சீதளம் -51
பெண்ணவளோ தன்னுடைய மாராப்பை நீக்கி காயங்களை அவனுக்கு காட்ட அவனோ அவளுடைய காயங்களை பார்க்க முடியாமல் தன்னுடைய தலையை திருப்பினான்.
தன்னுடைய கைமுஷ்டியை இறக்கியவனுக்கோ இந்த காயத்தை உண்டு பண்ணுயவனை தன் கையாலயே கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
ஆனால் அந்த இடத்தில் தன்னுடைய தந்தை இருப்பதால் கையறு நிலையில் இருந்தான் கதிரவன்.
பின்பு தன்னுடைய கோபத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன்,
“ என்னடி இப்படி காயம் ஆகிறுக்கு அவர் இவ்வளவு தூரம் அடிக்கிறதுக்கு நீ ஏன் அனுமதிச்ச அங்கிருந்து போயிருக்கலாம் தானே” என்று வேதனை குரலில் அவன் கேட்க.
அவளோ,
“ அப்படி நான் போகிறதா இருந்தா என்னைக்கோ போய் இருக்கலாம் ஆனா நான் உங்கள விட்டு போக மாட்டேன். எனக்கு உங்க கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும். அதுக்காக இன்னும் எவ்வளவு கஷ்டத்தைனாலும் நான் தாங்கிப்பேன்” என்றாள்.
அறிவழகியின் அந்த வார்த்தையில் அவளை நிமிர்ந்து பார்த்தவனோ,
“ ஏன்டி ஏன் ஏன் என்னை இப்படி சங்கடத்தில தள்ளுற நான் உனக்கு அப்படி என்னடி செஞ்சேன்.
ஏன் என் மேல இவ்வளவு பாசம் காட்டுற” என்று அவன் கேட்க.
அவளோ,
“ தெரியலங்க இந்த பாசம் இந்த காதல் எப்படி உங்க மேல வந்துச்சுன்னு எனக்கு தெரியல.
ஆனா எனக்கு சரியா விவரம் தெரியாதப்பவே உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்துட்டு. அது காலப்போக்கில ஆழமான காதலா மாறி போச்சு” என்று அவள் சொல்ல சட்டென அவளை தன்னுடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் கதிரவன்.
அந்த அனைப்பிற்காகவே ஏங்கியவள் போல அவனுடைய நெஞ்சு கூட்டுக்குள் தஞ்சம் அடைந்தாள் அறிவழகி.
பிறகு அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளுடைய காயங்களுக்கு முழுவதுமாக மருந்திட்டு அவளை படுக்க வைத்துவிட்டு,
“ ஏதாவது சாப்டியா” என்று கேட்டான் அவன்.
அவளோ இல்லை என தலையாட்ட,
“ சரி இரு நான் போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றவன் தானே சமையலறைக்கு சென்று ஒரு தட்டில் அவளுக்கு சாப்பாடு போட்டு கொண்டு வந்து அவளுக்கு ஊட்டியும் விட்டான். “கொஞ்ச நேரம் நீ படு நான் போய் உனக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன்” என்றவன் சொன்னதோடு உடனே அருகில் இருக்கும் மருந்தகத்துக்கு சென்றவன் அவளுக்குத் தேவையான மாத்திரைகளை வாங்கி வந்து அவளுக்கு கொடுத்தவன் அவளை தூங்க சொல்ல.
அவளோ,
“ நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா உங்க மடியில படுத்துக்கவா” என்று அவள் ஆசையாக கேட்க.
மறுத்து கூறும் நிலையில் அவன் இல்லை.
“சரி இரு வரேன்” என்றவன் கட்டிலில் அவளுக்கு வாகாக அமர்ந்தவன் அவளுடைய தலையை தன் மடியில் வைத்து மிருதுவாக அவளுடைய தலையை கோதிவிட பெண்ணவளோ மிகுந்த நிம்மதியோடு துயில் கொண்டாள்.
