சோதிக்காதே சொர்க்கமே 5

5
(6)
இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.
மானசா தீனா வீட்டின் கேட்டை நெருங்கி அந்த கேட்டின் மீது தட்டினாள்.
வாட்ச்மேன் இவளை பார்த்துவிட்டு “நான் மேடம்க்கு கால் பண்றேன்..” என்றார்.
ஆனால் இந்த முறையும் சுலோச்சனா “அவளை உள்ளே விடாதிங்க..” என்றுதான் கடினமான குரலில் சொன்னாள்.
அதைக் கேட்டு வெறுப்பாகி விட்டாள் மானசா.
“நான் அந்த லேடிகிட்ட உடனே பேசணும்..” என்று கோபத்தோடு சொன்னாள்.
வாட்ச்மேன் அதையும் போனில் சொன்னார்.
சுலோச்சனா ஐந்து நிமிடத்தில் இங்கே வந்துவிட்டாள். பட்டன் அழுத்தினால் ஓடும் சக்கர நாற்காலி அது. துணைக்கு ஒரு பெண்ணும் சேர்ந்து வந்திருந்தாள்.
கேட்டு நெருங்கிய சுலோச்சனா “எதுக்குடி என் பேத்தியை நீ பார்க்கணும்? அதுவும் இந்த நைட்ல எதுக்கு இங்கே வந்த?” என்று கத்தினாள்.
இவள் வீடியோவை காட்ட தன் போனை எடுத்தாள். ஆனால் வீடியோ டெலிட் ஆகி இருந்தது. தீனா அவன் அனுப்பிய வீடியோவை உடனுக்குடன் டெலிட் செய்திருக்கிறான். மானசாவுக்கு எரிச்சலாக வந்தது.
தீனா மீது இருந்த கோபத்தை ஓரம் கட்டி விட்டு “உங்க வீட்டு வேலைக்காரி குழந்தையை சனியன்னு திட்டுறா. எனக்கு வீடியோ கூட வந்தது..” என்றாள்.
சுலோச்சனா இவளை நக்கலாக பார்த்தாள். “என் வீட்டு வேலைக்காரி எங்க வீட்டு குழந்தையை சனியன்னு திட்டுவாளா? நீ என்ன கனவு கண்டுட்டு வந்து உளறுறியா? அப்படியே அவ திட்டினாலும் உனக்கு என்ன போச்சி? ஒழுங்கா இங்கிருந்து போயிடு. அதுதான் உனக்கு நல்லது..” என்று விரட்டினாள்.
இவள் கைகள் இரண்டையும் கோர்த்தாள். சுலோச்சனாவுக்கு சமமாக கேட்டின் இந்தப் இந்த பக்கம் தரையோடு மண்டியிட்டவள் “நான் தப்பான எண்ணத்தோடு உங்களை தேடி வரல. அந்த குழந்தையை நீங்க என் கையில தரலன்னாலும் பரவால்ல. அந்த வேலைக்காரியை மட்டும் மாத்திடுங்க ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.
சுலோச்சனா கைகளை கட்டியபடி இவளை அதே எரிச்சலோடுதான் பார்த்தாள். “இதுக்கு மேல இங்கே இருந்தா உனக்கு மரியாதை கிடையாது. ஒழுங்கப் போயிடு. அவ்வளவுதான் சொல்லுவேன்..” என்றாள்.
ஏற்கனவே மகன் ஆடிக் கொண்டிருக்கிறான். கூடவே இவள் சேர்ந்தாள் என்றால் அந்த குழந்தையின் வாழ்க்கைதான் வீணாய் போகும் என்று பயந்தாள் சுலோச்சனா.
இவள் கெஞ்சியதை பொருட்படுத்தாமல் சுலோச்சனா அங்கிருந்து போய் விட்டாள்.
அவள் கண்ணில் இருந்து மறைந்த பிறகு கேட்டின் அருகே இருந்த ஒரு மரத்தின் பக்கத்தில் இருளில் மறைவாய் நின்றிருந்த தீனா வெளியே வந்தான்.
மானசாவின் முன்னால் வந்து நின்றவன் வாட்ச்மேனிடம் கண் சைகை காட்டி தூர போக சொன்னான்.
மானசா கண்ணீரை துடைத்தபடி எழுந்து நின்றாள்.
