அனைவரும் ரெடியாகி குலதெய்வக் கோயிலுக்குச் சென்றனர். போகும் போது கிருத்திஷ் மற்றும் அன்னத்தின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டார் பார்வதி. அங்கே சென்று கோயிலே வலம் வந்து வணங்கி விட்டு வர யோசியரும் அங்கே வந்து சேர்ந்தார். “வாங்கம்மா வாங்க, இப்படி உக்காருங்க..”
“யோசியரே குலதெய்வத்துக்கு பொங்கல் பண்ணிட்டு, பூஜை செய்யலாம்னு வந்திருக்கிறோம்.. அப்பிடியே இவங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பார்க்கலாம்னு நினைக்கிறேன்..”
“அதுக்கென்ன எல்லாத்தையும் சிறப்பா பண்ணிடலாம்.. திடீர்னு நடந்த கல்யாணம்னு பயப்படுறீங்களா? இந்த ஆத்தாவோ ஆணை இல்லாம எதுவும் நடக்காது. ஜாதகத்தை கொடும்மா..”என்றவரிடம் இருவரின் ஜாதகத்தையும் கொடுத்தார் பார்வதி.
இரண்டு ஜாதகத்தையும் நன்றாக பார்த்தார். பின்னர் இவர்களின் பக்கம் பார்த்து, “இந்த ரெண்டு ஜாதகமும் ரொம்ப பொருத்தமா இருக்கு ஆனா…” என்று இழுத்தார். அவர் ஆனா என்று இழுத்ததைப் பார்த்து பதறிய வேலுச்சாமி,
“என்ன யோசியரே ஆனானு இழுக்குறீங்க..” என்று பதட்டத்துடன் கேட்டார்.
“பயப்படாதீங்க இவங்க கல்யாணம் நடந்த நேரம் தான் சரியில்லை.. அதுக்கு பரிகாரம் பண்ணினா இவங்க ரொம்ப சந்தோஷமா நல்லா இருப்பாங்க.”
“பரிகாரமா என்ன பரிகாரம்?” என்றார் பார்வதி.
“அங்க இருக்கிற அம்மனுக்கு நூற்றி எட்டு குடம் தண்ணீர் ஊற்றி ஒன்பது விளக்கு ஏற்றி வேண்டினா இவங்க வாழ்க்கை அமோகமா இருக்கும்.”
இதைக் கேட்ட கிருத்திஷ், “அம்மா இதெல்லாம் என்ன?”என்றான்.
“கொஞ்ச நேரம் அமைதியா இரு கண்ணா.” என்றவர் யோசியரிடம் திரும்பி, “எங்களோட வேண்டுதலையும் பூஜையையும் முடிச்சிட்டு அப்புறமா பரிகாரத்தை செய்யலாமா?” என்று கேட்டார்.
“உங்க வசதிப்படி செய்ங்க..” என்றார்.
பின்னர் பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்தவர்கள் ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்தனர். பார்வதிக்கு பக்கத்தில் இருந்து உதவி செய்தாள் அன்னம். பொங்கல் பொங்கி பூஜையை நல்லபடியாக முடித்து விட்டு ஒரு மரத்தின் கீழே வந்து அமர்ந்தனர்.
அன்னம் மெல்ல பேச ஆரம்பித்தாள். “அத்தை நான் பரிகாரம் செய்ய ஆரம்பிக்கட்டுமா?”
“உனக்கு என்ன பைத்தியமா அன்னம்? நூற்றி எட்டு குடம் தண்ணீர் ஊத்துறது கூட பரவால்ல. அதை அந்த குளத்தில இறங்கி இத்தனை படி ஏறி ஊத்தணும் அது முடியுமா? நீ எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம்..” என்றான்.
அதற்கு பார்வதி, “கண்ணா யோசியர் சொன்ன பரிகாரத்தை செய்யாம ஏதாச்சும் ஒண்டுகிடக்க ஒண்ணு ஆயிடிச்சுனா என்ன பண்றது?”
