நயமொடு காதல் : 14

4.7
(7)

காதல் : 14

அடுத்த நாள் காலையில் அன்னம் வழமை போல எழுந்து வேலைகளை செய்ய வேலுச்சாமி தோட்டத்திற்குச் சென்றார். பார்வதியும் காலை உணவுக்கு வேலை செய்து கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த கிருத்திஷ், “அம்மா எப்போ கிளம்பலாம்னு இருக்கிறீங்க?” என்று கேட்டான். 

அதற்கு பார்வதியோ, “என்னப்பா இங்க வந்து கொஞ்ச நாள் தானே.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாமே..” என்றார். 

உடனே கிருத்திஷ், “இல்ல அம்மா எனக்கு அங்க வேலை இருக்கு.. முக்கியமான ப்ரொஜெக்ட் ஒண்ணு சைன் பண்ணி இருக்கு.. நான் போயாகணும்..” 

“கண்ணா அப்போ அன்னம்? அன்னத்தை என்ன பண்றது?”

“அன்னத்தை என்ன பண்றதுன்னு என்ன கேள்வி அம்மா கேக்குறீங்க அன்னத்தை நம்ம கூட கூட்டிட்டு போகத்தானே வேணும்..” என்றான் அதற்கு பார்வதியும், “அவளுக்கு பாஸ்போர்ட் ஒண்ணும் எடுக்கலையே..”

“அதெல்லாம் எடுத்துக்கலாம் அம்மா..” என்று கிருத்திஷ் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த அன்னமும், “மாமா நான் அங்க வரல.. நான் இங்கேயே அப்பா கூட இருக்கேன்.. நீங்க போயிட்டு வாங்க..” என்றாள். 

அவளை முறைத்துப் பார்த்த கிருத்திஷ் அவளிடம் எதுவும் பேசாமல், “நான் நாளைக்கு கிளம்புறேன் அம்மா.” என்றவன் அறைக்குள் சென்று விட்டான். 

அவன் கோபமாக செல்வதை உணர்ந்த பார்வதி, “ஏன் அன்னம் நீ சொல்றது உனக்கே சரியா இருக்கா? நீ இங்க அவன் அங்க இருக்கணும்னா எதுக்கு இந்த கல்யாணம்?” என்று கேட்டார் பார்வதி. அதற்கு அன்னமோ, “அத்தை அப்பாவை இங்க தனியா விட்டுட்டு நான் எப்படி அத்தை அங்க வர்றது?” “அண்ணனை யாரு இங்க விட்டுட்டு போறது? அவங்களையும் நம்ம கூட கூட்டிட்டு போலாம்.. எனக்கு தெரிஞ்சு கிருத்திஷ் உன்னை மட்டும் கூட்டிட்டு போகணும்னு சொல்ல வரல.. கண்டிப்பா அண்ணனையும் கூட்டிட்டு போறதா தான் இருந்திருப்பான்.. நீ தான் இடையில வந்து அவனை கோபப்படுத்திட்ட போ போய் அவன்கிட்ட பேசு..” என்று பார்வதி சொன்னதும், “போங்க அத்தை நீங்கள் வேற மாமா கிட்ட பேசு பேசுனது சொல்றீங்க.. எனக்கு மாமாவை பார்த்தாலே பயமா இருக்கு.. பேசவே வருது இல்ல..” என்றாள். 

அதைக் கேட்டு சிரித்த பார்வதி, “இங்க பாரு அன்னம் அவன் உன்னோட புருஷன்.. அவன பார்த்து நீ எதுக்கு பயப்படணும்?”

“நல்லா சொல்றீங்க அத்தை. அவரோட அம்மா நீங்களே பயப்படும்போது நான் பயப்பட மாட்டேனா?”

“இந்த வாயை என்கிட்ட காட்டுறதுக்கு கொஞ்சம் அவன்கிட்டேயே போய் பேசு..” என்று அவளை அனுப்பிவிட்டார். 

கிருத்திஷ் அறைக்குள் இருந்தவன், பையில் அவனது உடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான். 

அறைக்குள் வந்தவள், “மாமா..”என்றாள். அவனும் கருமமே கண்ணாக தனது வேலையை செய்து கொண்டிருந்தான். 

“மாமா என்கூட கோவமா இருக்கீங்களா?”

“நான் யாரு மேடம் உங்க மேல கோபப்பட? எனக்கு எந்த கோபமும் இல்லை.” என்றவன் வேறு பேச்சு பேசவில்லை. 

