நயமொடு காதல் : 07

4.8
(9)

காதல் : 07

ரோஹித்தின் போனில் இருந்து இராவுக்கு கால் வந்தது. அதைப் பார்த்ததும், இந்த நேரத்தில் அவன் தன்னை அழைப்பான் என்று இரா எதிர்பார்க்கவில்லை. இப்போது ரோஹித் அழைப்பது எதற்காக என்றும் அவளுக்குத் தெரியவில்லை. அதனால் அவளுக்கு அந்தப் பதட்டம் ஏற்பட்டது. ஒருவேளை தன்னை மறுத்துவிடுவானோ, அதைக் கூறவே அழைக்கிறானோ என்று எண்ணியவள், முதலில் போனை எடுக்கவில்லை. மறுபடியும் அழைத்த ரோஹித்துக்கு அவளது நிலை விளங்கியது. உடனே போனை கட் செய்துவிட்டு, “பிக் மை கால்” என்று ஒரு மெசேஜ் அனுப்பினான். 

அந்த மெசேஜை இரா பார்த்ததற்கு அடையாளமாக வாட்ஸ்அப்பில் இரண்டு நீல டிக் விழுந்தது. உடனே ரோஹித் மறுபடியும் அழைத்தான். இம்முறை இரா உடனே போனை எடுத்துவிட்டாள். 

“ஹலோ, இரா..” என்றான் ரோஹித். 

“சீனியர்” என்றாள் இரா. 

“இரா, நீ காலேஜ்ல வைச்சு சொன்னது நிஜம்தானே?” என்று கேட்டான் ரோஹித். 

“ஆமா, சீனியர். நான் சொன்னது உண்மைதான்.” என்றாள் இரா. 

உடனே ரோஹித், “சரி, அதுக்கு என்கிட்ட இருந்து என்ன பதில் எதிர்பார்க்கிற?” என்று கேட்டான். 

இரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். மறுபடியும் ரோஹித், “ஹலோ, இரா லைனில் இருக்கியா?” என்றான். 

“இருக்கேன் சீனியர்..” என்றாள். “நீங்க என்ன கேட்குறீங்கன்னு எனக்கு புரியல. அதான் அமைதியா இருந்தேன்.” 

“அப்படியா? நம்பிட்டேன்.” என்றவன், “சரி, இரா, நான் ரொம்ப சேட்டை எல்லாம் பண்ணுவேன். என்னை நீ சமாளிச்சுக்குவியா? அப்புறம், நான் ரொம்ப சாப்பிடுவேன்.” என்று சொல்லிக்கொண்டு செல்ல, இரா மறுபடியும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

“என்ன இரா? இதெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டு இருக்கான்னு யோசிக்கிறியா? அதொண்ணும் இல்ல, பியூச்சர்ல நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆகப் போறோம். சோ, இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதான் சொல்லிட்டு இருக்கேன்.” என்று தனது சம்மதத்தை மறைமுகமாகக் கூறினான். 

மறுபக்கம் இருந்த இராவுக்கு மயக்கமே வராத குறைதான். ரோஹித் தன்னை ஏற்றுக்கொண்டானா என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது. அதுவும் இன்று ப்ரொபோஸ் செய்த உடனே அவன் ஏற்றுக்கொள்வது அவளால் நம்ப முடியவில்லை. 

“என்ன இரா நம்பலையா? நெஜமாவே சொல்றேன். நம்மள எல்லாம் யாரு லவ் பண்ணுவான்னு நினைச்சிருந்தேன். இப்போ இப்படி ஒரு பொண்ணு உருகி உருகி லவ் பண்ணி, ப்ரொபோஸ் வேற பண்ணுது. சரி, போனா போகுது, அதுக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கலாம்னு இருக்கேன்.” என்றான். 

“அப்போ போனா போகுதுன்னு தான் என்னோட லவ்வை ஏத்துக்கிட்டீங்களா சீனியர்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் இரா. 

“இங்க பாரு, இரா, உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சோ, நீ ப்ரொபோஸ் பண்ணினதும் சரி, என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுதானே எனக்கு சந்தோஷம்தானே அதான் உன் லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கிட்டேன், ஓகேவா டார்லிங்?” என்றான். 