“இப்பவாவது ஒரு நல்ல முடிவுக்கு வா. உனக்கு குழந்தை மேல உண்மையாவே அக்கறை இருந்தா என்னை கல்யாணம் பண்ணிக்க. இல்லன்னா இந்த குழந்தையை மறந்துட்டு போய் உன் வேலையை பாரு..” என்றான்.
இவளுக்கு சுலோச்சனாவின் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அதனால் இவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிப் போனாள்.
இவள் நம்பியது போலவே சுலோச்சனாவும் வீட்டுக்குள் வந்ததும் “யாருடி அது என் பேத்தியை சனியன்னு சொன்னது?” என்று கேட்டு பணிப்பெண்களிடம் சண்டை போட்டாள்.
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ஒருத்தி மட்டும் “இந்தம்மாதான் அப்படி சொன்னாங்க. நான் அப்ப குழந்தையோட ரூமுக்கு வெளியேதான் தரையை கிளீன் பண்ணிட்டு இருந்தேன்..” என்று அங்கிருந்த மற்றொருத்தியை கை காட்டினாள்.
சுலோச்சனா அந்த பணிப்பெண்ணை முறைத்தாள். “இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த வீட்ல இருந்து கிளம்புற. இல்லன்னா போலீஸ்ல சொல்லி ஜெயில்ல தள்ளிடுவேன்..” என்று மிரட்டினாள்.
அந்த பெண்மணி பயந்து கொண்டே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
ஆனா சுலோச்சனாவுக்கு இப்போதுதான் புது சந்தேகம் வந்தது. இவள் சனியன் என்று சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இவள் இப்படி சொன்னது மானசாவுக்கு எப்படி தெரியும்? குழம்பியவளுக்கு அப்போதைக்கு விடைதான் கிடைக்கவில்லை.
மானசா தன் வீட்டுக்கு வந்து விட்டாள்.
“இந்த ராத்திரி நேரத்துல எங்கடி போன?” என்று அம்மா கேட்டாள்.
இவளுக்கு வாயை திறக்க முடியவில்லை. மௌனமாக தன் அறைக்குள் புகுந்து கட்டிலில் விழுந்தாள்.
அடுத்து இரண்டு நாட்களுக்கு இவள் தன் அறையை விட்டு கூட வெளியே வந்திருக்கவில்லை. சாப்பாட்டை கூட ரூமுக்குள் அமர்ந்துதான் சாப்பிட்டாள்.
தோழியை இழந்த துக்கத்தில் இருக்கிறாள் என்று அம்மாவும் அவ்வப்போது வந்து மகளுக்கு ஆறுதல் சொன்னாள். “ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினாலும் மாண்டோர் மீண்டு வருவதில்லை. இது உண்மை. இந்த உலகமே ஒரு சிறைச்சாலை. அவளுக்கு விடுதலை கிடைச்சிடுச்சி. அதனால அவ போய்ட்டா. இது உனக்கும் சிறைசாலைதான். ஆனா நீ வாழும் வாழ்க்கை இதை ஒரு நந்தவனமா மாத்தி தரும். இருக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா வாழு..” என்று அட்வைஸ் தந்தாள்.
இவளுக்கு அது எதுவும் காதில் ஏறவில்லை.
மூன்றாம் நாள் காலையில் இவளின் போனுக்கு புகைப்படம் ஒன்று வந்தது. அதில் தீனா ஒரு இளம் பெண்ணை அணைத்தபடி நின்றிருந்தான்.
“நாளைக்கு என் வீட்டு பக்கத்துல இருக்கும் வேப்பமரத்து அம்மன் சிலை முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நீ வந்தா உன் கழுத்துல தாலியை கட்டுவேன். இல்லன்னா இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுவேன். இனிமே உன் இஷ்டம்..” என்ற செய்தி அனுப்பி இருந்தான்.
இவளுக்கு அதை பார்த்ததும் கைகள் நடுங்கின. அந்த பெண்ணின் முகத்தை பார்க்கும்போதே தெரிந்தது தலைக்கனம் வானம் அளவிற்கு இருக்கும் என்று.
இவள் அதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனிடமிருந்து இன்னொரு செய்தியும் வந்தது. “என்னை கல்யாணம் பண்ணிக்க போற புது மனைவிக்கு குழந்தையை வளர்க்க பிடிக்காதாம். அதனால குழந்தையை அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பலாம்ன்னு இருக்கோம். ஆனா எந்த ஆசிரமம்ன்னு உன்கிட்ட சொல்ல மாட்டேன்..” என்று அனுப்பி வைத்திருந்தான்.
