நயமொடு காதல் : 09

4.7
(7)

காதல் : 09

மதியம் சூரியன் தலையில் எரிந்து கொண்டிருந்தாலும், கிராமம் முழுக்க ஒரே பரபரப்பு. இன்றோ, “அன்னத்தை அமெரிக்க மாமா தூக்கிக்கிட்டுப் போனாராம்” என்ற செய்தி வானத்தை விட வேகமாய் பரவிவிட்டது.

“ஏய்… பஞ்சாயத்து நடக்குதாம்!”

“வாங்க வாங்க… ஆலமரத்தடிக்குப் போலாம்…”

சின்ன பிள்ளைகள் குதூகலமாய் ஓடினார்கள். பெண்கள் பாவாடைத் தூக்கிக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆண்கள் தலையில் துண்டை சுருட்டிக் கொண்டு முக்கியமான கேசை விசாரிக்க வந்த வக்கீல்களா அங்கங்கே நின்றனர்.

பார்வதி குழம்பியபடி, “ஐயோ, இவ்வளவு கூட்டம் எதுக்கோ?” என்று கேட்க, வேலுச்சாமி பாவமாகச் சொன்னார்.

“பார்வதி… சின்ன விஷயம் பெரிசாயிடுச்சு. உன் மகன் அன்னத்தை தூக்கிக்கிட்டுப் போனதை ஊருக்குள்ள தப்பா பேசுறாங்க. அதனால பஞ்சாயத்து கூட்டம் நடக்குது.”

பார்வதியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“அடப்பாவமே, பாவம் குழந்தை கால் சுளுக்கிச்சு அழுதுட்டே இருந்தாள். என் மகன் மனிதநேயத்துக்காகத் தூக்கினான். அதுல என்ன தப்பு?”

“அதை நாம சொல்லிக்கிட்டு என்ன பயன்? ஊர்க்காரங்க தான் கேட்கணும்…” என்று வேலுச்சாமி சோகமாய் கூறினார்.

பெரிய ஆலமரத்தின் கீழ் பஞ்சாயத்து ஆரம்பித்தது. மூத்தவர்கள் பீடத்தில் அமர்ந்து, மக்கள் இருபுறமும் வரிசையாக நின்றனர். நடுவில் அன்னம் தலையை குனிந்து பாவமாய் நின்றாள். அருகில் கிருத்திஷ் பச்சை நிற சட்டை, ஜீன்ஸ், முகத்தில் ஒரு சீரியஸ் லுக் .

“கிருத்திஷ்,” என்று தலைவர் ராமசாமி சொன்னார்.

“நீ இந்த ஊருக்கு புதுசு. ஆனா உன் செயல் எல்லாருக்கும் அதிருப்தியை கொடுத்திருக்கு. கல்யாணம் ஆகாத வயசுப் பொண்ணை ஊரெங்கும் தூக்கி வர்றது நல்லது இல்லை. இதுவே நாளைக்கு ஒரு உதாரணமா இருக்க கூடாது. அதனால ஊர் பெரியவங்க நாங்க எல்லோரும் கூடி ஒரு முடிவு எடுத்திருக்கிறம்.” என்றார். 

அன்னம் நடுங்கிய குரலில், “ஐயா குறுக்கால பேசுறதுக்கு மன்னிச்சுக்கோங்க. ஐயா மாமா மேல எந்த தப்பும் இல்லை. நான் கீழே விழுந்துட்டேன். கால் சுளுக்கிடுச்சு. என்னால எந்திரிச்சு நிற்கக்கூட முடியல. அதனாலதான் மாமா என்னை தூக்கிட்டு வந்தாரு. வேற தப்பா எதுவும் இல்ல…” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

அதற்கு பஞ்சாயத்து மூத்தவர் ஒருவன், “அதெல்லாம் சரி வராது. அவன் செய்தது பிழைதான்.” என்று சொன்னதும் கூட்டத்தில் கிசுகிசு அதிகரித்தது.

பார்வதி கோபமாக எழுந்து நின்றார்.