“என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த பரிகாரம் செய்ய நான் ஒத்துக்க மாட்டேன்..”
“மாப்ள அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க.. பரிகாரம் செய்தா நமக்கும் மனசுக்கு நிம்மதியா இருக்கும்.. என் பொண்ணு அதை எல்லாம் பண்ணிடுவா.”
“ஆமா மாமா சாமிக்குத்தானே செய்யப் போறேன்.. என்னால செய்ய முடியும். தயவு செய்து தடுக்காதீங்க..” என்றாள். கிருத்திஷ் கோபத்தோடு, “ஏதாச்சும் பண்ணு..” என்றவன் அங்கிருந்து விலகிச் சென்றான்.
“வாங்க அத்தை.” என்றவள் பரிகாரத்தை செய்ய ஆரம்பித்தாள். பார்வதி அம்மனின் சிலை அருகே நின்றிருந்தார். வேலுச்சாமி கீழே இருந்த படிகளில் இருந்தார்.
பரிகாரத்தைச் செய்து கொண்டிருக்கும்போது அங்கே வந்தான் கிருத்திஷ். எதுவும் பேசாமல் அன்னத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். ஐம்பது குடத்து நீரை ஊற்றிய அன்னத்தினால் அதற்கு மேல் இயலாமல் போய்விட்டது. அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள். இருந்தாலும், அவள் பரிகாரம் செய்வதை நிறுத்தவில்லை. அவளது சோர்வு கிருத்திஷுக்கு நன்றாக விளங்கியது. “அன்னம் போதும், இதோடு நிறுத்திக்கோ, உன்னால் முடியலை.” என்றான்.
ஆனால் அவள், “இல்லை மாமா, என்னால் முடியும். பரிகாரத்தை இடையில் விடுவது சரியில்ல.” என்றாள். கொஞ்ச நேரம் நின்றுவிட்டு, மீண்டும் பரிகாரத்தை ஆரம்பித்தாள். பார்வதி அவளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். அதை அவள் வாங்காமல், “இல்ல அத்தை பரிகாரம் முடியும் வரைக்கும் நான் எதுவும் சாப்பிட மாட்டேன்.” என்று சொல்லி, மீண்டும் ஆரம்பித்தாள்.
குளத்துக்கு இறங்கி தண்ணீரை எடுத்து, தள்ளாடி வந்து அம்மனுக்கு தண்ணீரை ஊற்றினாள். எப்படியோ தட்டுத் தடுமாறி எண்பது குடத்து தண்ணீரை ஊற்றிவிட்டாள். இப்போது அவளால் நன்றாக முடியாமல் போக, தண்ணீர் குடத்தை எடுத்து வரும்போது தடுமாறி விழப்போனாள். அன்னத்தை தாங்கிப் பிடித்தான் கிருத்திஷ். அவள் நடந்து வரும்போது அவளையே பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அதனால் அவள் விழப்போவது தெரிந்தவுடன், சட்டென்று அவளைத் தாங்கிப் பிடித்தான்.
அங்கே இருந்த படிக்கட்டில் உட்கார வைத்தவன், “நான் தான் சொன்னேனே இதை விடுனு, நீ எதற்கு இவ்வளவு கஷ்டப்படுற?” என்றான்.
“இல்லை மாமா, இந்த பரிகாரத்தைச் செய்தே ஆகணும். இது செய்யலைன்னு அப்புறம் ஏதாச்சும் பிரச்சனை வந்துட்டா ‘ஐயோ, பரிகாரம் செய்திருக்கலாமே’னு நான் நினைக்கக் கூடாது இல்லையா? என்னால் முடியும் மாமா. என் உயிரே போனாலும் இந்த பரிகாரத்தைச் செய்து முடிப்பேன்.” என்றாள்.