அவனோ அவள் தூங்கியும் கூட தன் மடியில் இருந்து நகர்த்தாமல் அவளைப் பார்த்தவாறு அவனும் கண்ணயர்ந்தான்.
மௌனமான இருளுக்குப் பின்னால்,
வானம் மெல்ல ஊதையிலிருந்து ஆவியாகப் பிறக்கின்றது.
பனிக்காற்றின் பக்கத்தில்
ஒரு பசுமை மெத்தையில் விழித்துக்கொள்ளும் பூகம்படி,
சூரியன் தன்னைக் காணாமல் கண் விழிக்கிறான்.
இங்கு வேந்தன் வீட்டிலோ அனைவரும் வீரா இருக்கும் இடத்திற்கு வந்து அவனைத்தான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வீராவின் அருகில் வேந்தனும் மேகாவும் நின்று கொண்டிருக்க வீராவோ தன்னுடைய கால்களை மெதுவாக அந்த நிலத்தில் ஊன்றி நிற்க முயன்று கொண்டிருந்தான்.
ஆம் மேகாவின் இத்தனை நாள் அசராத டிரீட்மென்ட்டால் அவனுடைய கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற ஆரம்பித்தது.
மெதுவாக தன்னுடைய கால்களை நிலத்தில் ஊன்றி நிமிர்ந்து நின்றான் வீரா.
அதை பார்த்த அனைவருக்கும் அவ்வளவு ஆனந்தம்.
“ என்னங்க இங்க பாருங்க நம்ம வீரா எந்திரிச்சு நின்னுட்டான் இன்னும் கொஞ்ச நாள்ல அவன் பழையபடி நல்லா ஓடுவான்” என்ற சந்தோஷமாக மேகா கூற அதை வேந்தனும் புன்னகை முகமாக ஆமோதித்தான் அதே சந்தோஷத்தோடு.
மற்ற அனைவர் முன்னாலும் சென்றவள்,
“ இங்க பாத்தீங்களா அத்தை மாமா அப்பத்தா நம்ம வீராவ பாருங்க” என்று அவள் சொல்ல அவர்களும் சந்தோஷமாகவே அதை ஆமோதித்தனர்.
பிறகு செல்வரத்தினம் அவளுடைய தலையை பாசமாக வருடியவர்,
“ எல்லாம் உன்னால தான்மா முடியாதுன்னு எத்தனையோ டாக்டர் சொல்லியும் இல்ல என்னால முடியும்னு நீ சாதிச்சு காட்டியிருக்க உன்னை நினைக்கும் போது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அப்புறம் கொஞ்சம் பார்த்து கவனமா இரு மா நீ இப்ப தனியாள் இல்லை எங்க பேர புள்ளைய உன் வயித்துல சுமந்துகிட்டு இருக்க.
இப்படி எல்லாம் ஓடி வரக்கூடாது சரியா” என்று அவளுடைய ஆறு மாத மேடிட்ட வயிற்றைப் பார்த்து அவர் கூற, அவளோ வெட்க புன்னகை புரிந்தவள்,
“ சாரி மாமா வீரா எழுந்து நிற்கவும் சந்தோஷத்துல ஓடி வந்துட்டேன் இனி கவனமா இருப்பேன்” என்றாள்.
***
இங்கு கதிரவனும் ரகுவந்தனம் அவனுடைய காட்டு பங்களாவில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது கதிரவன்,
“ டேய் மாப்ள நான் அறிவழகிய தனியா வேற வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன் டா”
என்று சொல்ல அதைக் கேட்ட ரகுவந்தனோ ஆச்சரியமாக அவனை பார்த்தவன்,
“ டேய் மச்சான் என்னடா சொல்ற இந்த நியானோதையும் உனக்கு எப்ப வந்துச்சு”
“ இல்லடா மச்சான் இதுக்கு மேலயும் அவ அங்க இருந்தா சரிப்பட்டு வராதுன்னு தோணுது.