“என் மகன் வெளிநாட்டில வளர்ந்தவன். கலாசாரம் தெரியாம இருக்கலாம். ஆனா அவன் கெட்ட காரியம் செய்ய மாட்டான். அன்னம் நல்ல பிள்ளைன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. ஏதோ மனிதாபிமானத்துல செய்ததை இப்படி பெரியவங்களே தப்பா பேசலாமா?” என்றார். 

இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு நின்ற கிருத்திஷ் தனது கைகளை இறுக மூடிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். 

மூத்தவர்கள் ஆலோசித்து, “சரி இதற்கு ஒரே ஒரு வழிதான் தீர்வு. ரெண்டுபேரும் கட்டிக்கிற முறை உள்ளவங்கதானே அதனால இப்பவே இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்.”என்றனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் கிருத்திஷ் மற்றும் அன்னம். அங்கு கூடி இருந்தவர்களோ, “ஐயா நீங்க சொல்றதுதான் சரி. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க. இதுக்கப்புறம் இந்த அன்னத்தை கல்யாணம் பண்ணிக்க யாரு வருவாங்க? நீங்க சொல்றதுதான் சரி.” என்றார்கள் ஒவ்வொருவரும். 

அன்னம் உடம்பெல்லாம் நடுங்கியது. “திருமணமா? அப்பா எங்கே? அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.

வேலுச்சாமி பக்கத்தில் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்தார். “என்ன செய்யறது? என் மகளின் கண்ணீரா? இல்ல ஊரின் பழியா? கடவுளே, நீயே காப்பாத்தணும்…”

கிருத்திஷ் அப்போதும் அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். ‘இவங்க என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்கிறாங்க. ஆனா… அன்னம் பாவம். அவளுக்குப் பழி வரக்கூடாது. அம்மா சோகமா இருக்கிறாங்க. மாமாவும் உடைஞ்சு போய் இருக்கிறாரு. சரி இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்ல… சொன்னாலும் இவங்க கேக்கிற மாதிரி இல்லை.’ என மனதிற்குள் பேசிக் கொண்டவன், இரண்டு நிமிஷம் அமைதிக்குப் பிறகு, கிருத்திஷ் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “சரி. நான் ரெடி. நீங்க சொன்ன மாதிரி அன்னத்தை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றான்.

அவனிடம் இருந்து இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்னம் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். கண்களில் கண்ணீருடன் 

“மாமா… நீங்க எவ்வளவு படிச்சிருக்கிறீங்க? பெரிய வேலை எல்லாம் பாக்குறீங்க. உங்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தம் இல்லை மாமா. எனக்கு கல்யாணம் நடக்கலனாலும் பரவாயில்லை. ஆனா உங்களுக்கு கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாத என்னை கல்யாணம் பண்ணி உங்களோட வாழ்க்கை வீணாகிறத என்னால ஏத்துக்க முடியாது மாமா.” என்றாள். அந்நிலையிலும் தன்னை பற்றி நினைக்கும் அன்னத்தின் மீது பெரிய மதிப்பு தோன்றியது கிருத்திஷிற்கு. 

பார்வதி அவளது கையைப் பிடித்து, “அன்னம், சில சமயம் வாழ்க்கை நம்ம விருப்பத்துக்கு புறம்பா நல்லதைக் கொடுக்கும். கவலைப்படாதே. என் மகன் உன்னை கஷ்டப்படவைக்க மாட்டான்.”

கிருத்திஷ் அவள் அருகே வந்து மெதுவாய் புன்னகை செய்தான்.

“நீ ரொம்ப யோசிக்காத அன்னம்.” என்றான். 

வேலுச்சாமிக்கு தனது மகளுக்கு இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளை கிடைக்கத்தான் இத்தனை நாளும் எந்த வரனும் சரியாக அமையவில்லையா என்று நினைத்தார். 

அதே நேரம் பூசாரி அழைத்து வரப்பட்டார். அருகில் இருந்த முருகன் சிலைக்கு முன்னர் வைத்து மஞ்சள் கயிறை எடுத்து கிருத்திஷிடம் கொடுத்த பஞ்சாயத்து தலைவர், “தம்பி அன்னத்தோட கழுத்தில தாலியை கட்டுங்க.” என்றார் பஞ்சாயத்து தலைவர்.

