சீதளம் -49
“என்னால முடியாது என்னை மன்னிச்சிருங்க மாமா” என்றவள் அவருடைய கையை உதறிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள்.
சென்பகபாண்டியனுக்கோ மிகுந்த அவமானமாக போய்விட்டது.
அவர் கோபமாக அங்கிருந்து நகர போக வேந்தனோ அவரை கை நீட்டி தடுத்தவன்,
“ எங்க ஓடுறீங்க நீங்க நினைச்சது நடக்கலன்னு ரொம்ப கஷ்டமா இருக்கா கல்யாண பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அந்த பொண்ண பெத்தவங்கள விட ரொம்ப அக்கறை எடுத்துகிட்ட நீங்க, இப்படி கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி போனா என்ன அர்த்தம். கொஞ்ச நேரம் இருந்து கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் போங்க.
அதுவும் எங்க அப்பா தாலி எடுத்துக் கொடுத்து நடக்க போற இந்த கல்யாணத்தை பார்த்துட்டு நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்புங்க” என்றவன்,
“ அப்பா தாலி எடுத்து கொடுங்கப்பா” என்று சொன்னான்.
மகனுடைய கூற்றை ஆமோதிப்பது போல அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த செல்வரத்தினமோ ஐயர் கையில் வைத்திருந்த தாலியை வாங்கியவர் தன்னுடைய குலதெய்வத்தைக் வேண்டிக் கொண்டு மாப்பிள்ளையின் கையில் கொடுக்க புன்னகை முகமாக வாங்கிய ராம் அதை பூங்கொடியின் கழுத்தில் கட்டி தன்னுடைய சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் அவன்.
அந்த புது மணமக்களை வந்திருந்த அனைவரும் சந்தோஷமாக ஆசீர்வதிக்க இங்கு சென்பகபாண்டியன் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அதே கோபத்தோடு வீட்டுக்கு வந்தவர்,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் அவ்வளவு சொல்லியும் என் பேச்சைக் கேட்காம அத்தனை பேர் முன்னாடியும் என்ன அசிங்கப்படுத்தி இருப்ப”
என்ற சென்பகபாண்டியன் தன்னுடைய வீட்டு ஹாலில் அறிவழகியை நிற்க வைத்து கையில் வைத்திருந்த சாட்டையால் அவளை அடி அடி என்று அடித்துவிட்டார்.
“ உன் அப்பன் அங்க அசிங்கப்படக்கூடாதுன்னு என்ன அசிங்கப்படுத்திட்டல்ல நல்லா அனுபவி வாங்குற இந்த ஒவ்வொரு சாட்டை அடியும் உனக்கு மறக்கவே கூடாது. இனி நான் சொல்ற எந்த பேச்சையும் மறுக்கணும்னு நீ நினைக்கவே கூடாது” என்றவர் தன்னுடைய அடியை நிறுத்தவில்லை.
அவளுடைய பூ போன்ற மேனியோ அவர் அடித்த அடியில் வாருவாராக சிவந்து போய் இருந்தன.
பக்கத்தில் அவருடைய மனைவி சீத்தாவோ தன்னுடைய புடவை முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது.
அவரால் தன் கணவரை எதிர்க்க தைரியம் இல்லாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.
கதிரவனும் வீட்டில் இருக்கவில்லை. அவள் அங்கு திருமண மண்டபத்தில் தன்னுடைய தந்தையை அவமானப்படுத்தி விட்டாள் என்று நினைத்தவனுக்கோ அவள் மேல் அவனுடைய தந்தை போல் கோபம் இருந்தது.
அதனால் அங்கிருந்து கிளம்பி போனவன் தான் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
இரவு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கதிரவன் தன்னுடைய புது மனைவியை தேட அவளோ அங்கு எங்கும் காட்சி அளிக்கவில்லை.
வீடு எங்கும் அவன் தேட அவனுடைய அன்னை எதிர்பட்டார்.
உடனே தன் அன்னையிடம் அவளைப் பற்றி விசாரித்தான் கதிரவன்.