என்னோட சுயநலத்துக்காக அவளை பலி கொடுத்துடுவேனோன்னு பயமா இருக்குடா.
நான் இன்னைக்கு அவள வேற வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். இனி வரப் போற காலங்கள்ல அவ கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படறேன் டா” என்றான் கதிரவன்.
ரகுவந்தனோ சட்டென தன்னுடைய நண்பனை அணைத்துக் கொண்டவன்,
“ ரொம்ப நல்ல முடிவு எடுத்திருக்கடா மச்சான். எங்க கடைசி வரைக்கும் எங்க அப்பா எங்க அப்பான்னு சொல்லிக்கிட்டு உன்னோட வாழ்க்கையை நாசமாக்கிடிவியோன்னு ரொம்ப பயந்து போயிருந்தேன்டா. இப்பதான் நீ ஒரு தெளிவான முடிவு எடுத்து இருக்க இனி உன் வாழ்க்கை நல்லா இருக்கும் டா” என்றான் அவன்.
அதே சந்தோஷத்தோடு தன்னுடைய நண்பனிடம் இருந்து விடைபெற்றவன் வீட்டிற்கு வர,
அவனுக்கோ அங்கு மிகப் பெரிய பூகம்பம் காத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு உள்ளே வந்த கதிரவனும் உறைந்து நின்று விட்டான்.
அவனுடைய அன்னை தலையில் அடிபட்டு அரை மயக்கத்தில் அங்கு கிடந்தார்.
அவரை சுற்றி ரத்தம் சிதறி கிடந்தன.
அவரை அந்த கோலத்தில் பார்த்து பதறியவனோ வேகமாக அவர் அருகில் வந்தவன்,
“ அம்மா என்ன ஆச்சு எழுந்திருங்க” என்று அவரை எழுப்பியவன் அவருடைய நெற்றியில் இருந்து வந்து கொண்டிருந்த ரத்தத்தை ஒரு துணியால் இறுக்கமாக கட்டி விட்டான்.
சீத்தாவோ,
“ ஐயா கதிர் அறிவழகி அறிவ காப்பாத்துய்யா உங்க அப்பா அந்த நாசமா போறவன் அந்த புள்ளைய இன்னொருத்தனுக்கு தாரா வார்த்து கொடுக்கிறான் தடுக்க வந்த என்னையும் அடிச்சு போட்டுட்டு உங்க அப்பனும் அந்த பொறம்போக்கு நாயும் அறிவ இழுத்துட்டு போறாங்கய்யா.
என்னால தடுக்க முடியல எப்படியாவது அறிவ காப்பாத்து” என்று அவர் சொல்ல அவனுக்கோ தலையை சுற்றி கொண்டு வந்தது.
தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
“ அம்மா என்ன ஆச்சு என்ன நடந்தது” என்று அவன் கேட்டான்.
கதிரவன் வீட்டிற்கு வருவதற்கு சற்று முன்னர் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் அறிவழகி.
கதிரவனை மனதில் நினைத்து கொண்டே புன்னகை முகமாக வந்து கொண்டிருந்தவளோ கீழே ஹாலில் அமர்ந்திருந்தவனை கண்டு படியில் திடுக்கிட்டு நின்று விட்டாள்.
இருக்காதா பின்னே.
அவனுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தான் காதலித்த கதிரவனை கரம் பிடிக்க வந்தவள் இப்பொழுது அவளுடைய வீட்டிலே நடுநாயகமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் கபிலனை பார்த்தால் அவளும் என்னதான் செய்வாள்.
ஆம் அங்கு அமர்ந்திருப்பது சாட்சாத் கபிலனே தான்.
அவனுடைய உதட்டிலோ அவளைப் பார்த்ததும் ஒரு குரூரமான புன்னகை பூத்தது.
‘ மவளே என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நெனச்சியா இப்படி வசமா வந்து மாட்டிகிட்டியே’ என்று அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தான் கபிலன்.