இவளுக்கு இப்போது இதயமே நடுங்கியது. நிச்சயம் அவன் விளங்கவே மாட்டான் என்று சாபம் விட்டாள்.
இவள் அம்மாவை தேடி ஓடினாள். விஷயத்தை அம்மாவிடமும் சொன்னாள்.
இவன் அதற்குள் அவன் அனுப்பிய பிக்சர்ஸ் மெசேஜ் என்று அனைத்தையும் அழித்து வைத்திருந்தான்.
இவளால் அம்மாவிடம் ஆதாரத்தை காட்ட முடியவில்லை. ஆனால் விஷயத்தை சொல்ல முடிந்தது. அம்மாவும் மகள் பேச்சை நம்பினாள். ஆதாரத்தை கேட்கவில்லை.
ஆனால் அவளுக்கு தன் மகளின் வாழ்க்கைதான் முக்கியமாய் தெரிந்தது
“அது அவனோட குழந்தை. அவன் என்னவோ பண்ணிட்டு போகட்டும். நீ அதை நினைச்சி கவலைப்படாதே. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். அந்த குழந்தைக்கு அதுதான் விதி போல..” என்றாள்.
அம்மாவின் பேச்சு மானசாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது எப்படி ஒரு பச்சை குழந்தையின் வாழ்க்கையை இவ்வளவு எளிதாக அம்மாவால் கைவிட முடிந்தது?
மகளின் முகத்தைப் பார்த்த பூரணி “நீ தேவையில்லாம போய் வம்புல மாட்டிக்காத. கட்டின பொண்டாட்டி இறந்து ஒரு வாரம் கூட ஆகாம இன்னொரு கல்யாணம் பண்ற நாய் அது. உன்னை கல்யாணம் பண்ணினா மட்டும் உத்தமனா இருப்பானா? குழந்தைக்காக நீ இந்த உறவுகள் அடி எடுத்து வச்சாலும் உன் வாழ்க்கை வீணாதான் போகும். புத்திசாலித்தனமா யோசி..” என்று எச்சரித்தாள்.
ஆனால் மறுநாள் விடியும் முன்பே அந்த வேப்பமரத்து அம்மன் சிலை இருக்கும் இடத்திற்கு வந்து விட்டாள் மானசா.
விடிய விடிய எவ்வளவோ யோசித்துப் பார்த்தாள். குழந்தையின் வாழ்க்கைதான் முக்கியம் என்று மனசாட்சி சொன்னது. இந்தத் திருமண முடிவு இவளுக்காக அல்ல குழந்தைக்காக மட்டும்தான். அவன் திருமணத்திற்கு பிறகு எப்படி திரிந்தாலும் இவளுக்கு கவலை இல்லை. அவன் அப்படி வேறு பெண்ணிடம் போய்விட்டால் கூட நிம்மதிதான். இவள் குழந்தையோடு வீட்டை விட்டு நிம்மதியாக வெளியே வந்து விடுவாள்.
அது ஒரு பெரிய வேப்பமரம். அடியில் சின்னதாக அம்மன் சிலை இருந்தது. மரத்தை சுற்றிலும் கிளைகளில் மஞ்சள் கயிறுகளும் தொட்டில்களும் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. கொஞ்சம் தள்ளி தனது காரை நிறுத்தி வைத்திருந்தான் தீனா.
மானசா ஆட்டோவில் வந்து இறங்கியதும் இவனும் காரை விட்டு இறங்கினான். அவளை பார்க்கும்போதே இவனுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. அவனின் வானத்தில் பட்டாசுகள் வெடித்தன.
எளிமையான ஒரு காட்டன் சேலையை கட்டி அதை விட எளிமையான அலங்காரத்தில் வந்திருந்தாள் அவள்.
பட்டு சேலை கட்டி தலை நிறைய பூ வைத்து நகைகளை வரி வரியாக அணிந்து வருவாள் என்று இவனும் எதிர்பார்க்கவில்லை.
இவள் வந்ததும் முன்னால் வந்து நின்றான். அவன் அனுப்பிய புகைப்படத்தில் அவனை கட்டிப்பிடித்தபடி நின்றிருந்த பெண் காருக்குள் அமர்ந்திருந்தாள. பட்டு சேலை கட்டி பதுமை போல் இருந்தாள்.