“மாமா ஏதோ தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுக்கோங்க மாமா.” என்றாள். அதற்கு கிருத்திஷோ எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தான். அன்னத்திற்கு ஒரு மாதிரியாகி விட அங்கிருந்து சென்று விட்டாள்.

வேலுச்சாமி வந்ததும், “அண்ணே, கிருத்திஷ் ஊருக்கு போகணும்னு சொல்றான். அவனுக்கு முக்கியமான வேலை இருக்கு.” என்று பார்வதி சொல்ல, “அப்படியா பார்வதி அப்போ, அன்னத்தையும் மாப்பிள்ளை அவர்கூட அழைச்சிட்டு போயிடுவார் தானே?” என்றார் வேலுச்சாமி. 

“இல்லண்ணே, எனக்கு தெரிஞ்சு, கிருத்திஷ் அன்னத்தை மட்டும் இல்ல, உன்னையும் கூட கூட்டிட்டு போகலாம்னு இருக்கிறான் போல.” என்று பார்வதி சொன்னார். 

“இல்ல பார்வதி, அது சரி இல்ல.. நான் இங்கேயே இருந்துடுவேன்.” என்றார் வேலுச்சாமி. 

“அண்ணேன் நீங்க மட்டும் இங்கே தனியா இருந்து என்ன பண்ணுவீங்க? எங்க கூட வந்திருங்க அண்ணேன் நல்லா இருக்கும். அதுவும், அன்னம் உங்களை விட்டுட்டு இருக்கமாட்டான். அங்க அவ வந்தாலும் அவ மனசு முழுக்க இங்கே தான் இருக்கும்.” என்றார் பார்வதி. 

“தப்பா எடுத்துக்காதமா என்னால அங்க வர முடியாது பார்வதி. நான் இங்கேயே இருக்கேன். என் உயிர் இங்கேயே போகட்டும்.” என்றார் வேலுச்சாமி. 

அங்கே வந்த கிருத்திஷ், “மாமா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான். 

“சொல்லுங்க மாப்ள என்ன விஷயம்?” என்றார். 

“அம்மா நான் மாமா கூட பேசிட்டு வந்துடறேன்.” என்றவன், அவரை அழைத்துக்கொண்டு அவர்களது வீட்டிற்கு வந்தான். 

“மாமா, நான் ஒன்னு கேட்பேன். நீங்க மறைக்காம உண்மைய சொல்லணும்.” என்றான். 

“என்ன மாப்ள இப்படி சொல்றீங்க ? உங்ககிட்ட நான் எதை மறைக்கப் போறேன்? கேளுங்க மாப்ள உங்களுக்கு என்ன தெரியணும்?” என்று கேட்டார். 

அதற்கு கிருத்திஷ், “மாமா உங்களுக்கு நிஜமா என்ன பிரச்சனை? உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு எனக்கு புரியுது. ஆனா, என்னன்னு தான் தெரியல. என்ன பிரச்சனை மாமா?” என்று கேட்டான். 

வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தாலும் அதை சமாளித்துக் கொண்டு, “எனக்கா? எனக்கு என்ன பிரச்சனை மாப்ள? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன்.” என்றார். 

“இல்ல மாமா நீங்க பொய் சொல்றீங்க. உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. சொல்லுங்க, மாமா.” என்றான். 

“ஐயோ மாப்ள நிஜமாவே எனக்கு ஒன்னும் இல்ல.” என்றார். “அப்படியா? அப்போ இந்த ஃபைல்ல போட்டிருக்கிற ரிப்போர்ட் ஏதோ சொல்லுது. அதெல்லாம் பொய்யா மாமா?” என்று அதை அவரிடம் காட்டினான். 

அதைப் பார்த்த வேலுச்சாமி, “மாப்ள, இது எப்படி உங்ககிட்ட?” என்று கேட்டார். 

“சொல்லுங்க, மாமா, உங்களுக்கு ஹார்ட்ல பிரச்சனை. நீங்க ஏன் இதை எங்ககிட்ட சொல்லல,” என்றதும், அந்த இடத்திலேயே உடைந்து அமர்ந்த வேலுச்சாமி, “என்னை என்ன செய்யச் சொல்றீங்க மாப்ள? யாருகிட்ட சொல்லுவேன்? என் பொண்ணுக்கிட்டேயா? அவளே ஒரு அப்பாவி. எனக்கு இப்படி ஒரு வருத்தம் இருக்குனு தெரிஞ்சால் அவ அவளோட உயிரை விட்ருவா மாப்ள. வேற யாரு இருக்கா எனக்கு இதைச் சொல்ல? அதுவுமில்லாம, இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா இல்லையானு தெரியாது. அதனாலதான் இந்த ஆபரேஷன் கூட நான் வேணாம்னு சொல்லிட்டேன். நான் எவ்வளவு நாள் வரைக்கும் இருப்பேன்னு தெரியல. அது வரைக்கும் என் பொண்ணு கூட இருந்தா, அதுவே போதும். அதுவும் இப்ப அவளுக்கு நல்ல வாழ்க்கை வேற கிடைச்சிருக்கு. மாப்ள, எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க. என் பொண்ணை நீங்க போகும்போது கூட்டிட்டு போயிடுங்க. அவளால என் பிரிவை தாங்க முடியாது. என் கூட இருந்தானா அவளால அதை தாங்கிக்க முடியாது மாப்ள.” என்றார். 

