நயமொடு காதல் : 06

5
(8)

காதல் : 06

பார்வதியும் கிருத்திஷூம் அன்னமும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தனர். அப்போது வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அன்னத்தைப் பார்த்ததும் வம்பு இழுக்க வேண்டும் போல் தோன்றியது. உடனே அவர்கள் அறியாமல் அன்னத்தின் காலை ஒரு கயிறு வருமாறு இருபுறமும் இரு சிறுவர்கள் கயிற்றைப் பிடித்து இழுக்க, அதில் தவறி அன்னம் கீழே விழுந்தாள்.

கீழே விழுந்ததைப் பார்த்து பார்வதி, “அய்யோ, என்ன ஆயிற்று?” என்றவாறு வந்து அவளைத் தூக்கினார். ஆனால், அன்னத்தால் எழுந்து நிற்க முடியவில்லை. காலைப் பார்த்தபோது, கால் சற்று வீங்கியிருந்தது. “அன்னம், எழுந்து வா வீட்டுக்குப் போயிடலாம். வீட்டுக்குப் போய் மருந்து போட்டால் சரியாகிவிடும். கொஞ்சம் எழுந்திருமா,” என்றார் பார்வதி. ஆனால், அன்னத்தால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. “முடியல, அத்தை! கால் ரொம்ப வலிக்குது, என்னால முடியல!” என்று அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகையைப் பார்த்த சிறுவர்களுக்கு சிரிப்பு வந்தது. அவர்கள் கைதட்டி சிரித்தனர். அதைப் பார்த்த கிருத்திஷ், “இங்கே பாருங்க பசங்களா! ஒருத்தர் வலியில் அழும்போது அதைப் பார்த்து சிரிப்பது நல்ல பழக்கம் இல்லை.” என்று கண்டித்தான். அதற்கு அவர்கள், “இந்த அன்னம் எப்பவும் பயந்து பயந்து தான் இருக்கும். அதை நாங்க விளையாட்டாகப் பார்த்து சந்தோஷப்படுறோம். வாங்கடா போலாம். வந்துட்டாரு நியாயம் பேசுறதுக்கு.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

அன்னமோ, “அத்தை, என்னால் முடியல! காலைத் தூக்கவும் முடியல!” என்று அழ ஆரம்பித்தாள். இவ்வளவு நேரமும் பட்டாம்பூச்சியாய் சந்தோஷமாகப் பறந்து கொண்டிருந்தவள் இப்போது அழுவதைக் கண்டு கிருத்திஷுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. “அம்மா, கொஞ்சம் விலகுங்க.” என்றவாறு அவளைத் தனது கைகளில் தூக்கிக் கொண்டான் கிருத்திஷ்.

“கிருத்திஷ், என்ன பண்ற நீ? இது கிராமம், இங்கே எல்லாம் பொண்ணுங்களைத் தூக்கக் கூடாது. விடு!” என்றார் பார்வதி. “அம்மா, அதை அப்புறம் பார்த்துக்கலாம். இவள் வலியில் துடிச்சிட்டு இருக்கா. இப்போ என்ன பண்ணப் போறீங்க? முதல்ல வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம், வாங்க!” என்றவாறு அவளைத் தூக்கிக்கொண்டு முன்னே நடக்க, பார்வதியும் கையைப் பிடித்துக்கொண்டு பின்னால் நடந்தார்.

அன்னலட்சுமியை அவளது வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு வேலுச்சாமி வெளியில் உட்கார்ந்திருந்தார். கிருத்திஷ் அன்னத்தைத் தூக்கி வருவதைப் பார்த்து, “பார்வதி, என்னாச்சும்மா? அன்னத்தை எதுக்காக மாப்ள தூக்கிட்டு வர்றாரு?” என்று கேட்டார்.