“தேங்க்யூ சோ மச், சீனியர். தேங்க்யூ சோ மச். நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப ரொம்ப நன்றி, சீனியர்.” என்றாள் இரா. 

“எத்தனை தடவை தேங்க்ஸ் சொல்லுவ?” என்று சொல்ல, இருவரின் பேச்சும் தொடர்ந்து கொண்டிருந்தது.

…………………………………………………

அன்னத்தை படுக்கவைத்துவிட்டு, பார்வதியும் கிருத்திஷும் வேலுச்சாமியிடம் சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிலிருந்து சென்றனர். வேலுச்சாமி தனது மகள் அருகில் இருந்து அவள் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 

“அப்பா, ரொம்ப வலிக்குது.” என்றாள் அன்னம். 

“இல்லப்பா, இப்போ கொஞ்சம் பரவாயில்லை,” என்றார் வேலுச்சாமி. “பார்த்து நடக்கக் கூடாதா, பாரு, கால் எப்படி வீங்கியிருக்கு? நல்லவேளை சுளுக்கு எடுத்தாச்சு இல்லைனா உனக்கு இன்னும் அதிகமா வலிச்சிருக்கும்.” என்றார். 

“அப்பா, இன்னும் நீங்க காவலுக்கு போகலையா?” என்று கேட்டாள் அன்னம். 

“இல்ல கண்ணு. இன்னைக்கு நான் போகல. உனக்கு ஒத்தாசைக்கு நான் வேணும் இல்லையா? நான் இங்கேயே இருக்கேன். நாளைக்கு போய்க்கலாம்,” என்றார். 

“சரிங்கப்பா.” என்றவள், தந்தை வருடிக்கொடுத்த வருடலில் தூக்கம் வர, அப்படியே தூங்கிவிட்டாள். 

வேலுச்சாமி எழுந்து வெளியே வந்தவர், தனது மனைவியின் படத்தின் முன் நின்றார். “தங்கம், எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அன்னத்துக்கு ஒரு வழி பண்ணாமலே உன்கிட்ட வந்துடுவேன்னு பயமா இருக்கு. நீ தான் எப்படியாவது அன்னத்துக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க உதவி செய்யணும்.” என்றார். 

அடுத்த நாள் காலையில், அன்னத்துக்கு வலி சற்று குறைந்திருந்தது. கால் வலி குறைவாக இருக்க, அன்னம் வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அதைப் பார்த்த வேலுச்சாமி, “அன்னம் எதுக்கு இப்ப இந்த ஏலாத காலோட வேலை செஞ்சுக்கிட்டு இருக்க? நீ இரும்மா நான் எல்லா வேலையும் பார்த்துக்கிறேன்.” என்றார். 

“அப்பா, எனக்கு ஒண்ணும் இல்லப்பா. வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இப்போ நடக்க லேசா தான் இருக்கு. நீங்க சந்தைக்குப் போற வேலையைப் பாருங்க. இன்னைக்கு வெண்டைக்காய் அறுவடை செய்யணும்னு சொல்லிட்டு இருந்தீங்க இல்ல? நீங்க போங்கப்பா, நான் வீட்டு வேலையைப் பார்த்துட்டு உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்.” என்றாள். 

“இல்லம்மா நீ சாப்பாடு எடுத்துட்டு நடக்க வேண்டாம். நீ இங்கேயே இரு, நான் வந்து சாப்பிட்டுக்கிறேன். என்னம்மா செஞ்சிருக்க?” என்று கேட்டார். 

“பால் கொழுக்கட்டை செஞ்சிருக்கேன்ப்பா. அத்தைக்கு பிடிக்கும்னு சொன்னீங்க இல்ல, அதான் மாமாவுக்கும் அத்தைக்கும் செஞ்சிருக்கேன். இதைக் கொடுத்துட்டு போயிருங்க.” என்று ஒரு தூக்குவாளியில் கொண்டு வந்து கொடுத்தாள். 

“நல்ல பொண்ணுடாமா நீ” என்றவர், தலையை வருடிவிட்டு, பார்வதியின் வீட்டுக்கு முன்னால் நின்று, “பார்வதி, பார்வதி,” என்று கூப்பிட்டார். 

