ்சம் லேடீஸ் வீக்னஸ் இருக்கு. என் பொண்டாட்டிக்கு நான் கொஞ்சம் அடிமையாதான் இருப்பேன். எனக்கானதை அவ தந்துட்டா அதன் பிறகு அவ என்ன செஞ்சாலும் கண்டிப்பா கேட்க மாட்டேன்..” என்றான்.
இவளுக்கு விழிகள் கலங்கி விட்டன. ப்ரீத்தியின் குழந்தை ஏதோ ஒரு பெண்மணியிடம் குழந்தை சிரமப்படுவதை இவளால் கற்பனை செய்ய முடிந்தது.
“அந்த யாரோ ஒரு பெண்ணோட இடத்துல நீங்க இருக்க விரும்பினா தாராளமா என்னை காண்டாக்ட் பண்ணுங்க. எனக்கு தேவையானதை நீங்க கொடுத்துட்டா அதுக்கப்புறம் உங்களுக்கும் உங்க குழந்தைக்கு நடுவுல நான் மூக்கை நுழைக்க மாட்டேன். பிராமிஸ். சீக்கிரம் முடிவை சொல்லுங்க. இல்லன்னா நான் வேற பொண்ணை தேடி பிடிச்சிடுவேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் தீனா.
மானசா தலையை பிடித்தபடி அங்கேயே அமர்ந்து விட்டாள். தீனா இவளின் கண்களுக்கு ஒரு ராட்சசனாக தெரிந்தான். தான் பெற்ற குழந்தைக்கு மாற்றாந்தாய் கொடுமை நடக்கும் என்பதை எவ்வளவு தைரியமாக சொல்கிறான்.
உனக்கு இந்த உலகத்துல வேற ஆம்பளையே கிடைக்கலையா ப்ரீத்தி என்று இவள் தோழியை மனதுக்குள் திட்டினாள்.
ச்சீ.. என்ன பிறவி இவன்? என்று அவனையும் திட்டினாள்.
வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியவில்லை. ப்ரீத்தியின் குழந்தையை வேறு எவளோ ஒருத்தி கொடுமை செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ப்ரீத்திக்கு துரோகம் செய்ய முயலும் அவளின் கணவனுக்கு தன்னை கொடுக்கவும் விரும்பவில்லை.
அன்றைய இரவு முழுக்க பைத்தியம் போல் தனது அறையில் நடமாடினாள்.
மறுநாள் காலையில் அவளின் போனுக்கு வீடியோ மெசேஜ் ஒன்று வந்தது. எடுத்துப் பார்த்தாள். தீனாவின் போன் நம்பர்.
வீடியோவில் குழந்தை அழுது கொண்டிருக்கும் காட்சி ஓடியது. பணிப்பெண் குழந்தைக்கு புட்டி பாலை கொடுத்தாள். ஆனால் குழந்தை அதை குடிக்காமல் அழுதது.
“டயப்பர் மாத்தி விடு..” என்றாள் பக்கத்தில் இருந்த சுலோச்சனா.
“இப்பதான் மாத்தி விட்டேன் மேடம்..” என்றாள் அந்த பணிப்பெண்.
“புது பால் கொண்டு வா..” என்று பணிப்பெண்ணை விரட்டினாள் சுலோச்சனா.
மானசாவுக்கு அந்தப் பெண்மணிகள் பேசிக்கொள்வது காதில் ஏறவில்லை. குழந்தையின் அழுகை சத்தம்தான் மனதை உலுக்கியது. கண்ணீரும் கசிந்தது.
பிற்பகலில் இன்னொரு வீடியோவை அனுப்பி வைத்தான் தீனா. அதிலும் குழந்தை அழுதது.
“பெத்த தாயை இழந்துடுச்சி. தாயோட கதகதப்பு இல்லாம இந்த குழந்தை எப்படி வளர போகுதோ?” என்று கேட்டாள் குழந்தையின் அருகில் இருந்த ஒருத்தி.
“எத்தனையோ குழந்தைகள் அம்மா இல்லாம வளர்ந்து இருக்காங்க..” என்று மற்றொருத்தி சொல்ல,”ஆனா இந்த குழந்தை குறை பிரசவத்துல பிறந்த குழந்தை..” என்றாள் முதலில் பேசியவள்.
மூன்றாவதாகவும் ஒரு வீடியோ அனுப்பினான்.
“ஏய் சனியனே அழாம இரு! அதுதான் பொறக்கும்போதே உங்க அம்மாவை தின்னுட்டு பிறந்துட்டியே. இப்ப சும்மா சும்மா அழுதா நாங்க என்ன பண்ண முடியும்?” பணிப்பெண் பொறுமை மீறி அந்த பச்சிளம் குழந்தையை பிடித்து கத்தி வைத்து இருந்தாள்.
அதற்கு மேல் மானசாவால் பொறுக்க முடியவில்லை. நேராக அந்த வீட்டிற்கே கிளம்பி விட்டாள்.