கிருத்திஷ் மஞ்சள் கயிறை எடுத்து அன்னத்தின் கழுத்தில் கட்டினான். பார்வதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அது மகிழ்ச்சியின் கண்ணீர். வேலுச்சாமி நிம்மதியாய் மூச்சுவிட்டார்.

நால்வரும் வேலுச்சாமியின் வீட்டில் இருந்தனர். முதலில் பேச ஆரம்பித்தது அன்னம் தான். 

“அத்தை நீங்க மாமாவை கூட்டிட்டு இங்க இருந்து போயிடுங்க. மாமாக்கு அவருக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த நாற்காலியை தூக்கி வீசியிருந்தான் கிருத்திஷ். 

கண்கள் சிவப்பாக, கைகள் முறுக்கேறி ஐயனார் போல நின்ற அவனைப் பார்த்து நடுங்கினாள் அன்னம். வேலுச்சாமியும் பயந்து விட்டார். பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் போது, அன்னத்தின் அருகே வந்து அவளது கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். அவனது இறுகிய பிடியில் அன்னத்திற்கு வலித்தது. 

“மாமா வலிக்குது.” என்றாள். அவளை முறைத்தவன், “என்னை என்ன பொண்ணுங்க பின்னாடி அலையுறவன்னு நினைக்கிறியா? நீ இல்லனா இன்னொருத்தினு நான் போக? இதோ பாரு கல்யாணம் நடந்தது நடந்ததுதான். இந்த ஜென்மத்துல நீதான் என்னோட பொண்டாட்டியை. நீ மட்டும்தான். உனக்கு என்னோட வாழ பிடிக்குதோ பிடிக்கலையா நீ எங்கூடதான் இருக்கணும்.” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். 

பார்வதிக்கு தனது மகன் சொன்னதைக் கேட்டு உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது. அன்னத்தை அணைத்து முத்தம் வைத்தவர், “அன்னம் நான் ஆசைப்பட்ட மாதிரியே நீ என் வீட்டு மருமகளா வந்திட்ட. கண்ணா என்ன சொல்லுவானோனு பயந்திட்டே இருந்தேன். ஆனா என்னோட வளர்ப்பு தப்பாகலனு நிரூபிச்சிட்டான். அன்னம் என் பையன் ரொம்ப கோபக்காரன்தான்மா. ஆனால் கோபம் இருக்கிற இடத்துலதான் குணமும் இருக்கும். அண்ணே நீங்க இனிமேல் அன்னத்தை நினைச்சி கவலைப்படாதீங்க. அவ வாழ்க்கை நல்லா இருக்கும்.” என்றார். 

அதைக் கேட்ட வேலுச்சாமி, “அம்மாடி பார்வதி என் பொண்ணை உன்னை நம்பி உன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறன். அவளை உன் பொண்ணு மாதிரி பாத்துக்கமா.” என்றார். 

அன்னம் தந்தையை அணைத்துக் கொண்டு அழுதாள். அவளது தலையை வருடி விட்டவர், “இதோ பாரு கண்ணு. நம்மளோட வாழ்க்கையில எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். நடக்கிறது எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்கணும்.” என்றார். 

“அண்ணே இப்போ நாம என்ன பண்றது? அன்னம் இங்கேயே இருக்கட்டுமா? இல்லனா அந்த வீட்டிற்கு கூட்டிட்டு போகட்டுமா?” என்று கேட்டார். 

“இதென்ன கேள்வி பார்வதி. அதுதான் அன்னம் இப்போ உன் வீட்டு மருமகளாச்சே. நீ தாரளமா கூட்டிட்டு போலாம்.”என்றார். 

அன்னம் அவரிடம், “அப்பா நான் உங்ககூட இருக்கிறேனே..” என்றாள். அதற்கு அவர் சிரித்துக் கொண்டு, 

“இங்க பாருடா கல்யாணமான பொண்ணு புகுந்த வீட்லதான் இருக்கணும். நீ வா நானே உன்னை அங்க அழைச்சிட்டு போய் விட்டுட்டு வந்திடுறன்.” என்றார். 

அன்னம் பார்வதி வீட்டிற்கு செல்லும் முன்னர் தாயின் படத்திற்கு முன்னால் சென்று விளக்கேற்றி வணங்கி விட்டு சென்றாள். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!