“அண்ணே, ஒண்ணும் இல்லை. இவள் வரும் வழியில் விழுந்துட்டா. அப்போ கால் சுளுக்கிக்கிச்சு போல இருக்கு. கால் வீங்கியிருக்கு, எழுந்து நிக்கக் கூட முடியல. அதான் கிருத்திஷ் தூக்கிட்டு வந்தான்,” என்று பார்வதி விளக்கினார்.

“அட, கூட்டிட்டு வாம்மா! அன்னம், ரொம்ப வலிக்குதாம்மா?” என்று கேட்டார் வேலுச்சாமி. கிருத்திஷ் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அவளை அமரவைத்தான். “அப்பா, ரொம்ப வலிக்குதுப்பா!” என்று சிறு குழந்தை போல உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அன்னம்.

“சரிடா கண்ணு, அழாதே! நான் இப்போ போய் வைத்தியரை கூட்டிட்டு வந்துடறேன். நீ அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க தாயி.. நான் இப்போ வந்துடறேன்.” என்றவர் பார்வதியிடம் திரும்பி, “அம்மாடி பார்வதி, கொஞ்சம் என் பொண்ணு கூட உக்காந்திருமா. நான் போய் வைத்தியரைக் கூட்டிட்டு வந்துடறேன்,” என்றவர் வேகமாக வைத்தியர் இல்லத்துக்கு சென்றார்.

வலியில் துடித்துக்கொண்டிருந்த அன்னத்தைப் பார்த்து கிருத்திஷ் எதுவும் பேசாமல், சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கைகள் இறுகிப்போயிருந்தன. வேலுச்சாமி வைத்தியரை அழைத்து வந்தார். வைத்தியர் வந்து அவளது காலைப் பார்த்துவிட்டு, “அன்னம் பயப்படும்படி ஒண்ணுமே இல்லை. கால் சுளுக்கியிருக்கு. இப்போ சுளுக்கு எடுத்துட்டா, கால் சரியாகிடும்.” என்றார்.

“அப்பா ரொம்ப வலிக்கும்பா, எனக்கு வேணாம்பா!” என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள் அன்னம். அதைப் பார்த்த மருத்துவர், “பார்வதி, கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துட்டு வாம்மா.” என்றார். விளக்கெண்ணெய் எடுத்து வந்ததும், “ரெண்டு பேரும் அன்னத்தோட கையைப் பிடிச்சுக்கோங்க.” என்றார். 

பார்வதி காலைப் பிடிக்க, வேலுச்சாமி அவளைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால், அன்னத்தால் வலியைத் தாங்க முடியவில்லை.

கிருத்திஷ் உதவிக்கு வந்தான். ஒரு பக்கம் வேலுச்சாமியும், மறுபக்கம் கிருத்திஷூமாக கையைப் பிடித்துக்கொண்டனர். வைத்தியர் காலில் சுளுக்கு எடுக்க ஆரம்பிக்க, அன்னத்துக்கு வலி தாங்க முடியவில்லை. தனது வலது கைப் பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டு, கையைப் பிடித்திருந்த கிருத்திஷின் கையை இறுகப் பற்றினாள். அவளது இறுக்கம் கிருத்திஷுக்கு எறும்பு கடிப்பது போல் இருந்தது. அவளால் தாங்க முடியவில்லை. உடனே அவன் கையிலேயே தலையை வைத்து படுத்துக்கொண்டாள்.

வைத்தியர் மெதுவாகக் காலைப் பிடித்து சுளுக்கு எடுத்துவிட்டார். “மடக்கென்ற” சத்தத்துடன் சுளுக்கு சரியானது. ஆனால், வலியில் அப்படியே மயங்கினாள் அன்னம். அதைப் பார்த்து பதறிய வேலுச்சாமியிடம், “பயப்பட வேண்டாம், வேலுச்சாமி அண்ணா! இவ்வளவு நேரம் வலியில் துடிச்சுட்டு இருந்தால அதுதான் மயங்கிட்டா. இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லை. இந்தக் கஷாயத்தைக் கொடுங்க, அவள் கொஞ்ச நேரத்தில் எழுந்திடுவா,” என்று சொல்லிவிட்டு வைத்தியர் சென்றுவிட்டார்.

