சீதளம் 32
அந்தி சாயும் வேலையில் ஆதவன் மங்கிக் கொண்டு செல்ல, பட்சிகள் தங்கள் உறக்கத்தைத் தேட, மங்கைகள் தன் மன்னவனைத் தேட, வெண்மதியானவள் வெளிச்சம் கூடி வீசி விண்ணில் நகர்வலம் வந்து கொண்டிருந்தாள்.
வேந்தனுடைய வீட்டில் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர் வேந்தன் மேகாவை தவிர.
அப்பொழுது செல்வரத்தினமோ தன் அன்னையிடமும் மனைவியிடமும் மகளின் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
“ அம்மா நம்ம அறிவுக்கு ஒரு நல்ல சம்மந்தம் வந்திருக்கு அதை பேசி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்” என்று அவர்களைப் பற்றிய தகவலை சொல்ல அன்னலட்சுமியோ,
“ ஏங்க அவ படிப்பு முடிஞ்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணலாமே. ஏன் அதுக்குள்ள அவசரப்படுறீங்க” என்று கேட்டு வைக்க அதற்கு செல்வரத்தினமோ,
“ எனக்கு மட்டும் அக்கறை இல்லையா அன்னம் அவங்களும் பக்கத்து ஊருதான் அதுவும் போக என் கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன் தான் அவனோட பையனுக்கு தான் நம்மளோட பொண்ணு கேட்டா எதிர்ச்சியா ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன ஒரு இடத்தில சந்திச்சேன்.
அப்போ ரெண்டு பேர் குடும்பத்தை பத்தி விசாரிக்கும் போது அவனோட பையனுக்கு நம்ம பொண்ண கேட்டா நானும் சரின்னு சொல்லிட்டேன். நம்ம பொண்ணு இப்போ இங்க இருந்து படிக்கிறா கல்யாணத்துக்கு அப்புறம் அங்கிருந்து படிக்க போறா. நான் அதை சொல்லிட்டேன்.
அவங்களுக்கும் அது ஒரு பிரச்சனையும் இல்ல எங்க வீட்டு மருமக படிச்சா அது எங்களுக்கு தானே பெருமை அப்படின்னு நல்லவிதமாக பேசினாங்க அதனால தான் எனக்கும் இந்த சம்மந்தத்தை விட மனசு இல்ல” என்று சொல்ல இவ்வளவு நேரமும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அறிவழகியோ திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் என்ன சொல்வது என்று தெரியாமல்.
படிப்பை சாக்கு சொல்லி கல்யாணத்தை தள்ளி போடலாம் என்று நினைத்தாள்.
அப்பா அதற்கும் ஒரு முடிவு சொல்ல இங்கு இவளுக்கோ உள்ளே புளியை கரைத்துக் கொண்டிருந்தது.
தான் தப்பிக்க வாய்ப்பே இல்லையா என்று தன்னுடைய அப்பத்தாவை சுரண்டிய அறிவழகியோ,
“ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் அப்பத்தா அப்பாகிட்ட நீயாவது சொல்லு” என்று அப்பத்தாவின் காதில் கிசுகிசுக்க அப்பத்தாவோ,
“ இப்ப என்னத்துக்கு நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற.
ஏழு கழுதை வயசாகுது கல்யாணத்தை பண்ணி புள்ள குட்டிய பெத்து போடாம இன்னும் இங்கேயே இருக்கலாம்னு நினைக்கிறாயா?” என்று அவர் ஒரு பங்கிற்கு சொல்ல, இங்கு அறிவழகிக்கோ,
“ஐயோ இந்த அப்பத்தா நமக்கு ஹெல்ப் பண்ணம்னு நினைச்சா இது அது மகனுக்கு ஒத்து ஊதுதே. போச்சு சோலி முடிஞ்சு அறிவு உன் தலை உருளை போகுது” என்று தலையில் அடிக்காதவாறு புலம்பி கொண்டு இருந்தாள்.
அப்பொழுது அவர்களுடைய வீட்டு வாயிலில் நிழலாட சற்று தலையை தூக்கி யாரென்று பார்த்த அறிவழகிக்கோ அவர்களை யார் என்று அடையாளம் தெரியவில்லை.
“ அப்பத்தா யாரோ வந்திருக்காங்க அங்க பாருங்க” என்று அப்பத்தாவிடம் கூற அப்பத்தாவோ வாசலை நோக்க, அங்கு நிற்பவர்களை கண்டு சற்று அதிர்ந்து போனார்.
