சீதளம் 37
“டேய் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நீ ரொம்ப ஓவரா பேசிகிட்டு இருக்க. தப்பு எங்க மேல இருக்குங்கறதுனால உன்னை சும்மா விடறேன் மரியாதையா இங்கிருந்து ஓடிப் போயிடு” என்று வேந்தன் கத்த,
அதைக் கேட்ட கபிலனின் தந்தையோ செல்வரத்தினத்திடம்,
“ என்ன செல்வம் இதை சத்தியமா உன்கிட்ட இருந்து நான் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கல. உன் பொண்ணு தான் இப்படி எங்களை அசிங்கப்படுத்திட்டு போயிட்டான்னு பார்த்தா உன் பையன் என்னடான்னா என் பையன ரொம்ப அசிங்கப்படுத்துறான். நீ என்னுடைய நண்பன் அதனால உன் பொண்ணை கேட்டு வந்ததுக்கு எங்களை இப்படி அசிங்கப்படுத்துற” என்று அவர் ஒரு பக்கம் சொல்ல.
செல்வரத்தினத்திற்கோ தன்னுடைய மகள் இவ்வாறு செய்து விட்டாளே என்ற நினைப்பிலிருந்து அவர் வெளிவராமல் இருக்க,
இவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
உடனே வேந்தனோ அவர் முன் வந்தவன் கையெடுத்து கும்பிட்டு,
“ இங்க பாருங்க தப்பு நடந்து போச்சு இது உங்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமோ அதே மாதிரி தான் எங்களுக்கும்.
நடந்த தப்புக்கு எங்க எல்லார் சார்பாகவும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.
உங்க பிள்ளைய கூப்பிட்டு இப்பவே இங்க இருந்து போயிருங்க.
இல்லன்னா அவன் பேசுற பேச்சுக்கு நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று சொன்னான்.
கபிலனோ,
“ என்னடா பெரிய இவன் மாதிரி மன்னிப்பு கேட்டா எல்லாம் சரி ஆயிடுமா. எவ்வளவு தைரியம் இருந்தா நீ என்னையவே அடிக்க வருவ இந்த கபிலன பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியல நான் யாருன்னு உனக்கு காட்றேன் டா” என்று அவன் சொல்ல, தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் நின்ற வேந்தனோ பற்களை கடித்துக்கொண்டு,
“ இங்க பாருங்க இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இங்க நின்னா கூட உங்க பையன் உயிரோடு இருப்பானா இல்லையா என்பதற்கு என்னால உத்தரவாதம் சொல்ல முடியாது.
தயவு செஞ்சு இப்பவே இந்த இடத்தை விட்டு போயிருங்க” என்று அவன் சொல்ல,
கபிலனுடைய தந்தையோ செல்வரத்தினத்திடம்,
“ ரொம்ப சந்தோஷம் செல்வம் மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு ஆனா இத நான் என்னைக்குமே மறக்க மாட்டேன் நாங்க போறோம்” என்றவர் தன்னுடைய மகனையும் மனைவியும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
***
வேந்தன் உடைய வீட்டில் கலைந்த கோலத்தில் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
யார் யாருக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று கூட தெரியாமல் ஒவ்வொருவரும் அமர்ந்திருக்க, அப்பொழுது வேந்தனோ மேகாவை அழைத்தவன் அனைவரின் முன்னிலையிலும் பளார் என அறைந்தான்.
அவனுடைய இந்த செயலை எதிர்பார்க்காத மற்றவர்களோ அதிர்ந்து பார்க்க அப்பத்தாவோ,
“ ஐயா வேந்தா என்ன காரியம் செய்ற எதுக்காக இந்த பிள்ளையை அடிக்கிற” என்று கேட்க அதற்கு வேந்தனோ,
“ நீங்கள் சும்மா இருங்க அப்பத்தா அறிவு இங்க இருந்து ஓடி போனதுக்கு துணை போனது வேற யாரும் இல்ல இதோ இங்க நிக்கிறாளே இவதான்” என்று அவன் சொல்ல,
மற்ற மூவரின் அதிர்ந்த பார்வையோ மேகாவின் மேல் விழுந்தன.
“ ஆமா அப்பத்தா இதோ இப்படி கல்லு மாதிரி நிக்கிறாளே இவ தான் காரணம். நேத்து ராத்திரி என்கிட்ட வந்து நம்ம வீராவுக்கு ஏதோ ஆகிட்டுன்னு வீட்ல இருந்து போன் பண்ணதா என்கிட்ட வந்து சொன்னா.
நானும் இவளோட பேச்சை நம்பி அங்க போயிட்டேன். அதுக்கப்புறம் இங்க இவ அவ இங்க இருந்து ஓடி போறதுக்கு உதவி செஞ்சிருக்கா அப்படித்தானடி சொல்லு இதான நடந்தது” என்று அவளை பிடித்து உழுக்கினான் வேந்தன்.
“அம்மாடி மேகா இவன் சொல்றதெல்லாம் உண்மையா” என்று அப்பத்தா கேட்க அவளோ கண்ணீரை மட்டுமே பதில் அளித்தாள்.
“ இவள் சொல்ல மாட்டா ஏன்னா அவ நினைச்சது தான் நடந்திருச்சு” என்று வேந்தன் சொல்ல மேகாவோ புரியாமல் அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“ என்ன அப்படி பார்க்கிற எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சியா உங்க அப்பாவ நான் எப்படி அவமானப்படுத்தினேனோ அதே மாதிரி என் குடும்பமும் அவமானப்படணும்னு நீ நெனச்ச இல்ல. அதுக்கான வாய்ப்பு சரியா கிடைக்கவும் அதை சரியா பயன்படுத்திக்கிட்டல்ல நீ” என்று அவன் ஆக்ரோஷமாக கத்தினான்.