“ஏன் மாமா, இப்படி எல்லாம் சொல்றீங்க? முன்னாடி தான் யாரும் இல்லை. ஆனா, இப்போ நான் இருக்கேன் இல்லையா? எங்க அம்மா இருக்காங்க, அப்பா இருக்காங்க. நாங்க பாத்துக்க மாட்டோமா? இங்க பாருங்க மாமா, உங்க பொண்ணை உங்ககிட்ட இருந்து நான் கூட்டிட்டு போயிட்டா, அதுக்கப்புறம் உங்களுக்கு ஏதாவது நடந்தா, அவள் என்னை மன்னிப்பாளா? சொல்லுங்க. இல்லவே இல்லை. உங்களை விட்டுட்டு அங்க வந்து என் கூட சந்தோஷமா இருந்துருவாளா? இல்ல. 

மாமா இங்க பாருங்க, நான் இப்போ கண்டிப்பா அமெரிக்காவுக்கு போயே ஆகணும். போயிட்டு, உங்களோட ரிப்போர்ட்டை பெரிய டாக்டர்கிட்ட காட்டுறேன். கவலைப்படாதீங்க மாமா. இப்போ மருத்துவம் எவ்வளவு முன்னேறி இருக்கு? உங்களை நிச்சயமா நான் காப்பாத்துவேன்.” என்றான் கிருத்திஷ்.

 “ஐயோ, மாப்ள, அதெல்லாம் எதுக்கு? என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சி எனக்கு அதுவே போதும். இந்த சந்தோஷத்தோடையே நான் போயிடுவேன்.” என்றார் வேலுச்சாமி. 

“மாமா, அப்படி சொல்லாதீங்க. இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேணாம். நான் போயிட்டு என்ன பண்ணணும்னு சொல்றேன். அப்புறம், என் தம்பி ரோஹித் வந்து, இங்கிருந்து உங்க பேரோட பாஸ்போர்ட்டை பார்த்துக்கொள்ளுவான் சரியா? நீங்க கவலைப்படாதீங்க.” என்றான் கிருத்திஷ். 

“மாப்ள, உங்ககிட்ட ஒரு விஷயம். இது என் பொண்ணுக்கு தெரிய வேணாம் மாப்ள” என்றார். 

“சரி மாமா நான் சொல்லல.” என்றான் கிருத்திஷ். இருவரும் வீட்டிற்கு வந்தனர். 

“என்ன, மாப்ளையும் மாமனாரும் இரகசியம் பேசி முடிச்சாச்சா?” என்று பார்வதி கேட்க, “ஆமா, பார்வதி.” என்று சிரித்தார் வேலுச்சாமி. “அம்மா, நான் நாளைக்கு காலைல கிளம்புறேன்.” என்றான் கிருத்திஷ். “இருந்துட்டு போலாம்ல?” என்றார் பார்வதி. 

“நோ வே மம்மி, நான் உடனே போகணும்னு. நீங்க ரோஹித் வந்ததுக்கப்புறம், இங்க இருக்கிற வேலையை எல்லாம் முடிச்சுட்டு வாங்க.” என்றான். அன்று இரவும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர். அறைக்குள் வந்த பின்னர், அன்னம் கிருத்திஷுடன் பேச முயற்சித்தாள். ஆனால், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அதற்கும் அன்னத்திற்கு அழுகை வந்தது. “மாமா.” என்று கிருத்திஷ் அருகில் வந்தாள். அவன் அமைதியாகவே இருந்தான். 

“மாமா, என் மேல கோபமா? ஏன் எதுவும் பேச மாட்டேங்கறீங்க?” என்று கேட்டாள். “நான் யாரு, உங்க மேல கோபப்பட? எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கணும்.” என்று படுத்துவிட்டான். அன்னத்திற்கு முகம் எல்லாம் வாடிப்போய் விட்டது. சத்தமே வராமல், தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!