வேலுச்சாமியின் குரலைக்கேட்டு பார்வதி வெளியே வந்தார். “அம்மாடி இந்தா இதுல பால் கொழுக்கட்டை இருக்கு. சாப்பிடுங்க நீயும் மாப்பிள்ளையும்.” என்றார் வேலுச்சாமி. 

“என்ன அண்ணே, பால் கொழுக்கட்டையா? நீங்களா பண்ணீங்க?” என்று கேட்டார் பார்வதி. 

“இல்ல பார்வதி. நம்ம அன்னம் தான் பண்ணினா. இந்த கால் வலியோட எந்திரிச்சு எல்லா வேலையையும் முடிச்சிட்டா. இன்னும் அவ எப்பவும் இப்படித்தான் நோய்னு ஒரு நாளும் படுத்தது கிடையாது. அப்படியே பழகிட்டா.” என்றார். 

“சரி இதைப் பிடிங்க. நான் தோட்டத்து வேலைக்கு போய்ட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு வேலுச்சாமி சென்றார். 

பார்வதி உள்ளே வந்து, “கிருத்திஷ், அன்னம் சாப்பாடு கொடுத்து அனுப்பியிருக்கா. நீ குளிச்சிட்டு வா சாப்பிடலாம். ” என்றார். 

“என்னம்மா சொல்றீங்க? அந்தப் பொண்ணு நேத்து அவ்வளவு வலியில் அழுதுட்டு இருந்தா. இப்போ எப்படிம்மா இன்னைக்கு எழுந்து வேலை செஞ்சாளா?” என்று கேட்டான் கிருத்திஷ். 

“அதைத்தான் நானும் வேலுச்சாமியிடம் கேட்டேன். அவரும், ‘என் பொண்ணு அப்படித்தான்மா’னு சொல்லிட்டுப் போறாரு. நல்ல பொண்ணு கிருத்திஷ். யாருக்கு இவளைக் கொடுத்து வைச்சிருக்கோ, எந்த வீட்டுக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியல.” என்று சொல்லிவிட்டு சென்றார் பார்வதி. 

பார்வதிக்கு ரோஹித் கால் செய்தான். “அம்மா, நீங்க அங்க போனதுக்கு அப்புறம் என்னை மறந்துட்டீங்க போல இருக்கு.”என்றான். 

“என்ன சார் சொன்னீங்க நான் மறந்திட்டேனா? சார் அங்க ரொம்ப பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு. ப்ரொபோஸ் எல்லாம் வந்திருக்கு.. பிபிசியில் சொன்னாங்க, அதான் உங்களுக்கு எதுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவானேனு கால் பண்ணல..” என்றார். 

“என்னமா, அப்பா எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டாரா?”

“அம்மா, நீங்கதான் என் உயிருனு டயலாக் விடுவ ஆனால் இப்போ என்கிட்ட இதையெல்லாம் சொல்லாம மறைக்க ஆரம்பிச்சிட்டீங்களா.” என்று சிரித்தவாறு கேட்டார் பார்வதி. 

“அம்மா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் உங்களுக்கு சொல்லத்தான் இருந்தேன். அதான் இவ்வளவு காலையில் கால் பண்ணினேன். ” என்றான் ரோஹித். 

“சரி.. சரி நான் நம்பிட்டேன் சின்னு,” என்றார் பார்வதி. 

“அம்மா, நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். அம்மா எப்போ வரீங்க?” என்று கேட்டான். 

“இன்னும் ஒரு மாசம் இருக்கு சின்னு வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடுறேன், சரியா?” என்றார். 

“மா, நீங்க வர்றது இருக்கட்டும். நான் எக்ஸாம் முடிச்சிட்டு வந்துடுறேன், ஓகேவா?” என்றான். 

“சரி, அப்போ அப்பாவையும் அழைச்சுட்டு வா. அவர் மட்டும் தனியா அங்க இருந்து என்ன பண்ணுவாரு?” என்றார். 

“ஓகே, மா, கண்டிப்பா. அப்பாவையும் சீக்கிரம் கூட்டிட்டு வந்துடுறேன்,” என்று இருவரும் விஷயங்களைப் பேசிவிட்டு போனை வைத்தனர். 