கிருத்திஷ் பார்வதியிடம், “அம்மா போலாமா?” என்றான். 

“போலாம் பா.” என்றவர், “அண்ணே, அன்னத்தை உள்ளே படுக்க வைச்சுட்டு போகவா?” என்று கேட்டார். “சரிமா.” என்று வேலுச்சாமி சம்மதிக்க, பார்வதியும் வேலுச்சாமியும் ஆளுக்கு ஒரு பக்கம் அன்னத்தை அழைத்து உள்ளே படுக்க வைத்தனர். கிருத்திஷ் வெளியே சென்றான்.

காலேஜுக்கு போய் வந்ததிலிருந்து அமைதியாக இருக்கும் தனது மகனைப் பார்த்தார் ஜனகன். மெல்ல ரோஹித்தை அருகில் அழைத்தவர், “ரோஹித், என்னாச்சு? உன்னோட முகமே சரியில்லையே. காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார்.

அவரின் முகத்தைப் பார்த்த ரோஹித், எதுவும் பேசாமல் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்தான். ஜனகன் அவன் தலையை வருடிக்கொடுத்தவர், “என்னாச்சு, ரோஹித்? உங்க அம்மாவை மிஸ் பண்றியா?” என்று கேட்டார்.

“ஆமாப்பா, அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். இன்னைக்கு காலேஜ்ல ஒரு விஷயம் நடந்துச்சு. அதை உங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியல. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றான்.

“என்னை எப்பவும் உன்னோட ப்ரெண்டாத்தானே பாக்குற. அப்புறம் என்ன தயக்கம் ரோஹித். நானும் அப்படித்தானே உன்கூட பழகுறேன். என்ன பிரச்சனை?” என்றார் ஜனகன்.

“எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அப்பா. இன்னைக்கு என்கிட்ட இரா… உங்களுக்கு இராவைத் தெரியுமே, அவள் தான் காலேஜ்ல வைச்சு என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா.” என்றான் ரோஹித்.

இதைக் கேட்ட ஜனகன், “என்ன சொல்ற ரோஹித்? இராவுக்கு வேற ஆளே கிடைக்கலையா, உன்கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணியிருக்கா?” என்றார்.

ரோஹித் தலையை தூக்கி மறைத்தவாறு, “நான் சீரியஸ், பா. எனக்கு இறக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. நான் இந்தியப் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னேன். அதுக்கு அவளும், ‘நானும் இந்தியப் பொண்ணு தான்’னு சொன்னா. இது என் வாழ்க்கை, உனக்கு பிடிக்குமா?” என்று கேட்டான்.

“ரொம்ப பிடிக்கும், பா. ஆனா, நான் இன்னும் அவளை லவ் பண்ற அளவுக்கு மனசு போகல,” என்றான்.

“இங்க பாரு, ரோஹித். அவள் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணியிருக்கா. உனக்கு அவளைப் பிடிச்சிருந்தா, அவளுக்கு உடனே ஓகே சொல்லு. இல்லைன்னா, ஸ்மூத்தா சொல்லி, அவள் மனசு கஷ்டப்படாம விலகிடு. இது உன் வாழ்க்கை, நீ தான் முடிவு எடுக்கணும். நீ எந்த முடிவு எடுத்தாலும், நாங்க அதை மதிப்போம், ஓகேவா?” என்றார் ஜனகன்.

இதைக் கேட்டு ரோஹித்தின் முகம் தெளிவடைந்தது. “என்ன, ரோஹித்? இப்போ உன் குழப்பம் சரியாச்சு போல இருக்கு?” என்றார் ஜனகன்.