மேகாவோ இல்லை என்பது போல இடவலமாக தலையை அசைத்தாள்.
“ போதும் நிறுத்துடி உன்னோட நடிப்ப நீ இங்க வந்த முதல் நாள் நீ சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அதே மாதிரி இப்படி செஞ்சிட்டல்ல நீ”
“ ஐயோ இல்லங்க நான் அப்படி எல்லாம் எதுவும் நினைக்கல அன்னைக்கு ஏதோ நான் உங்க மேல இருந்த கோவத்துல தான் சொன்னேனே தவிர மனுசார நான் அப்படி நினைக்கவே இல்லைங்க” என்றாள்.
“உண்மையா அறிவு ஒருத்தன விரும்புறா எனக்கு அது நேத்து ராத்திரி தான் தெரியும்.
நேத்து ராத்திரி எல்லா வேலையும் முடிச்சுட்டு அவ கூட வந்து படுக்கலாம்னு ரூமுக்குள்ள வரும்போதுதான் அவ பால்கனியில இருந்து குதிக்கப் போனா. அப்போ நான் தான் அவளை தடுத்தேன்”
“ அறிவு என்ன காரியம் செஞ்சுகிட்டு இருக்க நீ” என்று மேகா அவளிடம் கேட்க அவளோ அவளை கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
“ அண்ணி எனக்கு வேற வழி தெரியல”
“ என்ன சொல்ற நீ.
புரியிற மாதிரி சொல்லு” என்று அவளை தன்னிடம் இருந்து பிரித்து மேகா கேட்க.
அவளிடம் தான் காதலிக்கும் விஷயத்தை கூறினாள் அறிவழகி.
அதைக் கேட்ட மேகாவோ சற்று திடுக்கிட்டாலும் அவளிடம்,
“ சரி அதை முதல்லையே சொல்லி இருக்கலாமே அறிவு.
நீ முதல்லையே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காதே.
இப்போ இந்த கடைசி நேரத்துல நீ இங்க இருந்து ஓடிப் போனா இந்த ஊர் காரங்க நம்ம குடும்பத்தை என்ன நினைப்பாங்க. மாமாவோட நிலைமையை யோசிச்சு பார்த்தியா நீ. எவ்வளவு பெரிய மனுஷன் அவரு.
சுத்தி இருக்கிற ஊர்ல எந்த ஒரு நல்ல விசேஷத்திற்கும் முதல் ஆளா அவரைத்தான் கூப்பிடுவாங்க. அவரோட பொண்ணு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டா இனி மாமாவுக்கு அந்த மரியாதை இருக்குமா” என்று அவள் கேட்க,
தலை குனிந்த அறிவழகையோ,
“ எனக்கு புரியுது அண்ணி ஆனா என்னை என்ன பண்ண சொல்றீங்க. என்னால அவரை மறக்க முடியல இத நான் வீட்ல சொன்னா கண்டிப்பா யாருமே சம்மதிக்க மாட்டாங்க. நான் அந்த மாப்பிள்ளை கிட்ட கூட சொன்னேன் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு. ஆனா அவரு அதை ஒரு விஷயமாக கூட எடுக்கல அதான் அண்ணி எனக்கு வேற வழி தெரியல. சாகலாம்னு நெனச்சா கூட என்னால சாக முடியல்லை அண்ணி.
நான் அவர் கூட நூறு வருஷம் வாழனும் அது மட்டும் தான் என் மனசுல இருக்கு” என்று அவள் கண்ணீர் வலிய கூற, மேகாவும் அவளுடைய காதலின் ஆழத்தை புரிந்து கொண்டவள்,
“ சரி அறிவு இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல அவரு யாராக இருந்தாலும் சரி நீ அவரை வர சொல்லு நாளைக்கு முகூர்த்தத்தில உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கிற மாதிரி செய்யலாம் நான் வீட்டில எல்லார்கிட்டயும் பேசுறேன்” என்று மேகா சொல்ல அறிவழகியோ,
“ இல்ல வேண்டாம் அண்ணி கண்டிப்பா அப்பாவும் அண்ணனும் ஒத்துக்கவே மாட்டாங்க ஏன்னா நான் காதலிக்கிற அவரை அவங்களுக்கு பிடிக்காது. என்ன வெட்டி போட்டாலும் போடுவாங்களே தவிர அவருக்கு ஒரு நாளும் என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டாங்க” என்றாள் அவள்.
“ என்ன அறிவு இப்படி சொல்ற. இதுக்கு நீ ஓடிப் போறது மட்டும்தான் தீர்வுன்னு நினைக்கிறாயா? சரி அப்படி நீ யாரைத்தான் லவ் பண்ற” என்று அவள் கேட்க.
அவள் சொன்ன பெயரைக் கேட்டதும் மேகாவுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“ என்ன அறிவு சொல்ற அவரா எனக்கு என்ன சொல்றதுனே தெரியல” என்று மேகா சொல்ல.
தன்னுடைய இத்தனை வருட காதல் கதையை அவளிடம் சொன்னாள் அறிவழகி.
பின்பு மேகாவோ ஒரு முடிவுக்கு வந்தாள்.