உடனே கிருத்திஷ் அங்கிருந்த ஜோசியரிடம் சென்றான். “ஜோசியரே, இந்த பரிகாரத்தை அன்னம் மட்டும்தான் செய்யணுமா? நான் செய்தா சாமி ஏத்துக்காதா?” என்றான். ஜோசியர், “நீங்க தாராளமா செய்யலாம் தம்பி. அது ஒரு பிரச்சனையே இல்லை. நீங்க வேற, அவங்க வேற இல்ல. கணவன் மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம். இல்லைனா கணவன் மட்டும் செய்தாலும் சரி, மனைவி மட்டும் செய்தாலும் சரி. அதுல ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனா, பரிகாரத்தை இடையில் நிறுத்தக்கூடாது.” என்றார்.
“சரி.” என்று அவரிடம் சொல்லிவிட்டு பார்வதியிடம் வந்தவன், “அம்மா ஜோசியர்ட கேட்டேன். நான் செய்தாலும் சரிதான்னு சொல்லிட்டாரு.” என்று சொல்ல அன்னமோ, “நீங்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் மாமா? மிச்ச குடத்தை நான் ஊற்றி முடிச்சிடுறேன். இன்னொரு இருபது குடம் தானே நான் பார்த்துக்கிறேன்.” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தவன், “சொன்னதை மட்டும் செய், அமைதியா இந்த படியில உக்காரு..”
“இல்லை மாமா நானே இதை செய்றேன்..” என்றவள், பிடிவாதமாக மறுத்தாள். பார்வதி அமைதியா இருந்தார்.
வேலுச்சாமி, “மாப்ள அன்னம் இதை செய்யணும்னு நினைக்கிறார். அவளே செய்யட்டுமே.. வேணும்னா கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அப்புறம் பண்ணட்டும்” என்றார்.
கிருத்திஷ் அன்னத்தை பார்த்து விட்டு, “இப்போ என்ன நீதான் இதை செய்யணும் அப்படித்தானே..” என்று கேட்டவன் சட்டென்று தனது கைகளால் அவளைத் தூக்கிக்கொண்டான்.
“யாரு பார்த்தா என்ன? முன்னாடி தூக்கிட்டு போனது தானே? ஏதோ உன்னை தப்பு பண்ண தூக்கிட்டு போன மாதிரி பேசித்தானே எனக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க. இப்ப எனக்கு உன்னைத் தூக்க ஃபுல் ரைட்ஸ் இருக்கு. நீ என் பொண்டாட்டி நான் தூக்கலாம்.” என்று அவளைக் குளத்திற்கு அருகே தூக்கி வந்தான்.
அவள் குடத்தில் தண்ணீர் எடுத்ததும் மீண்டும் படிக்கட்டு வழியாகத் தூக்கிச் சென்று, அம்மனுக்கு தண்ணீரை ஊற்ற வைத்தான். இப்படியாக இருபத்தெட்டு குடங்களையும் ஊற்றி, பரிகாரத்தை முடித்தாள். அன்னத்தை தனது மாப்பிள்ளை கையில் தாங்குவதைப் பார்த்த வேலுச்சாமியின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. பார்வதியோ ‘எப்படி இருந்த என் பையன் இப்படி மாறிட்டானே.’ என்று நினைத்து சந்தோஷப்பட்டார். மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததால் அவருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பரிகாரத்தை எல்லாம் நல்லபடியாக முடித்துவிட்டு, அனைவரும் வீட்டுக்கு வந்தனர். பார்வதி, “அன்னம், நீ போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடும்மா. உடம்பு அசதியா இருக்கும்.” என்றார். அவளும், “சரிங்க அத்தை.” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று குளித்துவிட்டு, கட்டிலில் படுத்துவிட்டாள்.
பார்வதி கிருத்திஷிடம் வந்தார். “கண்ணா, நீ நிஜமாலுமே அன்னத்தை உன் மனைவியா ஏத்துக்கிட்டியா?” என்று கேட்டார். “அம்மா, நான் முன்னாடியே சொன்னேன். கல்யாணம் பண்றதுக்கு எனக்கு இஷ்டம் இல்லை. ஆனா, கல்யாணம் பண்ணிட்டேன். என் லைஃப்ல கடைசி வரை அன்னம் தான் என் பொண்டாட்டி. ஆனா, நான் கொஞ்சம் பேசி பழகணும். அவ என்னோட பேசுறதுக்கே பயப்படுறா.” என்றான்.
