அன்னம் மெதுவாக உள்ளே சென்றாள். அங்கே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கிருத்திஷ் வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் பால் க்ளாஸை நீட்டினாள். கிருத்திஷ் எதுவும் பேசாமல் அதை வாங்கி குடித்து விட்டு க்ளாஸை அருகில் இருந்த மேசை மீது வைத்தான். அன்னம் என்ன செய்வது, எங்கே தூங்குவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்க அவளைப் பார்த்து, “இங்கேயே நைட் வரைக்கும் நிற்கிற ஐடியால இருக்கிறியா என்ன? வா வந்து தூங்கு. எனக்கு வொர்க் இருக்கு. நான் தூங்க டைமாகும்..”என்றான். அவளும், “சரிங்க மாமா..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பாயை எடுத்து கீழே விரிக்கச் செல்ல, “ஏய் என்ன பண்ற நீ? இது ஒன்னும் சீரியல் இல்லை. நம்மளோட நிஜ வாழ்க்கை.. நீ கீழே எல்லாம் படுக்கத் தேவையில்லை. எனக்கு பக்கத்தில் தூங்கு..” என்றான்.
அன்னமும் அவன் சொன்னதற்கு எதிர்த்து பேசாமல் அவனருகில் வந்து கட்டிலில் படுத்தாள். அன்னத்திற்கு உடல் நடுங்கியது. கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்க முயன்றாள். ஆனால் தூக்கம்தான் இவள் பக்கம் வருவேனா என்றது. மெல்ல திரும்பி கிருத்திஷைப் பார்த்தாள். கிருத்திஷ் வேலையில் மூழ்கி இருந்தான். அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மெல்ல அவனது டீஷர்டின் ஓரத்தை தனது விரல்களால் பிடித்தவள் சிறிது நேரத்திலேயே தூங்கிவிட்டாள்.
வேலை செய்து கொண்டிருந்த கிருத்திஷிற்கு கால் வர லேப்டாப்பை கட்டிலில் வைத்து விட்டு போனை எடுத்துக் கொண்டு எழுந்தான். அப்போது அவனது டீஷர்டினை அன்னம் இறுக்கிப் பிடித்தபடி தூங்குவதைப் பார்த்தவன் உதடுகளில் ஒரு புன்னகை தோன்றியது. அங்கிருந்து செல்லாமல் மீண்டும் கட்டிலில் அமர்ந்தான்.
“ஹலோ பாஸ்..”
“யெஸ் ஹென்றி”
“சார் சம் ப்ராப்ளம் ஹியர். வேர் ஆர் யூ ரிட்டர்ன் ஹியர்? யூ மஸ்ட் கம் சார்.”
“ஓகே ஹென்றி ஐ வில் கம் சூன்..”
“ஓகே பாஸ்..” என்றவன் போனை வைத்தான். கிருத்திஷ் லேப்டாப்பை க்ளோஸ் செய்து வைத்து விட்டு படுத்தான்.
அப்போது அன்னத்தின் கையில் இருந்து அவனது டீஷர்ட் விடுபட்டதும் தூக்கத்தில் சிணுங்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்த கிருத்திஷ் மெல்ல அவளை தட்டிக் கொடுத்தான். அவளும் மெல்ல புரண்டு கிருத்திஷின் கையை பிடித்து அதில் முகத்தை வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். கிருத்திஷ்தான் அவளது நெருக்கத்தில் தூங்காமல் விழித்திருந்தான். ஏனோ இதுவரை அவனிடம் அடங்கிப் போயிருந்த உணர்வுகள் அன்னம் அவனருகில் வரும் போதெல்லாம் எகிறி குதிக்க ஆரம்பித்தன. அதை கட்டுப்படுத்துவது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
அன்னத்தின் புறம் திரும்பினான் கிருத்திஷ். அவளது குழந்தை போன்ற முகம் அவனை ஈர்த்தது. இயற்கையாகவே சிவந்த அவளின் இதழ்களில் சில நிமிடங்கள் அவனின் பார்வை நின்றது. உதட்டின் கீழே இருக்கும் மச்சம் அவனை தன்னிடம் நெருங்கச் சொல்லியது. அவளது முகத்தை நோக்கி குனியச் சென்றவன் தடுத்தது அவனின் மனசாட்சி.
“கிருத்திஷ் இது தப்பு. ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவளை நெருங்கிறது ரொம்ப தப்பு.” என்றது. அதற்கு அவனோ, “இவ ஒண்ணும் யாரோ இல்லை என்னோட பொண்டாட்டி.. எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு..”
“என்னதான் ரைட்ஸ் இருந்தாலும் அவ தூங்கும் போது இப்படி பண்றது தப்பு..” என்றது.
“நீ என்ன வேணாலும் சொல்லு நான் என் பொண்டாட்டியை கிஸ் பண்ண யாரோட சம்மதமும் தேவையில்லை..” என்றவன் உதடுகள் அவனது மனசாட்சியை விரட்டி விட்டு அவளது மச்சத்தில் முத்தமிட்டது. அப்படியே அவளது உதடுகளில் இடம்மாறின அவனது உதடுகள். இனிப்பை தேடும் எறும்பு போல அவனது உதடுகள் அவளது இதழ்களை விட்டு வர மறுத்தன. மெல்ல மெல்ல அவளது இதழ் சுவையில் மயங்கினான் கிருத்திஷ். சில நிமிடங்களில் அன்னம் தூக்கத்தில், “ஆஆஆ..” என்றதும் நினைவுக்கு வந்த கிருத்திஷ் அவளது உதடுகளுக்கு விடுமுறை வழங்கினான். அன்னத்தின் உதடுகளோ நன்கு சிவந்து இருக்க, தன்னை நினைத்து சிரித்துக் கொண்டவன் அவளை அணைத்துக் கொண்டு தூங்கினான்.