உடனே தன் மகனிடம் திரும்பியவர்,
“ ஐயா யார் வந்திருக்காங்க பாரு” என்று செல்வரத்தினத்திடம் கூறினார்.
அவரும் வாசலை பார்த்தவர் வந்திருப்பவர்களை இங்கு அவர் எதிர்பார்க்கவில்லை.
அந்த அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார்.
கூடவே அன்னலட்சுமியும் எழுந்து நிற்க. வாசலில் நின்ற மேகாவின் தாயோ சற்று தயக்கமாகவே தன் அருகில் நிற்கும் கணவனை பார்த்துவிட்டு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“ வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு உள்ள கூப்பிட மாட்டீங்களா” என்று கேட்க.
அதில் திகைப்பில் ஆழ்ந்திருந்தவர்கள் சட்டென விழித்துக் கொண்டார்கள்.
பின்பு செல்வரத்தினமே அவர்கள் இருவரையும் பார்த்து,
“ வாங்க வாங்க உள்ள வாங்க” என்று இன் முகமாக அழைத்தார்.
அதைக் கேட்டு மேகாவின் அன்னையோ புன்னகை மலர உள்ளே வர, சத்யராஜ் மிகுந்த தயக்கத்தோடு தலை குனிந்தவாறே உள்ளே வந்தார்.
அவர்கள் இருவரையும் சோபாவில் அமரச் சொல்லியவர் தாங்களும் அமர்ந்தார்கள்.
பின்பு செல்வரத்தினம் பேச ஆரம்பித்தார்.
“ உங்களை இங்கே நாங்கள் எதிர்பார்க்கல அதனாலதான் என்ன சொல்றதுன்னு தெரியாம திகைச்சுப் போய் நினைட்டோம் மன்னிச்சிடுங்க” என்று சொன்னார்.
அதைக் கேட்டதும் சத்யராஜுக்கோ மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருந்தது.
வீட்டிற்கு வந்தவர்களை வாங்க என்று கூப்பிடாததற்கு கூட தங்களிடம் மன்னிப்பை யாசிக்கும் இவர்களையா அன்று தன் வீடு தேடி வந்து தன் பெண்ணை கேட்டதற்கு அவ்வளவு அசிங்கப்படுத்தி அனுப்பினோம் என்று நினைத்து மிகவும் வருந்தினார்.
உடனே எழுந்த சத்தியராஜ், செல்வரத்தினத்தின் காலில் விழப்போக, பதறி எழுந்த செல்வரத்தினமோ அவருடைய தோள்பட்டையை பிடித்து நிறுத்தியவர்,
“என்ன பண்றிங்க சம்பந்தி” என்று அதிர்ச்சியாக கேட்டார்.
“ இல்ல நான் பண்ண தப்புக்கு உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா கூட சரியா இருக்குமான்னு எனக்கு தெரியல.
உங்களை போய் நான் அன்னைக்கு அவ்வளவு அசிங்கப்படுத்திட்டேன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. அதை எப்படி போக்கிறதுனு எனக்கு தெரியல.
உங்க எல்லார்கிட்டயும் கையெடுத்து கும்பிடுறேன்.
தயவு செஞ்சு நீங்க எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.
பணம் இருக்கின்ற திமிருல நல்ல மனுஷங்கன்னு கூட தெரியாம ரொம்ப அசிங்கமா நடந்துக்கிட்டேன்.
ஆனா நீங்க எவ்வளவு பெருந்தன்மையா இருக்கீங்க.
அன்னைக்கு அசிங்கப்படுத்தினதை கூட மனசுல வச்சுக்காம என் பொண்ண இங்க ராணி மாதிரி பார்த்துக்கிறிங்க.
வீடு தேடி வந்தவங்களை ஒரு ரெண்டு நிமிஷம் திகைச்சி போய் நின்னு அவங்கள வரவேற்க முடியவில்லைன்னு மனசு வருத்தப்பட்டு மன்னிப்பு கேக்குறீங்க.
இதெல்லாம் நினைக்கும் போது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று உண்மையான வருத்தத்துடன் அவர் கூறினார்.
அவருடைய கண்கள் கூட சிறிது கலங்கவே அதை பார்த்த செல்வரத்தினமோ,
“ அட என்ன சம்மந்தி பழசு எல்லாம் இன்னும் நினைச்சுட்டு இருக்கீங்களா.