அதற்குப் பார்வதி, “நீ பேசுறதைப் பார்த்தா நானும் தான் பயப்படுறேன். அவள் மட்டும் எப்படி பயப்படாம இருப்பா? நீதான் அவளை அன்பா பார்த்துக்கணும்.” என்றார்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம், பார்த்துக்கலாம்..” என்று ஒட்டாத பேச்சில் பேசியவன் சென்றுவிட்டான்.
அறையில் கால் வலியில் உருண்டு உருண்டு படுத்தாள். ஃப்ரெஷாகிவிட்டு வந்த கிருத்திஷ் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அவள் அதற்குள் தூங்கி இருந்தாள். அவள் முகத்தில் இருந்த வலியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், ‘இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பரிகாரம் செய்யணுமா’ என்று நினைத்தான்.
அன்னத்திற்கு கால் மிகவும் வலிக்க, அங்கும் இங்கும் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த கிருத்திஷ், அவளது காலைத் தன் கைகளால் மெல்ல மெல்ல கால்களைப் பிடித்துவிட்டான். அவன் கால் பிடித்துவிட்ட சுகத்தில் காலை அசைக்காமல் அப்படியே படுத்து நன்றாகத் தூங்கினாள்.
அன்னம் நன்றாக உறங்கிவிட்டாள் என்பது அறிந்த கிருத்திஷும், அவளின் கால் பிடிப்பதை நிறுத்தவில்லை. காலெல்லாம் அவளுக்கு புண்ணாகி இருந்தது. தனது பையில் இருந்த ஆயின்ட்மென்ட்டை எடுத்து வந்து காலில் பூசினான். அந்த ஆயின்ட்மென்ட் குளிர்ச்சியில் அன்னத்திற்கு விழிப்பு வந்தது.
கண்ணை விழித்துப் பார்க்க, கிருத்திஷ் அவளது காலைப் பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. “ஐயோ மாமா என்ன பண்றீங்க?” என்று காலை அவனின் பிடியில் இருந்து வேகமாக இழுத்தாள். ஆனால் கிருத்திஷ் அவளிடம் “காலை நீட்டு அன்னம் மருந்து போடணும்.” என்றான்.
“ஐயோ மாமா, நீங்க என்ன இப்படி சொல்றீங்க? நீங்க போய் என் காலை பிடிக்கலாமா?” என்றாள். அதற்கு கிருத்திஷ், “ஏன், காலை பிடிச்சா என்ன தப்பு? நான் காயத்துக்கு மருந்து போட்டுக்கிட்டு இருக்கேன். அதுக்கு என்ன? இங்கே குடு.” என்றான்.
“ஐயோ மாமா என்ன நீங்க? மாமா, நீங்க போய் என்னோட காலை பிடிக்கலாமா? இதை ஊர்ல யாராவது பார்த்தா தப்பா பேசுவாங்க,” என்றாள்.
“அதெல்லாம் அப்புறமும் பார்க்கலாம். முதல்ல காலை நீட்டு..” என்று காலை பிடித்து இழுத்தான். “வேண்டாம், வேண்டாம்,” என்று பிடிவாதம் பிடித்தாள். “ஏய், காலைக் கொடு,” என்று அவன் கோபக் குரலில் சத்தமிட, அவனிடம் காலை நீட்டிவிட்டாள்.
கிருத்திஷ் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, மருந்து போட்டுவிட்டான். அன்னத்திற்கு தூக்கம் தூரச் சென்றுவிட்டது. கிருத்திஷை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் அன்னம். கட்டுக்கடங்காமல் அலைபாயும் அவனது அழகான கேசம் நெற்றியில் விழுந்திருந்தது. அதைப் பார்த்தவுடன், அதை எடுத்துவிட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால், இவன் ஏதாவது நினைத்து விடுவானோ என்று அமைதியாக இருந்துவிட்டாள்.