அடுத்த நாள் காலையில் முதலில் கண்விழித்தது அன்னம்தான். எந்திரிக்க போனவளை மேலும் இறுக அணைத்தது கிருத்திஷின் கைகள். விழிகளை உருட்டி விழித்தவள் பதறினாள்.
‘ஐயையோ மாமா மேலே தூங்கிட்டேனே.. மாமா பாத்தா எதும் நினைச்சிட்டாங்கனா என்ன செய்றது? மெல்ல இங்க இருந்து போயிடு அன்னம்..” என்றவள் அவனது கையை மெல்ல தூக்க முயன்றாள். பாவம் ஜிம்பாடியான கிருத்திஷின் கையை அவளால் அசைக்க முடியவில்லை. முயன்று தோற்றவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து விட்டாள். மெல்ல அவனது ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்த கிருத்திஷிற்கு அவள் மீது பாவம் வர, மறுபக்கம் புரண்டு படுப்பது போல அவள் மீதிருந்த தனது கையை எடுத்தான். விட்டா போதும்டா சாமி என்று கிடைத்த இடைவெளியில் அங்கிருந்து ஓடி விட்டாள் அன்னம்.
குளித்து விட்டு வந்தவள் வாசலில் கோலம் போட்டு விட்டு சமையல் அறையில் வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அங்கே வந்தார் பார்வதி.
“அன்னம் எந்திரிச்சிட்டியா? சரி நீ போய் கிருத்திஷைப் பாரு நான் இங்க வேலையை பார்க்கிறன்..”
“மாமா தூங்கிட்டு இருக்கிறாங்க அத்தை.. நான் காப்பி போட்டுட்டன். சாப்பாடு மட்டும் செய்தா போதும்.. நீங்க போங்க நானே சமைச்சிடுறன்..” என்றாள்.
“நீ போ அன்னம் இதை நான் பாத்துக்கிறன்.. முதல்ல சாமி கும்பிட்டுட்டு நெற்றியில குங்குமத்தை வை.. கல்யாணமான பொண்ணுங்க உச்சி வகிட்டில பொட்டு இல்லாம இருக்கக்கூடாது.” என்று சொன்னதும் அன்னமும் சரி என்று தலையையாட்டி விட்டு சுவாமி அறைக்குச் சென்று குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்து விட்டு அறைக்குள் சென்றாள்.
அங்கே கிருத்திஷ் எழுந்து குளித்து விட்டு தலை சீவிக்கொண்டு இருந்தான். அவனின் அருகில் வந்தவள், “மாமா..” என்றாள்.
“ம்ம்ம்.”
“இந்த குங்குமத்தை என்னோட வகிட்டில வைச்சு விடுறீங்களா?” என்று கேட்டாள்.
“ம் கொடு..” என்றான். அவளது முகம் மலர்ந்தது. தனது கையை அவன் முன்னால் நீட்டினாள். அதில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்தான். அவன் குங்குமம் வைக்கவும் அவள் உடல் சிலிர்த்தை கிருத்திஷால் உணர முடிந்தது. அடுத்து தாலியை எடுத்து அவனிடம் நீட்டி அதிலும் குங்குமம் வைக்கச் சொல்ல அவனும் தாலியில் குங்குமம் வைத்தான். தாலியை தனது கண்களில் ஒற்றிக் கொண்டவள், அவன் காலில் விழுந்தாள். பதறிப்போன கிருத்திஷ், “என்ன பண்ற நீ எந்திரி..” என்றான்.
“மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்றாள்.
“என்ன அன்னம் நீ? இப்படி நீ என் கால்ல விழாத எனக்கு பிடிக்காது..”
“மாமா நீங்க என்னோட கணவர்.. உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறது தப்பில்லை..” என்றாள். ‘இவ விடமாட்டா போலயே..’ என நினைத்தவன், “எப்பவும் சந்தோஷமா இரு அன்னம்..” என்றவன் அவளை தூக்கி விட்டான். அவனது முகம் பார்த்து சிரித்து விட்டு, “நான் உங்களுக்கு காப்பி எடுத்திட்டு வர்றன் மாமா..” என்று பார்வதிடம் செல்ல, அங்கே ஹாலில் வேலுச்சாமி இருந்தார். அவரிடம் பேசிக் கொண்டு இருக்க, கிருத்திஷ் அங்கே வந்தான். அப்போதுதான் அவளுக்கு காப்பி எடுத்து வர வந்தது ஞாபகம் வந்தது.
தலையில் அடித்துக் கொண்டவள் வேகமாக சமையல் அறைக்குச் சென்று பார்வதி போட்டு வைத்திருந்த காப்பியை எடுத்துப் பார்க்க, அதுவோ ஆறிப் போயிருந்தது. உடனே புதுக் காப்பி போட்டு கிருத்திஷிற்கும் வேலுச்சாமிக்கும் எடுத்து வந்து கொடுத்தாள். கிருத்திஷிடம் காப்பியை கொடுக்கும் போது அன்னம் அவனிடம் கண்களால் கெஞ்சினாள். அவன் எதுவும் பேசாமல் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காப்பியை எடுத்தான்.
பார்வதி வந்து, “எல்லோரும் வாங்க குலதெய்வம் கோயிலுக்கு போலாம்.. அண்ணன் குலதெய்வத்துக்கு வேண்டுதல் செய்யத்தான் இங்க வந்தோம். இப்போ என் பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சி.. கோயிலுக்கு போய் பொங்கல் வைச்சிட்டு வேண்டுதலையும் பண்ணிட்டு வரலாம்..” என்றார்.