“ அம்மா அவளை எங்க” என்று சற்று கோபமான குரலிலே கேட்க.
அவரோ இவனும் அவனுடைய பங்கிற்கு அவளை ஏதேனும் செய்து விடுவானோ என்று பயந்தவர்,
“ அவ எங்கேன்னு எனக்கு தெரியாது” என்று சொன்னார்.
“ அம்மா என்ன பேசுறீங்க இந்த வீட்ல தானே இருக்கீங்க அவ எங்க இருக்கா? எங்க போறான்னு கூட உங்களால பார்க்க முடியாதா. கையில மட்டும் மாட்டட்டும் அவளுக்கு இருக்கு.
எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட அப்பாவையே அசிங்கப்படுத்துவா” என்று அவன் வாய்க்குள் முனங்க அது அவனுடைய அன்னையின் செவிகளுக்கு தெளிவாகவே கேட்டது.
கண்கள் கலங்க அவனை ஏறிட்டு பார்த்தவர்,
“ ஏன்டா உங்க அப்பா தான் இப்படி தப்பு பண்றாருன்னா நீயும் ஏன்டா அவரை மாதிரியே தப்பு பண்ற. அந்த புள்ளையை இப்படி பாடா படுத்துறதுக்கு அப்பாவும் பிள்ளையும் நல்லா அனுபவிப்பீங்க டா. பாவம் நல்ல பெரிய இடத்து பொண்ணு பாலும் நெய்யுமா சாப்பிட்டு வளர்ந்த பிள்ளைய நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்படுறீங்க”
“ அப்படி என்ன அவளை கஷ்டப்படுத்திட்டாங்க கொலையா பண்ணிட்டாங்க” என்று கத்தினான் கதிரவன்.
“ ஆமாடா கொலைதான் அது மட்டும் தான் நீயும் உங்க அப்பனும் இன்னும் செய்யல. ஆனா இப்ப நடந்ததுக்கு அந்த பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சி நான் கும்பிடுற அந்த கடவுள் உங்க ரெண்டு பேரையும் மன்னிக்கவே மாட்டார்”
“ அம்மா சும்மா ஏதாவது உளராம அவ எங்க இருக்கான்னு சொல்லுங்க”
“ ஆமாடா நான் நான் உளரன்தான் உங்க அப்பா இன்னைக்கு அந்த புள்ளைய அடிச்ச அடிக்கி அந்த புள்ள என்ன நிலைமையில் இருக்கான்னு தெரியுமா. சோறு தண்ணி கூட பல்லுல படாம அரை மயக்கத்தில கிடக்கா டா.
என்னால கண் கொண்டு பாக்க முடியல இங்க பாரு அவளுக்கு தான் மருந்து எடுத்து போய்கிட்டு இருக்கேன் தயவு செஞ்சு நீயும் உன் பங்குக்கு ஏதாவது செய்யாதே உன் கால்ல வேணா”
என்று தான் பெற்ற மகன் என்று கூட பாராமல் அவனுடைய காலில் விழப்போன சீத்தாவை, சட்டென பதறியவன் அவரை தடுத்து நிறுத்தினான்.
“ அம்மா என்ன காரியம் பண்றீங்க அவ இப்ப எங்க இருக்கா என்ன ஆச்சு” என்று கேட்க.
சென்பகபாண்டியன் அவளை சாட்டையால் அடித்ததை கூறினார் சீத்தா.
அதைக் கேட்டவனுக்கோ ஒரு நொடி கைகள் நடுங்கியது.
தன்னுடைய கண்களை மூடி நிதானத்திற்கு வந்தவன்,
“ அம்மா இந்த மருந்தை என்கிட்ட கொடுங்க நான் பார்த்துக்குறேன் அவ எங்க இருக்கா” என்று சாந்தமான குரலில் கேட்டான்.
“ அவள உன் ரூமுக்கு பக்கத்து ரூம்ல தான் படுக்க வைத்திருக்கிறேன்” என்றார்.