நடந்தது நடந்து போச்சு அதை எல்லாம் எப்பவோ மறந்துட்டோம் நீங்களும் மறந்துடுங்க.
நம்ம உறவு அதோட முடிஞ்சு போறது கிடையாது.
இன்னும் காலத்துக்கும் நெலச்சி இருக்க போறது.
அதனால பழசை மறந்துடுங்க இனி நம்ம சந்தோஷமா இருப்போம்” என்றார்.
செல்வரத்தினத்தின் இக்கூற்றில் சற்று நிம்மதி அடைந்தவர்,
“எங்க மேகாவம் காணோம் மாப்பிள்ளையும் காணோம்” என்று சத்யராஜ் சுற்றிமூற்றி பார்த்து கேட்டார்.
அதற்கு அப்பத்தாவோ,
“ அவங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்காங்க வர்ற நேரம் தான் இப்ப வந்துருவாங்க”
என்று சொல்லி முடிக்கவில்லை இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தார்கள்.
மேகாவோ அங்கு தன்னுடைய தாய் தந்தையை கண்டு ஆனந்த அதிர்ச்சியில் நின்று விட, வேந்தனுக்கோ சத்யராஜை அங்கு பார்த்ததும் மீண்டும் கோபம் துளிர்விட்டது.
“ இவங்கள யாரு வீட்டுக்குள்ள விட்டது” என்றவாறு உள்ளே வந்த வேந்தன் சத்யராஜை நெருங்கும் முன் செல்வரத்தினம் மகனை தடுத்தவர்,
“ வேந்தா அப்பா சொல்றத கேளு கொஞ்சம் அமைதியாக இரு” என்று அவனை தடுத்து நிறுத்த, அவனோ அவருக்கு அடங்க மறுத்து திமிறி கொண்டு நின்றான்.
“ அப்பா நீங்க என்ன வேணா சொல்லுங்க நான் அப்புறமா கேட்கிறேன் முதல் இந்த ஆள வீட்டை விட்டு அனுப்புங்க” என்று அவன் பிடித்தபிடியில் நின்றான்.
சத்யராஜின் முகமோ நொடியில் வாடியது.
அதை கண்டு கொண்ட செல்வரத்தினமோ மகனிடம்,
“ இங்க பாரு வேந்தா அவர் செஞ்சது தப்புதான் இல்லைன்னு நான் சொல்லல. ஆனா நடந்ததற்காக வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பது தான் மனுஷங்க.
நானும் மனுஷனா இருக்க தான் விரும்புறேன். நீயும் அப்படித்தான் இருக்கணும் அப்படி தான் வளர்த்து இருக்கிறதா நினைக்கிறேன்” என்று சொல்ல அவரை ஏறெடுத்து பார்த்தவனும் அதன் பிறகு ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆனால் அவனுடைய கோபம் மட்டும் கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை.
கைமுட்டிகளை இறுக்கிக் கொண்டு அமைதியாக நின்றான்.
அதன் பிறகு தன்னருகில் மகனை அமர்த்தியவர் பொறுமையாக அனைத்தையும் எடுத்து சொல்ல அவனுக்கோ அதில் முழுமையான நம்பிக்கை இல்லை என்றாலும் தந்தைக்காக அமைதி காத்தான்.
ஆனால் மேகாவுக்கோ தன்னுடைய தகப்பனை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.
தான் சொல்லிய ஒற்றை சொல்லிற்காகவும் தன்னுடைய அன்பிற்காகவும் தனது தந்தை இங்கு வந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாரா என்பது தெரிந்தவுடன் அவர் மேல் இருந்த கோபம் அவளுக்கு முழுமையாக வற்றி போனது.
ஓடி சென்று தன்னுடைய தகப்பனை அணைத்துக் கொண்டாள் மேகா.
அவரும் இத்தனை நாள் தன்னுடைய மகளின் பார முகத்தில் மிகவும் வருத்தப்பட்டவரோ இன்று அவளுடைய அணைப்பில் அவரோ நெகழ்ந்து போனவர் கண்களும் அவரையும் மீறி கலங்குகின.
அதுவே அவர் தன்னுடைய ஒற்றை மகளான மேகாவின் மேல் வைத்துள்ள பாசத்தை அனைவருக்கும் எடுத்துக்காட்டியது.