இவன் தனது பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்தான்.
“உனக்கு இந்த கல்யாணத்துல முழு இஷ்டமா இருந்தா மட்டும் தாலியை கட்டுறேன்..” என்றான்.
“தாலியை கட்டிக்க. ஆனா உனக்கு பிடிச்ச பெண்ணோடு இருந்துக்க. என்னை விட்டுட்டு. நான் இந்த குழந்தைக்காக மட்டும்தான் கல்யாணம் பண்றேன்..” என்றாள் மானசா.
தாலியை பிடித்திருந்த இவனின் கரம் பின்னால் நகர்ந்தது.
முடியாது என்று தலையாட்டினான். “எனக்கு நீ முழுசா தேவை. உடல் உயிர் ஆன்மா மொத்ததையும் நீ எனக்கே கொடுக்கணும். அது உனக்கு இஷ்டமா இருந்தா மட்டும் நான் தாலி கட்டுறேன். இல்லன்னா என்னோட டைமை வேஸ்ட் பண்ணாத..” என்றவன் காரின் புறம் திரும்பி “பேபி..” என்று அழைத்தான்.
அந்தப் பெண்ணும் காரிலிருந்து இறங்கினாள்.
மானசா ஒரு நொடி யோசித்தாள். ப்ரீத்தியின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மனம் சொன்னது.
“அந்த பொண்ணு வேண்டாம்..” என்று இவனிடம் அவசரமாக சொன்னாள்.
மெல்ல திரும்பி பார்த்தான். இவளின் முகத்தை ஆராய்ந்தான்.
“நான் உன் கழுத்துல தாலியை கட்டிக்கலாமா? என் வீட்டுக்கு வந்த பிறகு நான் உன்னை நெருங்கினா நீ முடியாதுன்னு சொல்லி ஓடி விளையாட மாட்டியே?” என்று சந்தேகம் கேட்டான்.
கை விரல்களை இறுக்கியபடி கண்களை இறுக்கமாக மூடினாள். “என்னை என்ன வேணா பண்ணிக்க. நான் எதுக்கும் மறுக்க சொல்ல மாட்டேன். என்கிட்ட அந்த குழந்தையை மட்டும் கொடுத்துடு ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.
இவன் வெற்றி புன்னகையோடு கார் டிரைவரை பார்த்தான். டிரைவர் காரின் வெளிச்சத்தை இவர்களின் புறம் காட்டினார்.
காருக்குள் இருந்த மற்றொருவன் இவர்களின் திருமணத்தை வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தான்.
தீனா மானசாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
காரில் இருந்து இறங்கிய பெண் குங்குமத்தையும் மெட்டியையும் கொண்டு வந்து தீனாவிடம் கொடுத்தாள்.
மானசாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான் அவன்.
குனிந்து காலில் மெட்டியும் அணிவித்தான்.‌ இவள் அந்த அம்மன் சிலையை திரும்பிப் பார்த்தாள்.
‘ஏன் பெண்களின் நிலை மட்டும் இப்படி இருக்கிறது? ஒரு ஆண் நினைத்தால் மனைவி இறந்த மறு வாரமே திருமணம் செய்து கொள்கிறான். இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் துரோகத்தை செய்கிறான். மனைவியையே தெய்வமாக நினைத்து வாழும் எத்தனையோ நல்ல மனிதர்கள் வாழும் உலகில் இப்படிப்பட்ட ஒருவனை ஏன் படைத்தாய் தெய்வமே?’ என்று வெறுப்போடு கேட்டாள்.
மெட்டியை அணிவித்துவிட்டு எழுந்தவன் “வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்டான்.
இவளுக்கு ப்ரீத்தியின் முகம் கண்முன் வந்தது. முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
உயிர்த்தோழிக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்து விட்டோம்! இதற்காகதான் பிறந்தோமா? என்று அவளின் மனசாட்சி கேட்டது.
எதிரில் இருந்தவன் அந்த அறை இருளில் இவளை அணைத்தான். “இட்ஸ் ஓகே அழாத..” என்று சொன்னான்.
அவள் விலக்கி தள்ள முயல, “இந்த மாதிரி தள்ளினா அப்புறம் நான் குழந்தையை உன்கிட்ட தரமாட்டேன்..” என்று அவளின் காதோடு கிசுகிசுப்பாக மிரட்டினான் அவன்.
தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!