…………………………………………………

அன்று மாலை, வேலுச்சாமி பார்வதியின் வீட்டுக்கு வந்தார். “அம்மாடி, பார்வதி, இன்னிக்கு சாயந்திரம் நம்ம அன்னத்தைப் பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்றாங்க. கொஞ்சம் நீயும் வந்தா, அன்னத்துக்கு ஒத்தாசையா இருக்கும்,” என்றார். 

“என்ன, அண்ணே, இதை இப்போ சொல்றீங்க? ரொம்ப சந்தோஷம்! கண்டிப்பா நானும் கிருத்திஷும் வந்துடுறோம்.” என்றார் பார்வதி. 

“சரிடா, அம்மா. நான் அப்போ போய் ஆக வேண்டிய வேலையைப் பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு வேலுச்சாமி சென்றார். 

“சரிங்க, அண்ணே. நீங்க போங்க, நான் இதோ வந்துடுறேன்.” என்றவர் உள்ளே வந்து, “நான் காலையில தான் சொன்னேன், அன்னத்துக்கு எந்த வீட்டுக்கு கொடுத்து வச்சிருக்கோன்னு. அதே மாதிரி, அண்ணே வந்து சாயந்திரம் அன்னத்தைப் பொண்ணு பாக்க வர்றதா சொல்லிட்டுப் போறாரு. நாம நேத்து போயிடணும், அண்ணேவுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்.” என்று சொல்ல,

“சரிமா.” என்ற கிருத்திஷ் அறைக்குள் சென்றுவிட்டான். 

பார்வதியோ, ‘நாம ஒண்ணு நினைச்சா, கடவுள் ஒண்ணு நினைக்கிறாரு போல.’என்று நினைத்தவர், சற்று நேரத்தில் வேலுச்சாமியின் வீட்டுக்கு சென்றார். அங்கே வேலுச்சாமி வேலை செய்து கொண்டிருக்க, பார்வதி ஸ்வீட், இனிப்பு முதலியவற்றை எடுத்து வைத்து உதவிக்கொண்டிருந்தார். கிருத்திஷ் எதுவும் பேசாமல் அங்கிருந்த ஹாலில் அமர்ந்து கொண்டான். 

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வருவதாகக் கூற, பார்வதி அன்னத்தைத் தயாராக்கச் சென்றார். அழகிய பட்டுச்சேலை உடுத்தி, அவளுக்கு வைத்திருந்த நகைகளையும் அணிவித்து, அன்னத்தைத் தயாராக்கினார். ஆனால், அன்னத்தின் முகம் வாடியிருந்தது. அதைப் பார்த்த பார்வதி, “அன்னம், என்னாச்சுடா? முகம் நல்லா இல்ல. இந்தக் கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லையா?” என்று கேட்டார். 

“அதில்ல, அத்தை. இதோட எத்தனையாவது தடவை இப்படி நிக்கிறேன்னு உங்களுக்கு தெரியுமா? நான் அலங்கரிச்சிட்டு போய் நிப்பேன். ஆனா, எனக்குள்ள குறையைக் குத்திக் காட்டி, ‘வேணாம்’னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. எனக்கும் அப்பாவை விட்டுட்டு வேற வீட்டுக்கு கல்யாணம் பண்ணிப் போக இஷ்டம் இல்ல. அதான்.” என்றாள் அன்னம். 

“இங்க பாருடா, எல்லாப் பொண்ணுங்களுக்கும் இதுதான் விதி. நாம எவ்வளவு தான் அம்மா வீட்டில இருந்தாலும், கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்குப் போய்த்தான் ஆகணும். அதை ஏத்துக்கப் பழகு.” என்றார் பார்வதி, அவள் சொன்ன குறையை கவனிக்காமல் விட்டுவிட்டார். 

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கினர். அங்கே மாப்பிள்ளை என்று சொல்லப்பட்ட ஒருவரைப் பார்த்த கிருத்திஷுக்கு, எந்தச் சுவற்றில் போய் முட்டிக்கொள்ளலாம் என்று தோன்றியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!