“ சரி மா நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்” என்று கதிர் சொல்ல,
“ கதிர் அந்த புள்ள பாவம்டா உன்னை காதலிச்சா ஒரே காரணத்துக்காக உங்க அப்பா பண்ற இந்த கொடுமை எல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கு நீ கொஞ்சமாவது அந்த புள்ளையோட மனசு புரிஞ்சுக்கோ டா தயவு செஞ்சு அவளை இங்கிருந்து நீ கூட்டிட்டு போ உன் அப்பா நல்லவர் இல்லடா உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது. அந்த ஆளுக்கு பலி வெறி புடிச்சு ஆட்டுதுடா எவ்வளவு சொன்னாலும் திருந்தாம இருக்காரு. செல்வரத்தினம் அண்ணா ரொம்ப நல்ல மனுஷன்.
யாரா இருந்தாலும் மரியாதை அவங்களோட நல்ல குணத்தால தான் வரும். உன் அப்பா அதை அதிகாரத்தால வாங்க நினைக்கிறார் எப்படி நடக்கும். இதை புரிஞ்சுக்காத வரைக்கும் உங்க அப்பா திருந்த மாட்டார்.
நீயும் அவர மாதிரி இருந்து உன் வாழ்க்கையை கெடுத்துக்காதடா.
அந்த புள்ள உன்ன தேடி வந்த தேவதைடா அவளை இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்த விடாதே இதுக்கு பிறகு ஆவது உன் வாழ்க்கையில் அந்த புள்ள கூட சேர்ந்து சந்தோஷமா வாழுற வழிய பாரு”
என்றவர் தன்னுடைய கண்களில் வலிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டார்.
கதிரவனுக்கோ உள்ளுக்குள் சுருக்கு என்று வலித்தது.
அவனுடைய அன்னையின் பேச்சை கேட்டாலும் அவனுடைய மனதில் தந்தையின் அந்த பாசமே மேலோங்கி இருக்க தற்சமயம் எதையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தவன்,
கையில் இருந்த மருந்து கோப்பையை பார்த்து ஒரு பெருமூச்சு எடுத்து விட்டவன் அறிவழகி இருந்த அறையை நோக்கி சென்றான்.
இங்கு வேந்தன் வீட்டிலோ அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க மேகாவை நிற்க வைத்த வேந்தன்,
“ ஏன்டி இதனால தான் அவ யார விரும்புறான்னு அன்னைக்கு நாங்க அவ்வளவு கேட்டும் நீ சொல்லாம இருந்தியா” என்று கேட்டான்.
அதற்கு அவளோ ஆமாம் என்று தலை ஆட்டினாள்.
“ பைத்தியக்காரி அறிவு இருக்காடி உனக்கு அவதான் விவரம் தெரியாம காதல் கத்திரிக்கான்னு இருந்தா நீ ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா இன்னைக்கு அவ வாழ்க்கை இப்படி இருந்திருக்குமா.
பார்த்தல்ல அவள எப்படி இருக்கான்னு. அந்த சென்பகபாண்டியன் எப்ப வாய்ப்பு கிடைக்கும் எங்களை பழி வாங்கலாம்னு அலைஞ்சுகிட்டு இருக்கும் போது இவ வசமா போய் மாட்டி இருக்கா. அந்த ஆளு அவள வச்சு எங்களை பழி வாங்கலாம்னு நெனச்சுக்கிட்டு இருக்கான். அது எந்த ஜென்மத்திலும் நடக்காது.
ஆனா எங்கள பழிவாங்கிறதா நினைச்சு அவளை ஏதாவது செஞ்சா என்னடி செய்யறது”
என்று அவன் கேட்க.
அவளோ திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ என்னங்க இப்படி எல்லாம் சொல்றீங்க”
“ பின்ன உங்களோட அவசர புத்தியால இன்னும் என்ன எல்லாம் நடக்க போகுதோ”
“ அப்படி எல்லாம் சொல்லாதீங்க அவளோட காதல் உண்மையானது கண்டிப்பா அது தப்பா போகாது”
“ மண்ணாங்கட்டி ஏன்டி படிச்சவ தான நீ கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா.. அவளை கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க” என்றவன் பொரிந்து தள்ளினான்.