“ஆமாப்பா, ரொம்ப கிளியர் ஆயிடுச்சு!” என்றவன் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “ஓகே, பா! நான் பிரஷ் ஆயிட்டு வரேன். எனக்கு சூடா ஒரு காபி போட்டு வைங்க,” என்று சென்றுவிட்டான்.

“ஓகே, சீக்கிரம் வா!” என்று சொல்லி ஜனகன் சமையலறைக்குச் சென்றார்.

பிரஷ் ஆகிவிட்டு வந்த ரோஹித், தந்தை கொடுத்த காபியை வாங்கிக் குடித்துவிட்டு, “டாட், நான் இராவை லவ் பண்ணலாம்னு இருக்கேன்,” என்றான்.

“என்ன சொல்ற, ரோஹித்? இப்பதான் அவளைப் பிடிக்கும், ஆனா லவ் பண்ண மனசு இல்லைன்னு சொன்ன. இப்போ திடீர்னு லவ் பண்ணலாம்னு சொல்றியே, என்ன ஆச்சு?” என்று கேட்டார் ஜனகன்.

“இல்ல, பா. நான் யோசிச்சேன். நாம லவ் பண்றவங்களை விட, நம்மளை லவ் பண்றவங்க கூட வாழ்ந்தா வாழ்க்கை நல்லா இருக்கும். இராவை நான் மறுக்குறதுக்கு எந்தக் காரணமும் இல்லை. சோ, ஒரு பிக் ஸ்டெப் எடுக்கலாம்னு நினைக்கிறேன். அதனால, இப்பவே அவளுக்கு கால் பண்ணி, நான் லவ் பண்ணப் போறேன்னு சொல்லப் போறேன்,” என்றான்.

“பரவால்லடா, நல்லா யோசிச்சிருக்க. இப்படி யோசிச்சா உன் வாழ்க்கை நல்லா இருக்கும். ஆனா, எத்தனை ப்ரொபோஸ் வந்தாலும், உன் அண்ணாவுக்கு முதல்ல கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் தான் உனக்கு கல்யாணம். அதை மறந்துடாத.” என்று சிரித்தவாறு ஜனகன் கூறினார்.

ரோஹித் சிரித்தவாறு, “டாட், கவலைப்படாதீங்க! சீக்கிரமே அண்ணா கல்யாணம் பண்ணிப்பாங்க. நீங்க வேணும்னா பாருங்க.” என்றான்.

“அது எப்படி இவ்வளவு கான்ஃபிடன்ஸ்? உன் அண்ணா யாரையாவது லவ் பண்ணுறானா?” என்று கேட்டார் ஜனகன்.

“இல்லவே இல்ல, அண்ணாவுக்கும் லவ்வுக்கும் செட் ஆகாது. ஆனா, என் மனசு சொல்லுது, எனக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும்னு. பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு, “சரி, நான் போய் டார்லிங்கோட பேசிட்டு வரேன்,” என்றான்.

“டேய், என்னால முடியலடா.” என்று தலையில் அடித்துக்கொண்டு ஜனகன் தனது வேலையைப் பார்க்கச் சென்றார். ரோஹித் தனது அறைக்குள் வந்து இராவின் நம்பருக்கு கால் பண்ணினான்.

…………………………………………………

இரா தனது வீட்டில் கட்டிலில் படுத்துக்கொண்டு, போனில் ரோஹித்தின் புகைப்படத்தைப் பார்த்தவாறு சிரித்துக்கொண்டிருந்தாள். “என்ன, சீனியர்? இன்னைக்கு என்னை ரொம்ப குழப்பிவிட்டுட்டீங்களே.. நிஜமாவே சொல்றேன், எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, நான் இப்போ சொல்லலைன்னா, நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டீங்கன்னா, நான் என்ன பண்ணுவேன்? அதான் இன்னைக்கே சொல்லிட்டேன். என்னை ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க, சீனியர். உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ப்ளீஸ், என்னோட லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கோங்க.” என்று அவனுடைய புகைப்படத்தைப் பார்த்து போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!